Wednesday, June 03, 2009

உலகம் இவர்கள் கையில்!- பில்டெர்பெர்க் குழுமம்

உலகில் நடக்கும் மற்றும் நடைபெற போகும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு யார் காரணம்? இந்த கேள்வியை சாதாரண மக்களிடம் கேட்டால் பொது மக்கள் என்ற விடை தான் கிடைக்கும். இடது சாரி சார்புடைய மக்களிடம் கேட்டால் அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு அரசாங்கம் என்பார்கள். சோஷியலிஸ்டுகளிடம் கேட்டால் பணத்தாசை பிடித்த பன்னாட்டு கம்பெனியினர் என்பார்கள். ஆனால் சர்வ தேச நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களை கேட்டால் அவர்களது பதில் புதுமையானதாக இருக்கும். அந்த புதுமையான பதில் தான் பில்டெர்பெர்க் குழுமம். என்ன இது உங்களுக்கு புதுமையான பெயராக இருக்கிறதா?

முதலில் பில்டெர்பெர்க் குழுமம் என்றால் என்ன என்று பார்ப்போம். இது மேலை நாட்டு அரசாங்கம், மிகபெரிய வங்கி,கம்பெனிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அதிகார வர்க்கங்களில் இருக்கும் ஒரு சில முக்கியமான புள்ளிகளின் அதிகார பூர்வமற்ற குழுமம். 1954ல் மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்பு அலைகளை பற்றி ஆராய முதன் முதலாக நெதர்லாந்து நாட்டில் உள்ள பில்டெர்பெர்க் என்ற உணவகத்தில் கூட்டபட்டதால் இதற்கு பில்டெர்பெர்க் குழுமம் என்ற பெயர் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,வங்கி நிறுவனர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனியை சேர்ந்தவர்கள் என சுமார் 150 பேரை கொண்ட குழுமம் இது.இதன் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களும் மிகவும் ரகசியமாக வைக்க படுகிறது.இதில் கலந்து கொள்வர்களின் முக்கியத்துவமும்,அதன் ரகசியம் காக்கும் தன்மையாலும் அந்த கூட்டத்தில் நடைபறும் செய்தி பற்றி பலவாறாக ஊகங்களும், புரளிகளும் வெளிவரும். பில்டெர்பெர்க் குழுமம் என்பது அதிகார பூர்வமற்ற குழுமமாதலால் அது பற்றி வரும் செய்திகள் பற்றி யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை .

இந்த வருடத்திற்கான பில்டெர்பெர்க் கூட்டம் மே மாதம் 14 - 17 வரை கிரீஸ் நாட்டில் நடந்தது. இந்த கூட்டத்தின் கரு பொருள் உலகின் தற்போதய பொருளாதார மந்த நிலையை குறுகிய காலத்தில் முடிப்பதா? அல்லது இதனை நீண்ட நாட்களுக்கு இழுப்பதா? என்பதுதான் என்று கூறபடுகிறது. உலகில் உள்ள முக்கியமான அறிவு ஜீவிகள் ஒன்று கூடி உலகில் உள்ள பிரச்சனைகளை நாடுகளின் எல்லைகளை தாண்டி சிந்திப்பதன் மூலம் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாக கூறபடுகிறது.ஆனால் பெரும்பான்மையானோரின் கருத்தோ, அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தை நாடுகளை தாண்டி உலக அளவில் குவித்து அவற்றை தங்கள் கட்டு பாட்டில் எடுப்பதுதான் இவர்களது நோக்கம் என்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை உருவாக்கி ஐய்ரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகாரத்தை இந்த யூனியனுக்கு மாற்ற முயற்சி செய்வது இக்குழுவின் முயற்சி என்றும் பேச்சு உள்ளது.

இந்த வருட கூட்டத்தில் உலக அளவில் மத்திய வங்கி உருவாக்குவது, IMF இன் பங்கை விரிவாக்குவது மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவற்றை பற்றியும் பேசியதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளன.
“உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்‘ என்ற புதிய முழக்கம் எந்த அளவு வெற்றி பெரும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


--

2 comments:

butterfly Surya said...

அருமையான பதிவு.

இன்னும் எழுதுங்கள்.

நன்றி. வாழ்த்துகள்.

சதுக்க பூதம் said...

நன்றி வண்ணத்துபூச்சியார் . நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன்