இந்த பதிவை படிப்பவர்களில் சிலர் கல்லூரி/பள்ளி ஆசிரியராக இருக்களாம். நிச்சயம் அனைவரும் தொடர்ந்து நூல்களை படிக்கும் மாணவர்களே! எனவே அனைவரும் படிக்க வேண்டியது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூலான நன்னூல்.இதை இயற்றியவர் பவணந்தியார். அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார்.
1. முதல் மாணாக்கர்கள் - அன்னம், பசு
2.இடை நிலை மாணாக்கர் - கிளி, நிலம்
3.கடை மாணாக்கர் - ஆடு, எருமை,பன்னாடை,உடைந்த குடம்
இது என்ன பாகுபாடு என்று புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். முதல் இரண்டும் முதல் தர மாணவர்களின் இலக்கணம்.
அன்னம் - பாலும், தண்ணீரும் கலந்து இருக்கும் போது , பாலை மட்டும் குடிப்பது அன்னப்பறவை. அது போல் "மெய்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும்.
பசு - புல் கிடைக்கும் போது , அனைத்தையும் வேகமாக மேய்ந்து விட்டு பிறகு மெதுவாக அசை போட்டு (regurgitate) உண்ணும். அதாவது ஆசிரியரையோ, புத்தகத்தையோ கண்டால் அவரிடமிருந்து அனைத்து அறிவையும் வேகமாக பெற்றுக் கொண்டு பிறகு மெதுவாக ஆராய்ந்து , சிந்தித்து தெளிவு பெறுவர்.
அடுத்து இரண்டாம் நிலை மாணவர்களின் இலக்கணம்
கிளி - கிளி சொன்னதையே சொல்லும். அது போல் இவ்வகை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே கேட்டு மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள்.
நிலம் - ஒரு விவசாயி எந்த அளவு பாடு படுகிறானோ அந்த அளவு விளைச்சல் கொடுக்கும். அது போல் ஆசிரியர் எந்த அளவு கடின முயற்சி செய்து சொல்லி கொடுக்கிறாரோ அந்த அளவு அந்த மாணவர் அறிவு பெறுவர். சுய முயற்சி இருக்காது.
அடுத்து கடை நிலை மாணாக்கர்.
ஆடு - ஆடு ஒரு செடியை முழுமையாக தின்னாது. கிடைக்கும் செடியில் எல்லாம் மேலாக வாயை வைத்து முழுமையாக உண்ணாது. அது போல் மாணவனும் focusஇல்லாமல் மேலோட்டமாக படிப்பான். ஆழ்ந்த அறிவு வளராது.
எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும், அதை கலக்கி சேரோடு சேர்த்து குடிக்கும்.
உடைந்த குடம் - எவ்வளவு நீரை உடைந்த குடத்தில் இட்டாலும், அவை வெளியே சென்றுவிடும். அது போல் தான் இந்த வகை மாணவர்களுக்கு என்ன சொல்லி கொடுத்தாலும் அவற்றை வெளியேற்றி விடுவர்.
பன்னாடை - வடி கட்ட உதவுவது. வடி கட்டும் போது மாசுகளை எல்லாம் வைத்து கொண்டு நல்லவற்றை விட்டு விடும். அது போல, இந்த வகை மாணவர்கள் நல்லவற்றை விட்டு விட்டு, தேவையற்றவற்றை மனதில் நிறுத்துவர்.
இதன் மூலம் பவணந்தியார் கூற வருவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாணவர்கள் வெற்றி பெற முதல் நிலை மாணாக்கராக முன்னேற வேண்டும்.
இதோ பாடல்
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
800 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு திறனாய்வு அறிவு இருந்த பழந்தமிழரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை