Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Wednesday, November 22, 2017

ஐரோப்பாவில் தேசிய மொழியால் வீழ்ந்த கலாச்சாரங்கள்


தேசியம், மதம்  எனப் பல்வேறு காரணங்களால் நாட்டின் பல்வேறு மொழிகள் மீதும் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள், அம்மொழிகளைத்  தாய்மொழியாய்க் கொண்ட  உள்நாட்டு மக்களுக்கு பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்படுத்தியது என்பதை சோவியத் யூனியன், வங்காள தேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் வரலாறுகள் மூலம் அறிந்தோம்.



தேசிய மொழியால் வீழ்ந்த வல்லரசு

இந்தியாவில் தேசிய மொழி திணிப்பு வரலாறு

தாய்மொழி என்பது மக்களின் அடையாளம் மட்டும் அல்ல; அது மக்களைச் சமூகமாக ஒன்றிணைப்பதால் உருவாகும் பெரும் வலிமை. மொழி அடிப்படையிலான சமூகங்கள் பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால், அவை தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எழும் போராட்டம் மிகவும் வலி மிகுந்தது. சில தலைமுறைகள் வரை அடிமைத்தனம் நீண்டுவிட்டால் மீள்வதே கேள்விக்குறியாகிவிடும்.



மொழி மீதான அடக்குமுறை உள்நாட்டு அரசினால் மட்டுமில்லாமல், அன்னியப்  படையெடுப்பின் மூலமும் நிகழ்கிறது. இதனால், தொன்மையான வரலாறு கொண்ட மொழிகள் அழிவை நோக்கி நகர்கின்றன. இன்று மக்கள் தொடர்புக்கான உலகப் பொதுமொழி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கிலம், ஒருகாலத்தில் இங்கிலாந்தின் தாய்மொழியாக மட்டுமே இருந்தது. பிறநாடுகள் மீதான இங்கிலாந்தின் படையெடுப்பு ஆங்கிலம் உலகப் பொதுமொழி ஆனதற்கான ஒரு காரணம். இவ்வாறு இங்கிலாந்து நாட்டின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அதன் அண்டை நாடுகளான அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும், வேல்ஸ்ஸிலும் ஆங்கிலம் அந்த நாடுகளின் தாய்மொழிகளை ஏறத்தாழ அழித்தேவிட்டது.


ஐரீஷ் மொழியின் வரலாறு


ஆங்கில மொழி உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தொன்மையான ஐரீஷ் மொழி. அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒலி வடிவில் தோன்றி, கி.பி 300 வாக்கில் எழுத்து வடிவம் பெற்ற மொழி.


அயர்லாந்து மீது இங்கிலாந்து உட்பட பிற ஐரோப்பிய நாடுகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. இப்படையெடுப்புகள் கி.பி 11 ஆம்  நூற்றாண்டில் சிறிய அளவில் இருந்தாலும், அயர்லாந்து மக்களின் அரசியல் அதிகாரமும், ஐரீஷ் மொழியின் முழுமையான பயன்பாடும் கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை.


கி.பி 1536 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் எட்டாம் ஹென்றி மன்னர் அயர்லாந்தை வெற்றி கொள்ள முடிவு செய்து அதன் மீது போர் தொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே பல போர்கள் நடந்தன. கி.பி 1600 ஆம் ஆண்டு வாக்கில் அயர்லாந்து இங்கிலாந்தின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. அதன்பின், அயர்லாந்து மக்களின் வழக்கு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்த ஐரீஷ் மொழியின் சரிவு ஆரம்பமானது.


அயர்லாந்து மக்களின் வலிமை அவர்களின் பண்பாட்டின் அடிப்படையான ஐரீஷ் மொழியே. ஐரீஷ் மொழியை அழிப்பதும், அதன் மூலம் ஐரீஷ் பண்பாட்டை அழிப்பதும் இங்கிலாந்தின் அரசியல் வலிமைக்குத் தேவை என்று இங்கிலாந்து உணர்ந்தது. அதன் காரணமாக, இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அயர்லாந்து அரசு முழுவதுமாக ஆங்கிலத்தில்  செயல்படத் தொடங்கியது.


இது ஒருபுறமிருக்க, கி.பி 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அயர்லாந்து மக்களின் நிலங்கள் அரசால் அபகரிக்கப்பட்டன. இங்கிலாந்திலிருந்து பெருமளவில் முதலாளிகளையும், தொழிலாளிகளையும் கொண்டு வந்து, அவர்கள் வசம் பிடுங்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதன் விளைவாக ஆங்கிலம் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அயர்லாந்து மக்கள் தங்கள் தாய்நாட்டிலேயே உரிமை இழந்து, உடைமை இழந்து, கேட்பாரற்ற அகதிகள் போன்று வாழும் அவலம் நேர்ந்தது.


உள்நாட்டிலேயே உரிமை இழந்தோருக்கும், அடிமைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, கி.பி 16 ஆம் நூற்றாண்டில், பல லட்சம் அயர்லாந்து மக்கள் அடிமைகளாக மேற்கிந்தியத் தீவுகளில் விற்கப்பட்டனர்.


கல்வியில் மொழித்திணிப்பும், ஐரீஷ் மொழியின் பேரழிவும்


தலைமுறை பல கடந்தன. கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரீஷ் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படும் மொழி என்னும் நிலைக்கு வந்தது. ஆங்கிலமே முன்னேற்றத்தின் அடையாளமானது. இது எவ்வாறு நிகழ்ந்தது?


இன்றைய அறிவு சார்ந்த தொழிற்மயமான உலகில், பள்ளியில் கற்பிக்கப்படும் மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. பள்ளியில் கற்பிக்கப்படும் மொழி சார்ந்தே வேலைவாய்ப்பும், வேலை வாய்ப்பு சார்ந்தே பள்ளியில் மொழி கற்பிக்கப்படுதலும் என்று ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஒரு மொழி அழிய வேண்டும் என்றால், ஒன்று அந்த மொழி பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்; இல்லையேல், மொழி பயின்றால் வேலை கிடைக்காது என்ற நிலை உருவாக வேண்டும். எனவேதான் எந்த ஒரு மொழியையும், அதன் பண்பாட்டையும் அழிக்க, வேலை வாய்ப்பு அல்லது தேசியமொழி என்று ஏதேனும் ஒரு காரணம் கொண்டு பிறமொழித் திணிப்பு என்பது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படுகிறது. காலப்போக்கில், மக்கள் வேலைவாய்ப்புக்குத் தேவையான மொழியை மட்டுமே பயிலத் தொடங்குவார்கள். இதுதான் ஐரீஷ் மொழி அதன் மண்ணான அயர்லாந்திலேயே சிறுபான்மை மொழியானதின் அடிப்படைக் காரணம்.


தாய்மாண்ணிலேயே அடிமைகளான அவலம், பசிக்கொடுமை, பஞ்சம், போர் ஆகியவற்றின் விளைவாக ஐரீஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அயர்லாந்தில் குறையத் தொடங்கியது. எஞ்சிய மக்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஐரீஷ் மொழியிலேயே பேசி வந்தனர். இருப்பினும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நாடாளுமன்றம், நீதிமன்றம், வணிகம் என்று அனைத்திலும் பயன்படுத்துமாறு திணிக்கப்பட்டதால் ஐரீஷ் மொழியின் தேவை முழுமையாக நீக்கப்பட்டது. இதை ஐரீஷ் மக்கள் உணரவில்லை.


இங்கிலாந்து அயர்லாந்தை வென்றவுடன் முதற்கட்டமாக அயர்லாந்து மக்களின் உழைப்பில் பெறப்பட்ட வரிப் பணத்தைக் கொண்டு, தேசியப் பள்ளிகள் என்ற பெயரில் “ராயல் பள்ளிகள்” என்னும் ஆங்கிலப் பள்ளிகளை அயர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடங்கினர். கி.பி 1830 களில் அயர்லாந்து நாட்டில் பள்ளிகள் தனியாரால் நடத்தபட்ட காலம் அது. மக்கள் பணம் கொடுத்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். எனவே இலவசக் கல்வி தரும் ராயல் பள்ளிகள் அயர்லாந்து மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தன.


தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை கொண்ட இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடம் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் ஆங்கிலம் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. எனவே, இப்பள்ளிகளில் ஐரீஷ் மொழி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ராயல் பள்ளியில் ஐரீஷ் மொழி பேசும் குழந்தைகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.


