Showing posts with label சுற்றுல்லா. Show all posts
Showing posts with label சுற்றுல்லா. Show all posts

Wednesday, December 05, 2012

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு

ஹவாய் என்றவுடன் அனைவரின் மனதிலும் முதலில் வருவது கடல் மற்றும் நீர் விளையாட்டுகள் தான்.ஆனால் ஹவாய் தீவின் பசுமை கொஞ்சும் இயற்கை அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.ஜுராசிக் பார்க் திரைபடத்தில் வரும் அடர்ந்த காடும் அருவிகளும் ஹவாய் தீவில் (கௌவா'யி kaua'i) தான் படமாக்க பட்டன.பெருந்தீவின் மேற்கு கடற்கரை பகுதியான கோனா கடற்கரை பகுதி வறண்ட வானிலையுடன் கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பெருந்தீவின் கிழக்கு பகுதி பெரு மழை பொழிவுடன் அடர்ந்த வெப்ப மண்டல மழை காடுகளை கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள 13 வகையான சீதோஷ்ண மண்டலங்களில் 11 வகையான சீதோஷ்ண மண்டலங்கள் பெருந்தீவில் உள்ளன. அதன் விளைவாக பாலைவன செடிகளையும் காணலாம். அழகிய புல்வெளிகளையும் காணலாம். தோட்ட பயிர்களையும் காணலாம். அடர்ந்த காடுகளையும் காணலாம். இவை அனைத்தையும் 4000 சதுர மைல்களுக்குள்ளே கண்டு களிக்க முடியும். பெருந்தீவு முழுவதையும் சுற்றி காண்பிக்க ஒரு நாள் பேருந்து மூலம் செல்லகூடிய டூர் வசதி உள்ளது. அந்த சுற்றுல்லாவில் சென்றால் சுமார் 30 நிமிடத்துக்கு ஒன்றாக புது புது சீதோஷ்ண நிலையை காணமுடியும். அவ்வாறு செல்லும் போது வெயில்/குளிர்/மழை அனைத்தையும் தாங்க கூடிய வெவ்வேறு வகை உடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து செல்வது நலம்!

 

பெருந்தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் காரில் சென்றாலே கண்ணுக்கினிய வெப்பமண்டல காடுகளை ரசித்து கொண்டே செல்லலாம். ஹெலிகாப்டர் சுற்றுல்லா மூலம் வானிலிருந்து இயற்கை அழகை கண்டு மகிழலாம்.பெருந்தீவின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான அகாஅகா நீர்வீழ்ச்சியை காரில் சென்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் கடினமான டிரக்கிங் செய்து மலை/காடுகளின் வழியே நடந்து தான் பார்க்க வேண்டும். கம்பி சருக்களில் சறுக்கிய படியே zipline மூலம் அகாஅகா நீர்வீழ்ச்சியின் அழகை மற்றுமொரு கோணத்தில் காண்பது மறக்க முடியாமல் இருக்கும்.பெருந்தீவில் நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கைக்கும் அழகுக்கும் குறைச்சல் இல்லை. கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் கணக்கிலடங்கா நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில் பலவற்றை மலையேற்றம் மூலம் தான் அடைய முடியும்
 
 
அகாஅகா நீர்வீழ்ச்சி
 
வானவில் நீர்வீழ்ச்சி
 பெருந்தீவின் பசுமை அழகை முழுமையாக கண்டுகளிக்க செல்ல வேண்டிய இடம் வைப்பியோ பள்ளதாக்கு(Waipio Valley).ஹவாய் பூர்வ குடியினரின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்தது இந்த பள்ளதாக்கு.தாஜ்மகாலை பார்த்தவுடன் எப்படி மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுமோ அது போல் வைப்பியோ பள்ளதாக்கை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.நீல நிற கடற்கரை ஓரத்தில் பசுமையான புல்வெளிகளும், அதனருகில் பசுமையான மலையும் அதிலிருந்து கடல் நோக்கி வீழும் மிக பெரிய நீர் வீழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டும்.இந்த பள்ளதாக்கை முழுமையாக கண்டுகளிக்க வைப்பியோ பள்ளதாக்கு பார்வையாளர் பகுதிக்கு (Waipio valley lookout) காரில் பயணித்து சென்று பார்க்களாம்.இந்த பள்ளதாக்கினுள் செல்ல சாதாரண கார்களால் முடியாது. கனரக மோட்டார் வாகனங்களை கொண்டு ATV (All-terrain vehicle) சுற்றுல்லா அழைத்து செல்ல குழுக்குள் உள்ளன.இதன் மூலம் நீங்களே இந்த வாகனங்களை புல்வெளிகள், அடர்ந்த காடுகள் வழியே ஓட்டி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த சுற்றுல்லாவிற்கு பொருள் செலவு அதிகமானாலும் இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக தவறவிட கூடாத ஒன்று.(2 வயதிற்கும் குறைவான குழந்தைகளை அழைத்து செல்ல முடியாததால் என்னால் இந்த சுற்றுல்லாவில் செல்ல இயலவில்லை).





சோக சரித்திரம்

ஹவாய் தீவின் பசுமை அழகை என்ன தான் ரசித்தாலும் அதன் பின்னனியில் உள்ள சரித்திரத்தை பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஹவாய் தீவு பசுபிக் பெருங்கடலின் நடுவே பிற நிலபரப்புகளால் எளிதில் நெருங்க முடியாத அளவு தனித்து அமைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து பெர்ன் செடியின் ஸ்போர் பல்லாயிரம் மைல்கள் காற்றில் பயணித்து எரிமலை லாவா படிமத்தில் விழுந்து உயிரின தோற்றத்தை ஏற்படுத்தியது. பூச்சிகளும்,விதைகளும் சிலந்திகளும் காற்றின் மூலம் ஹவாயை அடைந்தது.இடம்பெயர் பறவைகள் விதைகளையும், கடல் மூலம் உப்பு எதிர்ப்பு தன்மை கொண்ட விதை, செடி, பூச்சிகளும் இத்தீவை வந்தடைந்தன. சுமார் 32 மில்லியன் ஆண்டுகளாக பரிணாம முறைபடி புது புது வகையான உயிர்கள் தோன்றின. அதாவது சுமார் 30 வகை வெளியூர் பறவையிலிருந்து 110 வகை பறவைகள் பரிணமித்தன.280 பூக்கும் செடியிலிருந்து1100 வகை செடிகள் தோன்றின.

உலகின் பிற பகுதியிலிருந்து வந்த உயிரிணங்கள் இங்கு தனக்கு மிக சில எதிரிகளே(Predator and parasite) இருக்கும் சூழ்நிலையில் வளர்ந்தன்.அதன் விளைவாக எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பரிணாம தகவமைப்புகள் அவைகளுக்கு தேவையில்லாமல் இருந்தது. அதன் விளைவாக புதிதாக தோன்றிய உயிரிணங்கள் அந்த தகவமைப்புகளை இழக்க தொடங்கின. உதாரணமாக பறக்கவே முடியாத பறவைகளும், வாசனையையே வெளிபடுத்தாத stink bug போன்றவைகளும் தோன்றின,


காட்டு இஞ்சி
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலினேசியன் மக்கள் இந்த தீவிற்கு வர ஆரம்பித்த பின் நிலமை மாற ஆரம்பித்தது. காடுகள் அழிக்க பட தொடங்கின. அவர்கள் கொண்டு வந்த மிருகங்களும், செடிகளும் பல்கி பெருகின. அதன் சூழியல் விளைவு மோசமாக இருந்தது. உதாரணமாக பாலினேசியன் மக்களின் பன்னிகள் பெர்ன்(fern) செடிகளையும், ஒகியா காடுகளையும் அழித்தன. பன்னிகள் கூடாரத்திலிருந்து பல்கி பெருகிய கொசுக்கள் பறவை மலேரியா மற்றும் பிற நோய்களை பறவைகளுக்கு பரப்பின. பூனை, எலி போன்றவை பறவைகள் மற்றும் முட்டையை தின்று தீர்த்தன. காட்டு இஞ்சி போன்ற செடிகள் விரைவாக பெருகி உள்ளூர் செடிகளை அழித்தன.அதன் பிறகு ஐரோப்பிய மகக்ளின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட இயற்கை அழிவு பற்றி எழுத தேவை இல்லை.கடந்த சில நூற்றாண்டுகளில் கரும்பு தோட்டத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்த காடுகள் அழிக்க பட்டது. ஜப்பான், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரபட்டனர். இந்த பேரழிவுகளையும் மீறி மிஞ்சிய உயிரினங்களும், அறிமுக படுத்த பட்ட செடி கொடிகளின் அழகுமே மறக்க முடியாததாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஹவாய் தாவரவியல் பூங்கா

உலகில் பல்வேறு வெப்ப மண்டல காடுகளில் வளரும் அழகிய ஆர்கிட்கள் மற்றும் மலர் செடிகளை ஹவாய் தாவரவியல் பூங்காவில் வைத்துள்ளனர். வித விதமான, பல்வேறு  வண்ண மய மலர்கள் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. இந்த பூங்கா கடற்கரை ஓரம் மலையை ஒட்டி ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்து உள்ளது.சுமார் 125 தாவர குடும்பத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செடிவகைகள் இங்கு உள்ளன.








மொத்தத்தில் ஹவாய் பெருந்தீவு இயற்கை ஆர்வலர்களின் ஆசையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவில் உள்ள மனுதர்மத்தை ஒத்த  வர்ணாசிரம முறை ஹவாய் பழங்குடியினரிடமும் இருந்தது. ஹவாய் பழங்குடியினரின் மத நம்பிக்கையை பற்றி பிரிதொரு பதிவில் காண்போம்

முந்தய பதிவு

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

Wednesday, November 28, 2012

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?


பருவ நிலை மாற்றத்தால் பல தீவுகள் தண்ணீரில் மூழ்க போவது  அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு தீவு தற்போது தனது பரப்பளவில் விரிந்து வருகிறது என்ற செய்தியை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். ஹவாய் பெருந்தீவு தனது பரப்பளவில் விரிந்து வருகிறது. அதற்கு காரணம் அங்கு உள்ள எரிமலை  வெடித்து வெளியாகும் குழம்பு கடலில் கலந்து நிலபரப்பை அதிகரிக்கிறது. உலகில் உள்ள ஒரு சில செயல் திறன் உள்ள எரிமலைகளில் ஹவாய் பெருந்தீவில் உள்ள எரிமலையும் முக்கியமானது.

எரிமலை பற்றிய செய்திகளை பாடத்திலும், ஊடகங்கள் மூலமும் சிறு வயதிலேயே கேள்வி பட்டிருப்பதால் எரிமலையை காணும் ஆசை எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருப்பதில் வியப்பில்லை.  உலகிலேயே மிக பெரிய எரிமலையான மோன லோவா எரிமலையும், .உலகில் உள்ள மிக பெரிய செயல் திறன் உள்ள எரிமலைகளாகிய மோன லோவா மற்றும் கிளோவியா எரிமலைகளும் ஹவாய் தீவின் பெருந்தீவில் உள்ளது. இந்துக்கள் இயற்கை சக்திகளை பஞ்ச பூதமாக வழி படுவதை போல ஹவாய்  பழங்குடியினரும் இயற்கை சக்திகளை வழி பட்டனர். அவர்களின் எரிமலைக்கான (நெருப்பு) கடவுளின் பெயர் பீலே.கிளோவியா எரிமலை தான் கடவுளின் உடலாக கருதபடுகிறது.ஹவாய் பழங்குடி இனத்தவரின் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பல ஒற்றுமை உள்ளது. அது பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

உலகிலேயே மிக பெரிய மலையான மோனலோவா மலை சுமார் 19000 கன மைல்கள் கொள்ளளவு கொண்டது. கடல்  மட்டத்திற்கு கீழே உள்ள அதன் அடி பகுதியிலிருந்து  அதன் உயரத்தை கணக்கிட்டால் அது சுமார் 56000 அடிகள்(17000 மீ) ஆகும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 27000 அடிகள் உயரமானது.

ஹவாய் தீவில் உள்ள இந்த எரிமலைகளை கண்டு களிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அமெரிக்க அரசாங்கம் கிளோவியா  எரிமலை பகுதியில் எரிமலை தேசிய பூங்காவை அமைத்து உள்ளது. அங்கு பார்வையாளர்கள் அரங்கமும் அதனுள் எரிமலை அருங்காட்சியகமும் உள்ளது.எரிமலை பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளை இங்கு காணலாம். பார்வையாளர்கள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து பார்த்தால் தற்போது ஆயத்த நிலையில் உள்ள ஒரு எரிமலையை பார்க்களாம். எரிமலையிலிருந்து வெளியாகும் கந்தக வாயுவை  அருகில் இருந்து பார்க்களாம்.

எரிமலை தேசிய பூங்கா பார்வையாளர் அரங்கிலிருந்து எரிமலை 


எரிமலை சார்ந்த பகுதிகளில் சுமார் 36 மைல் சுற்று வட்ட பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணித்த படியே கண்டுகளிக்களாம். அதனால் இந்த எரிமலையை Drive-in எரிமலை என்று கூட சொல்லலாம். அந்த பாதையில் ஆங்காங்கே நிலத்திலிருந்து வெளியாகும்  கந்தக வாயுவையும், எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்பு  நில பரப்பில் குவிந்து கிடப்பதையும் பார்க்களாம். பல வருடங்களுக்கு முன்னர் எரிமலை வெடித்த போது எரிமலை குழம்பு சீறி பாய்ந்த எரிமலை லாவா குழாய்கள்(lava tube) தற்போது குளிர்ந்து குடைய பட்ட குகைகள் போல உள்ளது. ஒரு காலத்தில் எரிமலை குழம்பு பாய்ந்த அந்த எரிமலை குழாய் வழியில் நாம் இப்போது நடந்து சென்று  பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.
லாவா குழாய்கள்

அது மட்டுமின்றி டிரக்கிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும், கேம்பிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு உள்ளது.

நிலம் மூலம் எரிமலையை பார்த்தால் ஓரளவிற்கு தான் பார்க்க முடியும்.
புகை படங்களிலும். வீடியோக்களிலும் காண்பது போன்ற சீறி பாயும் எரிமலையை காணலாம் என்ற நினைப்போடு எரிமலையை  காண சென்றால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எப்போதாவது ஒரு சில சமயங்களில் தான் எரிமலையிலிருந்து லாவா போக்கு அதிகம் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் எரிமலை குழம்பு சிறிய அளவே இருக்கும்.அவ்வாறு குறைவான எரிமலை குழம்பு இருக்கும் நேரத்தில் எரிமலையை ஓரளவு நன்கு பார்க்க வேண்டுமானால் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் தான் பார்க்க முடியும்.எரிமலையின் முழுமையான பார்வை கிடைக்க ஒரே வழி  எரிமலைக்கு நேர் மேலே வானத்திலிருந்து  பார்ப்பது தான். ஹெலிகாப்டர் பயண செலவு அதிகமாக இருந்தாலும் வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பிற்காக செலவழிப்பதில் தவறில்லை என்று முடிவெடுக்க தோன்றியது.எரிமலை உள்ள ஹீலோ பகுதியில் பெரும்பான்மையான நேரங்களில் மேக மூட்டத்துடன் காணபடும். மேக மூட்டம் உள்ள நேரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தால் கூட எரிமலை தெளிவாக தெரியாது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்ற நேரத்தில் மேக மூட்டம் இல்லாமல் இருந்ததால் எரிமலையை நன்றாக தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹீலோ விமான நிலையம் மற்றும் கோனா விமான நிலையத்திலிருந்து  ஹெலிகாப்டர் மூலம் சுமார் 1- 2 மணி நேரத்திற்கு எரிமலை பகுதிகளை சுற்றி பார்க்கவும், எரிமலையின் நேர் மேலேயிலிருந்து பார்த்து ரசிக்கவும் வழி வகை உள்ளது.ஹவாய் பெருந்தீவின் எரிமலையையும், அழகிய கடற்கறை பகுதிகளையும்,நீர் வீழ்ச்சிகள் நிறைந்த அடர்ந்த காட்டு பகுதிகளையும் பறவையை போல் வானத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம் என்றால் மிகையாகாது.

Bird's Eye View
எரிமலை குழம்பு படர்ந்த இடம்




விரியும் தீவு - அமெரிக்காவின் தென் முனை

பழைய எரிமலை( crater)

மலை அருவி




ஹவாயின் கடற்கரை அழகையும் , எரிமலை பற்றியும் பார்த்து விட்டோம். இனி வரும் பதிவில்  ஹவாயின் பசுமை அழகை பற்றி பார்ப்போம்.


