Tuesday, September 04, 2012

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!


ஹவாய் பற்றிய அறிமுகம் எனக்கு சிறுவயதில் காலண்டர்களில் இருக்கும் படங்களின் மூலம் கிடைத்தது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு மிகுந்த புகை படங்களை பார்க்கும் போது அது தான் சொர்க்கமோ என்று சிறு வயதில் எண்ண தோன்றியது. அதன் பிறகு National Geographic,Discovery போன்ற தொலைகாட்சிகளிலும், ஜுராசிக் பார்க் போன்ற திரை படங்களிளும் ஹவாய் பற்றி பார்த்த போது மலைப்பாக இருந்தது.இன்றைய இணைய உலகத்தில் ஹவாய் பற்றிய காணொளிக்கு பஞ்சமில்லை.பலமுறை யோசித்து விட்டு கடைசியாக ஹவாய் செல்ல முடிவெடுத்தோம்.

ஹவாய் என்றால் எந்த தீவிற்கு செல்வது என்பது முதல் கேள்வி.ஹவாய் என்பது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு நடுவே பசுபிக் கடலில் உள்ள தீவுகளின் கூட்டம்.ஹவாய் அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959ம் ஆண்டு இணைக்கபட்டது. ஹவாயின் வரலாற்றை பிறிதொரு பதிவில் காண்போம்.ஹவாய் என்பது 7 பெரிய தீவுகளையும் நூற்றுக்கும் அதிகமான குறுந்தீவுகளையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமான தீவுகள் பெருந்தீவு (Big Island/Island of hawaii),மாவி(Maui), ஒஆஹு(O'ahu),கௌவா'யி(kaua'i) முதலியவை.அனைத்து தீவுகளிளும் சுற்றுல்லா பயணிகள் ரசிக்கும் வகையில் அருமையான நீல நிற கடலும், மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரும், கடல் நீரில் பல்வேறு விளையாட்டுகளும் , கன்ணுக்கு குளிர்ச்சியான வெப்ப மண்டல காடுகளும் உள்ளன. எனவே எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியே!

சுற்றுல்லா முகவர்கள் மூலம் ரிசர்வ் செய்யும் போது சில நாட்கள் ஒரு தீவிலும் மற்றைய நாட்களை ஒரு தீவிலும் தங்குவது போல் ரிசர்வ் செய்யலாம். ஆனால் அது ஒரு தீவை முழுமையாக பார்த்த திருப்தியை ஏற்படுத்தாது. அதே போல் ஹவாய் தீவிற்கு சென்று அங்கு உல்லாச கப்பலில் ஒரு வாரம் முன் பதிவு செய்யலாம். அதன் மூலம் இரவு கப்பலில் தங்கலாம். அந்த கப்பல் அனைத்து பெரிய தீவுகளுக்கும் கூட்டி செல்லும். ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு activity








என்று முடிவெடுத்து அனைத்தையும் முடிக்கலாம். இந்த முறையில் பணம் அதிகம் செலவாகும். அதே நேரத்தில் நமது இஷ்டம் போல் திட்டமிட்டு செயல்பட முடியாது. எனவே எதாவது ஒரு தீவிற்கு செல்வது என்று முடிவெடுத்தோம்

பெரும்பான்மையான activities அனைத்து தீவுகளிலும் இருந்தாலும் ஒரு சில தீவுகளில் உள்ள தனி சிறப்புகளை பார்த்தோமானால் ஒஆஹுல் தண்ணிருக்கு அடியில் ஓட்டி செல்லும் ஸ்கூட்டரும் (BOB),முத்து துறைமுகம் (Pearl Harbour) போன்றவையும்,மாவியில் மிகபெரிய நீர்வீழ்ச்சியும் இருக்கின்றன.பெருந்தீவு ஹவாயிலேயே பெரிய தீவு. உலகிலேயே மிக பெரிய செயல் திறன் கொண்ட எரிமலை இங்கு தான் உள்ளது.உலகில் உள்ள 13 சீதோஷ்ண நிலைகளில் 11 சீதோஷ்ண நிலைகள் 4000 சதுர மைல் பரப்பளவே உள்ள பெருந்தீவில் உள்ளது. அது மட்டுமில்லாமில் இங்கு பொதுவாக சுற்றுல்லா பயணிகளின் எண்ணிக்கை சிறிதளவு குறைவாக இருக்கும். அது தவிர மற்ற தீவுகளில் இருக்கும் அனைத்து வகை acivitiesகளும் இங்கும் இருக்கும்.ஹவாய் செல்ல விரும்புபவர்கள் தங்களுக்கு எதில் மிகுந்த விருப்பம் உள்ளது(எரிமலை,கடற்கரை,அடர்ந்த காடு, பெரிய நீர்வீழ்ச்சி ) என முடிவெடுத்து, அந்த காரணிகள் எந்த தீவில் மிகமிக பிரமாதமாக உள்ளதோ அதை தேர்வு செய்யலாம். எங்களுடைய தேர்வு பெருந்தீவாக இருந்தது.

பெருந்தீவில் கோனா மற்றும் ஹீலோ என முக்கிய விமான நிலையங்கள் உள்ளது. கோனா பகுதி ஓரளவு காய்ந்த, மழை அளவு குறைந்த, நல்ல கடற்கரைகளை கொண்ட பகுதி. ஹீலோ பகுதி அதிக மழையளவு கொண்ட எரிமலை மற்றும் வெப்ப மண்டல காடுகளை கொண்ட பகுதி. எனவே சுற்றுல்லா பயணிகள் பொதுவாக கோனா கடற்கறையில் உள்ள ரிசார்ட்களில் தங்கி ஹீலோ பகுதிக்கு சென்று எரிமலை மற்றும் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பர். பெருந்தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் கார் ஒன்றினை வாடகைக்கு எடுத்து கொள்வது அவசியம். இங்கு பஸ் வசதி குறைவு.

பெருந்தீவில் முக்கியமாக காண வேண்டிய இடங்கள் / செய்ய வேண்டிய activities பற்றி பார்ப்போம்.

1.கடற்கறைகள்
2.எரிமலை
3.நீர் வீழ்ச்சிகள் மற்றும் வெப்ப மண்டல காடுகள்
4.ஹவாய் பழங்குடியினரின் மாதிரி குடியிருப்பு மற்றும் கோவில்கள்
5.பவள பாறைகள் மற்றும் கடல் உயிரிகளை காண நீர்மூழ்கி கப்பல் பயணம்
6.எரிமலையையும், வெப்ப மண்டல காடுகளையும் நன்கு காண ஹெலிகாப்டர் பயணம்
7.கடல் வாழ் உயிரிகளை நேரில் கண்டு களிக்க ஸ்னார்க்கலிங்(Shallow water/Deep water Snorkling)
8.Scooba Diving
9.Parasailing
10.கம்பி சருக்களில் பறந்த படியே நீர்வீழ்ச்சி மற்றும் அடர்ந்த காடு/மலைகளின் அழகை கண்டு களிக்கும் Zipline
11.மலையேற்றம்(Trekking)-எளிதில் சென்றடைய முடியாத நீர்வீழ்ச்சி/காடுகளுக்கு கூட்டி செல்லும்.
12.எளிதில் சென்றடைய முடியாத நீர் வீழ்ச்சி,நீரோடை,கடற்கரைக்கு சிறப்பு வாகனத்தில் கூட்டி செல்லும் பயணம்(ATV Tour)
13.கேப்டன் குக் நினைவிடம்
14.மௌன கியா வானியல் நுண்ணோக்கி மையம்(Mauna Kea Observatories)
15.மெக்கடமியா பருப்பு மற்றும் கோனா காபி தொழிற்சாலை
16.ஹவாயி கலாச்சார நடனத்துடன் இரவு உணவு
17.மற்றும் பல

மேற்கூறிய அனைத்தையும் ஒரு சேர பார்க்க வேண்டுமானால் அதிக பொருட்செலவு ஏற்படுவதுடன் நேரமின்மையும் ஒரு காரணியாக அமைய கூடும். எனவே ஹவாயை சுற்றி பார்க்க விரும்புவோர் கிளம்புவதற்கு முன்பே எதை தேர்வு செய்வது என்று முடிவெடுப்பது அவசியம்.

இந்த பதிவின் தலைப்பில் உள்ள அலோஹா என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அலோஹா என்பது ஹவாயியன் மொழியில் வணக்கம் என்பது ஆகும். ஹவாயிக்கு சென்றால் அலோஹாவை அனைத்து இடங்களிளும் கேட்களாம்!.

இனி வரும் பதிவுகளில் மேற் கூறிய activities பற்றி விரிவாக பார்ப்போம்

இந்த பதிவின் அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

--

--

Monday, September 03, 2012

குஜராத் புரட்சியும் ஹசாரேக்கு மோடி கொடுத்த ஆப்பும்


குஜராத் முதல்வர் மோடி பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதிய புதிய புரட்சி செய்திகள்  ஊடகங்களில் வந்து கொண்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வளர்ச்சியை கணக்கிடும்  மனித வள மேம்பாட்டு குறியிடில் (Human Developmentபெரிய  முன்னேற்றமின்மை  மற்றும் சிறிய மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் பெரிதாக சாதிக்காதது  போன்ற தேவையற்ற  செய்திகளுக்கு போதிய முக்கியத்துவம் தராமல் மோடியின் பிற புரட்சிகளை பற்றி ஊடகங்கள் "பாராட்டும் " படியே செய்திகளை வெளியிடுகிறது.

தற்போது வளர்ந்த நாடுகளில் கூட நடக்காத மாபெரும் புரட்சி குஜராத் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. அந்த புரட்சி பற்றிய செய்தியை நம் நாட்டு ஊடகங்களில் மட்டும் செய்தியாகி அழிந்து விடாமல் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிக்கைக்கு  கூறி ஒட்டு மொத்த உலக மக்களையே திகைப்பில் ஆழ்த்தி விட்டார் மோடி. அந்த புரட்சியை நடத்துபவர்கள் மூன்று வயதுக்கும் குறைவான குஜராத் மாநில சிறுமிகள் என்றால் ஆச்சரியமாக உள்ளது அள்ளவா?.மோடி பதவி ஏற்றதிலிருந்தே குஜராத்தில்
 பிறக்கும் குழந்தைகள் மிகவும் அறிவு கூர்மையுடன் பிறப்பது "அனைவருக்கும் தெரிந்ததே". ஆனால் அனைவருக்கும் தெரியாத ," மூன்று வயதிற்கும் குறைவான கைகுழந்தைகளுக்கு தங்களுடைய அழகு பற்றி அளவிற்கதிகமான அக்கறை உள்ளது" என்ற பகீர் உண்மையை அமெரிக்கர்களுக்கும் உலகுக்கும் தெரிய படுத்தியுள்ளார் மோடி. எப்படி என்று கேட்கிறீர்களா?குஜராத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பது பற்றி மோடியிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்: குஜராத்தில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் உணவை அள்ளி கொடுக்கும் போது குழந்தைகள் தாங்கள் குண்டாகி விடுவோம். அழகு குறைந்து விடும் என்று சொல்லி உணவை உண்ண மறுத்துவிடுகிறார்கள் என்பது!

தேசிய குடும்ப சுகாதார கருத்தாய்வு முடிவு படி பெரும்பான்மையாக மோடி பதவியில் இருந்த காலத்தில் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு 45% சதத்தில் இருந்து 47% சதமாக உயர்ந்தது.இது இந்திய சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிட தக்கது.இது மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகள் பற்றி எடுக்க பட்ட புள்ளிவிபரம்! பச்சிளம் குழந்தைகள் கூட அழகுணர்ச்சி அதிகம் கொண்டு தன் தாய் பால் கொடுக்க, தான் குண்டாகி விடுவோம் என்று சொல்லி குடிக்க மறுத்து விடுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைந்து
காணபடுவதாக கூறியுள்ளார்.இந்த புரட்சி குஜராத்தில் மட்டும் தான் நடக்கும்!.

அந்த பேட்டியில் ஹசாரேவுக்கும் ஒரு ஆப்பு வைத்துள்ளார். குஜராத்தில் மக்கள் சத்து குறைந்து  சோகையாக இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பான்மையான மக்கள் சைவ உணவு பழக்கம் கொண்டு இருப்பது தான் என்றார். ஏற்கனவே ஹசாரே மகாராஷ்டிர
மாநிலம் ராலேகான் பகுதியில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்று  சட்ட விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்து வருவது உலகறிந்தது. ( Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.)அவருக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக சைவ உணவு பழக்கம் தான் குஜராத்தின் சத்து குறைபாடிற்கு காரணம் என்று கூறியுள்ளார். எந்த முடிவையும் இரும்பு கரம் கொண்டு நடைமுறை படுத்தும் மோடி, குஜராத் மக்கள் அனைவரையும் கட்டாயம் அசைவ உணவு உண்ண ஆனையிட்டு விடுவார் என்ற பயம்  RSS இயக்கத்துக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது!

--

Wednesday, July 11, 2012

இந்தி திணிப்பு எதிர்ப்பு - காங்கிரசார் பங்கு


     இந்தி எதிர்ப்பு என்றவுடன் நம் நினைவுக்கு உடனடியாக வருவது திராவிட இயக்கங்கள் தான். மக்களிடம் இருந்த இந்தி திணிப்பு  எதிர்ப்பு உணர்வை முறையான போராட்டமாக வழி கொணர்ந்து, அளவிட முடியா தியாகங்களை கொண்டு இந்தி திணிப்பை தடுத்து நிறுத்திய பெருமை திராவிட இயக்கங்களை சாரும். இது பற்றி விரிவாக முந்தைய பதிவில் (இந்தி திணிப்பு - வந்த கார்டூனும் வந்திருக்க வேண்டிய கார்டூனும்! ) எழுதி இருந்தேன்.என்னத்தான் மக்கள் ரத்தம் சிந்தி போராடினாலும் பாசிசவாதிகள் கையில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ,மக்கள் குரலுக்கு மதிப்பு ஏதும் இருக்க போவதில்லை.இந்தி திணிப்பை வெற்றிகரமாக எதிர்த்ததிலும், காங்கிரஸ் மற்றும் அரசின் அதிகார மையங்களின் முடிவை மாற்றியதிலும் பல்வேறு காங்கிரஸ்காரர்களின் பங்கும்  குறிப்பிடதக்கது.இன்றைய சரித்திரத்தில் மறைந்து போன காங்கிரஸ் தலைவர்களின் மதிநுட்ப செயல்பாடுகளை இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினர் மறந்து விட கூடாது.

இந்தி திணிப்பின் வேகத்தை கட்டுபடுத்தியது அல்லது இந்தி திணிப்பை தடுத்த வரலாற்றில் மைல் கல்லாக கீழ் காணும் மூன்று நிகழ்வுகளை கருதலாம்.

1.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

2.நேருவின் உறுதிமொழி (சிறுபான்மையினர் விரும்பும் வரை ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்வது பற்றியது) .

3.1968ல் நீண்ட போராட்டத்துக்கு பின் நேருவின் உறுதிமொழியை சட்டமாக்கியது.(லால்பகதூர் சாஸ்திரியின் இந்தி திணிப்பு முயற்சியை முறியடித்தது)

இந்த மூன்று நிகழ்வுகளின் பின்னனியிலும் இருந்த ஒரு சில காங்கிரஸ்காரர்கள் பற்றி காண்போம்.

1..இந்திய அரசியல் நிர்ணய சபையின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது

இந்தி மட்டுமே தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று காந்தி அடிகள் 1917ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே திட்டவட்டமாக அறிவித்தார். பொதுவாக காந்தியடிகள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது. மக்கள் விருப்பம் வேறானாலும் உண்ணாவிரதம்( உதாரணம் - அம்பேத்காருக்கு எதிராக) ,ஆதரவாளர்களின் ஒட்டு மொத்த ராஜினாமா( சுபாஸ் சந்திர போஸ்க்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா தேர்வு 1939)  என பல வழிவகைகளில் தன் விருப்பத்தை நிறவேற்றி விடுவார். அப்போது காங்கிரஸ் கட்சியின் பொது குழுக்களில் ஒரு முடிவு எடுக்கபட்டால் அது தேசிய சட்டமாக ஆவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. சுதந்திரம் அடையும் நேரத்தில் தேவநாகிரி எழுத்து வடிவுடன் கூடிய இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்றுகொள்ளும் தீர்மானத்தை காங்கிரஸ் ஒரு கூட்டத்தில் எடுத்தது.  தென்னிந்தியா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். கட்சியில் கடுமையாக பிளவு ஏற்படும் நிலை தோன்றியது.நேரு அந்த பிரச்சனையை புரிந்து கொண்டு மொழி பிரச்சனையை ஒத்தி வைத்தார்.அதன் விளைவாக அரசியல் நிர்ணய சபையின் கடைசி கட்டங்களில் தான் மொழி பிரச்சனை பரிசீலிக்க பட்டது.அப்போது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள்  இருந்தனர்.

1. இந்திய அரசியல் சாசனம் ஆட்சிமொழி ஒன்றை ஏற்படுத்துவதை விரும்பாத ஒரு சிறிய கோஷ்டி.

2. இந்துஸ்தானியை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்திய மிக சிறிய ஆனால் சக்தி வாய்ந்த கோஷ்டி
.
3.பதினைந்து ஆண்டுகள் வரையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் , அது வரையில் இந்தி மொழி பிரச்சனையை கிடப்பில் போடவேண்டும் என்றும் விரும்பிய தென்னிந்தியாவை சேர்ந்த ஒருகோஷ்டி.

4.இந்தியை உடனடியாக தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று புருஷோத்தம் தாஸ் தாண்டன் தலைமையில் வற்புறுத்திய தீவிர இந்தி ஆதரவாளர் கோஷ்டி.

5.நாட்டின் ஆட்சி மொழியாக இறுதியில் இந்தி மொழியே ஆகவேண்டும் என்ற திட்டத்துடன் இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் மக்களும் ஒப்பு கொள்ளகூடிய சமரச திட்டத்தை வற்புறுத்திய பெரிய கோஷ்டி.

 டி. கிருஷ்ணமாச்சாரி, துர்காபாய், என். ஜி. ரங்கா, கோபலசாமி அய்யங்கார் போன்ற தென்னிந்திய தலைவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து சாதூர்யமாக காய் நகர்த்தினர். அந்த நேரத்தில் சமஸ்கிரதம் கலந்த இந்தியா?  (உருது பேசும் மக்களுக்கு புரியும்) இந்துஸ்தானி இந்தியா?என்ற மோதல் அதிர்ஷ்டவசமாக வந்ததால் பலமான வட இந்தியர்கள் கோஷ்டியில் விரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் மேற்கு வங்க உறுப்பினர்களும் இந்தி எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு அளித்தனர்.பிரச்சனை முடிவின்றி இழுத்து கொண்டே சென்றது. இறுதியாக இந்திக் குழுவின் பிரதிநிதி கே. எம் முன்ஷியும், தென்னிந்தியக் குழுவின் பிரதிநிதி  கோபாலசாமி அய்யங்காரும், பேச்சுவார்த்தை நடத்தி இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு சமரச உடன்பாட்டை உருவாக்கினர். இது முன்ஷி அய்யங்கார் வாய்ப்பாடு என்று வழங்கப்பட்டது.இதன் பயனாக

1.இந்தி தேசிய மொழியாக அறிவிக்க பட வேண்டும் என்ற இந்தி வெறியர்களின் விருப்பம் நிராகரிக்க பட்டு இந்தி அலுவல் மொழியாக மட்டும் அறிவிக்கபட்டது.

2.ஆங்கிலத்தை  உடனடியாக அலுவல் மொழியிலிருந்து வெளியேற்றி இந்தியை உடனடியாகவோ அல்லது மிக குறுகிய காலத்துக்குள்ளாகவோ அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கபட்டு இந்தியை அலுவல் மொழியாக்க மிக நீண்ட கால இடைவெளி கொடுக்கபட்டது.

3..ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றம் ஏற்படுத்தும் காலம் வரையிலும் இந்தி மட்டுமே முழுமையாக அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஆங்கிலம் தேவையென்றால் பயன்படுத்தலாம் என்றும் அழுத்தத்தை கொடுத்தனர் இந்தி கோஷ்டியினர். ஆனால் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றம் ஏற்படுத்தும் காலம் வரையில் ஆங்கிலம் மட்டும் முழுவதுமாக அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் தேவையெனில் இந்தியை பயன்படுத்தலாம் என்றும் இறுதி முடிவு எடுக்க பட்டது.

மேற்கூறிய முடிவுகளில் இருந்து கோபால்சுவாமி அய்யங்கார் தலைமையில் ஆன உறுப்பினர்களின் சாதூர்யமான முயற்சி மற்றும் கடின உழைப்பையும் காணலாம். அன்று மட்டும் அந்த உறுப்பினர்கள் போராடவில்லை என்றால் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது முலையிலேயே கிள்ளி எறியபட்டு மொழிவாரி சிறுபான்மையினரின் நலன்கள் சமாதி ஆக்கபட்டிருக்கும்.

2.நேருவின் உறுதிமொழி 

அடுத்ததாக இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாற்றின் மைல்கல் நேருவின் உறுதி மொழி. நேருவின் உறுதி மொழியின் பின்னால் நடந்த அரசியலை இனி பார்ப்போம். இதற்கு பின்னனியில் இருந்த முக்கிய தலைவர் சி. சுப்ரமனியம் ஆவார்.இத்தனைக்கும்  சி.சுப்ரமனியம் ஒரு தேசியவாதி ஆவார். அவர் இந்தி பிரச்சார சபையின் தலைவராக கூட செயல்பட்டுள்ளார். இருந்தாலும் இந்தி திணிப்பு எதிர்ப்பில் அவரது பங்கு முக்கியமானது.சிறுபான்மையினர் விரும்பும் வரை ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்வது பற்றிய நேருவின் உறுதிமொழி வந்ததின் பின்னனியை கீழ் காணுமாறு அவரது சுய சரிதையான திருப்புமுனை என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.அவரது எழுத்துகளையே கீழே கொடுத்து உள்ளேன்

"
மொழிப்பிரச்சனை


1958 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் குவாகத்தி நகரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மிக முக்கியமன ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு ஆட்சி பணிகளுக்கு ஹிந்தியைப் படிபடியாகப் பயன்படுதவும்,மத்திய அரசின் எலலா ஆட்சி பணிகளுக்கோ அல்லது எதாவது சில ஆட்சிப்பணிகளுக்கோ ஆங்கிலத்தின் உபயோகத்தை குறைக்கவும் குடியரசு தலைவருக்கு பரிந்துரைகளைக் கூறுவதற்காக ,அரசியல் சட்டத்தின் 344 வது விதியின் கீழ், "மொழி கமிஷன்" ஒன்றை நியமனம் செய்ய வழி செய்யப் பட்டிருக்கிறது. இந்த விதியின் கீழ்தான் முதலாவது மொழி கமிஷன் 1954 ஆம் ஆண்டில் நியமிக்கபட்டது. நிர்வாகத்தின் சில துறைகளில் ஹிந்தியை மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் என்று அந்த மொழி கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.

குவாகத்தி அ.இ.கா.க. கூட்டத்தில் மொழி கமிஷனின் இந்த பரிந்துரை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இது சம்மந்தமாக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் சில துறைகளில் ஆங்கிலத்தின் உபயோகத்தை நீக்கிவிடவும், அதற்கு பதிலாக ஹிந்தியை உபயோகிக்கவும் மொழி கமிஷன் செய்திருந்த பரிந்துரையை அ.இ.கா.க. தீர்மானம் ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தது.

ஹிந்தி மொழி பேசாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களுக்கு குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு இந்த விஷயம் மிகவும் கவலையளித்தது. அப்போது தமிழ்நாட்டில் மிகவும் பலமான ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ராஜாஜியே தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாகத்தி அ.இ.கா.க கூட்டத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் கோவிந் வல்லப பந்த் இந்தத் தீமானத்தை கொண்டு வந்தார்.

தெற்கு மாநிலங்களின் எதிர்ப்பு

தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் கூடி இந்த முக்கியமான பிரச்சினையைப் பற்றிப் பேசினோம். இந்த தீர்மானம் தென் மாநிலங்களில் காங்கிரசுக்கு விரோதமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பது என்று காமராஜர், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, ஹனுமந்தையா ஆகியோரும் மற்றும் சிலரும் முடிவு செய்தார்கள்.

இந்த தீர்மானத்தின்மீது நான் பேசவேண்டும் என்றும், தென் மாநிலங்களின் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டேன்.

ஆனால் அ.இ.கா.க கூட்டத்தில் இந்த தீர்மானம் முன் மொழியப்பட்டதும், ஹனுமந்தையா விருட்டென்று எழுந்து மேடைக்குச் சென்று தீர்மானத்தை மிகக் கடுமையாக தாக்கிப் பேசி விட்டார். மத்திய அரசின் சில துறைகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை மட்டும் பயன்படுத்துவது என்ற திட்டம் குறித்து மிக கடுமையான சொற்களை ஹனுமந்தையா  பயன்படுத்தினார்.

இதை கேட்டு நேருஜி மிகவும் வருத்தமும், கோபமும் அடைந்தார். தீமானத்திற்கான முழு பொறுப்பையும் தாம் ஏற்பதாகவும், தீர்மான வாசகங்களின் ஒவ்வொரு சொல்லையும் தாம் ஒப்புக் கொள்ளுவதாகவும் நேருஜி உரத்த குரலில் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக, ஹனுமந்தையாவின் உரையுடன் அன்றையக் கூட்டம் முடிந்தது. நேருஜி இவ்வளவு உறுதியான நிலையை மேற்கொண்ட சூழ்நிலையில் இந்தச் சிக்கலான விஷயத்திற்கு எவ்வாரு தீர்வு காண்பது என்பதே பிரச்சனை. இந்த விஷயத்தை அந்த அளவில் விட்டுவிட்டுப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பலரும் கருதினார்கள். ஆனால் அ.இ.கா.க. கூட்டத்தில் ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டால் அதை பிறகு மாற்றுவது சிரமமாக இருக்கும் என்று நான் கருதினேன். எனவே தெற்கு மாநிலங்களின் கருத்துக்களை அ.இ.கா.க. யில் எடுத்துக் கூற நான் முன்வந்தேன்.

எனது திட்டம்

அ.இ.கா.க. கூட்டத்தில் அடுத்த நாளன்று, சிலர் பேசிய பிறகு நான் மேடைக்குச் சென்றேன் இந்த தீர்மானம் குறித்துத் தென் மாநிலங்கள் ஏன் மிகவும் கவலை கொண்டுள்ளன என்பதை ஒவ்வோர் அம்சமாக எடுத்து விளக்கினேன். இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால், தெற்கு மாந்லங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், மிக மோசமன நிலைமை உருவாகும் என்றும் நான் கூறினேன்.
ஆட்சி பணிகள் அனைத்திற்கும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டேன். இந்தி மொழியைத் தீவிரமாக ஆதரிக்கும் மொராஜி தேசாய் அப்போது மேடை மீது அமர்ந்திருந்தார். "திரு. சுப்ரமனியம் அவர்களே! எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீட்டிக்க வேண்டும்?" என்று அவர் குறுக்கிட்டு கேட்டார்.

"எல்லா பணிகளுக்கும் ஆட்சி மொழியாக ஆங்கிலம், அவசியமான காலம் வரையில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும். எவ்வளவு காலம் அது அவசியமாக இருக்கும் என்பதை இந்தி மொழி பேசாத மக்களைப் பெரும்பான்மையினராக கொண்ட மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் பதலளித்தேன்.

இது ஒரு காரசாரமான கருத்து மோதல். அப்போது பத்திரிக்கைகளில் மிக விரிவான அளவு பிரசுரிக்க பட்டிருந்தது.நான் பேசி முடிந்ததும் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டேன். அப்போது நேருஜி என்னை ஒரு புறமாக அழைத்து சென்றார்.நான் கூறிய கருத்துகள் மொழி பிரச்ச்னை பற்றிய தீர்மானத்தில் இடம் பெற என்னன்ன திருத்தங்கள் அவசியமாக இருக்கும் என்று நேருஜி என்னிடம் கேட்டார். திருத்தங்கள் பற்றிய குறிப்பினை நானே எழுதி அவரிடம் கொடுக்கலாம் என்றும் இதர தலைவர்களிடம் இது குறித்து தான் பேசுவதாகவும் நேருஜி சொன்னார்.

நேருஜியின் பெருந்தன்மை

தீர்மானத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்று கொண்டு ஆதரிப்பதாக மிகவும் உறுதியாக கூறியபிறகு, நேருஜி தனது மனதை மாற்றிகொண்டு உரிய திருத்தங்களை கேட்டார் என்பது, அவரது மகத்தான பெருந்தன்மையை காட்டுகிறது. அவர் கூறியவண்ணம் திருத்தங்கள் எழுதபட்டன.

தேச ஒற்றுமை என்ற விரிவான நலனைகருதி இந்தத்திருத்தங்களை ஏற்று கொள்ளுமாறு கூறி இதர தலைவர்களின் இசைவையும் நேருஜி பெற்றார்.இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இறுதியாக பரிசீலனை செய்ய வேண்டி இருந்தது. நான் தில்லிக்கு அழைக்க பட்டேன்.மொழி கமிஷனின் பரிந்துரைகளின் மீது இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அவசியமான போதெல்லாம் என்னை அழைத்து மொழி பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் அவர்களிடம் நாங்கள் மூவரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் நேருஜி கூறினார்.

கோவிந்த் வல்லப பந்தும் நானும் ஒரு பிரச்சனையில் உடன்பாடு கண்டுவிட்டால் அந்த விஷயம் பற்றி நேருஜிக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் எதாவது ஒரு பிரச்சனையில் எனக்கும் பந்துக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், தன்னுடைய கவனத்துக்கு அதனை கொண்டு வரலாம் என்றும் உள்துறை அமைச்சரிடம் நேருஜி சொன்னார்.

அதிர்ஷ்டவசமாக எனக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே எந்த விஷயம் குறித்தும் கருத்து வேற்றுமை ஏற்படவில்லை. நான் குறிபிட்ட எல்லா அம்சங்களையும் உள்துறை அமைச்சர் மிகுந்த அன்புடன் ஒப்புகொண்டார்."இந்தி  பேசாத மக்களைப் பெரும்பான்மையினராக கொண்ட மாநிலங்கள் எவ்வளவு காலத்திற்கு விரும்புகின்றனவோ, அவ்வளவு காலத்திற்கு ஆங்கிலம் எல்லா பணிகளுக்கும் ஆட்சி மொழியாகத்தொடர்ந்து நீடிக்கும்" என்று நானும் பந்த் அவர்களும் தீர விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் ஒரு பிரகடனத்தை நேருஜி வெளியிட்டார்.

பல்வேறு மத, மொழி,இன,வேறுபாடுகளை கொண்ட இந்த பாரத நட்டின் ஒற்றுமையைக்கட்டி காப்பதற்கு தேசியத்தலைமை இத்தகைய பண்பாடுகளைப் பெற்றிருத்தல் அத்தியாவசியம் என்பதைக்கூற தேவை இல்லை..பல்வேறு கருத்தோட்டங்களின் அடிப்படை கூறுகளை உணர்ந்துகொள்ள தவறினால் நாட்டின் ஒற்றுமை அபாயத்திற்கு உள்ளாகிவிடும்." -- சி.சுப்ரமணியம் சுயசரிதையிலிருந்து

இதிலிருந்து நேருவின் உறுதிமொழிக்கு பின் இருந்த சி.சுப்ரமணியமின் முயற்சி தெளிவாகும்.


3.1968 சட்ட திருத்தம்

நேரு இறந்தபின் குறுகிய மனப்பான்மை கொண்ட தலைவர்களின் கைக்கு அதிகாரம் சென்றது..இந்தி திணிப்பு சட்டமாக்க பட்டு , திணிப்பின் வேகமும் அதிகமான உடன் தமிழகத்தில் போரட்டம் வெடித்தெழுந்தது.டெல்லி தலைமையின் அழுத்ததுக்கும், அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் வெறியாட்டத்தின் விளைவாகவும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது.அந்த சூழ்நிலையிலும் டெல்லியிலிருந்த ஒரு சில  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தனர்.1965ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி காமராஜர்,நிஜலிங்கப்பா,ஆதுல்யா கோஷ் மற்றும் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் இந்தி திணிப்பை கைவிடவேண்டும் என்று மத்திய அரசிடம் பலமான கோரிக்கையை வைத்தனர்.ஒரு கட்டத்தில் காமராஜர் தமிழகத்தில் இந்தியில் மட்டும் வரும் அரசானைகளை கிழித்து எறிய வேண்டும் என்று கூட கூறியதாக செய்திகள் உள்ளன.

பிப்ரவரி மாதம் நடந்த கேபினட் கூட்டத்தில் சி.சுப்ரமணியம் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கபட்டது..இந்தி திணிப்பை தொடர முடிவெடுக்கபட்டது.இதை கண்டு கடும் கோபமடைந்த சி.சுப்ரமணியம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரோடு  தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒ.வி.அளகேசனும் தனது பதவியை ராஜினாமா செய்தனர்.இந்தி திணிப்பை தீவிரமாக்கிய அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சி.சுப்ரமணியத்தின் ராஜினாமாவை ஏற்று கொள்ள ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதை கண்டு கோபமடைந்த அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவிலிருந்து  தமிழ்நாடு பிரிந்து போகவேண்டாம் என்றால் அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுகொள்வதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்( "Do you want to lose Tamil Nadu from India?. If not, kindly take back your recommendation") என்று கோபமாக கூறி அவருக்கு நல்ல அறிவுறைகளை  கூறினார். இதை அடுத்து தான் சாஸ்திரி ஆல் இந்திய ரேடியோவில் நேருவின் உறுதி மொழி கடைபிடிக்க படும் என்று உறுதி அளித்தார்.அப்போது தான் மத்திய சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆங்கிலத்திலும் நடத்தபடும் என்றும் உறுதி அளித்தார்.மத்திய சிவில் சர்விஸ் தேர்வுகள் அப்போது  இந்தியில் மட்டும் நடைபெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.அன்றைய ஜனாதிபதிகள் நாட்டு நலனை பேணி காக்க முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் .அது மட்டுமன்றி அவரக்ளது முடிவுகளை பிரதமரும் ஏற்று கொண்டிருக்கிறார்கள்.

லால்பகதூர் சாஸ்திரி இறந்த பின் பிரதமர் பதவி பெற இந்தி வெறியரான மொராஜி தேசாய் முயற்சி செய்த போது காமராஜர் முயற்சியால் இந்தி வெறியில்லாத இந்திரா காந்தி பிரதமாரனதும் குறிப்பிடதக்கது.

இந்தி திணிப்பு எதிர்ப்பிலும் ,ஆங்கிலத்தை அரசியல் சட்டரீதியாக ஏற்று கொள்ள செய்ததிலும் இவ்வாறாக பல காங்கிரசாரின் பங்கும் உள்ளது. அந்த காலத்தில் தேசிய ரீதியான பிரச்சனைகளில் முடிவெடுக்கவும், எடுக்கும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருந்தால் இன்று ஈழத்தின் வரலாறு கூட மாறி இருக்க வாய்ப்புகள் உள்ளது.

--


--





Monday, June 25, 2012

இந்தி திணிப்பு - வந்த கார்டூனும் வந்திருக்க வேண்டிய கார்டூனும்!


சமீபத்தில் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வந்த கார்டூன் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார்டூனில் தமிழ் மாணவர்களை ஏதோ வன்முறைக் கூட்டம் போலவும், இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட்டும் அவர்கள் ஆங்கிலத்தில் கூறுவதைப் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் போராடுவது போலவும் கார்டூன் உள்ளது. அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் அம்பேத்கரை அவமதித்து, உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட கார்டூனால் பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்தது அனைவர் நினைவிலும் இருக்கும்.

NCERT புத்தகத்தில் உண்மையில் வந்த கார்டூன் ஒன்று; வந்திருக்க வேண்டிய கார்டூன் மற்றொன்று. கீழே உள்ள கார்டூனையும் பதிவையும் பார்த்தால் அதன் காரணம் உங்களுக்கே புரியும்.




கருத்து சுதந்திரம் மீது எப்படியெல்லாமோ தாக்குதல் நடந்தபோது அமைதியாக இருந்தவர்கள் இன்று கருத்து சுதந்திரம் மீது தாக்குதல் நடப்பதாக கூக்குரலிடுகிறார்கள். இந்த கார்டூன் தினமலரிலோ, ஞானியின் ஓ பக்கத்திலோ வந்து அதை மக்கள் எதிர்த்தால் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த கார்டூன் பத்திரிக்கையிலேயே வரவில்லை. இது மாணவர்களின் பாடப் புத்தகத்தில் வந்துள்ளது. முதலில் பாடப் புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியே இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி ஒரு நிகழ்வு பற்றியோ தலைவர் பற்றியோ நக்கலாக விமர்சித்து வரும் கார்டூன் படம் பாடப் புத்தகத்தில் இருந்து, அதை மாணவர்கள் பார்த்தால் அவர்கள் அடி மனதில் பதிந்து விடும். பிற்காலத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும் (Inception படத்தில் வருவது போல் அடிமனதில் பதிய வாய்ப்புள்ளது) உண்மைகளைப் படிக்க வேண்டிய பாடப் புத்தகத்தில் முதலில் தரக்குறைவான கார்டூன்கள் தேவையா என்பது கேள்வி.

இந்த கார்டூன் எதாவது உண்மையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டதா என்றும், இந்தி திணிப்பின் வரலாறு மற்றும் உண்மைகளைப் பற்றியும் பார்ப்போம். முதலில் ஆங்கிலம் இணைப்பு/பொது மொழியாக வந்த பின்னணியைப் பார்ப்போம்,

பண்டைய இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட கல்வியானது வருணாசிரம முறை மூலம் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியில் இருந்தது. பெரும்பான்மை மக்களுக்கு அப்போது கல்வி என்று சொல்லி தரபட்டவை சென்றடையவில்லை. அன்றைய கல்வியின் முக்கிய பகுதி மதம் சார்ந்ததாகவே இருந்தது. எனவே பாட மொழியாக வட மொழியே இருந்தது. புத்த மதத்தினர் ஆட்சி நடத்திய காலத்தில் மட்டும் தற்போது உள்ளபடி கல்விக்கான மிகப் பெரிய கட்டமைப்பு (நாள‌ந்தா பல்கலைகழகம் போன்றவை) தொடங்கபட்டு அனைத்து மக்களுக்கும் அன்றைய கல்வி அளிக்கபட்டது. (சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்)
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட வரை ஆங்கிலம் பொது மொழியாக, இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலம் அனைவருக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டதால் இந்தியர்கள் உலக அறிவைப் பெற்றனர். அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட ஆங்கில அறிவு பெற்று அதன் மூலம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சோசியலிசம், அறிவியல் என் அனைத்து அறிவையும் பெற்றனர்.

இனி இந்தி திணிப்பின் அரசியலைப் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பிரச்சனை தொடங்கி விட்டது. முதன் முதலில் ராஜாஜி 1937ம் ஆண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாயப் பாடமாகத் திணித்தார். அப்போது பெரியார் மற்றும் நீதிக் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினார்கள்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதால், ஆட்சிப் பதவியை காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்தது. அதன் பின் வந்த கவர்னர் ஆட்சியில் இந்திப் பாடம் கட்டாயப் பாடத்திலிருந்து விருப்பப் பாடமாகியது.
nehruஇந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிளும் இந்தியை கட்டாயப் பாடமாக்கப் பணித்தது. தமிழகத்திலும் இது நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியில் பாஸ் மார்க் எடுத்தால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மீண்டும் திராவிடக் கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து கட்டாயப் பாடம் என்பது கைவிடப் பட்டது.

சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் ஆட்சி/தேசிய மொழி பற்றிய விவாதம் தொடங்கியது. அன்றைய ஆட்சியாளர்களைப் பொருத்தவரை ஆங்கிலம் என்பது அயல்நாட்டு மொழி. அது இந்து - இந்தி - இந்தியா என்னும் ஆதிக்க வர்க்க தத்துவத்திற்கு எதிரானது. எனவே ஆங்கிலத்தை முழுமையாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சிறுபான்மை மொழி வளர்ச்சியையும் முடிந்த அளவு நசுக்கி விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பதன் மூலம் இந்தி அடிப்படையிலான இந்திய தேசியத்தை நிலைநிறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்களாம்.

உலகமயமாதல் இல்லாத அந்தக் காலத்தில் ஆங்கிலத்தின் தேவை அந்த அளவு இருந்திருக்கவில்லை. பொதுவாக கல்லூரி படிப்பவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் செல்வார்கள். ஆங்கில மொழியில் இருந்த சில அடிப்படை புத்தகங்களை இந்திக்கு மொழி மாற்றம் செய்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் இந்தி வழிப் பாடமாக மாற்றினால் ஆங்கிலம் முழுமையாக நீக்கப்பட்டு இந்தி வந்து விடும். முதலில் மத்திய, அதற்குப் பின் மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்கி, அனைத்து அரசு அலுவல்களும் இந்தியில் மட்டும் கொண்டு வந்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கட்டாயப் பாடமாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். எனவே அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தியை முழுமையாகத் திணிப்பதும், பள்ளிக் கூடங்களில் இந்தியைத் திணிப்பதும் அடிப்படை திட்டமாக இருந்தது.

பிகார், உ.பி, ம.பி போன்ற இந்தி மாநிலங்களை (மற்றும் மகாராஸ்டிரா) சேர்ந்த அறிவுஜீவி அரசியல்வாதிகள் இந்தியை மட்டுமே தேசிய மொழியாக்க வேண்டும் என்று விஷம் கக்கினர். இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று மமதையாகப் பேசினர். இது இந்தி-இந்து- இந்தியா என்ற கோட்பாட்டின் மனப்போக்கே.. மிகப் பெரிய விவாதத்திற்குப் பிறகு 17வது இந்திய அரசியல் நிர்ணயப் பிரிவில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்காமல் ஆட்சி மொழியாக அறிவித்தனர். சுதந்திரம் அடைந்த 15 வருடத்திற்கு ஆங்கிலமும் துணை மொழியாக இருக்கும் என்று முடிவு செய்யப் பட்டது. இதை முன்ஷி - அய்யங்கார் தீர்வு என்பர். இந்த முயற்சியில் தென்னகத்தைச் சேர்த்த பார்ப்பன‌ர் மற்றும் பார்ப்பன‌ரல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்களும் உழைத்தனர். அவர்களுடைய முயற்சியாலே இன்று ஆங்கிலமும், பிற மொழிகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இல்லையென்றால் மொழிவாரி சிறுபான்மையினரின் நலன்களை முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்பார்கள். திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதலே இந்த பாசிசவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர்.

ஆனாலும் அந்த சட்டம், ஆங்கிலத்தை அடுத்த 15 வருடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது. 5 ஆண்டுகளுக்குள் மொழி கமிஷன் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்தியை எவ்வாறு இந்தியா முழுவதும் பரப்புவது என்றும் ஆங்கிலத்தை எவ்வாறு முழுமையாக நீக்குவது என்றும் முடிவானது.
பி.ஜி.கெர் தலைமையிலான மொழி கமிஷன் இந்தியை எப்படி முழுமையாகத் திணிப்பது என்று ஆய்வு செய்து இந்தியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்தை சில காலம் துணை மொழியாகவும் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிக்கையை ஜி.பி.பந்திடம் சமர்பித்து அதையும் அவர் ஒப்பு கொண்டார்.

இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு ஆங்கிலத்தின் தேவையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும், வெளியிலும் போராடினர். அப்போது தான் நேரு தன் பிரசித்த பெற்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் கொடுத்தார். அதன் படி இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்றார்.

I believe also two things. As I just said, there must be no imposition. Secondly, for an indefinite period - I do not know how long - I should have, I would have English as an associate, additional language which can be used not because of facilities and all that... but because I do not wish the people of Non-Hindi areas to feel that certain doors of advance are closed to them because they are forced to correspond - the Government, I mean - in the Hindi language. They can correspond in English. So I could have it as an alternate language as long as people require it and the decision for that - I would leave not to the Hindi-knowing people, but to the non Hindi-knowing people

அதாவது அரசியல் சாசனம் நிர்ணயித்த 15 வருட வரம்பை நீக்கி உறுதி மொழி மட்டும் கொடுத்தார். ஆனால் சட்ட ரீதியான பாதுகாப்பு தரவில்லை. இன்று அனைத்து திராவிட அரசியல்வாதிகள் குறிப்பிடும் நேருவின் உறுதிமொழி இது தான். இது கொடுக்கப்பட்ட ஆண்டு 1959.
அரசியல் சாசனம் கொடுத்த 15 வருட கால கெடு நெருங்கி வர வர அப்போதைய மத்திய அரசு அனைத்து வகையிலும் இந்தியைத் திணிக்க ஆரம்பித்தது. ஒரு புறம் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்திப் பயிற்சி, ஆங்கிலத்தில் உள்ளவற்றை இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வது என அனைத்தும் ஜரூராக நடந்தன. மறுபுறம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திராவிட இயக்கங்கள் தீவிரப்படுத்தின.
நேருவின் முயற்சியால் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதில் 15 வருட கெடுவையும் தாண்டி ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம் என்று இருந்தது. அவ்வளவு தானே பிரச்ச்னை தீர்ந்தது என்கிறீர்களா? அந்த சட்ட மாதிரியில் ஆங்கில வார்த்தையில் பொடிவைத்து எழுதப்பட்டிருந்தது. அதாவது ஆங்கிலமும் ஆட்சி மொழியாக பயன்படுத்தலாம் என்றிருந்தது. சட்டத்தில் இருந்த may என்பதற்கு பதிலாக shall என்று இருக்க வேண்டும் என்று தி.மு.கவினர் குரலெழுப்பினர். mayக்கும் shallக்கும் எந்த அளவு வித்தியாசம் இருக்கும் என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரியும் (may-can,shall-must)

Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,--

திமுகவினர் கேட்ட இந்த மாற்றத்தை ஏற்று கொள்ளாமல் Official Languages Act of 1963 சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியது. இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணா தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அவருடைய ஒரு சில உரைகள்.

"If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us. We will be treated like third rate citizens". (Anti-Hindi Imposition Rally, Chennai Marina (Madras Marina), April 29, 1963)
"Making a language (Hindi) that is the mother tongue of a region of India the official language for all the people of India is tyranny. We believe that it will give benefits and superiority to one region (the Hindi-speaking region).... This and future generations in non-Hindi areas will suffer immeasurable hardships... Making Hindi the official language of India would destroy the age old language and culture of Tamil Nadu". (Court Trial for burning the Constitution of India to show opposition to Hindi imposition, December 3, 1963)

ராஜ்ய சபாவில் அதிக மக்கள் பேசும் இந்தியை தேசிய மொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தி பேசும் பகுதி உறுப்பினர்கள் கூறியபோது அண்ணா அதிக எண்ணிக்கை கொண்ட காகத்தை தேசிய பறவையாக்காமல் அழகிய மயிலை தேசிய பறவை ஆக்கியது ஏன் என்று நயமாக பதில் பேசினார்.

நேரு ஐரோப்பிய நாடுகளில் படித்தவர். அவர் ஓரளவு பர‌ந்த மனப்பான்மையும், தனி மனித விருப்பம் போன்றவற்றிற்கு மதிப்பளிப்பவராகவும் இருந்தார். நேரு உயிரோடு இருக்கும்வரை அவரது உறுதி மொழியும் ஓரளவு காக்கப்பட்டது.

நேரு 1964ம் ஆண்டு இறந்த பின் மீண்டும் பிரச்ச்னை தொடங்கியது. லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் போன்ற குறுகிய மனபான்மை கொண்ட இந்தி வெறியர்கள் கையில் அதிகாரம் கை மாறியது. அவர்களுக்கு இந்தியை முழுமையாக திணித்து ஆங்கிலத்தை வெளியேற்றுவதே கொள்கையாக ஆனது.

