Showing posts with label BATM. Show all posts
Showing posts with label BATM. Show all posts

Sunday, January 15, 2017

சல்லிகட்டிற்கு ஆதரவாக சிலிக்கன்வேலியில் போராட்டம்

சல்லிகட்டிற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சான்பிராசிஸ்கோ விரிகுடா பகுதி  தமிழ் மன்றம் சல்லிகட்டிற்கு ஆதராவன போராட்டத்திற்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியில் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது..தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி ஒருமித்த கருத்து கொண்ட, சல்லிக்கட்டிக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும்  குடும்பத்துடன் பங்கேற்று அமைதியான முறையில் ஆதரவை தெரிவிக்க ஒன்று கூடினர்.




மிக குறுகிய காலத்தில் எற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள், பெரியோர் என இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும்  சல்லிகட்டிற்கு ஆதராவான பதாகைகள் பிடித்தும், சல்லிகட்டிற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பிய படியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது சல்லிகட்டின் பாரம்பரியத்தையும், அது சங்க காலத்திலிருந்து எவ்வாறு தொடரபட்டு வருகிறது என்ற வரலாற்றையும், நாட்டு மாட்டினத்தை காக்க சல்லிகட்டின் அவசியத்தை பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கபட்டது. போராட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க மக்களும் சல்லிகட்டு பற்றி பதாகை மூலமும், நேரிலும் கேட்டறிந்து தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். ஒரு போராட்டம் நடக்கும் போது, அங்கே காரில் செல்பவர்கள் தங்களது காரின் ஹார்ன் ஒலியை எழுப்பி ஆதாரவு கொடுப்பது அமெரிக்க கலாச்சாரம். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து ஹார்ன் ஒலி கேட்டவண்ணம் இருந்தது. . குளிர் மற்றும் வீட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் அனைத்தையும் தாண்டி  பெருமளவில் மக்கள் கலந்து கொண்டது உலகில்  தமிழர்கள் எங்கு இருந்தாலும் உணர்வு பூர்வமாக தமிழர் மரபு காக்க  ஒன்றினைவர் என்பதை பரைசாற்றுகிறது.

Monday, September 28, 2015

BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை

இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. . செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு  மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்

நாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 1:30 - 6:30
இடம்: Coconut Hill Party Hall,46129 Warm Springs Blvd, Fremont, CA 94539




.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

Sunday, July 20, 2014

சான்பிராசிஸ்கோவில் முத்தமிழ் விழா

வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா ஜூலை 19ம் தேதி சான் ரோமான் நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது. மன்றத்தலைவர் திரு சோலை அழகப்பன் வரவேற்புரையுடன் தொடங்கியது. சான்பிராசிஸ்கோ இந்திய தூதரக அதிகாரி திரு பாஸ்கர் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அசோக் சுப்ரமணியம்
ஒருங்கிணைப்பில் வளைகுடா பகுதி குழந்தைகளின் இனிய குரலிலும் இசையிலும் கவிஞன் கண்ட கனவு என்ற தலைப்பில் பாரதியாரின் பாடல்கள் பாடபட்டன.


வளைகுடா பகுதியில் முதல் முறையாக உள்ளூர் மக்களை கொண்டு நீயா? நானா மாதிரியில்  விவாத மேடை நடைபெற்றது. திரு அறிவொலி தலமையில் "உண்ண உண்ண திகட்டாதது! உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது சைவமா? அசைவமா?? என்ற தலைப்பில் மிக சுவையான விவாதம் நடந்தது. விவாதத்துடன் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு பொருட்கள் பற்றிய குறிப்பும் பகிரபட்டது.




நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இந்தியாவிலிருந்து வந்திருந்த தோல்பாவை கூத்து கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் ஆகியோரின்  தோல்பாவை கூத்து நடைபெற்றது. தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மைகள் மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது. பொம்மைகளை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை .ராமாயணத்தில் வாலி வதம் படலத்தை தோல்பாவைகளை கொண்டு செய்து காட்டியதை  அரிய வாய்ப்பாக கருதி  பார்த்து ரசித்தனர். வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தினர் இது போன்ற தமிழர்களின் தொல்கலைகளை வளைகுடா மக்களுக்கு தொடர்ந்து செய்து காட்ட முயற்சி செய்யபடும் என உறுதி அளித்தனர்.


வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் அடுத்த ஆண்டு விழா வளைகுடா பகுதியில் நடைபெறும் என அறிவிக்க பட்டது.

Sunday, May 12, 2013

சாலமன் பாப்பையா மற்றும் அறிவுமதியுடன் சில நாட்கள்

சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் மற்றும் கவிஞர் அறிவுமதி அவர்களுடன் உரையாடலும் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மாலை திரு சாலமன் பாப்பையா மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்பும், அடுத்த நாள் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் ,ஞாயிற்று கிழமை அறிவுமதியுடன் கவிதை பட்டறையும் நடைபெற்றது.

கவிஞர் அறிவுமதி அவர்கள் ஒரு வாரமாக பல்வேறு குடாபகுதி தமிழர்களை குழுக்களாக சந்தித்து அவர்களிடம் படைப்பிலக்கியத்தில் அமெரிக்க தமிழர்களை ஈடுபட ஊக்கபடுத்தி வந்தார்.தினமும் காலையிலிருந்து நள்ளிரவு வரை சலைக்காமல் பல்வேறு குழுக்களை சந்தித்து அவர்களை தமிழில் எழுத ஊக்கபடுத்தி வந்தார்.ஒரு வார காலத்தில் பல்வேறு நிகழ்ச்சியிலும், தனி மற்றும் பொது சந்திப்புகளிலும் அந்த தமிழறிஞ்சர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவற்றில் சில தகவல்கள்.

அப்துல் ரகுமான்

எழுபதுக்களிலிருந்து  இளம் கவிஞர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி தொடர்ந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முக்கிய பங்கு வகிக்கிறார். கவிஞர் அறிவுமதி தனது குருவாக அப்துல் ரகுமானை கூறுகிறார். அப்துல் ரகுமான் நல்ல கவிஞர் என்று தெரியும். ஆனால் அவர் இன்றைய தமிழறிஞர்கள் பல பேரை எவ்வாறு வளர்க்க உதவியிருக்கிறார் என்று நினைத்த போது ஆச்சர்யமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா வந்த திரு.அப்துல் காதர் கூட அவரை வளர்க்க உதவியது அப்துல் ரகுமான் தான் என்று கூறியிருந்தார் . ஒரு முறை விழுப்புரத்திலிருந்து இரண்டு ஏழை இளைஞர்கள் கவிதை தொகுப்புடன் அப்துல் ரகுமானை காண வந்த போது அப்துல் ரகுமான் அவர்களுக்கு நல்ல உடைகளை வாங்கி வந்து கொடுத்து குளித்து நல்ல உணவு கொடுத்து அவர்களை ஆசுவாசபடுத்தி அவர்களின் கவிதைகளை படித்து அதை செம்மை படுத்த உதவி செய்து அந்த நூலக்கு முகவுரையும் எழுதி கொடுத்துள்ளார்.

அறிவுமதி

கவிஞர் அறிவுமதி 200க்கும் மேலான திரைபட  பாடல்களை எழுதி உள்ளார். அவர் எந்த பாடலிலும் ஆங்கிலம் கலப்பே இல்லாமல் எழுதி உள்ளார். அவரது பாடலில் ஒரு இயக்குனர் ஆங்கில சரணத்தை கலந்து வெளியிட்ட போது அதை தமிழுக்கு செய்த அவமானமாக டைரக்டருக்கு கடிதம் எழுதியதன் விளைவாக அந்த டைரக்டரிடம் மீண்டும் பாடல் எழுத வாய்ப்பே கிடைக்கவில்லையாம் .

கவிஞர் அறிவுமதி விருத்தாசாலம் அருகில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் கற்றவர்.70க்களில் வைரமுத்துவுடன் மிகவும் நெருங்கிய நண்பர்.ஒன்றாக வளர்ந்தவர்கள்

அறிவுமதி ஆரம்பகாலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜாவுடன் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்,

பாலுமகேந்திரா ஒரு படம் எடுக்கும் போது இடைவேளைக்கு முன், பின் எத்தனை காட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு நேரம் வர வேண்டும் என்று திட்டமிட்டு கச்சிதமாக தேவையான காட்சி மட்டுமே திறம்பட எடுப்பாராம்.

அறிவுமதி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது மதுரையிலிருந்து ஒரு இளைஞர் சினிமா துறையில் சேர ஆசைபட்டு வந்துள்ளார். அவரை பட இயக்கத்தின் போது தினமும் அழைந்து சென்று காலை முதல் இரவு வரை படமெடுக்கும் இடத்தில் இருக்க வைத்து  திரைபட நுணுக்கங்களை கற்று கொள்ள விட்டிருக்கிறார். அந்த படம் முடிந்தபின்  பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் வெளியேறி இருக்கிறார். அப்போது பாலுமகேந்திரா புதிய உதவி இயக்குனர் தேவை என்று இவரிடம் சொன்ன போது அறிவுமதி அந்த இளைஞரை பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு பாலுமகேந்திரா அவர் எங்கு பணியாற்றியிருக்கிறார் என்று கேட்டதற்கு உங்களிடமே உங்களுக்கு தெரியாமல் என்று கூறி இருக்கிறார். அந்த இளைஞர் பெயர் பாலா!

73, அபிபுல்லா சாலை - இது அறிவுமதியின் அலுவலகம். இந்த அலுவலகம் பல்வேறு இளம் கலைஞர்களை வளர்த்துள்ளது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா என பல கலைஞர்களை வளர்த்து விட்டதில் அறிவுமதியின் பங்கு உள்ளது!

70க்களிளிருந்து பல்வேறு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அறிவுமதி.அவரை பற்றி மக்கள் அவரது கவிதை தொகுதிகள் மூலம் சென்றடையாமல் திரைப்பட பாடல்கள் மூலம் மட்டுமே அறிவது அவருக்கு வருத்தத்தையே அளிக்கிறது,

அறிவுமதி சிறந்த பேச்சாளர். சமூக ஆர்வலர்களிடம் சமூக ஏற்றதாழ்வுகள் பெரியார், திருமாவளவன் போன்றோர் பற்றியும் படைப்பிலக்கியவாதிகளிடம் கதை கவிதை மற்றும் தமிழறிஞர்கள் பற்றியும் அர்த்தமுள்ளதாக பேசுகிறார்.

அமெரிக்க தமிழ் மன்றங்கள் நாட்டுபுற கவிஞர்களையும் மதித்து அவர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களது திறமைகளை வெளிநாடுகளில் காட்டவைத்து அவர்களையும்  அவர்களது கலைகளையும் ஊக்கபடுத்த வேண்டும் என்றார்

சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா அனைவரிடமும் மிகவும் மரியாதையுடன் பண்புடனும்,அமைதியாகவும், பணிவாகவும்,அன்பாகவும் பழகுகிறார்.முடிந்தவரை சர்ச்சிக்குறிய பேச்சுக்களை தவிர்க்கிறார்.ஓரளவு காங்கிரஸ் சார்புள்ளவரோ என்று நினைக்க தோன்றுகிறது.

தமிழ் சொற்களை ஏன் பெரும்பாலானோர் பயன் படுத்துவதில்லை என்பதற்கு நல்ல காரணம் சொன்னார். திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பொருட்களிலும் தமிழிலும் பெயர் போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருவதாக கூறினார்கள்.ஆனால் அதை அவர்கள் நடைமுறைபடுத்தவில்லை. தற்போது லட்சகணக்கான புது வித பொருட்கள் வந்து விட்டது. எதற்குமே தமிழ் பெயர் இல்லை.  இப்போது தமிழ் பெயர் தெரியாத பொருட்களை தமிழில் கூற வேண்டும் என்றால் எப்படி கூறுவார்கள் என்றார்.