முந்தய பகுதி

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling  Parasailing

அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு
 

Monday, November 26, 2012

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

ஹவாய் தீவுகளுக்கு மக்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கை வகிப்பது அங்கு Snorkeling செய்ய கிடைக்கும் வாய்ப்பு. ஸ்னார்கெலிங் என்பது முகத்தில் ஒரு நீச்சல்  முகமூடி அணிந்து சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள டியூபை வாயில் மாட்டி கொண்டு தண்ணீரில் நீந்தியவாறே கடலுக்கடியில் இருக்கும் பவழபாறைகளையும், வண்ண மய மீன்களையும் இதர கடல் வாழ் உயிரிணங்களையும் கண்டு களித்தபடியே கடலில் நீந்தி செல்வது தான்.வாயில் வைத்துள்ள டியூப் மூலம் சில நிமிடங்கள்  கடலின் நீருக்கடியில் இருந்து மூச்சு விட முடியும்.

ஸ்னார்கெலிங்ல் இரு வகை உள்ளது. ஒன்று கடற்கரை ஓரத்தில் ஆழம் குறைந்த பகுதியில் ஸ்னார்க்கலிங்(Shallow water Snorkel) செய்து கடல் வாழ் உயிரிணங்களை பார்ப்பது ,மற்றொன்று  ஓரளவு கடலின் உள்ளே மிதமான ஆழம் உள்ள பகுதியில்(deep water snorkel) ஸ்னார்க்கலிங் செய்து கடல்  வாழ் உயிரிணங்களை பார்ப்பது.

ஹவாய் பெருந்தீவின் பெரும்பான்மையான கடற்கரைகள் Shallow Water Snorkeling செய்ய ஏற்றவை. அதற்கு தேவையான உபகரணங்கள் கடற்கரை ஓரங்களிலேயே வாடகைக்கு கிடைக்கும்.

பல தனியார் நிறுவனங்கள் deep water snorkeling tourஅழைத்து செல்கின்றனர்.ஹவாய் பெருந்தீவில் பெரிய  நீராவி படகுகள் மூலம் கடலில் சிறிது தூரம் பயணம் செய்து ஸ்னார்க்கலிங் செய்ய ஏற்ற பகுதிக்கு கூட்டி செல்வார்கள். அந்த படகிலேயே ஸ்னார்க்கலிங் செய்ய தேவையான உபகரணங்களும், உயிர் காப்பு உடைகளும் கொடுப்பார்கள். பிறகு ஸ்ணார்க்கலிங் செய்ய தேவையான அறிவுரைகளை கூறுவார்கள். அதன் பிறகு ஒன்னரை மணி நேரம் கடலில் ஸ்னார்க்கலிங்  செய்து மகிழலாம். நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகின் மேற்பகுதியிலிருந்து கடலில் குதிக்கலாம். நீச்சல் சிறிதும் தெரியாதவர்கள்( என்னை போன்றவர்கள்!) கூட உயிர்காப்பு உடை அணிந்து கடலில் சிறிது நேரம் மிதந்து பார்க்கலாம்.அது மட்டுமன்றி கண்ணாடி பதிக்கபட்ட மிதக்கும் பலகையும் உள்ளது. அந்த பலகையில் மிதத்தவாறே கண்ணாடி வழியே கடல் வாழ் உயிரிணத்தை காணலாம்.

பசுபிக் பெருங்கடலில் நீந்திய படியே கடல் வாழ் உயிரிணங்களை கண்டு களிப்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாகும்.இந்த ஆழ்கடல் ஸ்ணார்க்கலிங் செல்வதில் மற்றொரு லாபம் பசுபிக் பெருங்கடலுக்குள் சுமார் 1 மணி நேரம் கடற்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணத்தின் போது கூட்டம் கூட்டமாக  டால்பின்களையும் அதிர்ஷ்டம் இருந்தால் திமிங்களத்தையும் காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாங்கள் செல்லும் போது டால்பின் கூட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.


Parasailing



படகில் கட்டபட்ட பாராசூட்டில் இருந்து பறப்பது பாராசைலிங் எனபடுவது ஆகும்.கோனா கடற்கரை பகுதியில் இருந்து கடலுக்குள் படகு மூலம் அழைத்து செல்வார்கள். பிறகு படகில் கட்ட பட்ட பாராசூட்டில்  நம்மை கட்டி கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக பாராசூட்டின் கயிறை பட்டம் போல் மேலே விடுவர். அதிக பட்சமாக 1200 அடிவரை வானத்தின் உயரத்தில் பறக்க விடுவர். வானத்திலிருந்து பறவை போல் பறந்து பெருந்தீவின் கடற்கரையையும் மலைகளையும் கண்டுகளிக்கும் சுகமே தனிதான்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

அடுத்த பதிவு
எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

Wednesday, September 19, 2012

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

           கடற்கறையின் அழகை ரசித்த பின் மனதிற்குள் தோன்றும் கேள்வி  ஆழ் கடலின் அடியில் என்னதான் இருக்கும் என்பது? நீச்சலின் மூலம் ஆழ் கடலுக்குள் சென்று பார்ப்பது கடினம். நன்கு பயிற்சியுடைய ஸ்கூபா டைவராக இருந்தால் சிறிது முயற்சி செய்து பார்க்களாம். சாதாரண மனிதர்கள்  ஆழ்கடலை டிஸ்கவரி சேனல் போன்ற தொலைகாட்சி மூலம் தான் பார்க்க முடியும். ஆனால் நேரில் பார்க்க ஒரே வழி அதி நவீன நீர்மூழ்கி கப்பல் தான்.

