Sunday, May 12, 2013

சாலமன் பாப்பையா மற்றும் அறிவுமதியுடன் சில நாட்கள்

சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் மற்றும் கவிஞர் அறிவுமதி அவர்களுடன் உரையாடலும் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மாலை திரு சாலமன் பாப்பையா மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்பும், அடுத்த நாள் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் ,ஞாயிற்று கிழமை அறிவுமதியுடன் கவிதை பட்டறையும் நடைபெற்றது.

கவிஞர் அறிவுமதி அவர்கள் ஒரு வாரமாக பல்வேறு குடாபகுதி தமிழர்களை குழுக்களாக சந்தித்து அவர்களிடம் படைப்பிலக்கியத்தில் அமெரிக்க தமிழர்களை ஈடுபட ஊக்கபடுத்தி வந்தார்.தினமும் காலையிலிருந்து நள்ளிரவு வரை சலைக்காமல் பல்வேறு குழுக்களை சந்தித்து அவர்களை தமிழில் எழுத ஊக்கபடுத்தி வந்தார்.ஒரு வார காலத்தில் பல்வேறு நிகழ்ச்சியிலும், தனி மற்றும் பொது சந்திப்புகளிலும் அந்த தமிழறிஞ்சர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவற்றில் சில தகவல்கள்.

அப்துல் ரகுமான்

எழுபதுக்களிலிருந்து  இளம் கவிஞர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி தொடர்ந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முக்கிய பங்கு வகிக்கிறார். கவிஞர் அறிவுமதி தனது குருவாக அப்துல் ரகுமானை கூறுகிறார். அப்துல் ரகுமான் நல்ல கவிஞர் என்று தெரியும். ஆனால் அவர் இன்றைய தமிழறிஞர்கள் பல பேரை எவ்வாறு வளர்க்க உதவியிருக்கிறார் என்று நினைத்த போது ஆச்சர்யமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா வந்த திரு.அப்துல் காதர் கூட அவரை வளர்க்க உதவியது அப்துல் ரகுமான் தான் என்று கூறியிருந்தார் . ஒரு முறை விழுப்புரத்திலிருந்து இரண்டு ஏழை இளைஞர்கள் கவிதை தொகுப்புடன் அப்துல் ரகுமானை காண வந்த போது அப்துல் ரகுமான் அவர்களுக்கு நல்ல உடைகளை வாங்கி வந்து கொடுத்து குளித்து நல்ல உணவு கொடுத்து அவர்களை ஆசுவாசபடுத்தி அவர்களின் கவிதைகளை படித்து அதை செம்மை படுத்த உதவி செய்து அந்த நூலக்கு முகவுரையும் எழுதி கொடுத்துள்ளார்.

அறிவுமதி

கவிஞர் அறிவுமதி 200க்கும் மேலான திரைபட  பாடல்களை எழுதி உள்ளார். அவர் எந்த பாடலிலும் ஆங்கிலம் கலப்பே இல்லாமல் எழுதி உள்ளார். அவரது பாடலில் ஒரு இயக்குனர் ஆங்கில சரணத்தை கலந்து வெளியிட்ட போது அதை தமிழுக்கு செய்த அவமானமாக டைரக்டருக்கு கடிதம் எழுதியதன் விளைவாக அந்த டைரக்டரிடம் மீண்டும் பாடல் எழுத வாய்ப்பே கிடைக்கவில்லையாம் .

கவிஞர் அறிவுமதி விருத்தாசாலம் அருகில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் கற்றவர்.70க்களில் வைரமுத்துவுடன் மிகவும் நெருங்கிய நண்பர்.ஒன்றாக வளர்ந்தவர்கள்

அறிவுமதி ஆரம்பகாலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜாவுடன் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்,

பாலுமகேந்திரா ஒரு படம் எடுக்கும் போது இடைவேளைக்கு முன், பின் எத்தனை காட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு நேரம் வர வேண்டும் என்று திட்டமிட்டு கச்சிதமாக தேவையான காட்சி மட்டுமே திறம்பட எடுப்பாராம்.

அறிவுமதி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது மதுரையிலிருந்து ஒரு இளைஞர் சினிமா துறையில் சேர ஆசைபட்டு வந்துள்ளார். அவரை பட இயக்கத்தின் போது தினமும் அழைந்து சென்று காலை முதல் இரவு வரை படமெடுக்கும் இடத்தில் இருக்க வைத்து  திரைபட நுணுக்கங்களை கற்று கொள்ள விட்டிருக்கிறார். அந்த படம் முடிந்தபின்  பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் வெளியேறி இருக்கிறார். அப்போது பாலுமகேந்திரா புதிய உதவி இயக்குனர் தேவை என்று இவரிடம் சொன்ன போது அறிவுமதி அந்த இளைஞரை பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு பாலுமகேந்திரா அவர் எங்கு பணியாற்றியிருக்கிறார் என்று கேட்டதற்கு உங்களிடமே உங்களுக்கு தெரியாமல் என்று கூறி இருக்கிறார். அந்த இளைஞர் பெயர் பாலா!