1964ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணித்தார். 1965ம் ஆண்டு சனவரி 26ம் தேதியுடன் அரசியல் அமைப்பு சட்டம் ஆங்கிலம் தொடர்வதற்கு கொடுத்த 15 வருட கால கெடு முடிவடைந்தது. நேருவின் உறுதிமொழி சிறிது சிறிதாக காற்றில் பறக்க விடப்பட்டது. உள்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகங்கள் தங்கள் தகவல் பரிமாற்றங்களை ஜனவரி 26 முதல் இந்தியில் மட்டுமே நடைமுறைப்படுத்தும் என்று அறிவித்தன‌. இந்தியை திணிக்க முடிவெடுத்த சனவரி 26ம் தேதியை அண்ணா துக்க தினமாக அறிவித்தார். திமுகவினர் மிகப் பெரிய அளவிற்கு போராடத் தயாரானார்கள். மிகப் பெரிய அளவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கீழபழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளயம் வீரப்பன், சத்யமங்களம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து போன்றோர் இந்தியை எதிர்த்து தீக்குளித்து மாண்டனர். மாயவரம் சாரங்கபாணி மாயவரம் A.V.C கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படித்துக் கொண்டிருந்த மாணவர் 'தமிழ்த் தாய்க்காக நான் உயிர் விடுகிறேன்' என்று கூறியபடியே உயிர் நீத்தார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. லால் பகதூர் சாஸ்திரி, நந்தா மற்றும் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்கள், இந்திய ராணுவம், CRPF,பிற மாநில போலிஸ் என அனைவரையும் தமிழகத்துக்கு அனுப்பி போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து, போராட்டத்தை அடக்க ஆணையிட்டனர். தமிழகமெங்கும் தமிழ் இளைஞர்களின் ரத்த ஆறு ஓடியது. ஆனால் அவர்களின் துணிவும், போராட்டமும் குறையவில்லை. அண்ணாமலை பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் போலிசாரின் குண்டுக்குப் பலியானார். அதன் பின் தமிழகமெங்கும் போலிசார் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். தமிழகத்தில் போலிசாரின் வன்முறைக்குப் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 70 லிருந்து 500 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Annaduraiஹிட்லர் ஆரிய தேசியவாதம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தான். லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் "இந்தி"ய தேசியம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தனர்.
காங்கிரசிலேயே காமராஜர் போன்றோர் இந்தி திணிப்பை எதிர்த்தனர். அவருடன் மாறுபட்ட கருத்து கொண்ட சி.சுப்ரமணியம் மற்றும் ஒவி.அளகேசன் போன்றோர் கூட இந்தி திணிப்பை எதிர்த்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

நிலைமை தீவிரமாவதைக் கண்டு, லால்பகதூர் சாஸ்திரி ஆங்கில மொழி சில காலம் தொடரும் என வாய்வழி உறுதிமொழி அளித்தார். நேருவின் வாய் வழி உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு இந்தியைத் திணித்த லால்பகதூர் சாஸ்திரி சட்ட திருத்தத்தை ஏற்படுத்தாமல் பெயருக்கு வாய்வழி உறுதிமொழியை அள்ளி வீசினார்.

இது நடந்து கொண்டிருந்த காலத்தில், பால் தாக்கரேயுடன் மும்பை பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருத்த R.K.லக்ஷ்மணன் என்ற கார்ட்டூனிஸ்ட், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் சேர்ந்திருந்தார். ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் சட்ட திருத்தம் வெளிவராத நிலையில், அதற்காக போராடிக் கொண்டிருத்த மாணவர்களை கிண்டல் செய்து உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியைக் கொண்டு தற்போது விமர்சனத்திற்கு உள்ளான கார்டூனை போட்டார். இவ்வாறு உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளைப் பரப்புவது வட இந்தியப் பத்திரிக்கைகளின் வாடிக்கை. இதை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக் கொண்டாலும், இந்த அவதூறு கார்டூனை பாடப் புத்தகத்தில் சேர்த்தது கண்டு தான் ஒட்டு மொத்த தமிழகமே கொதித்து எழுந்து உள்ளது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மரணமடைந்த இளைஞர்களின் உடல்கள் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்கள். உண்மையில் புதைக்கப்பட்டது தமிழக காங்கிரசாரின் ஆணவமும், மக்கள் விரோதப் போக்கும், இந்தியை திணிக்க முயன்ற மொழி வெறியும் தான். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 1967ல் காங்கிரசுக்கு கட்டபட்ட சமாதி இன்றுவரை தமிழகத்தில் உறுதியாக உள்ளது!
1966ல் லால் பகதூர் சாஸ்திரி மரணமடையும் வரை, ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் சட்ட சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாஸ்திரி மரணமடைந்தவுடன் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்களிடம் மீண்டும் பிரதமர் பதவி சென்றடையும் அபாயம் இருந்தது. மொராஜி தேசாய் போன்ற குறுகிய நோக்கம் உடைய பாசிச மொழி வெறியர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்று உணர்ந்த காமராஜர், தன் மதிநுட்பத்தின் மூலம் மொழிப் பிரச்சனையில் ஓரளவு நடுநிலையான இந்திரா காந்தியை பிரதமராகக் கொண்டுவந்தார்.

1967ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, 1963ம் ஆண்டு சட்டத்தில் "virtual indefinite policy of bilingualism" என்ற ஷரத்து சேர்க்கப்பட்டு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 8, 1968ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. கடைசியாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் கனவு நினைவேறியது.

ஆனால் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை தமிழகத்தில் திணிப்பதை கைவிடவில்லை.(உண்மையில் மும்மொழி கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்) அதை எதிர்த்து 1967 டிசம்பரில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. பேச்சுவார்த்தைக்குப் பின் அன்றைய முதல்வர் அண்ணா, மும்மொழிக் கொள்கையை ரத்து செய்தார். கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழை முழுமையான ஆட்சி மொழியாக கொண்டு வர முடிவு செய்யபட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்தது.

ஆங்கிலத்தை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஆண்டு 1968. இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களை கிண்டல் செய்து கார்டூன் வெளிவந்த ஆண்டு 1965. உண்மை இப்படி இருக்க NCERT கோயபல்ஸுக்கள் இந்த கார்டூனை பாடப் புத்தகத்தில் போடுகிறார்கள்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை


இந்தியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தியதை எதிர்த்து மட்டும் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதாக இன்று பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுகிறது. உண்மை அதுவல்ல. சுதந்திரம் அடைந்தபின் இந்தியை மட்டும் தேசிய மொழியாக்க முயன்றதன் நோக்கமே அன்னியர்களின் அடையாளமாக கருதப்பட்ட ஆங்கிலத்தை இந்தியாவிலிருந்து முழுமையாக நீக்கவேண்டும் என்பதே. ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை அடிப்படையாக கொண்ட தேசியத்தை நிறுவ முயன்றனர். ஏற்கனவே பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சோவியத் யூனியனில் பெரும்பான்மை மக்கள் பேசிய ரசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்து, அதனை பிற மொழிவாரி சிறுபான்மையினரின் மேல் திணித்து, ரசிய மொழியை மட்டும் ஆட்சி மற்றும் தேசிய மொழியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருந்தனர். சோவியத் சோசியலிசத்திலிருந்து நிறைய கருத்துகளை எடுத்த போது இந்தி-இந்து-இந்தியா என்ற தாரக மந்தரத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் இந்தி அடிப்படையிலான தேசிய மொழிக் கொள்கையை எடுத்ததில் வியப்பேதும் இல்ல.
அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி அடைந்து இருக்காவிட்டால் கீழ் காண்பவை தான் நடந்து இருக்கும்.

1.ஆங்கிலம் இந்தியாவிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கும். கல்வி சாலைகளில் இந்தி வழிப் பாடம் முழுமையாக அறிமுகபடுத்தப்பட்டிருக்கும். தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இந்தியர்களுக்கும் உலக அறிவு இந்தளவிற்குக் கிடைத்து இருக்காது.

2.இன்று உலகமயமாதல் காரணமாக தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கும் உலகளாவிய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்காது. (இந்தி மட்டும் படித்து உ.பி., பீகார் கொள்ளைக் கூட்டங்களுக்கு வேண்டுமானால் கடுமையான போட்டிக்குப் பின் சென்றிருக்கலாம்.)

3.இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் பள்ளி, கல்லூரி படித்தும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தங்கள் தாய் மொழியில் பரிட்சை எழுதி அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் படிப்பில் முன்னணியில் இருப்பார்கள். தமிழ் மாணவர்கள் இந்தி படித்து, இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுடன் எதற்கும் போட்டி போட்டிருக்க வேண்டும்.

4.இந்தியாவில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிருக்காத அனைத்து மக்களும் இரண்டாம் தர மக்களாகி இருப்பார்கள்.

5.அன்னிய மொழியான ஆங்கில மொழி தற்போது பெரும்பான்மையாக இருப்பதால், ஆங்கிலத்தை ஆதரித்து அதை திணிக்க யாருக்கும் அவசியம் இல்லாததால் மொழிவாரி சிறுபான்மையினர் தங்களது தாய் மொழி மற்றும் கலாசாரத்தை ஓரளவு பாதுகாக்க முடிந்தது. இந்தி மட்டும் தேசிய மொழியாக முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தால் சிறுபான்மையினரின் மொழியும் அவர்களது கலாச்சாரமும் முழுமையாக நசுக்கப்பட்டிருக்கும்.
இந்தி படிக்காததால் வட நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொய் பிரச்சாரம் செய்தவர்களால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது சூழ்நிலை கைதியாக‌ வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கிலத்தை படித்து தற்போது தமிழர்கள் உலக அறிவு மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு கிடைத்ததன் மூலம் சரித்திரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விடுதலை செய்து விட்டது. ஆங்கிலத்தை மறுத்து பெரும்பான்மையாக இந்தியை ஏற்றுக் கொண்ட உபி, பிகார், மபி போன்ற இந்தி மாநில மக்களை இன்று பசி, பட்டினி, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றின் மூலம் வரலாறு தண்டித்துவிட்டது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டும் இன்னும் இந்தியைத் திணிக்க இந்திய கோயபல்சுக்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் உள்ளனர்.

பின் குறிப்பு: பதிவு பெரிதாக சென்றதால் இரு பதிவாக எழுதலாம் என்று எண்ணி முதல் பகுதியாக இதற்கு முந்தய பதிவை இட்டேன். ஆனால் தொடர்ச்சி வேண்டும் என்ற காரணத்தால் போன பதிவையும் இந்த பதிவையும் சேர்த்து ஒன்றாக பதிவிடுகிறேன்

Wednesday, June 13, 2012

NCERT என்னும் கோயபெல்ஸ்கள் கூட்டம் - வந்த கார்டூனும் வந்திருக்க வேண்டிய கார்டூனும்

சமீபத்தில் பாட புத்தகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தி வந்த கார்டூன் தமிழகமெங்கும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.அந்த கார்டூனில் தமிழ் மாணவர்களை ஏதோ mobster போலவும், இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட்டும் அவர்கள் ஆங்கிலத்தில் கூறுவதை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் போராடுவது போலவும் கார்டூன் உள்ளது.
அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் அம்பேத்காரை அவமதித்து, உண்மைக்கு புறம்பாக வெளியிட பட்ட கார்டூனால் பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்தது அனைவர் நினைவிலும் இருக்கும்.

NCERT புத்தகத்தில் உண்மையில் வந்த கார்டூன் ஒன்று. வந்திருக்க வேண்டிய கார்டூன் மற்றொன்று. கீழே உள்ள கார்டூனையும் பதிவையும் பார்த்தால் அதன் காரணம் உங்களுக்கே புரியும்.



கருத்து சுதந்திரம் மீது  எப்படியெல்லாமோ தாக்குதல் நடந்த  போது அமைதியாக இருந்தவர்கள் இன்று கருத்து சுதந்திரம் மீது தாக்குதல் நடப்பதாக கூக்குரலிடுகிறார்கள்.இந்த கார்டூன் தினமலரிலோ,ஞானியின் ஓ பக்கத்திலோ வந்து அதை மக்கள் எதிர்த்தால் நிச்சயம்
கண்டிக்க படவேண்டிய  விஷயமாக இருக்கும். ஆனால் இந்த கார்டூன் பத்திரிக்கையிலேயே வரவில்லை. இது மாணவர்களின் பாட புத்தகத்தில் வந்துள்ளது.

முதலில்  பாட புத்தகத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியே இருக்க கூடாது. அது மட்டுமன்றி ஒரு நிகழ்வு பற்றியோ தலைவர் பற்றியோ நக்கலாக விமர்சித்து வரும் கார்டூன் படம் பாட புத்தகத்தில் இருந்து அதை மாணவர்கள் பார்த்தால் அவர்கள் அடி மனதில் பதிந்து விடும். பிற்காலத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்(Inception படத்தில் வருவது போல் அடிமனதில் பதிய வாய்ப்புள்ளது) உண்மைகளை படிக்க வேண்டிய பாட புத்தகத்தில் முதலில் தரகுறைவான கார்டூன்கள் தேவையா
என்பது கேள்விக்குறி.

இந்த கார்டூன் எதாவது உண்மையை அடிப்படையாக கொண்டு வரையபட்டதா என்றும், இந்தி திணிப்பின் வரலாறு பற்றியும் பார்ப்போம்.

ஒரு மொழி இந்தியா முழுதும் திணிக்க பட வேண்டும் என்றால் கல்வியின் மூலம் தான் திணிக்க பட வேண்டும்.முதலில் ஆங்கிலம் இணைப்பு/பொது மொழியாக வந்த பின்னனியை பார்ப்போம்,

பண்டைய இந்தியாவில் கட்டமைக்க பட்ட கல்வியானது வருணாசிரம முறை மூலம் ஒரு சிறிய  ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியில் இருந்தது. பெரும்பான்மை மக்களுக்கு அப்போது கல்வி என்று சொல்லி தரபட்டவை சென்றடைய வில்லை.அன்றைய கல்வியின் முக்கிய
பகுதி மதம் சார்ந்ததாகவே இருந்தது. எனவே பாட மொழியாக வட மொழியே இருந்தது.புத்த மதத்தினர் ஆட்சி நடத்திய காலத்தில் மட்டும் தற்போது உள்ளபடி கல்விக்கான மிக பெரிய கட்டமைப்பு  (நலந்தா பல்கலைகழகம் போன்றவை) தொடங்கபட்டு அனைத்து மக்களுக்கும் அன்றைய கல்வி அளிக்கபட்டது.

ஆங்கிலேயர் இந்தியா வந்த போது கல்வி என்பது பெரும்பாலும் இந்து மற்றும் இசுலாமிய மத சார்ந்ததாக இருந்தது.முதன் முதலாக மெக்காலே அனைத்து தரப்பு மக்களும் பயனடைய அறிவியல் சார்ந்த ஆங்கில மொழி வழியிலான கல்வி முறையை அறிமுக படுத்தினார். அந்த காலத்தில் (இன்றும் கூட)) உலகின் அனைத்து மொழியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆங்கில மொழியை படிப்பதன் மூலம் இந்தியர்கள் அய்ரோப்பியர்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய முடியும் என்று
கருதினார். ஆனால் மெக்காலே திட்டம் நிறைவேற்ற பட்டால், அனைவருக்கும் கல்வி கிடைத்து  வருணாசிரம அடிப்படையே ஆட்டம் கொண்டு விடும் என்பதாலும், வட இந்திய மொழியின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதாலும் கடுமையான எதிர்ப்பு காட்டபட்டது.

அன்றைய சமூக,பொருளாதார நிலை பற்றி அறியாமல் மெக்காலே கல்வி திட்டத்தை இன்றைய சூழ்நிலையில் ஒப்பீடு செய்து அதன் மீது வீச படும் சேறும் கணக்கிடலங்காது. மெக்காலே கல்வி திட்டம் பற்றிய விரிவான பதிவை கீழே உள்ள இடுக்கையில் விவரித்திருந்தேன்.
சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட வரை ஆங்கிலம் பொது மொழியாக ,இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலம் அனைவருக்கும் பள்ளியில் பயிற்றுவிக்க பட்டதால் இந்தியர்கள் உலக அறிவை பெற்றனர். அன்று சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூட
ஆங்கில அறிவு பெற்று  அதன் மூலம் சுதந்திரம், சமத்துவம்,ச்கோதரத்துவம், சோசியலிசம், அறிவியல் என் அனைத்து அறிவையும்  பெற்றனர்.

இனி இந்தி திணிப்பின் அரசியலை பார்ப்போம்.

1. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பிரச்சனை தொடங்கி விட்டது.முதன் முதலில் ராஜாஜி 1937ம் ஆண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாய பாடமாக திணித்தார். அப்போது பெரியார் மற்றும் நீதி கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து போராடினார்கள்.
இரண்டாம் உலக போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதால், காங்கிரஸ் கட்சி ஆட்சி பதவியை ராஜினாமா செய்தது. அதன் பின் வந்த கவர்னர் ஆட்சியில் இந்தி பாடம் கட்டாய பாடத்திலிருந்து விருப்ப பாடமாகியது.

2. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிளும் இந்தியை கட்டாய பாடமாக்க  பணித்தது.தமிழகத்திலும் இது நடை முறை படுத்த பட்டது. இந்தியில் பாஸ் மார்க் எடுத்தால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை
ஏற்பட்டது.மீண்டும் திராவிட கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து கட்டாய பாடம் என்பது கை விட பட்டது.

3.சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் ஆட்சி/தேசிய மொழி பற்றிய விவாதம் தொடங்கியது..அன்றைய ஆட்சியாளர்களை பொருத்தவரை ஆங்கிலம் என்பது அயல்நாட்டு மொழி. அது இந்து - இந்தி - இந்தியா என்னும் ஆதிக்க வர்க்க தத்துவத்திற்கு எதிரானது. எனவே
ஆங்கிலத்தை முழுமையாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.சிறும்பான்மை மொழி வளர்ச்சியையும் முடிந்த அளவு நசுக்கி விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பதன் மூலம் இந்தி அடிப்படையிலான இந்திய தேசியத்தை நிலை நிறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்களாம்.

4. உலகமயமாதல் இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலத்தின் தேவை அந்த அளவு இருந்திருக்கவில்லை. பொதுவாக கல்லூரி படிப்பவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு செல்வார்கள். ஆங்கில மொழியில் இருந்த சில அடிப்படை புத்தகங்களை
இந்திக்கு மொழி மாற்றம் செய்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் இந்தி வழி பாடமாக மாற்றினால்  ஆங்கிலம் முழுமையாக நீக்கபட்டு இந்தி வந்து விடும்.முதலில் மத்திய, அதற்கு பின் மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்கி,
அனைத்து அரசு அலுவல்களும் இந்தியில் மட்டும் கொண்டு வந்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கட்டாய பாடமாக ஏற்று கொண்டே ஆக வேண்டும். எனவே அரசு வேலைவாய்ப்பு தேர்வு, வேலைகளில் இந்தியை முழுமையாக திணிப்பதும், பள்ளி
கூடங்களில் இந்தியை திணிப்பதும் அடிப்படை திட்டமாக இருந்தது.

5. பிகார்,உ.பி,ம.பி போன்ற இந்தி மாநிலங்களை(மற்றும் மகாராஸ்டிரா ) சேர்ந்த அறிவு ஜீவி அரசியல்வாதிகள் இந்தியை மட்டுமே தேசிய மொழியாக்க வேண்டும் என்று விஷம் கக்கினர்.இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று மமதையாக பேசினர். இது இந்தி-இந்து- இந்தியா என்ற கோட்பாட்டின் மன போக்கே..மிக பெரிய விவாதத்திற்கு பிறகு 17வது இந்திய அரசியல் நிர்ணய பிரிவில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்காமல்  ஆட்சி மொழியாக அறிவிக்க  பட்டது. சுதந்திரம் அடைந்த 15 வருடத்திற்கு
ஆங்கிலமும் துனை மொழியாக இருக்கும் என்று முடிவு செய்ய பட்டது.இதை முன்ஷி - அய்யங்கார் தீர்வு என்பர்.இந்த முயற்சியில் தென்னகத்தை சேர்த்த பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்களும் உழைத்தனர்.அவர்களுடைய முயற்சியாலே இன்று ஆங்கிலமும், பிற மொழிகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இல்லையென்றால் மொழிவாரி சிறும்பான்மையினரின் நலன்களை முலையிலேயே கிள்ளி எரிந்து இருப்பார்கள்.

6.ஆனாலும் அந்த சட்டம், ஆங்கிலத்தை அடுத்த 15 வருடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.5 ஆண்டுகளுக்குள் மொழி கமிஷன் ஆரம்பிக்க பட்டு அதன் மூலம் இந்தியை எவ்வாறு இந்தியா முழுவதும் பரப்புவதும் என்றும் ஆங்கிலத்தை எவ்வாறு முழுமையாக நீக்க படவேண்டும் என்றும் முடிவானது.

7.பி.ஜி.கெர் தலமையிலான மொழி கமிஷன் இந்தியை எப்படி முழுமையாக திணிப்பது என்று ஆய்வு செய்து இந்தியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்தை சில காலம் துணை மொழியாகவும் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிக்கையை ஜி.பி.பந்திடம் சமர்பித்து அதையும் அவர் ஒப்பு கொண்டார்.

தொடர்ந்து நடந்தவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

Tuesday, June 05, 2012

சோவியத் கால வாழ்க்கை - ஒரு நேர்கானல்


சோவியத் மறைவுக்கு பின் கம்யூனிசம் உலகெங்கிலும் மறைய தொடங்கி விட்டது. நமக்கும் ,இனி வரும் தலைமுறையினருக்கும்  கம்யூனிசம் ஆட்சி காலத்தில் என்னதான் நடந்ததது என்று தெரிய வாய்ப்பில்லாமலே போகலாம். நான் பள்ளி படிக்கும் நாட்களில் எல்லாம் அதை ஒரு ஆதர்ச சமுதாயமாகவே நினைத்து கொண்டிருந்தேன். அது பற்றிய உண்மைகளை அறிய ஆவலாக இருந்தேன்.

கம்யுனிச ஆதரவு புத்தகங்களில் அதைஒரு utopian சமூகமாகவும் , முதலாளித்துவம் சார்ந்த புத்தகங்களில் அதை ஒரு நரகமாகவும் முன்னிலை படுத்துவார்கள். பிற்காலத்தில் அது பற்றிய நிதர்சன உண்மைகள் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.

என்னுடைய அலுவலகத்தில் நிறைய பேர் சோவியத் நாட்டை சேர்ந்த்தவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சோவியத் மறைய தொடங்கிய காலத்தில் பிறந்த்தவர்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் சோவியத் காலத்தில் (60களில் பிறந்த்தவர்கள் ) பிறந்தவர்கள். அவர்களிடம்  சோவியத் கால கம்யூனிசம் மற்றும் வாழ்க்கை பற்றி தகவல் சேகரித்தேன். 

அதை பதிவாக இட்டால் பலர் சோவியத் கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று பதிவிடுகிறேன் .

இது சோவியத் காலத்தில் அங்கு வாழ்ந்த தனி பட்ட மனிதர்களின் கருத்துகள். அவர்களுடைய விருப்ப வெறுப்புக்கு ஏற்றவாறு சில/பல தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது.

சோவியத் பற்றி நான் பல புத்தகங்கள் படித்திருந்ததாலும் என்னுடைய கருத்துகள் எதையும் கலக்காமல் அவர்களுடைய கருத்துகளை மட்டுமே பதிவிடுகிறேன்.
கேள்வி பதிலாக பதிவிடாமல் அவர் கூறியவற்றை அப்படியே பதிவிடுகிறேன்.

  • சோவியத் யூனியனில் அனைத்து தொழிலாளர்களும் சமம். ஒரே ஊதியம் என்பது உண்மை அல்ல. ஆனால் அதே சமயம் ஊதிய வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.
  • ஓரளவு அனுபவம் கொண்ட சாதாரண தொழிலாளர்களின் ஊதியம் பொறியாளர் போன்ற பட்டம் பெற்றவர்களின் ஊதியத்தை விட அதிகம்?!
  • வேலையின்மையே முழுமையாக கிடையாது.
  • இலவச கல்வி அனைவருக்கும் கிடைத்தது.
  • சோவியத் யூனியனின் கல்வித்தரம் அமெரிக்க கல்வி தரத்தை விட உயர்ந்தது.
  • அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைத்தது.
  • பணவீக்கம் என்பதே கிடையாது. அதாவது பொருட்களின் விலையேற்றம் பெரிய அளவில் கிடையாது.
  • தொழிலாளர்கள் கம்பெனியில் வட்டியில்லா கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். தவணை முறையில் பணத்தை சிறிது சிறிதாக கொடுப்பார்கள்
  • பிரச்ச்னை Supply Sideல் தான் இருந்தது. விலையுயர்ந்த பொருட்கள் வாங்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
  • ஊழல் மற்றும் லஞ்சம் எங்கும் தலை விரித்து ஆடியது.
  • பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து புதிய பிராஜெக்ட் அல்லது தொழிற்சாலைக்கு அனுமதி வாங்குவார்கள். அவர்களுடைய சம்பளம் குறைவாக இருந்தாலும் .சட்ட விரோதமாக லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் சம்பாதிப்பார்கள். உதாரணமாக 20 தொழிலாளர்கள் வேலை செய்வதாக கணக்கு காட்டுவர்கள். தொழிலாளர்களிடம் தனியாக பேசி கொண்டு, அவர்களுக்கு பாதி பணத்தை மட்டும் கொடுத்து விடுவார்கள். தொழிலாளர்களோ வேலைக்கு வராமலேயே பாதி பணத்தை வாங்கி கொள்வார்கள்.
  • பொறியாளர் போன்ற நன்கு படித்து பதவியில் இருப்பவர்களுடைய வருடாந்திர  சம்பள உயர்வு மிகவும் குறைவு.
  • கடின உழைப்புடன் வேலை செய்பவர்களுக்கும் சோம்பேரிகளாக வேலை செய்பவரகளுக்கும் ஒரே சம்பளம் மற்றும் இதர வளர்ச்சியும் இருக்கும். அதன் விளைவு கடின உழைப்பாளர்கள் விரக்தி அடைந்து கடின உழைப்பை  கை விட்டு விடுவார்கள்.
  • சோவியத்  தலைநகரான மாஸ்கோவில் மட்டும் அனைத்து கடைகளிலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். மற்ற பகுதிகளில் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.
  • பால் மற்றும் ரொட்டிக்கு கூட விடிய காலையில் கடுங்குளிரில் வரிசையில் காத்து நின்று வாங்க வேண்டும்.
  • மாபியாக்கள், கருப்பு மார்கெட் மற்றும் பதுக்கல் தலை விரித்தாடியது.
  • ராணுவம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் நல்ல சொகுசு வாழ்க்கை தரம் கிடைத்தது.
  • மொழி வாரி சிறுபான்மையினரின் மொழி வளர்ச்சி கூடிய மட்டும் நசுக்கபட்டு ரசிய மொழி சோவியத் முழுவதும் திணிக்க பட்டது.
  • மத சுதந்திரம் முற்றிலும் கட்டு படுத்த பட்டிருந்தது.
  • சோவியத் வாழ் யூத இன மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில்  முன்னேற விடாமல் தடுக்க பட்டிருந்தனர். ராணுவம் போன்றவற்றில் வேலை வாய்ப்பு கூட மறுக்கபட்டிருந்தது. அவர்கள் சந்தேக கண்ணோடு தான் பார்க்க பட்டனர்.(1970-90க்களில் கூட நிறைய சோவியத் யூதர்கள் அகதிகளாக அமெரிக்கா வந்துள்ளனர்)
  • அறிவாளிகள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றோர் மதிக்க படவில்லை.
  • உள்ளூர் கம்யூனிச கட்சி உறுப்பினர்களில் பலர் நல்லவர்களாக இருந்தார்கள். புதிதாக அவர்கள் பகுதிக்கு வரும் நபர்களுக்கு தேவையான முழு உதவியும் அர்பணிப்போடு செய்வார்கள்.
  • அத்தியாவசிய பொருட்கள் பற்றாகுறை, ஊழல், உற்பத்தி குறைவு, அதீத ராணுவத்துகான செலவு போன்றவையே சோவியத்தின் அழிவிற்கு காரணம்.
--

Wednesday, March 07, 2012

சோனியா கற்ற பாடமும் கற்க வேண்டிய பாடமும்

சமீபத்திய உத்திர பிரதேச தேர்தலின் முடிவில் ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி உண்டென்றால் அது தேசிய கட்சி (என்று தங்களை அழைத்து கொள்ளும்) கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியாக தான் இருக்கும். நாட்டில் அதிக தொகுதிகளை கொண்டுள்ள உத்திர பிரதேசத்தில் விரைவில் வர கூடிய நாடாளுமன்ற மன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் பெரு வெற்றி பெற்றால் மீண்டும் நேரு,இந்திரா காந்தி கால இந்தி பேசும் பகுதிகளை கொண்டு இந்தி பேசும் பகுதிகளுக்கான மட்டுமான ஆட்சி உருவாக வாய்ப்புள்ளது.

பீகார் மற்றும் உ.பியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஒட்டு மொத்த வெற்றி மறைந்த பின் தான் மத்திய அரசின் கவனம் பிற மாநிலங்களின் வளர்ச்சியின் பக்கம் திரும்பி உள்ளது.உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி இதே வழியை தொடர வழி வகுக்க வாய்ப்புள்ளது.இந்த சட்ட மன்ற தேர்தலின் தோல்வியை அடுத்து சோனியா காந்தி தேர்தலின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணத்தை கூறி உள்ளார். அதாவது தவறான வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியதும், அளவுக்கு மீறிய தலைவர்களின் எண்ணிக்கையுமே இந்த தோல்விக்கு காரணம் என்றார்.இது உண்மையிலேயே ஒரு நல்ல படிப்பினை.

அப்படியே தவாறான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்த அல்ல சிபாரிசு செய்த தலைவர்களுக்கும் அந்த வேட்பாளர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே உள்ள சாதி மற்றும் இதர தொடர்பு மற்றும் அந்த தலைவர்களுக்கும் அடிமட்ட மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு போன்றவற்றையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கட்டும்.

அப்படியே இன்னொன்றும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை சுற்றி இருக்கும் தலைவர்களில் பெரும்பாலோர் அடிமட்ட மக்களிடம் தொடர்பே இல்லாத,ஜால்ரா மட்டுமே போட தெரிந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தான் கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களையும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவர்கள். கட்சி தலைமையை ஒரு மாயையில் வைத்துள்ளனர்.தலைவர்கள் என்றில்லை. ராகுல் அறிவுறை கேட்கும் தலைவர்கள் மற்றும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தகுதி கூட அதுதான்.

இந்த உண்மைகளை எல்லாம் அவர் ஆராயாமல் இருப்பதே நல்லது. காங்கிரசின் வளர்ச்சி தற்போது நாட்டிற்கு ஆபத்தானது.

--

Monday, January 23, 2012

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை 2


முதல் பதிவில் பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் எப்படி செயல்படுத்த பட்டது என்பது பற்றியும் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற கேரள அரசு தடையாக இருந்தது பற்றியும் மத்திய அரசிடம் மத்யஸ்தம் போகும் முன் கேரள முதல்வரை தனியாக பார்த்து பேச சி.சுப்ரமணியம் அவர்கள் முடிவு செய்தார் என்றும் பார்த்தோம்.

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை

தொடர்ந்து நடந்ததை சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையில்(திருப்பு முனை) பின் வருமாறு விவரிக்கிறார்.

கேரள முதல்வர் ஏற்றார்

பட்டம் தாணுப்பிள்ளை உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. உடன்பாடு காண்பதில் நாங்கள் ஏற்கெனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்றும் மீண்டும் பேச்சு நடத்துவதில் பயனில்லை என்றும் அவர் கூறினார்."நீங்கள் கேரள முதமைச்சர் மட்டுமல்ல; நீங்கள் ஒரு தேசிய தலைவர் என்ற வகையில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்." என்று நான் கூறினேன்.

எனது பேச்சு பட்டம் தாணு பிள்ளையை திடுக்கிட வைத்தது. தகராறின் விவரங்கள் அவருக்கு முழுமையாக தெரியாது என்பதை அறிந்தேன்."திரு. சுப்ரமணியம் அவர்களே! எது சிறந்த தீர்வாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்று அவர் சிறிது நேர யோசனைக்கு பிறகு அவர் கேட்டார். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான நீர் கிடைக்கும். ஆனால் தகராறு ஒரு சிறிய அளவு நீர் பற்றியதே என்று நான் குறிப்பிட்டேன்.

நீரை இரு மாநிலங்களும் நியாயமாக பகிர்ந்து கொள்ள என்ன முறையைப் பின் பற்றலாம் என்று அவர் கேட்டார். நான் ஒரு திட்டத்தை அவரிடம் சமர்பித்தேன். அவர் அதை ஒப்புகொண்டார்.

அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்பேன் என்று நான் முதலில் மனந்திறந்து கூறியதால் தான் அவர் எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று கருதுகிறேன்.எனது திட்டம் இரு மாநிலங்களுக்கும் நியாயமாக இருக்கும் என்று அவர் கருதி இருக்க கூடும்.

நம்பிக்கையின் பயன்

பட்டம் தாணுப்பிள்ளை எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று காமராஜரிடம் டெலிபோன் மூலமும், பிறகு நேரிலும் தெரிவித்தேன்.காமராஜர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார்.

விவாகாரத்தை நாங்கள் சுமூக தீர்த்து கொண்டோம் என்றும், மத்திய அரசின் மத்தியஸ்தம் அவசியம் இல்லை என்றும் அடுத்த நாள் மத்திய உள் துறை அமைச்ச்ர் பந்த் அவர்களிடம் தெரிவித்தோம்.முதல் நாள் மாலை கொச்சி இல்லத்தில் என்ன நடந்தது என்பதையும் பந்த் அவர்களிடம் விவரமாக கூறினேன்.

பந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.இரு தரப்பினரையும் அவர் பாராட்டினார்."நம்பிக்கை வைத்தால் நம்பிக்கை பிறக்கும்" என்ற முது மொழி மிகவும் சரியே என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

இன்று தீர்க்க படமுடியாதவை என்று கருதபடும் பல விஷயங்களுக்கு நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காணலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.

ஆளியாறு திட்டம்

பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மேற்குறிப்பிட்டவாறு உடன்பாடு ஏற்பட்டதும், திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமல் செய்யபட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 70000 ஏக்கர் புஞ்ஜை நிலங்களுக்குப் பாசனவசதியும், ஆளியாறு நதி ஏற்கனவே பாசன வசதி அளித்துவந்த சுமார் 70000 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் ஏற்பாட்டையும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அளித்தது.

பழைய ஆளியாறு திட்டமும் பரம்பிக்குளம் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டன. இவ்வாறு இதற்குப் பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம் என்று பெயர் வந்தது.

மூன்றாவது திட்டம்

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டம் குறித்து உடன்பாடு காண முயற்சி நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது கூட (1994) எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

ஆயக்கட்டு பகுதி நிர்ணயிக்க பட்டு இதற்கான கால்வாய்களும் தோண்டப்பட்ட பிறகு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதர வறண்ட பகுதிகளுக்கும் பசன வசதியை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தி,மு.க அரசும் அதற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க அரசும், கூடுதல் நீர் எதுவும் இல்லாமல் புதிய கால்வாய்களை வெட்டி ஆயகட்டு பகுதியின் பரப்பை அதிக படுத்தி கொண்டே வந்தன. இப்போது (1994) இந்த திட்டத்தின் ஆயகட்டு பகுதியின் பரப்பு 2.5 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகம். ஆனால் இவ்வளவு பெரிய ஆயகட்டு பகுதிக்கு போதிய நீர் வரத்து இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும், சுமார் 3 மாதங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது.ஆயகட்டு பகுதிக்காக கால்வாய்களை வெட்டுவதற்கு அவசியமற்ற செலவு செய்யபட்டுள்ளது. ஏரளமான பரப்பு நிலம் பாசன கால்வாய்களாக தோண்டபட்டிருக்கிறது. தேர்தலில் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வாக்குகளை பெருவதற்காக தேர்தல் நேரத்தில் இந்த கால்வாய்கள் வெட்ட பட்டுள்ளன.

கட்சி அரசியல்

நமது நட்டில் வளர்ச்சி திட்டங்களில் கூட கட்சி அரசியல் நுழைந்து சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் சிரமங்களை உண்டாக்குகிறது. செலவுகளுக்கு ஏற்ற பயன்கள் கிடைக்குமா என்பது கவனிக்க படாமல், பணம் விரயம் செய்யபடுகிறது.இதனால் தான் நமது நாட்டில் பல பாசன திட்டங்கள் எதிர்பார்க்க படும் பயன்களை தருவது இல்லை; பொருளாதார ரீதியில் அவை கட்டுபடியாகவும் இருப்பது இல்லை.


காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் மேற்கொள்ள பட்டபோது தேர்தலில் வாக்களர்களின் ஆதரவை அவை பெறவில்லை.பாசன திட்டங்கள் நிரைவேற்றபட்ட போது, சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் மிகவும் தேவைபட்ட பகுதிகளுக்கு அது கிடைக்காமல் போயிற்று என்பது இதற்கு ஒரு காரணம்.பாசன வசதியை பெற்றவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் பாசன வசதி பெறாதவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்பதும் உண்மை.

அரசியல் காரணங்கள்

புதிய திட்டங்களை வகுக்கும் போது இதை கருத்தில் கொள்ளவேண்டும்.தேர்தலில் வாக்குகளை பெற உதவும் என்ற நோக்கம்,எந்த திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்க கூடாது.அரசியல் நோக்கங்களை மறுத்துவிட்டு,ஒவ்வொரு திட்டத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் தான் முடிவு செய்யவேண்டும்,ஏனெனில் ஒரு திட்டத்தினால் ஒருவர் பயனடைந்தால் ஏமாற்றம் அடைபவர்கள் பலர் இருப்பார்கள்.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது அன்றைய சென்னை மாகான முதலமைச்சராக இருந்த பனகல் ராஜா "ஒருவரின் நியமனம் பத்து பேருக்கு ஏமாற்றம்" என்று கூறுவது வழக்கம், அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்கிறதா அல்லது அரசியல் ரீதியாக பலம் பெருகுமா என்றெல்லாம் பார்க்காமல், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது நலம்.ஓர் அரசியல் கட்சியின் அல்லது ஒரு தனி நபரின் சாதனைகள் குறித்து வருங்கால சந்ததியார் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையிலிருந்து மேற்கூறிய பகுதிகளை எடுத்து பதிவிட்டுள்ளேன்.
புத்தகம் பெயர்: என் வாழ்க்கை நினைவுகள் . முதல் தொகுதி-திருப்பு முனை.

சி.சுப்ரமணியம் போன்ற அரசியல்வாதி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

--


Sunday, January 22, 2012

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை




கேரளாவில் கடலில் கலக்கும் நீரை தமிழ்நாடு உபயோகித்து கொள்ள பிரிட்டிஷ் காலத்தில் போட பட்ட திட்டங்களை(முல்லை பெரியாறு) தற்போதய கேரள அரசியல்வாதிகளும், மக்களும் கண்மூடி தனமாக எதிர்ப்பதை பார்க்கிறோம். இன்றைய தமிழக மற்றும் கேரள அரசியல்வாதிகளின் குறுகிய மற்றும் அரசியல் லாபம் பார்க்க தூண்டும் பார்வையே இதற்கு முக்கிய காரணம்.

ஆனால் ஒரு தமிழக அரசியல்வாதி கேரள அரசிடம் நயமாக பேசி தமிழகத்தின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெரும் வகையில் கேரள நீரை வாங்கி தந்தார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது அல்லவா?அப்போதைய கேரள ஆட்சியாளர்களுக்கு உண்மை புரியும் படியும் அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு சாதுர்யமாக பேசி தமிழகத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

அந்த அரசியல்வாதியின் பெயர் சி.சுப்ரமணியம்.அவர் நிறைவேற்றிய திட்டம் பரம்பிகுளம் ஆளியாறு திட்டம்.அதை நிறைவேற்றிய விதத்தை தனது சுய சரிதையான "திருப்பு முனை" என்ற நூலில் அழகாக விளக்குகிறார். அந்த புத்தகத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுகிறேன்.இன்றைய அரசியல்வாதிகளும், இளைய தலைமுறையினரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதை(திருப்பு முனை)யிலைருந்து --

பரம்பிக்குளம் திட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி மேற்கு நோக்கி ஓடி கொண்டிருக்கும் நதிகளின் நீரைக் கிழக்கு திசையில் திருப்பி விடுவதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ள பட்டது. அது தான் பரம்பிக்குளம் திட்டம்.

சில நதிகள் தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று கேரளத்தில் பாய்கின்றன.கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல காங்கிரசாரும், கோவை மாவட்ட போர்டின் தலைவராய் இருந்தவருமான வி.கே. பழனிச்சாமி கவுண்டர் பரம்பிக்குளம் திட்டம் பற்றி சிறிது காலமாக வற்புறுத்தி வந்தார்.

1952 -ம் ஆண்டில் சென்னை மாகானச் சட்ட பேரவை உறுப்பினராக பழனிச்சாமி கவுண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்ட பேரவையில் உரையாற்றுகையிலும் இந்த திட்டம் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். எனக்கு இந்த திட்டம் பற்றியோ அதன் இட அமைப்புக் குறித்தோ அப்போது எதுவும் தெரியாது.

அந்த திட்டத்தை எங்கே அமைக்கலாம் என்பது பற்றிப் பார்வையிட வருமாறு பழனிச்சாமி கவுண்டர் என்னை அழைத்தார். மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் சுமார் 48 கி.மி தொலைவு நாங்கள் காரில் சென்றோம். பின்னர், யானைகள் மீது ஏறி சென்று நதிகளின் உற்பத்தி பகுதியை அடைந்தோம். அந்த பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என்ற போதிலும், பரம்பிக்குளம் திட்டத்தினால் ஏற்பட கூடிய பயன்கள் குறித்து நான் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த திட்டம் குறிந்து ஆரம்ப அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு பாசனை துறை தலைமை பொறியாளரிடம் கூறினேன். இதற்கிடையே திட்டப் பகுதிக்கு நான் சென்றது பற்றி கேரள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. கேரள அரசின் அனுமதி இல்லாமல் நான் அங்கு எவ்வாறு செல்லலாம் என்று சில மலையாளப் பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பின.இதை கண்டு நான் வியப்புற்றேன். இந்திய பிரஜை ஒருவர் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல எவரிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனினும் குறுகிய மனபான்மைக்குத்தான் எத்தனை விசித்திர முகங்கள்.

கேரள முதல்வர் இசைவு

அப்போது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கேரள முதலமைச்சராக இருந்தார். பாசன துறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் பொறுப்பு வகித்து வந்தார்.அவர்கள் இருவரும் எனது சிறந்த நண்பர்கள். 1932ம் ஆண்டில் வேலூர் சிறையில் நான் இருந்த போது நம்பூதிரிபாட் அங்கே இருந்தார்.

கேரள முதல்வரையும் பாசன துறை அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டு, நான் கேரளத்துக்கு சென்றேன்.என்னுடன் அதிகாரிகள் எவரையும் அழைத்து செல்லவில்லை. பரம்பிக்குளம் திட்டம் பற்றி நம்பூதிரி பாட்டிடம் பேசினேன். அவர் கிருஷ்ணய்யரையும் எங்களது பேச்சில் கலந்து கொள்ள அழைத்தார். நாங்கள் பல்வேறு அம்சங்களையும் பற்றி விரிவாக விவாதித்தோம். இந்த திட்டம் பற்றி ஒரு முழுமையான அறிக்கையைத் தந்தால் இது குறித்து பரிசீலிப்பதாக நம்பூதிரிபாட் ஒப்பு கொண்டார். இவ்வாறு ஒரு அறிக்கையைத் தயாரிக்க தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் திட்ட பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.திட்ட பகுதியில் கேரளத்தில் உள்ள பகுதியும் அடங்கி இருந்தது.எனவே நமது பொறியாளர்கள் கேரள பகுதியையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி வேண்டினேன். அது உடனே ஒப்பு கொள்ள பட்டது.

பின்னர், திட்டம் குறித்து முழுமையாக ஆய்ந்து, அறிக்கை தயாரிக்குமாறு தமிழ்நாடு பொறியாளர்களுக்கு கூறினேன். ஒரு பள்ளதாக்கிலிருத்து மற்றொரு பள்ளதாக்கிற்கு நீரோட்டத்தை மாற்றும் முயற்சி இந்தியாவிலேயே அப்போது தான் முதன்முறையாக மேற்கொள்ள பட்டது. இதற்காக பெறிய மலைகளை குடைந்து நீண்ட சுரங்க பாதைகளை அமைக்க வேண்டி இருந்தது.

இந்த தொழிற்நுட்பம் நமக்கு புதிது. எனினும் இந்த திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியும் என்று தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.எனினும் திட்டத்தை செயல்படுத்த குறிப்பாகச் சுரங்க பாதைகளை அமைக்க ஓரளவு வெளி நாட்டு உதவி தேவை படும் என்று அவர்கள் கூறினர்.

நீர் பகிர்வு

திட்டத்தின் முதற் கட்டத்தில் பிரதான நதியான் பரம்பிக்குளம் திசையைய்த் திருப்ப வேண்டி இருந்தது. திட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் மூன்று சிறிய நதிகளை இந்த பிரதான திட்டத்துடன் ஒருங்கிணைக்க தீர்மானிக்க பட்டது.

ஒரு ஆண்டில் மொத்தம் எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை மதிப்பிட வேண்டியிருந்தது.முப்பது ஆண்டுகளில் திட்ட பகுதிகளில் பெய்த மழை சம்பத்தமான புள்ளி விபரங்களை கருத்தில் கொண்டு, மதிப்பீடு செய்யபட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்க கூடிய நீரைத் தமிழ்நாடு, கேரளாவும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அரசியல் அளவிலும், தொழில்நுட்ப நிபுணர்கள் அளவிலும் மிக விரிவான பேச்சுகள் நடந்தன.

கேரள முதலமைச்சர் ஒத்துழைத்ததால் திட்டத்தின் முதல் கட்டம் சம்பந்தமாக இந்த விஷயத்தில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்டங்கள் அமலாகத்தொடங்கியதும், மேற்கொண்டு பேச்சுக்களை நடத்துவது என்று முடிவு செய்ய பட்டது. மத்திய அரசின் தலையீடு அல்லது மத்தியஸ்தம் எதுவும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே இவ்வாறு ஓர் உடன்பாடு உருவானது, உண்மையிலேயே பெருமைக்குறிய விஷயம் ஆகும்.

இந்த உடன்பாட்டை தொடர்ந்து பரம்பிக்குளம் திட்டம் மிகவும் தீவிரமாக செயல் படுத்தபட்டது. ஒரு கட்டத்தில் திட்ட பகுதியை பார்வையிட வருமாறு நேருஜியை நான் அழைத்தேன். திட்டம் செயல் படுத்த பட்ட இடத்தில் ஒரு விருந்தினர் விடுதியை சிறந்த முறையில் அமைத்திருந்தோம். அதை திறக்க வருமாறு நேருஜியை அழைத்தோம். நேருஜி வந்து அதை திறந்து வைத்தார். அந்த திட்டம் அவரை பெரிதும் ஈர்த்தது. தமிழ்நாடு பொறியாளர்களின் திறமையை நேருஜி பாராட்டினார்.

இரண்டாவது கட்டம்

பின்னர் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்து பேச்சு நடத்தவேண்டி இருந்தது. இதற்கிடையே கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை விழுத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் பிரஜா சோசியலிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் ஒரு அமைச்சரவை அமைக்க பட்டிருந்தது. பட்டம் தாணுப்பிள்ளை முதலமைச்சராக இருந்தார். நான் அவருடன் பேச்சு நடத்தினேன்.

கம்யூனிஸ்டு அமைச்சரவையுடன் சுமூகமாக பேசி உடன்பாடு கண்ட எனக்கு,பட்டம் தாணுப்பிள்ளையைச் சமாளிப்பது சிரமமாக இருந்தது. நானும் பட்டம் தாணுப்பிள்ளையும் உடன்பாடு காண முடியவில்லை. எனவே தலையிட்டு மத்யஸ்தம் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த்தை நாங்கள் கேட்டு கொண்டோம். இரு தரப்பினரையும் அவர் டெல்லிக்கு அழைத்தார்.


பட்டம் தாணுப்பிள்ளையும், அவரது பாசன துறை அமைச்சரும், கேரள பொறியாளர்களும் டெல்லிக்கு சென்றார்கள். காமராஜரும், நானும் தமிழ்நாடு அரசு பொறியாளர்களுடன் டெல்லிக்கு பயணமானோம்.

மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அடுத்த நாள் நடைபெறுவதாய் இருத்தது.அதற்கு முன்னர் ,பட்டம் தாணுப்பிள்ளையைத் தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்று எனக்கு ஓர் யோசனை தோன்றியது. உடனே அவருக்கு டெலிபோன் செய்தேன். அவர் தங்கி இருந்த கொச்சி இல்லத்தில் என்னை சந்திக்க அவர் உடனடியாக ஒப்பு கொண்டார்.