          நூறு அடிக்கும் மேல் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பல் மூலம் பயணம் செய்து ஆழ்கடலின் அழகை பார்க்க ஹவாய் பெருந்தீவில் வசதி உள்ளது.இதன் மூலம் நிஜ நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் அனுபவத்தையும் , ஆழ் கடலின் அழகை கண்டு களிக்கும் அதிசய அனுபவத்தையும் ஒரு சேர பெறலாம்.
நீர்மூழ்கி வழியே ஓர் பார்வை

      கோனா கடற்கரையிலிருந்து விசை படகு மூலம் கடலின் உட் பகுதிக்கு சிறிது தூரம் கூட்டி செல்கிறார்கள். அங்கு நீர்மூழ்கி கப்பல் தயராக நிற்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு அட்லான்டிஸ் என்று பெயர். அது 64 பேரை ஏற்றி செல்லும் உலகிலேயே பெரிய பயணிகள் நீர்மூழ்கி கப்பல் வகையை சேர்ந்தது.விசை படகுகிலிருந்து நீர்மூழ்கிக்கு மாறி ஏணி படி மூலம் நீர்மூழ்கிக்குள் அழைத்து செல்கிறார்கள். நீர்மூழ்கியில் அனைவரும் கடலை பார்க்க கண்ணாடி ஜன்னல் உள்ளது. நீர்மூழ்கி நகர தொடங்கியதும் சிறிது சிறிதாக கடலின் கீழ்மட்டத்தை நோக்கி செல்கிறது.
நீர்மூழ்கி உள்ளே! வெளியே!

      ஹவாய் பகுதி கடற்கரை பவழ பாறைகளுக்கு பெயற்பெற்றது. பவழ பாறை என்றவுடன் ஏதோ உயிறற்ற பாறை என்று நினைத்துவிடாதிர்கள்.பவழம் என்பது ஒரு வகை கடற்வாழ் உயிரினங்கள். அவை வெளியிடும் கால்சியம் கார்பனேட் பாறைகளாக வளர்ந்து நிற்கிறது.இந்த பவழ பாறைகள் மீன்கள். புழுக்கள், மொளாஸ்காக்கள்( 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் படித்தது) மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக உள்ளது.  இந்த பவழ பாறைகள் வண்ண மயாமாக இருந்தாலும் புகை படங்களில் பார்ப்பதை போல் பளீர் வண்ணத்துடன் இல்லை.
பவழ பாறைகளும் மீன்களும்

பவழ பாறைகள்

   கடல் அடியில் கூட்டம் கூட்டமாக வண்ண மயமாக செல்லும் மீன்களை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கோனா கடற்கரை பகுதியில் உள்ள பல வகை மீன்களை கொண்ட புகைபட அட்டையை கையில் கொடுத்து விடுகிறார்கள். அது மற்றுமின்றி அந்த நீர்மூழ்கியில் வரும் விவரிப்பாளர் கண்ணில் தென்படும் மீன் வகைகள் பற்றி விவரிக்கிறார்.மீன்கள் மற்றும் பவழ பாறைகளை தவிர கடலில் மூழ்கிய இரு கப்பலையும் கடலின் அடியே காண முடிகிறது.அனைத்து வண்ண மீன்களும் கூட்ட்ம் கூட்டமாக செல்லும் இது போன்ற காட்சிகளை டிஸ்கவரி சேனலில் மட்டுமே காண முடியும்.அதை நேராக பார்க்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது..

  நீர்மூழ்கி கப்பல் கடலின் அடியே 100 அடிகளுக்கு மேல் கீழ் நோக்கி செல்கிறது.இது போன்ற நீர்மூழ்கி பயண அனுபவமும் ஆழ்கடலை பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் நிச்சயம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

ஆழ்கடலின் அழகை கண்டு ரசித்தாகி விட்டது. நடுகடலில் நீந்திய படி கடல்வாழ் உயிரினங்களை கண்டு களித்தால் எப்படி இருக்கும். அடுத்த பதிவில் பார்ப்போம்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

--

Monday, September 10, 2012

எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

                ஹவாய்  என்றவுடன் அனைவரின் மனதுக்கும் முதலில் வரும் நினைவு அழகிய கடற்கரைகள். நீல நிற கடல், கண்ணாடி போல் தெளிந்த நீர், இதமான தட்பவெட்ப நிலையில் நீச்சலுக்கேற்ற மிதமான நீர், தூய்மையான கடற்கரை,தெளிவான வெண்ணிற மணல் என அனைத்து வித மனிதர்களும் விரும்பும் அனைத்து குணாதிசியங்களும் கொண்டது ஹவாய் கடற்கரைகள். இயற்கை அழகு மட்டுமன்றி மனிதன் அறிமுகபடுத்திய பல்வேறு வகை தீர தண்ணீர் விளையாட்டுகளை அனுபவிக்கவும் இங்கு வசதி உண்டு.





ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு பல்வேறு வண்ணங்களை கொண்ட மணலை கொண்ட  கடற்கரைகள். இங்கு வெண்ணிற மணலை கொண்ட கடற்கறை மட்டுமில்லாமல் கருப்பு மற்றும் பச்சை நிற மணலை கொண்ட கடற்கரைகளும் உள்ளன.

கடற்கரை என்று பார்த்தோமானால் பெருந்தீவின் மேற்கு பகுதியில் உள்ள கோனா கடற்கரை பகுதியும் கேலகெக்குவா குடா பகுதி கடற்கரைகளும் உலக பிரசித்தம்.இங்கு இருக்கும் கடற்கரைகள் மெரினா கடற்கரை போன்று மிக பெரியதாக இருக்காது. ஆனால் மிக சிறிய கடற்கரைகள் மேற்கு பெருந்தீவு முழுதும் நிறைய உள்ளது. இந்த கடற்கரைகள் வெண்மையான மணலையும்,தெளிந்த கண்ணாடி போன்ற நீரையும் கொண்டு மிகவும் தூய்மையாக காணபடுகிறது. கடல் நீரின் தட்ப வெட்பம் ஆண்டு முழுதும் மிதமாக இருக்கும். கடற்கரை ஓர பகுதிகளிலேயே பல அழகிய வண்ண மய மீன்களையும், பவள பாறைகளையும் நீந்திய படியே கண்டு களிக்களாம்.கடலின் அடியில் நீச்சலின்  போது குனிந்து பார்க்க(ஸ்னார்களிங்) தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இங்கு வாடகைக்கு எடுத்து உபயோக படுத்தலாம். அதே போல் கடல் ஓரத்தில் சிறிய அளவு படகோட்ட கூட பயிற்சியுடன் கூடிய உபகரணங்களை வாடகைக்கும் தருகிறார்கள்.