பள்ளிகளில் ஆங்கிலத் திணிப்பும், ஐரீஷ் மொழியின் புறக்கணிப்பும் அயர்லாந்து மக்களின் தாய்மொழியை நிலைகுலைய வைத்தன.  இவற்றுடன் ஆட்சி அலுவல்களில் ஆட்சி மொழியான ஆங்கிலத்தின் கட்டாயத்தேவை  ஐரீஷ் மொழியை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது. அயர்லாந்தின் ஆங்கில மொழிக் கல்விமுறை பற்றி பி.எச். பியர்ஸ் (P.H. Pearse) என்ற பேரறிஞர் The Murder Machine என்ற கட்டுரை எழுதினர். அந்த மிகவும் புகழ் பெற்ற கட்டுரை, மொழியும் கல்விமுறையும் எவ்வாறு மக்களின் பண்பாட்டை அழிக்கும் கொலைக்களமாகப் பயன்பட்டது என்பதை அது விளக்குகிறது.


அன்னிய ஆதிக்கத்தின் விளைவாக அயர்லாந்து மக்கள் பெருமளவு கிராமப் பகுதிகளில் ஏழ்மையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இங்கிலாந்திலிருந்து நகரங்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். கி.பி 1840 களில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம் கிராம மக்கள் பெரும்பாலானவர்களை  பசியால் சாகடித்ததோடு, பிழைப்புக்காகப் பலரை வேறு நாடு தேடி செல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தியது. இதுவும் ஐரீஷ் மொழியின் பேரழிவுக்கு ஒரு காரணமாக ஆகியது.


ஐரீஸ் மொழியின் இன்றைய நிலை


கி.பி 1922 ஆம் ஆண்டு அயர்லாந்து நாடு விடுதலை ஆகும்போது ஐரீஷ் மொழி அழிவின் விளிம்பில் இருந்தது. மிகவும் சிறுபான்மையினரால் பேசப்படுவதால் ஐரீஷ் மொழிக்குத் தன் சொந்த மண்ணிலேயே அரசின் ஆட்சிமொழித் தகுதியில்லை என்னும் கொடுமையான சூழல். எனவே, அரசு எந்திரத்தைத் தொடர ஆங்கிலமே பயன்படுத்தப்பட்டது. விடுதலைக்குப் பின் ஐரீஷ் மொழியை ஒரு பாடமாக பள்ளிகூடங்களில் நடத்துவது கட்டாயமாக்கபட்டது. ஆனால், ஐரீஷ் மொழிவழிக்  கல்வி ஊக்குவிக்கப்படவில்லை. அதன் விளைவாக ஐரீஷை முதல் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவதும், இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் தொடர்ந்தது.


இன்று தொன்மையான ஐரீஷ் மொழியைப்  பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் எழுபதாயிரம் தான். இருப்பினும், பல இடங்களில் நம்பிக்கை துளிர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அயர்லாந்து நாட்டின் நகரப்புறங்களில் ஐரீஷ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. Gaelscoil என்று அழைக்கபடும் ஐரீஷ் மொழி அடிப்படையிலான கல்விக்கூடங்கள் தற்போது அயர்லாந்தில் பெருகி வருகின்றன. சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐரீஷ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி, இந்தப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள்  ஆங்கில வழி மாணவர்களை விட அதிகத் தேர்ச்சி விகிதத்தோடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளிகள் ஐரீஷ் மொழியை அழிவிலிருந்து பாதுகாக்க அதிகளவு வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.


ஸ்காட்லாந்து கேலிக் மொழியின் அழிவு


ஸ்காட்லாந்து கேலிக் (Scottish Gaelic) மொழி ஐரீஸ் மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இம்மொழி பேசப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் போது இந்த மொழி சிறிது சிறிதாக அழிவுக்கு உள்ளாகியது. 1609 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட Statutes of Iona சட்டத்தின் படி ஸ்காட்லாந்து நாட்டின் உள்ளூர் தலைவர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிக்குக் கட்டாயமாக அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். அயர்லாந்து போலவே ஸ்காட்லாந்திலும் பள்ளிகளின் மூலம் ஆங்கிலம் திணிக்கப்பட்டு ஸ்காட்லாந்து கேலிக் மொழி முற்றிலுமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது. 1872 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட கல்விச் சட்டத்தின்படி பள்ளியில் ஸ்காட்லாந்து கேலிக் மொழி பயிற்றுவிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் தங்களது தாய்மொழியில் பேசுவதும் தடுக்கப்பட்டது. அதன் விளைவாகத் தற்போது  சுமார் 1% ஸ்காட்லாந்து மக்கள் மட்டுமே ஸ்காட்லாந்து கேலிக் மொழி பேசிவருகின்றனர்.