அவ்வாறே அவரைச் சந்தித்தேன்.பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் குறித்து மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கேரளமும், தமிழ்நாடும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடிந்ததை அவருக்கு சுட்டி காட்டினேன். இந்த கட்டத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதை நான் விரும்பவில்லை என்றும், கேரளமும் தமிழ்நாடும் மத்தியஸ்தம் இல்லாமல் முடிவு செய்வதையே நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.

கேரள முதல்வரை சி.எஸ் எவ்வாறு சமாளித்தார் என்றும் அந்த திட்டத்தின் இன்றையை நிலை மற்றும் அந்த திட்டத்தை திராவிட இயக்கங்கள் எவ்வாறு தொடர்ந்தன என்பது பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்

--

Thursday, January 19, 2012

உலகிலே அதிக லாபகரமான வங்கி!

உலகின் லாபகரமான வங்கி எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சேஸ் வங்கி?சிட்டி வங்கி?ஸ்விஸ் வங்கி? இல்லை.அந்த வங்கியின் லாபம் எக்சான் மொபில்,ஆப்பில் மற்றும் IBM நிறுவனங்களின் கூட்டு லாபத்தை விட அதிகம்.அதன் லாபம் $78 பில்லியனுக்கும் மேல்.கேட்கவே ஆச்ச்சரியமாக இருக்கிறதா? வங்கியின் பெயரை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த வங்கியின் பெயர் தான் பெடரல் ரிசர்வ் வங்கி.பெடரல் ரிசர்வ் வங்கி தான் உலகின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்.இந்த லாபம் எப்படி வந்தது என்று பார்த்தால் இன்னும் வியப்பாக இருக்கும்

1.அமெரிக்க அரசாங்கம் அளவிற்கு மீறிய செலவீனங்களால் (போர், நிதி நெருக்கடியிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்றுதல்,மக்கள் நல திட்டங்கள்) பெருமளவில் கடன் வாங்க வேண்டி உள்ளது. அமெரிக்க அரசு மட்டுமன்றி அரசு சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் கடன் வாங்க தேவை உள்ளது.

2.அரசு கடனை கருவூல பத்திரமாக விற்பனை செய்கிறது.

3.அந்த பத்திரத்தை பெருமளவிற்கு பெடரல் ரிசர்வ் வாங்குகிறது.(இதற்கு நடுவே வேறு சில நிகழ்வுகள் இருந்தாலும் எளிமைக்காக இவ்வாறு வைத்து கொள்வோம்)

4.அது போன்ற பத்திரங்களின் மதிப்பு சுமாரக $3 டிரில்லியன் டாலர்கள் ஆகும். அந்த அளவு பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க தோன்றும். ஆனால் இந்த பணம் உழைப்பில் வருவதில்லை. கம்ப்யூட்டரில் ஒரு கிளிக் செய்தால் இந்த பணம் உருவாகி விடும். கடந்த காலங்களிலாவது பிரிண்ட்டிங் பிரஸ் வைத்து பிரிண்ட் செய்ய வேண்டும்.

5.அவ்வாறு உருவாக்க பட்ட பணத்தை அரசுக்கு கடனாக கொடுக்கிறது.

6.அரசு அந்த கடனுக்கு வட்டியாக பணத்தை பெடரல் ரிசர்விற்கு கொடுக்க வேண்டும்.

7.அவ்வாறு கிடைத்த வட்டியின் மதிப்பு $70 பில்லியன் டாலருக்கு மேல்.

8.அந்த வட்டி பணத்தை பெடரல் ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? தன் செலவுக்கு போக மீண்டும் அரசிடமே கொடுக்கும்.

அதாவது அரசிடம் கடன் கொடுத்து அதற்கு வட்டி வாங்கி, லாபமாக உள்ள அந்த வட்டியை அரசுக்கே திரும்ப கொடுக்கும். ஆக மொத்தம் அரசுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது.

உலக பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக பொது நாணயமாக உள்ள டாலர் பெருமளவில் உருவாக்கபடும் கதை இது தான்.
பிற நாடுகள் இது போல் செய்வதில்லையா என்று நினைக்க தோன்றும்.இந்திய ரிசர்வ் வங்கி கூட சுமார் $2 பில்லியன் (சிறிய அலவில்?) பணத்தை உருவாக்கி உள்ளது.

அதற்கு பணவீக்கம் மற்றும் பணத்தின் மதிப்பு சரிவு போன்ற கடுமையான விலையை கொடுக்க வேண்டும். ஆனால் டாலர் சர்வதேச பொது நாணயமாக உள்ளதாலும் அமெரிக்க பொருளாதாரம் பெரியதாக உள்ளதாலும், முதலீட்டாளர்களுக்கு வேறு மாற்று (தங்கம் தவிர) இல்லாததாலும் டாலர் மிக கடுமையான விலையை என்றுமே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

--

Tuesday, January 10, 2012

ரான் பால் - மாற்றமா? ஏமாற்றமா?

அமெரிக்காவில் பொதுஜன பத்திரிக்கைகளால் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்க்கான போட்டியில் முன்னனியில் நிற்கும் தலைவர் தலைவர் ரான் பால்.அமெரிக்க அரசியலில் லிபரடேரியன் என அழைக்கபடும் தனி மனித சுதந்திரம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் வரை நெருங்கியிருக்கும் தலைவர் ரான் பால்.இவருக்கு ஆதரவு வலது சாரி தேநீர் விருந்து (Tea party Movement) இயக்கத்தினரிடமும் இருக்கிறது. இடது சாரி வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு (Occupy Wallstreet) இயக்கத்தினரிடமும் இருக்கிறது.இவர் ஒரு ஆஸ்திரிய பொருளாதார வல்லுனர் ஆவார். போலி முதலாளித்துவத்திற்கும் லிபரடேரியன் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அமெரிக்க மக்களுக்கு மாநிலம் மாநிலமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.(நம்மூரில் கூட இந்த வித்தியாசம் புரியாமல் பல பேர் லிபரடேரியன் இயக்க ஆதரவாளர்களாக தங்களை நினைத்து குழம்பி உள்ளனர். இங்கு வந்து அவர்களுக்கும் விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்).

முதலில் லிபரடேரியன் தத்துவம் என்றால் என்ன என்று பார்ப்போம்.லிபரடேரியன் இயக்கம் என்பது தனி மனித சுதந்திரம் தான் சமூகத்தின் அடிப்படை தேவை என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. மேலை நாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் இந்த தத்துவம் இந்தியாவிலும் கூடிய விரைவில் பரவ வாய்ப்புள்ளதால், இது பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.லிபரடேரியன் தத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளது. உண்மையான தனி மனித சுதந்தரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பொருளாதார மற்றும் சமூக சமநிலை நாட்டில் நிலவ வேண்டும். அதை கொண்டுவருவதற்கு அரங்காத்தின் தலையீடும் முதலீடும் தேவை என்பதே சமூக லிபரடேரியன்களின்(Social Liberalism) கொள்கை. இது இந்தியா போன்ற சமூக மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாடுகளுக்கு ஏற்றதாகும்.

லிபரடேரியன்களின் அடுத்த பிரிவு நியோலிபரடேரியனிஸம்(Neoliberalism) ஆகும்.இது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டை முழுமையாக எதிர்க்கிறது.மிக சிறிய அளவான அரசாங்கம், முற்றிலும் தனியார் மயமாக்கபட்ட தொழிற்துறை,குறைவான வரி,தாரளமயமாக்கபட்ட பொருளாதாரம்,அரசின் கட்டுபாடுகள் தளர்த்த பட்ட வணிகம் மற்றும் தொழில் துறை,ஒழிக்க பட்ட அரசு மான்யம் மற்றும் குறைக்க பட்ட நலிந்தோருக்கான நிதி உதவி போன்றவையே வலது லிபரடேரியன்களின் கொள்கைகள்.ரான் பால் இந்த வகை நியோலிபரல் மற்றும் அடிப்படையில் சிறிது (குடியரசு கட்சியினருக்கே உரித்தான) பழமைவாத கொள்கை உள்ளவர் என்று கூறலாம்.

சந்தையில் அரசின் கட்டுபாடு இல்லாததால் தான் தற்போதய அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பது பெரும்பாலானோரால் ஏற்கபட்ட கருத்து ஆகும். ஆனால் ரான் பாலின் கருத்து படி அரசாங்கத்தின் முறையற்ற உதவியோடு கார்பொரேட்டுகள் தடையற்ற சந்தயை(Free Market capitalism) அழித்து போலி முதலாளித்துவத்தை(Crony Capitalism) உருவாக்கியது தான் பொருளதார நெருக்கடிக்கு காரணம் என்று கருதுகிறார்.

சோவியத் மறைவிற்கு பின் தற்போது அதிகரித்து வரும் விவாதம் தடைகள் மற்றும் கட்டுபாடற்று முற்றிலும் தனியார் மயமாக்க பட்ட பொருளாதாரமா அல்லது மக்கள் நலனை பேணும் அரசாங்கமும் மக்கள் நலனுக்காக கட்டுபடுத்த பட்ட சந்தையை கொண்ட அரசாங்கமா என்பதாக உள்ளது. இதனிடையே தடையற்ற பொருளாதரம் என்ற பெயரில் மறைமுக செல்வாக்கு கொண்ட போலி முதலாளித்துவம் உலகெங்கிலும் பரவி வருகிறது.இந்தியாவிலும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் விவாதம் விரைவில் பரவலாம். எனவே லிபரடேரியன் சிந்தனையாளர்களின் கருத்து மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இந்த கட்டுரை லிபரடேரியன் சிந்தனையாளர் ரான் பால் கருத்துகளை ஆதரித்தோ எதிர்த்தோ எழுத பட்டது அல்ல. ஆனால் அதன் அடிப்படையை புரிந்து கொண்டு அது இந்தியாவிற்கு வந்தால் எந்தெந்த இயக்கங்களால் எவ்வாறு உபயோகிக்க பட்டு எந்த வடிவில் இந்த சிந்தனை வெளிப்படும் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இனி அவருடைய கருத்துகளையும் அது அமெரிக்க அரசியலில் ஏற்படுத்த கூடிய எதிர் விளைவுகளையும் ,அவர் சார்ந்த லிபரடேரியன் கொள்கை இந்தியாவில் நடைமுறை படுத்தபட்டால் என்ன விளைவு ஏற்படுத்தபடும் என்றும் பார்ப்போம்.

1.போர் எதிர்ப்பு
அவருடைய மிக முக்கியமான கொள்கை போர் எதிர்ப்பு. ஈராக் போரை கடுமையாக எதிர்த்தவர் அவர். ஈரான் மீது போர் தொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக பேசுகிறார். தற்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளிளேயே கடுமையான் போர் எதிர்ப்பு கொள்கை கொண்டவர். அமெரிக்க தீவிரவாத தாக்குதலுக்கு அடிப்படை காரணம் அமெரிக்க வெளியுறவு கொள்கை தான் என்று வெளிபடையாக பேசியவர் அவர்.ராணுவத்துக்கான செலவை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.போர் ஆதரவு மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை வளர்க்க விரும்பும் பழமைவாத ஜனநாயக கட்சியினரிடம் இவரது கொள்கையால் அதிருப்தியை சம்பாதித்து கொள்ள சாத்தியம் இருந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ரான் பால்.போர்கள் காரணமாக அரசின் கடன் அதிகரிக்கிறது என்பதும் போரின் பின் விளைவுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதும் அவரின் போர் எதிர்ப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.

2.அமெரிக்க வெளியுறவு கொள்கை
ரான் பால் அமெரிக்காவின் வெளி நாட்டு தலையீடுகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதாவது அவர் அமெரிக்காவை மட்டுமே ஆள விரும்புவதாகவும் உலகத்தை ஆள விரும்ப வில்லை என்றும் கூறுகிறார்.லிபரடேரியன் தத்துவ படி எந்த ஒரு நாட்டின் பிரச்ச்னையையும் அவர்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டுமே அன்றி அயல்நாடுகளின் தலையீடு கூடது என்பதும் ஒரு காரணம்.அவருடைய கூற்றுபடி (கார்போரேட்டுகளின் நன்மைகளுக்காக கொடுக்க படும்) வெளி நாட்டு உதவி தொகைகள் நிறுத்தபட வேண்டும் என்கிறார்.இதன் விளைவாக உண்மையிலேயே ஏழை நாடுகளுக்கு வறுமை ஒழிப்புக்கு கொடுக்கபடும் நிதிகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்க கார்ப்போரேட்டுகளின் நலன்களுக்காக தான் இந்த நிதிகள் பயன் படுத்தபடுகிறது என்று இடதுசாரி இயக்கங்கள் கூறுவதையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

3.இஸ்ரேல் உறவு
அவருடைய வெளி நாட்டு கொள்கையில் அமெரிக்க பத்திரிக்கையாளர்களால் கூர்ந்து கவனிக்க படுவது இஸ்ரேலுடனான உறவு குறித்த கொள்கை.இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளிப்பதை கடுமையாக எதிர்க்கிறார். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்ச்னைக்கு அமெரிக்க தலையீட்டை எதிர்க்கும் அவர் அமெரிக்க மீது நடத்தபட்ட தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவின் பாலஸ்தீன விரோத போக்கும் அரபு நாடுகளில் அமெரிக்க தலையீடுமே காரணம் என்கிறார். பாலஸ்தீன மக்களின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டு என்கிறார். அமெரிக்காவில் ஊடக துறை மற்றும் நிதி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் யூத மக்களிடம் அவர் பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறார்.

4.போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை
போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை போன்றவற்றை மத்திய அரசாங்கம் சட்டம் போட்டு தடை செய்வதை எதிர்க்கிறார்.இது போன்ற தடைகள் பிரச்ச்னையை அதிகம் ஆக்குகின்றது என்றும் அவற்றை சட்ட ரீதியாக விற்பனை செய்ய அனுமதிப்பது மூலம் பிரச்ச்னைக்கு தீர்வு காணமுடியும் என்கிறார். போதை பொருள் விற்பனையை சட்ட படுத்துவதை ஆதரிக்கும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அவருக்கு அதிகம் வருவதாக அவருடைய போட்டி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

5.பெடரல் ரிசர்வ்
பெடரல் ரிசர்வ் மீதான அவரது பார்வை அமெரிக்க அரசியலில் வேறு யாரிடமும் இல்லாதது. அடிப்படையில் ஆஸ்திரிய பொருளாதார வல்லுனரான அவர் மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையும் இல்லாமல் பணம் உற்பத்தி செய்வதை எதிர்க்கிறார். பழங்காலத்தில் இருந்தது போல் தங்கத்துக்கு மாற்றுரிமை உடைய பணத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறார். பெடரல் ரிசர்வ் கணக்கில்லாமல் பணத்தை உற்பத்தி செய்வதால் அரசாங்கம் பொது நலம் மற்றும் ராணுவ செலவை அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ய முடிகிறது. அதனால் டாலர் உற்பத்தி அதிகமாகி, பணவீக்கம் அதிகமாகி மக்கள் வாழ்க்கை தரம் குறைகிறது என்பது அவரது கருத்து.

அது மட்டுமன்றி ஒரு சில பெரிய பன்னாட்டு வங்கிகள் பணபலம் மற்றும் அதிகார பலம் மூலம் பெடரல் ரிசர்வ் மற்றும் அரசாங்கத்தின் மீது நேரடி மற்று மறைமுக செல்வாக்கு செலுத்தி அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை தங்கள் கையில் கொண்டுள்ளதை எதிர்க்கிறார்.பெடரல் ரிசர்வ் வங்கி ட்ரில்லியன் கணக்கிலான பணத்தை பல்வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறது. ஆனால் அதை தணிக்கை செய்ய அமெரிக்க சட்டத்தில் வழி வகை இல்லை. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழித்து தனியுறிமை ஏகாப்திபத்தியத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவரது முக்கிய கோரிக்கை பெடரல் ரிசர்வ் வங்கி கணக்குகளை தணிக்கை(audit) செய்ய வேண்டும் என்பதாகும்.

ஆனால் தற்போதைய நிலையில் உடனடியாக தங்க மற்றும் பணத்தை அறிமுகபடுத்த போவதாக அவர் கூற வில்லை.