பாறைகள் அறிக்க பட்டு தான் மணல் தோன்றும் என்று நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஹவாய் கடற்கரையில் மணல் தோன்றிய வரலாறு வேறு விதமானது. ஹவாய் தீவின் கடற்கரைகளில் பவள பாறைகள் அதிக அளவு உள்ளது.  இந்த பவள பாறையை உண்ணும் மீன்கள் வெளியேற்றும் கழிவுதான் வெண்ணிற சிறு மணற் துகள்கள். மீன்கள் எவ்வளவு மணலை உற்பத்தி செய்து விட போகிறது என்று நினைக்கிறீர்களா? சராசரியாக ஒரு டன்(1000கிலோகிராம்) மணலை ஒரு மீன் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யும்.

மிதமான தட்ப வெட்ப நிலையில், ரம்மியமான சூழ்நிலையில் ஹவாய் கடற்கரைகளில் பல மணி நேரம் இனிமையாக பொழுதை கழிக்கலாம்.

ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு உள்ள கருங்கடற்கரைகள். புனலூலு பகுதியில் உள்ள கடற்கரையின் மணல் கருமை நிறத்தை கொண்டுள்ளது. ஹாவாய் எரிமலையிலிருந்து வெளியேறிய எரிமலைகுழம்பு கடலின் மோது மோதி குளிர்வதால் உண்டானது தான் இந்த கருங்கடற்கரைகள்.பசால்ட் வகை பாறைகளின் துகள்களை இந்த கடற்கரைகள் கொண்டிருக்கும்.இங்கு கருப்பு நிற மணல் படிகங்கள் வடிவில் பளபளவென பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்கும்.



இந்த கடற்கரையின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு அழிவு நிலையில் உள்ள(Endangered Species) பச்சை கடல் ஆமையை  பெரும்பான்மையான நேரங்களில் காணலாம்.நாங்கள் சென்ற போது கூட ஏழெட்டு பசுமை கடலாமைகளை காணும் வாய்ப்பு கிடைத்தது.இந்த கடலாமைகளை தொடுவதோ, கருப்பு நிற மணலை எடுத்து வருவதோ சட்டபடி குற்றமாகும்(அருகில் உள்ள கடையில் கருப்பு மணலை காசு கொடுத்து வாங்கி வருவது மட்டும் சட்டபடி குற்றமாகாது!).




ஹவாய் பெருந்தீவின் தனி சிறப்பு அங்குள்ள பச்சை வண்ண மணல்  கடற்கரை என்றால் மிகையாகாது.என்னது பச்சை வண்ண மணல் கடற்கரையா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே இரு இடங்கிளில் பச்சை வண்ண மணல்களை கொண்ட கடற்கரை உள்ளது.அவற்றில் ஒன்று மடகாஸ்கர் தீவிலும் மற்றொன்று ஹவாய் பெருந்தீவிலும் உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு எல்லை முனை ஹாவாய் பெருந்தீவில் தான் உள்ளது. இதை South point என்று அழைப்பார்கள்.பச்சை மணல் கடற்கரை இந்த சவுத் பாயிண்ட் அருகில் உள்ளது என்ற செய்தியும் பெப்பகோலியா என்ற பகுதியில் உள்ளது என்ற செய்தி மட்டும் தெரியும்.இந்த கடற்கரையை எவ்வாறு சென்றடைய வேண்டும் என்று படிக்காமல் GPSல் சவுத் பாயிண்ட்  விலாசத்தை போட்டு மாலை 3 மணி போல் கிளம்பி விட்டோம்.ஆனால் அருகில் செல்ல செல்ல பச்சை மணல் கடற்கரை செல்ல எந்த குறியும் இல்லை. சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  அந்த கடற்கரையை அடைய "சிறிது தூரம்" நடக்க வேண்டும் என்று கேள்வி பட்டிருந்தோம். அதற்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சவுத் பாயிண்ட் நோக்கி செல்லும் ஒரு குறுகிய சாலையில் கடைசியாக பச்சை மணல் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறியீட்டை பார்த்தோம்.கார் போகும் பாதை முடிந்தவுடன் தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்திலிருந்து கடற்கரை சென்றடைய சுமார் 5 கிலோமீட்டர்கள் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதையில் நடக்க  வேண்டும் என்பது. நாங்கள் சென்றது மாலை நேரம். எனவே அங்கு கால் நடையாக சென்று வர சுமார் 4 மணி நேரம் ஆகும். அதுவும் குழந்தையை வைத்து கொண்டு நடந்து செல்வது என்பது முடியாத காரியம். எங்கிருந்தாவது எட்டி பார்த்த பச்சை நிற கடற்கரையை தூரத்திலிருந்து பார்த்து திருப்தி அடையலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை மணலை பார்க்கவே முடியவே இல்லை.