திருவள்ளுவரின் இன்றைய உருவம் பல்வேறு மதத்தினரின் கருத்துகளை புகுத்த பட்டு  எப்படி வந்தது என்று விளக்கினார். சைவரகள் அவருக்கு தாடியையும், வைணவர்கள் அவருக்கு குறுக்கு வாட்டு துணியையும் கொடுத்ததாக கூறினார். அவர் அடிப்படையில் சமணராக(கடவுள் = எண்குணத்தான்) இருந்திருக்களாம் என்று கூறுகிறார்.திருக்குறளை எடுத்து சென்றதில் சைவர்களை விட வைணவர்கள் பங்கே அதிகம் என்று கூறுகிறார். (கம்பர் தான் திருக்குறள் மற்றும் அதன் கருத்துக்களை பெரிய அளவில் கம்ப ராமாயணம் மூலம் கொண்டு சென்றவர் என்கிறார். எனக்கு அது எவ்வாறு என்று புரியவில்லை!)

திருக்குறள் முனுசாமி என்பவர் இல்லை என்றால் திருக்குறள் மக்களிடையே இன்றைய முக்கியத்துவம் பெற்றிருக்காது என்கிறார்.  அவருடைய முயற்சியாலும் அன்றைய காங்கிரஸ் கட்சி திருக்குறளை பாட புத்தகத்தில் சேர்த்ததாலுமே திருக்குறள் இன்று அனைவரையும் சேர்ந்தது என்கிறார்.

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மன்றங்கள் நடத்துவதால் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தொடர்ந்து தமிழ் ஆர்வம்  வளர காரணமாக  உள்ளது.

Sunday, February 17, 2013

சான்பிரான்சிஸ்கோவில் திரு.அப்துல் கதர் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம்

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி திரு.அப்துல் காதர் அவர்கள்  தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி டப்ளின் நகரில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி  மிக சிறப்பாக நடைபெற்றது.

வற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம்,உழைப்பாளியின் வியர்வை ,விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.

அதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே! திருமணத்துக்கு பின்பே! என்ற தலைப்பில்  பட்டிமன்றம் நடைபெற்றது.தலைப்பே மிக சுவையாக இருந்தாலும் பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும்,மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.

கவியரங்க  மற்றும் பட்டிமன்ற நடுவர் திரு. அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தது. குடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய திரு.அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவரக்ளின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லபோவதாகவும் கூறினார்.

80க்களிலும் 90க்களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் M.S. உதயமூர்த்தி அவரகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கபட்டது.

அறுபது வயதிற்கு மேலும்  திரு அப்துல் காதர் போன்ற தமிழ் பெரியோர் அலுப்பில்லாமல் வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிவுடன் வருவது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழார்வத்தை தொடர ஏதுவாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
அதுமட்டுமன்றி திரு.அப்துல் காதர் அவர்கள் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

திரு.அப்துல் காதர்  அவர்களின்  திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிட தக்கது. அவருடைய இருபத்தி ஓராவது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன் , அந்த  கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறி இருக்கிறார். பிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.

இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் தொடர்ந்து நடத்த முயற்சி எடுக்கும் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழை கொண்டு தம் குடும்பத்தை வளர்க்கும் மனிதரக்ளுக்கு நடுவில் வருங்காலத்தில் தமிழை வளர்க்க, திறமையுள்ள இளயதலைமுறையினரை கண்டெடுத்து அவர்களை வளர்க்க உதவிய கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்களை இந்த தலைமுறையில் காண்பது அறியது.

Tuesday, January 22, 2013

அமெரிக்காவில் ஒரு பாரம்பரிய பொங்கல் விழா!