ஆஸ்திரிய பொருளாதார தத்துவப்படி தடையற்ற பொருளாதாரத்தில் சிறிய அளவிலான வளர்ச்சிகளும் சிறிய அளவிளான வீழ்ச்சிகளும் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் சிறிய வீழ்ச்சிகளை அரசும் பெடரல் ரிசர்வும் சேர்ந்து பண புழக்கத்தின் மூலம் தடை செய்வதால் , பொருளாதார வளர்ச்சிக்கு பதில் வீக்கங்கள் ஏற்பட்டு மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கிறது என்பது அவரது கருத்து.

6.அதிகார பரவலாக்கம்
அவருடைய மற்றொரு கருத்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரகங்கள் குறைக்கபட்டு மாநில அரசிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட வேண்டும் என்பதாகும். இந்தியா போன்ற வேற்றுமைகள் நிறைந்த நாடுகளில் அவர் கூறும் மாநில சுயாட்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசாங்கம் மொழி,குறிப்பிட்ட தத்துவம் , இனம், மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவதை தடுக்க முடியும்.மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு அதிகாரம் பரவலாக்குவதை ஆதரிக்கும் அவர் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து தனிமனித சுதந்திரம் பாதுகாப்பது பற்றி முழுவதுமாக கூறவில்லை.

7.பொது நல அரசாங்கம்(Welfare state)
அவர் பொதுநல அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். சொத்துரிமை மற்றும் பேச்சுரிமை மட்டுமே தனி மனித உரிமை என்பது அவர் கருத்து. கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை தனி மனித உரிமை இல்லை என்கிறார். அதாவது அரசு பொது பள்ளிகள், படிக்க அரசு நிதி உதவி போன்றவறை எதிர்க்கிறார். அமெரிக்காவில் அரசு பொது பள்ளிகள் இல்லை என்றால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பணம் கொடுத்து படிக்க வைப்பார்களா என்பது கேள்வி குறியே. இது போன்ற கொள்கைகள் தற்போது பணக்காரர்களாக இருப்பவர்களது பிள்ளையை மட்டும் படிக்க வைத்து படித்து முடித்த பின் அவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பளிக்களாம். நல்ல வேலையாக அவர் உடனடியாக அரசு பொது பள்ளிகளை மூட போவதாக கூறவில்லை. அவர் கூறுவது போல் பள்ளிகளை முழுமையாக தனியார் மயமாக்கினால் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறைந்து அனைவருக்கும் கட்டுபடியாகும் தனியார் கல்வி கிடைக்குமா என்பது கேள்விகுறியே..மேலும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கும் எந்த உரிமையையும் எதிர்க்கிறார். இந்தியாவில் பள்ளி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதிக்கீட்டிற்கு எதிர்ப்பதற்கு இணையானது இது. இந்தியாவில் இது போன்ற கொள்கைகள் நிலை நிறுத்தபட்டால் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய மக்கள் இனி வரும் தலைமுறைகளில் முன்னேறவே வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

அரசு ஆதரவிலான முதியோர் காப்பீட்டு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை கடுமையாக எதிரிக்கிறார். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் எதிர்க்கிறார். தற்போது அமெரிக்காவில் முழுமையான தனியார் மயமான மருத்துவ காப்பீடு தான் உள்ளது. மருத்துவ காப்பீடின் செலவு மக்களுக்கு கட்டுபடி ஆகாத அளவிற்கு இமாலய அளவில் உள்ளது.இந்த நிலையில் அரசின் உதவிகளையும் கட்டுபாடுகளையும் எடுத்துவிட்டால் மருத்துவ செலவு அனைவருக்கும் கட்டுபடியாகும் நிலையில் குறையும் என்ற கோட்பாட்டை ஏற்று கொள்வது கடினம்.

வசதி இல்லாதவர்கள் மருத்துவ உதவிக்கு டாக்டர்களின் இலவச உதவியையும் கிறித்துவ மதவாத மிசனரிகளின் கடைக்கண்ணையும் எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது போன்ற கொள்கைகள் பழமைவாத குடியரசு கட்சியினர் விரும்பும் மதம் சார்ந்த அமைப்பினருக்கு அதிகாரத்தை பெற்று தருவதையே வரவேற்கும்.

அவரது கொள்கை படி ஒருவரது வரிபணத்தை பொருளாதார ரீதியாக பின் தங்கிய மற்றொரு ஏழையின் நலனுக்காக செலவு செய்வதை ஏற்று கொள்ள கூடியது அல்ல. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த கொள்கை பொருந்துமா என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.

ஓய்வூதியம் தர அரசு சார்பில் வரி வசூலிக்க படுகிறது. ரான் பால் அரசுக்கு வரி கொடுத்து பின் அரசை நம்பி இருக்காமல் தனி நபர்களே தங்கள் ஓய்வு கால தேவைக்கு முதலீடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அதே போல் அரசு மான்யங்கள் விவசாயம் உட்பட அனைத்து தொழில்களிலும் ஒழிக்க படவேண்டும் என்கிறார்.இந்தியாவில் விவசாயத்திற்கான உர மான்யம் ஒழித்தால் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் அல்லது விவசாய விளை பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விடும். அதே போல் மான்ய விலையில் அரசு பொது விநியோக துறையில் மலிவு விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டால் பசியும் பட்டினி சாவும் அதிகமாக வாய்ப்புள்ளது.

8.மெல்லிய அரசு(Lean Government)

ரான் பால் அதிகாரம் குறைந்த முழுதும் தனியார் மயமாக்க பட்ட அரசாங்கத்தை ஆதரிக்கிறார். அரசாங்கம் எந்த துறையிலும் ஈடுபடகூடாது என்கிறார். இது தனி மனித சுதந்திரம் மற்றும் கட்டுபாடற்ற சந்தைக்கு வழி வகுக்கும் என்பது அவர் கருத்து. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இது எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது கேள்விகுறியே. உதாரணமாக கிராமங்களில் வங்கி நடத்துவதால் லாபம் கிடைக்காததால் ஏழை மக்களுக்கு நியாயமான கடன் கிடைக்க இந்தியாவில் வங்கிகள் தேசிய மயமாக்க பட்டன. கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடைத்ததும் போக்குவரத்து துறையில் அரசு நுழைந்தது தான். ஆனால் இது போன்ற கொள்கைகளால் ஒர் சில நன்மையும் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைகாட்சி அரசு வசம் இருந்த போது அது இந்தி திணிப்புக்கு ஒரு கருவியாகவே பயன் பட்டு மக்கள் விரும்பும் தாய் மொழி நிகழ்ச்சிகள் முற்றிலும் புறக்கணிக்க பட்டன. தொலைகாட்சியில் தனியார் பங்களிப்பு கிடைத்த் பின்பு தான் நாம் தினம் தோறும் முழுமையாக தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க முடிகிறது.

9.அரசு கட்டுபாடுகள் தளர்வு
அரசு கட்டுபாடுகளை முழுமையாக விலக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.உதாரணமாக குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் காரீயம் (lead) கலப்பதை தடை செய்யவும் (காரீயம் குழந்தைகளுக்கு அபயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால்) காரீயம் கலப்பதை அரசு சோதிக்க அனுமதி அளிக்க மசோதா வந்த போது அதை எதிர்த்தவர் ரான் பால்.பொருளாதார துறைகளில் அரசு கட்டுபாடுகளை குறைத்ததன் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நினைவு கூற தக்கத

எரிசக்தி துறை,கல்வி துறை,வீட்டுவசதி & நகர்புற வளர்ச்சி துறை மற்றும் வணிக துறைகளை முழுமயாக ஒழிக்க வேண்டும் என்பது அவர் கொள்கை.மேற் கூறிய துறைகள் அமெரிக்காவில் முக்கிய பங்கு அளிக்கிறது. அவை ஒழிக்கபட்டால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

10.உலகமயமாதல்
உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை துறை வேலைகள் (Goods and Services) நாடுகளை கடந்து செல்ல கட்டுபாடுகளை எதிர்க்கும் ரான் பால், வேலையாட்கள் (Labour) மட்டும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வெருவதை எதிர்க்கிறார்.

11.மதம்,அறிவியல் மற்றும் நிறவெறி எதிர்ப்பு
ரான் பால் அரசாங்கத்தில் மதம் கலப்பதை முழுமையாக ஆதரிக்கிறார்.மேலும் பள்ளிகளில் கிறித்துவ கொள்கைகளை கட்டாயமாக திணிப்பதையும் சிறுபான்மையினர் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து பெரும்பான்யோரின் மத திணிப்பிற்கு கட்டாய படுத்துவதையும்ஆதரிக்கிறார். இதுபோன்ற கொள்கைகள் இந்தியாவில் வந்தால் இந்துத்துவா வாதிகளின் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விடும்.

ஆப்ரிக்க அமெரிக்க்கர்கள் மற்றும் பெண்களை பாகுபடுத்தி பார்ப்பதை தடை செய்யும் கென்னடியின் கனவு சட்டத்தை எதிர்ப்பவர் ரான் பால். நிறவெறி கொள்கையை கடை பிடிப்பதை தடுப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்பது அவர் கருத்து. அதாவது நிறவெறி கொள்கையை கடை பிடிப்பது தனி மனித உரிமை எனவும் அதை தடை செய்வதை செயல் படுத்த கண்காணிக்க அரசாங்கம் நுழைவதும் தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்கிறார். இந்தியாவில் இந்த கொள்கை நடைமுறை படுத்த பட்டால் வர்ணாஸ்ரம கொள்கைகள் நாடெங்கும் தழைத்தோங்க வழிவகுக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை அவரது பெயரில் அவரது ஆதரவாளர்களால் வெளியிட படும் பத்திரிக்கைகளில் நிறவெறி ஆதரவு கருத்துகள் பெருமளவில் வெளி வந்தன.பத்திற்கும் மேற்பட்ட நிறவெறி ஆதரவு அமைப்புகள் அவருக்கு ஆதரவளித்த போது அவர் அதனை ஏற்று கொள்ள மறுக்கவில்லை..தற்போது அவரது ஆதரவு அமைப்புகள் அவரது போட்டி வேட்பாளர் சீன மற்றும் இந்திய குழந்தைகளை தத்தி எடுத்ததை அமெரிக்க எதிர்ப்பு செயலாக சித்தரித்து விளம்பரம் செய்து வருகிறது.

புவி வெப்பமயாமாதல் ஆராய்ச்சி முடிவுகளை கடுமையாக எதிர்ப்பவர் ரான் பால்.அதற்கு அவரது மத நம்பிக்கைகூட காரணமாக இருக்களாம்.அல்லது சுற்றுசூழலை பாதுகாக்க மற்றும் கரியமில வாய்வு கசிவை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளால் பெட்ரோல் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற காரணமாக கூட இருக்களாம்.டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ரான் பால்.சில ஆண்டுகளுக்கு முன் வாட்டிகன் போப்பால் ஏற்று கொள்ள பட்ட கலிலியோவின் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற கொள்கையை ஏற்று கொண்டவரா என்று தெரியவில்லை.அவர் ஆட்சிக்கு வந்தால் அறிவியல் பூர்வமான கருத்துகளை பள்ளி பாடமாக வைப்பதை விட்டு தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் மதம் சார்ந்த கொள்கைகளை அறிவியல் பாடமாக கொண்டு வர வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிபர்களாக வந்தாலும் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் ரான் பாலுடைய கொள்கைகள் அமெரிக்க அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த கூடியவை. ஆனால் அந்த மாற்றங்களால் ஏற்பட போவது மகிழ்ச்சியா அல்லது ஏமாற்றாமா என்பது கேள்வி கேள்வி குறியே.

மேற்கோள்கள

1.http://www.ronpaul.com/2011-08-19/its-official-ron-paul-was-ignored-by-the-media/
2.http://en.wikipedia.org/wiki/Social_liberalism
3.http://spectator.org/archives/2011/08/23/ron-paul-and-the-neoliberal-re/
4.http://www.nytimes.com/2011/12/29/us/politics/ron-pauls-young-iowa-volunteers-clean-up-for-the-cause.html?_r=1&hp=&adxnnl=1&adxnnlx=1325162791-ncDd9xJQpqPrWHSRf3nbgg 5.http://www.youtube.com/watch?v=BvaWLcgc-hc
6.http://mondoweiss.net/2011/09/ron-paul-says-our-unfairness-to-palestinians-led-to-911-attacks.html (palestine)
7.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ ( healthcare)
8.http://lewrockwell.com/paul/paul767.html ( self determination)
9.http://www.nytimes.com/2011/09/16/opinion/krugman-free-to-die.html
10.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ (missionary)
11.http://www.youtube.com/watch?v=tD8rJCbEVMg - (education for poor)
12.http://abcnews.go.com/blogs/politics/2011/10/ron-pauls-economic-plan-eliminates-department-of-education-and-5-others/ (dept abolition)
13.http://www.nytimes.com/2011/12/28/opinion/mr-pauls-discredited-campaign.html?_r=2 ( racial)
14.http://www.irregulartimes.com/ronpaulseparation.html (Chrurch-State)
15.http://www.mediaite.com/tv/ron-paul-tells-cnns-candy-crowley-civil-rights-act-destroyed-privacy/ (civil right)


--

Sunday, January 08, 2012

கடைசியாக மதுரை வீரனுக்கு ஒரு கோவில்!

கடந்த வருடம் இதே மாதத்தில் பென்னி குயிக் பற்றி கோவில் இல்லா மதுரை வீரன் என்ற தலைப்பில் ஒரு பதிவை எனது தமிழ்மணம் நட்சித்திர வாரத்தில் இட்டிருந்தேன். சமீபத்திய முல்லை பெரியாறு பிரச்ச்னை காரணமாக அவருடைய பெருந்தன்மை மற்றும் தியாகம் பற்றி பல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு அவர் பற்றிய செய்திகளை மக்களை சென்றடைய உதவின.அந்த பதிவில் அவருக்கு நல்ல நினைவிடம் கூட கட்டபடவில்லை என்று பின் வருமாறு எனது மன வருத்தத்தை தெரிவித்திருந்தேன்.


//அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக். இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே? //


தற்போது முதல்வர் அவருக்காக மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி.

மணி மண்டபம் கட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்ககூடும். மணிமண்டபம் கட்டுவதன் மூலம் அவருடைய வரலாற்றை பல்லயிரகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இனி வரும் காலங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.அரசியல் மற்றும் அனைத்து துறைகளிளும் எதிர்மறையான தலைவர்களையே பார்க்கும் அவர்களுக்கு பென்னி குயிக் வரலாறு நேர்மறையான உத்வேகத்தை (Positive Inspiration)கொடுக்க வாய்ப்புள்ளது.

அதே போல பள்ளி பாடங்களில் அரசியல் காரணத்திற்கு வைக்க பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளின் பாடங்களை நீக்கி விட்டு பென்னி குயிக், சி.சுப்ரமணியம், காமராஜர் போன்றோரது வாழ்க்கை வரலாறை பாடங்களாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--

Monday, October 03, 2011

சவுக்கு தளத்தில் காணாமல் போன பதிவு?

பல ஊழல் அரசியல்வாதிகலையும், காவல்துறை அதிகாரிகளையும் மக்களுக்கு தோலுரித்து காட்டுவதில் சவுக்கு முதலிடம் வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திரைக்கு பின் நடக்கும் பல ஊழல்களை ஆதாரத்தோடு வெளி கொண்டுவருவதில் சவுக்குக்கு நிகர் சவுக்கு தான். பிற்காலத்தில் நடு நிலையான அரசியல் நாளிதழை அது தொடங்கும் என்னும் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் என்ன ஒரு கரிசனம் ? என்ற தலைப்பில் முதல்வர் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டது பற்றி அருமையான கட்டுரை வெளியிட்டது.தி.மு.க ஆதரவு பத்திரிக்கைகள் கூட அப்படி செய்தி வெளியிடவில்லை. அந்த பதிவின் link http://www.savukku.net/home1/1307-2011-10-01-11-42-00.html (facebookல் பகிர்ந்தவர்களில் நானும் ஒருவன்) தற்போது அந்த பதிவை காணவில்லை. அது வேறு எதாவது linkல் அந்த தளத்திலேயே உள்ளதா என்று தெரியவில்லை. அது தொழில்நுட்ப பிரச்ச்னை காரணமாக காணவில்லை என்றால் பரவியில்லை. இல்லையென்றால் அது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான் --