 சரி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று எண்ணி  கொண்டிருந்தோம் கடைசியாக அதிர்ஷ்டம் அங்கு உள்ள அந்த பகுதியில் குடியிருப்போர் வழியில் அடித்தது. அங்கு குடியிருக்கும் ஒரு சிலர் மக்களை தங்களது கனரக வாகனங்கள் மூலம் டிரிப் அடித்து சம்பாதித்து கொண்டுள்ளார்கள்.(அட நம்மூர் போல தான்!) நாங்கள் சென்ற நேரத்தில் அவரகள் மூட்டையை கட்டி விட்டாலும் ஒரே ஒரு நபர் மட்டும் எங்களை பச்சை மணல் கடற்கரைக்கு அழைத்து செல்ல சம்மதித்தார். ஒரு நபருக்கு 15$ என பெற்று கொண்டு தனது வண்டியில் ஏற்றி கொண்டு எங்களை அந்த கடற்கரைக்கு அழைத்து சென்றார். மிக கடுமையான மோசமான பாதை. நடந்து செல்ல மட்டுமே ஏற்ற பாதையில் ஒருவாராக எங்களை அவரது வண்டியில் அழைத்து சென்றார்.அவர் கூறிய தகவலின் படி அங்கு உள்ள உள்ளூர்காரர்கள் தான் இந்த கடற்கரைக்கு வழி காட்டும் போர்டுகளை உடைத்து எடுத்து சென்றுவிட்டாரகள்.குண்டும் குழியுமான ஏற்ற இறக்க பாதையை கடந்து கடைசியாக பச்சை மணல் கடற்கரையை அடைந்தோம். இரவு நேரம் நெருங்கி விட்டதால் அங்கு நாங்கள் மட்டுமே இருந்தோம். மலை,பாறை,மரங்களுக்கு அருகில் பச்சை மணல் கடற்கரை ஜொலித்தது. எதிர்பார்த்தது போல் செடி பச்சையாக இல்லாமல் லேசான ஆலிவ் நிற பச்சை வண்ணத்தில் கடற்கரை இருந்தது.

(புகை படம் எடுக்கும் போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பசுமை நிறம் புகை படத்தில் சரியாக தெரியவில்லை.)

பல்லயிரம் ஆண்டு முன்பு ஏற்பட்ட எரிமலை குழமிலிருந்து  உண்டான சின்டர் கோன் என்னும் சிறுமலை குன்று ஒலிவின்(Mg,Fe)2SiO4.) என்ற உலோகத்தை அதிகம் கொண்டிருந்தது. இந்த ஒலிவீன் பச்சை நிறத்தை கொண்டது.கடல் அலை இந்த மலையில் மோதி மோதி ஒலிவினை அறித்து பச்சை மணலை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உள்ள ஒலிவீன் எல்லாம் அறித்து கடலில் அடித்து செல்ல பட்டவுடன் இது மற்ற கடற்கரையை போல் ஆகிவிடும்.

கடற்கரைகளை பற்றி பார்த்து விட்டோம். ஆழ்கடலில் எழில் கொஞ்சும் பவழ பாறைகளையும் வண்ண மய மீன்களையும் எப்படி பார்ப்பது? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!

இந்த பதிவின் முதல் பகுதி

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!

இந்த பதிவின் அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

--
--



 

Tuesday, September 04, 2012

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!


ஹவாய் பற்றிய அறிமுகம் எனக்கு சிறுவயதில் காலண்டர்களில் இருக்கும் படங்களின் மூலம் கிடைத்தது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு மிகுந்த புகை படங்களை பார்க்கும் போது அது தான் சொர்க்கமோ என்று சிறு வயதில் எண்ண தோன்றியது. அதன் பிறகு National Geographic,Discovery போன்ற தொலைகாட்சிகளிலும், ஜுராசிக் பார்க் போன்ற திரை படங்களிளும் ஹவாய் பற்றி பார்த்த போது மலைப்பாக இருந்தது.இன்றைய இணைய உலகத்தில் ஹவாய் பற்றிய காணொளிக்கு பஞ்சமில்லை.பலமுறை யோசித்து விட்டு கடைசியாக ஹவாய் செல்ல முடிவெடுத்தோம்.

ஹவாய் என்றால் எந்த தீவிற்கு செல்வது என்பது முதல் கேள்வி.ஹவாய் என்பது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு நடுவே பசுபிக் கடலில் உள்ள தீவுகளின் கூட்டம்.ஹவாய் அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959ம் ஆண்டு இணைக்கபட்டது. ஹவாயின் வரலாற்றை பிறிதொரு பதிவில் காண்போம்.ஹவாய் என்பது 7 பெரிய தீவுகளையும் நூற்றுக்கும் அதிகமான குறுந்தீவுகளையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமான தீவுகள் பெருந்தீவு (Big Island/Island of hawaii),மாவி(Maui), ஒஆஹு(O'ahu),கௌவா'யி(kaua'i) முதலியவை.அனைத்து தீவுகளிளும் சுற்றுல்லா பயணிகள் ரசிக்கும் வகையில் அருமையான நீல நிற கடலும், மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரும், கடல் நீரில் பல்வேறு விளையாட்டுகளும் , கன்ணுக்கு குளிர்ச்சியான வெப்ப மண்டல காடுகளும் உள்ளன. எனவே எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியே!

சுற்றுல்லா முகவர்கள் மூலம் ரிசர்வ் செய்யும் போது சில நாட்கள் ஒரு தீவிலும் மற்றைய நாட்களை ஒரு தீவிலும் தங்குவது போல் ரிசர்வ் செய்யலாம். ஆனால் அது ஒரு தீவை முழுமையாக பார்த்த திருப்தியை ஏற்படுத்தாது. அதே போல் ஹவாய் தீவிற்கு சென்று அங்கு உல்லாச கப்பலில் ஒரு வாரம் முன் பதிவு செய்யலாம். அதன் மூலம் இரவு கப்பலில் தங்கலாம். அந்த கப்பல் அனைத்து பெரிய தீவுகளுக்கும் கூட்டி செல்லும். ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு activity