வேல்ஸ் மொழியின் அழிவு


அயர்லாந்து, ஸ்காட்லாந்து போலவே வேல்ஸ் நாட்டிலும் ஆங்கிலத் திணிப்பு நடைபெற்றது. வேல்ஸ் மொழி கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தோன்றி, கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை வேல்ஸ் நாட்டில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழியாக இருந்து வந்தது. ஆனால், இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் விளைவாக வேல்ஸ் மொழியின் செல்வாக்குக் குறைந்தது. கி.பி 1535 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், அனைத்து அரசு வேலைக்கும் ஆங்கிலம் கட்டாயத் தேவையானது. கி.பி 1846 ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டுப் பள்ளிக் கல்வி பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை  Treachery of the Blue Books என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டது. இதில் வேல்ஸ் மக்களின் முன்னேற்றமின்மைக்குக் காரணம் வேல்ஸ் மொழி தான் என்றும், ஆங்கிலம் கற்பிப்பதின் மூலமே அவர்களை முன்னேற்ற முடியும் என்றும் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.


அதன் விளைவாக, பள்ளிகளில் வேல்ஸ் மொழி முழுமையாகத் தடை செய்யப்பட்டது. ஆங்கிலமே சிறிதும் தெரியாத  மக்கள் உள்ள பகுதியில் கூட ஆங்கிலவழிப் பாடம் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் பள்ளியில் வேல்ஸ் மொழியில் பேசினால் தண்டனை அளிக்கபட்டது. பள்ளிகளில் வேல்ஸ் மொழியில் பேசும் மாணவர்கள் கழுத்தில்  WELSHN (Welsh Not)  என்று எழுதபட்ட பலகை மாட்டப்படும். அடுத்தடுத்து யார் வேல்ஸ் மொழியில் பேசுகிறார்களோ அவர்கள் கழுத்துக்கு அந்தப் பலகை மாற்றப்படும். பள்ளி முடியும் போது அந்தப் பலகை யார் கழுத்தில் உள்ளதோ அந்த மாணவன் கடுமையாக தண்டிக்கப்படுவான். தாய்மொழியைப் பேசுவதால் குழந்தைகள் தண்டிக்கப்படுவது போன்று ஒரு கொடுமையான செயல் வேறேதும் இல்லை. அதையும் தாண்டி குற்றவாளிபோல் பலகை மாட்டி மாணவர்களை அவமானப்படுத்தி வதைப்பது மிகவும் கொடுமையான துன்பம்.




கி.பி 20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. பள்ளிகளில் வேல்ஸ் மொழி மீண்டும் அறிமுகப்படுத்தப்படத் தொடங்கியது. அரசாங்கமும் தேசிய மொழியாக வேல்ஸ் மொழியை அறிவித்து அதன் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. தற்போது 26% பள்ளிகள் வேல்ஸ் மொழியின் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பள்ளி மாணவர்களும் வேல்ஸ் மொழி படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதன் விளைவாகத் தற்போது வேல்ஸ் மொழி மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது.


வரலாறு உணர்த்தும் உண்மை

உலக வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் உலகெங்கிலும் நடந்துள்ளன. ஏன், இப்பொழுதும் நடக்கின்றன. தாய்மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க ஒவ்வொருவரும் விழிப்பாக இருந்து போராட வேண்டிய காலமாக இன்றைய சூழல் உள்ளது. தற்போதும் கூட ஹிந்தி திணிப்பு என்பது தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமே ஹிந்தியை எதிர்க்கிறது என்ற பொய்மை தகர்வதும் தற்பொழுது இந்தியாவில் நிகழ்கிறது. கேரளா மலையாளத்தை அலுவல்மொழியாக அரசு நிறுவனங்களில் கட்டாயப்படுத்தியுள்ளது. கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாயப்பாடம் என்று உறுதி செய்துள்ளது. ஹிந்தி மாநிலம் என்று அடையாளப்படுத்தப்பட்ட பீகாரில் கூட போஜ்பூரி போன்ற சிறுபான்மை மொழிகள் அழிவது உணரப்பட்டு ஹிந்தியின் திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறான எதிர்ப்புணர்வு எழுவது காலத்தின் தேவை. இன்று இந்த உணர்வு எழாவிட்டால் சிலநூறு ஆண்டுகளுக்குப் பின் எந்த ஒரு இந்திய மொழியையும் அழிவிலிருந்து பாதுகாப்பது என்பது இயலாமல் போய்விடும்.