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின்(Bay Area Tamil Manram - BATM) சார்பாக கடந்த சனியன்று  (19/1/2012) பொங்கல் விழா பிரிமாண்ட் நகரில் மிக விமரிசையாக கொண்டாடபட்டது.இம்முறை பாரம்பரிய வாசனையுடன் தமிழர்களின் பண்பாட்டை பறை சாற்றும் விளையாட்டு, சம்பர்தாயங்கள் மற்றும் கலை நிகழ்ச்சியுடன் அனைவரும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

காலையில் விழா வளாகத்தில் பொங்கல் வைத்தலுடன் கோலாகலமாக தொடங்கியது பொங்கல் விழா. விழாவிற்கு சிறிது தாமதமாக சென்றதால் பொங்கல் வைப்பதை முழுமையாக காண முடியவில்லை. நான் முடியும் தருவாயில் தான் போய் சேர்ந்தேன்.

பிறகு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உறி அடித்தல் நடைபெற்றது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் கண்கள் கட்ட பட்டு உறி அடிக்க கட்டையுடன் கிளம்பினர். அனுபவமின்மையால் பெரும்பாலோரானால் சரியாக அடிக்க முடியவில்லை. அடுத்த வருடம் நிறைய உரியடிகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

அடுத்து சிறுவர்களின் சிலம்பாட்டம் செய்முறை விளக்கம் நடைபெற்றது. சிறுவர்கள் அழகாக சிலம்பு சுழற்றி காட்டினர். அமெரிக்காவில் இருந்து கொண்டு சிலம்பம் கற்று கொண்டு இவ்வளவு சிறப்பாக சுழற்றுவது அதிசயமே!


பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.முன்னாள் தமிழ்மன்ற தலைவர்களை மேடைக்கு அழைத்து நன்றி தெரிவித்து  நினைவு பரிசை கொடுத்தார்கள். முன்னாள் தமிழ்மன்ற தலைவர் திரு பிரபு வெங்கடேஷ் தமிழ் மன்றத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பாடு பட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.



பிறகு பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து நடனங்களும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன. முக்கியமாக கும்கி பாடலின் கையளவு படலுக்கான நடனமும் மார்கழி தான் ஓடி போச்சு பாடலுக்கான நடனமும் மிக மிக அருமையாக இருந்தது. அனைத்து நடனங்களின் நேர்த்தியையும் பார்த்தால் அதற்கு பின் இருந்த அவர்களின் கடின உழப்பை உணர முடிந்தது.முக்கியமாக கர்னாடக சங்கீதம் அல்லது மேற்கத்திய இசைக்கு நடனமாடாமல் அழகிய தமிழ் பாடல்களுக்கு, பாரம்பரிய நடனத்தை கண்ட போது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது.

வெறும் நடனம் என்று இல்லாமல் உறுமி மேளம், நையாண்டி நாயனம் போன்ற பழந்தமிழ் இசை கருவிகளை காட்டி, விளக்கி , வாசித்தி காட்டியது முத்தாய்ப்பாக இருந்தது.(நாயன கருவி மட்டும் கடைசி நேரத்தில் உடைந்து காலை வாரிவிட்டது!)

பிறகு கவியரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. கலந்து கொண்ட அனைவரும் அருமையாக உணர்வு பூர்வமான கவிதை வாசித்தனர்.மக்கள் கூட்டமும் மிக திரளாக வந்திருந்தது. இரு முறை மதிய உணவு தீர்ந்து மீண்டும் மீண்டும் வருவித்தனர் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். சாப்பாடு வருவதற்கு முன் பசியால் வாடிய குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு வடை, பிசா என்று இருந்ததை வழங்கி கொண்டே இருந்தார்கள்.
கவியரங்கம்


சென்ற வருடம் ஒரு தமிழ் மன்ற விழாவிற்கு சென்ற போது தொடர்ச்சியாக வெறும் கர்னாடக இசை நிகழ்ச்சியே இருந்தது. ஆனால் இந்த முறை அனைத்து வித நிகழ்ச்சிகளும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இனி வரும் நிகழ்ச்சிகள் இது போல தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.