என்று முடிவெடுத்து அனைத்தையும் முடிக்கலாம். இந்த முறையில் பணம் அதிகம் செலவாகும். அதே நேரத்தில் நமது இஷ்டம் போல் திட்டமிட்டு செயல்பட முடியாது. எனவே எதாவது ஒரு தீவிற்கு செல்வது என்று முடிவெடுத்தோம்

பெரும்பான்மையான activities அனைத்து தீவுகளிலும் இருந்தாலும் ஒரு சில தீவுகளில் உள்ள தனி சிறப்புகளை பார்த்தோமானால் ஒஆஹுல் தண்ணிருக்கு அடியில் ஓட்டி செல்லும் ஸ்கூட்டரும் (BOB),முத்து துறைமுகம் (Pearl Harbour) போன்றவையும்,மாவியில் மிகபெரிய நீர்வீழ்ச்சியும் இருக்கின்றன.பெருந்தீவு ஹவாயிலேயே பெரிய தீவு. உலகிலேயே மிக பெரிய செயல் திறன் கொண்ட எரிமலை இங்கு தான் உள்ளது.உலகில் உள்ள 13 சீதோஷ்ண நிலைகளில் 11 சீதோஷ்ண நிலைகள் 4000 சதுர மைல் பரப்பளவே உள்ள பெருந்தீவில் உள்ளது. அது மட்டுமில்லாமில் இங்கு பொதுவாக சுற்றுல்லா பயணிகளின் எண்ணிக்கை சிறிதளவு குறைவாக இருக்கும். அது தவிர மற்ற தீவுகளில் இருக்கும் அனைத்து வகை acivitiesகளும் இங்கும் இருக்கும்.ஹவாய் செல்ல விரும்புபவர்கள் தங்களுக்கு எதில் மிகுந்த விருப்பம் உள்ளது(எரிமலை,கடற்கரை,அடர்ந்த காடு, பெரிய நீர்வீழ்ச்சி ) என முடிவெடுத்து, அந்த காரணிகள் எந்த தீவில் மிகமிக பிரமாதமாக உள்ளதோ அதை தேர்வு செய்யலாம். எங்களுடைய தேர்வு பெருந்தீவாக இருந்தது.

பெருந்தீவில் கோனா மற்றும் ஹீலோ என முக்கிய விமான நிலையங்கள் உள்ளது. கோனா பகுதி ஓரளவு காய்ந்த, மழை அளவு குறைந்த, நல்ல கடற்கரைகளை கொண்ட பகுதி. ஹீலோ பகுதி அதிக மழையளவு கொண்ட எரிமலை மற்றும் வெப்ப மண்டல காடுகளை கொண்ட பகுதி. எனவே சுற்றுல்லா பயணிகள் பொதுவாக கோனா கடற்கறையில் உள்ள ரிசார்ட்களில் தங்கி ஹீலோ பகுதிக்கு சென்று எரிமலை மற்றும் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பர். பெருந்தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் கார் ஒன்றினை வாடகைக்கு எடுத்து கொள்வது அவசியம். இங்கு பஸ் வசதி குறைவு.

பெருந்தீவில் முக்கியமாக காண வேண்டிய இடங்கள் / செய்ய வேண்டிய activities பற்றி பார்ப்போம்.

1.கடற்கறைகள்
2.எரிமலை
3.நீர் வீழ்ச்சிகள் மற்றும் வெப்ப மண்டல காடுகள்
4.ஹவாய் பழங்குடியினரின் மாதிரி குடியிருப்பு மற்றும் கோவில்கள்
5.பவள பாறைகள் மற்றும் கடல் உயிரிகளை காண நீர்மூழ்கி கப்பல் பயணம்
6.எரிமலையையும், வெப்ப மண்டல காடுகளையும் நன்கு காண ஹெலிகாப்டர் பயணம்
7.கடல் வாழ் உயிரிகளை நேரில் கண்டு களிக்க ஸ்னார்க்கலிங்(Shallow water/Deep water Snorkling)
8.Scooba Diving
9.Parasailing
10.கம்பி சருக்களில் பறந்த படியே நீர்வீழ்ச்சி மற்றும் அடர்ந்த காடு/மலைகளின் அழகை கண்டு களிக்கும் Zipline
11.மலையேற்றம்(Trekking)-எளிதில் சென்றடைய முடியாத நீர்வீழ்ச்சி/காடுகளுக்கு கூட்டி செல்லும்.
12.எளிதில் சென்றடைய முடியாத நீர் வீழ்ச்சி,நீரோடை,கடற்கரைக்கு சிறப்பு வாகனத்தில் கூட்டி செல்லும் பயணம்(ATV Tour)
13.கேப்டன் குக் நினைவிடம்
14.மௌன கியா வானியல் நுண்ணோக்கி மையம்(Mauna Kea Observatories)
15.மெக்கடமியா பருப்பு மற்றும் கோனா காபி தொழிற்சாலை
16.ஹவாயி கலாச்சார நடனத்துடன் இரவு உணவு
17.மற்றும் பல

மேற்கூறிய அனைத்தையும் ஒரு சேர பார்க்க வேண்டுமானால் அதிக பொருட்செலவு ஏற்படுவதுடன் நேரமின்மையும் ஒரு காரணியாக அமைய கூடும். எனவே ஹவாயை சுற்றி பார்க்க விரும்புவோர் கிளம்புவதற்கு முன்பே எதை தேர்வு செய்வது என்று முடிவெடுப்பது அவசியம்.

இந்த பதிவின் தலைப்பில் உள்ள அலோஹா என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அலோஹா என்பது ஹவாயியன் மொழியில் வணக்கம் என்பது ஆகும். ஹவாயிக்கு சென்றால் அலோஹாவை அனைத்து இடங்களிளும் கேட்களாம்!.

இனி வரும் பதிவுகளில் மேற் கூறிய activities பற்றி விரிவாக பார்ப்போம்

இந்த பதிவின் அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

--

--