73, அபிபுல்லா சாலை - இது அறிவுமதியின் அலுவலகம். இந்த அலுவலகம் பல்வேறு இளம் கலைஞர்களை வளர்த்துள்ளது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா என பல கலைஞர்களை வளர்த்து விட்டதில் அறிவுமதியின் பங்கு உள்ளது!

70க்களிளிருந்து பல்வேறு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அறிவுமதி.அவரை பற்றி மக்கள் அவரது கவிதை தொகுதிகள் மூலம் சென்றடையாமல் திரைப்பட பாடல்கள் மூலம் மட்டுமே அறிவது அவருக்கு வருத்தத்தையே அளிக்கிறது,

அறிவுமதி சிறந்த பேச்சாளர். சமூக ஆர்வலர்களிடம் சமூக ஏற்றதாழ்வுகள் பெரியார், திருமாவளவன் போன்றோர் பற்றியும் படைப்பிலக்கியவாதிகளிடம் கதை கவிதை மற்றும் தமிழறிஞர்கள் பற்றியும் அர்த்தமுள்ளதாக பேசுகிறார்.

அமெரிக்க தமிழ் மன்றங்கள் நாட்டுபுற கவிஞர்களையும் மதித்து அவர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களது திறமைகளை வெளிநாடுகளில் காட்டவைத்து அவர்களையும்  அவர்களது கலைகளையும் ஊக்கபடுத்த வேண்டும் என்றார்

சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா அனைவரிடமும் மிகவும் மரியாதையுடன் பண்புடனும்,அமைதியாகவும், பணிவாகவும்,அன்பாகவும் பழகுகிறார்.முடிந்தவரை சர்ச்சிக்குறிய பேச்சுக்களை தவிர்க்கிறார்.ஓரளவு காங்கிரஸ் சார்புள்ளவரோ என்று நினைக்க தோன்றுகிறது.

தமிழ் சொற்களை ஏன் பெரும்பாலானோர் பயன் படுத்துவதில்லை என்பதற்கு நல்ல காரணம் சொன்னார். திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பொருட்களிலும் தமிழிலும் பெயர் போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருவதாக கூறினார்கள்.ஆனால் அதை அவர்கள் நடைமுறைபடுத்தவில்லை. தற்போது லட்சகணக்கான புது வித பொருட்கள் வந்து விட்டது. எதற்குமே தமிழ் பெயர் இல்லை.  இப்போது தமிழ் பெயர் தெரியாத பொருட்களை தமிழில் கூற வேண்டும் என்றால் எப்படி கூறுவார்கள் என்றார்.

திருவள்ளுவரின் இன்றைய உருவம் பல்வேறு மதத்தினரின் கருத்துகளை புகுத்த பட்டு  எப்படி வந்தது என்று விளக்கினார். சைவரகள் அவருக்கு தாடியையும், வைணவர்கள் அவருக்கு குறுக்கு வாட்டு துணியையும் கொடுத்ததாக கூறினார். அவர் அடிப்படையில் சமணராக(கடவுள் = எண்குணத்தான்) இருந்திருக்களாம் என்று கூறுகிறார்.திருக்குறளை எடுத்து சென்றதில் சைவர்களை விட வைணவர்கள் பங்கே அதிகம் என்று கூறுகிறார். (கம்பர் தான் திருக்குறள் மற்றும் அதன் கருத்துக்களை பெரிய அளவில் கம்ப ராமாயணம் மூலம் கொண்டு சென்றவர் என்கிறார். எனக்கு அது எவ்வாறு என்று புரியவில்லை!)

திருக்குறள் முனுசாமி என்பவர் இல்லை என்றால் திருக்குறள் மக்களிடையே இன்றைய முக்கியத்துவம் பெற்றிருக்காது என்கிறார்.  அவருடைய முயற்சியாலும் அன்றைய காங்கிரஸ் கட்சி திருக்குறளை பாட புத்தகத்தில் சேர்த்ததாலுமே திருக்குறள் இன்று அனைவரையும் சேர்ந்தது என்கிறார்.

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மன்றங்கள் நடத்துவதால் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தொடர்ந்து தமிழ் ஆர்வம்  வளர காரணமாக  உள்ளது.