இந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது



Monday, October 19, 2015

தமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall

ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.

அமெரிக்காவில் Solar Power

அமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும்  போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும்.  பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.
 

ஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.

மோடியின் டெஸ்லா விஜயம்

பாரத பிரதமர் மோடி சமீபத்தில்  சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின்  பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும்,  அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .


Powerwall

டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக  மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த  மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.





இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.


கடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார  தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel  மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம்  கிடைக்கும் நிலை
வெகு தொலைவில் இல்லை.


Monday, December 01, 2014

பெட்ரோல் விலை அரசியல்

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் மதிப்பானது பெருமளவில் குறைந்து வருவது எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் , பொதுமக்களையும் நிம்மதி அடைய செய்துவருகிறது. இந்த விலை இறக்கத்திற்கான காரணத்தையும் அதற்கு பின் இருக்கும் அரசியலையும் பார்த்தால் இந்த விலை குறைப்பு நிரத்தரமா? என்று புரிந்து கொள்ள முடியும். சர்வதேச அளவில் 60% கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒன்று சேர்ந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பை (OPEC) ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பில் சவுதி அரேபியா, எமிரேட்டுகள், இராக், இரான் போன்ற அரபு நாடுகளோடு  வெனிசூவேலா,ஈக்வேடார் போன்ற பிற நாடுகளும் உள்ளனர். உலகின் பெரும்பான்மையான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள் இவை என்பதால் கச்சா எண்னெய் விலை நிர்ணயிப்பதில் இந்த நாடுகளின் பங்கு முக்கியமானது ஆகும். சர்வதேச மார்க்கெட்டில்  தேவை - உற்பத்தி - விலை நிர்ணயம் போன்ற மார்கெட் விதிகளுக்கு ஏற்ப  கச்சா எண்ணெயின் விலையை  நிர்ணயிக்க விடாமல் தனது உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு கச்சா எண்ணெயை நிர்ணயிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.


பெட்ரோல் விலை கட்டுபாடு
2000ம் ஆண்டுகளின் தொடகத்தின் போது உலக பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணெயின் தேவையை அதிகரித்தது. அதனால் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெருமளவு அதிகரித்தது.இந்த அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. எனவே பெருமளவு கச்சா எண்ணெய் விலை குறைப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அளவு கச்சா எண்ணெயின் விலை குறையவில்லை. அதற்கு காரணம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்தது தான்.  கச்சா எண்ணெயின் தேவை மார்கெட்டில் குறைந்த போது தனது உற்பத்தியை குறைத்து விலை குறைவை கட்டுபடுத்தியது.அதன் விளைவாக மோசமான பொருளாதாரத்திலும் அதிக எண்ணெய் விலை இருந்துததால் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளும் பொதுமக்களும் பெருமளவு அவதிபட்டனர். நாடுகளின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு பிரச்சனையும் ஏற்பட்டது.

இன்று புதிய நாள்
கடந்த சில ஆண்டுகளாக  உலகளவில் எதிர்பார்த்த அளவு பொருளாதார  வளர்ச்சி அடையவில்லை. அதன் விளைவாக கச்சா  எண்ணெயின் விலையும் குறைய தொடங்கி உள்ளது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல் தற்போதும் OPEC அமைப்பு உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெயின் விலையை எற்றி விடுமா என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது கூடிய அமைப்பின் மாநாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதில்லை என்று முடிவெடுத்தது அனைவரது ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இதன் பின்னனியில் உள்ள பொருளாதார அரசியல் காரணங்களை பற்றி பார்ப்போம்.

கடந்த ஐந்தாண்டுகளாக சர்வதேச அளவில் அமைதியாக மாபெரும் மாற்றம் களிப்பாறை எரிவாயு/களிப்பாறை  எண்ணெய் என்ற பெயரில் நடந்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது , அமெரிக்காவில்   களிப்பாறையினுள் புதைந்துள்ள எரிவாயு மற்றும் எண்ணெயை பொருளாதார ரீதியாக லாபத்துடன் வெளிக்கொணறும் தொழில்நுட்பங்கள் வெளிவர தொடங்கின.  களிப்பாறை கச்சா எண்ணெயும் பெருமளவு எடுக்க பட்டது. அமெரிக்கா சுமார் 4 மில்லியன் பேரல் எண்ணெயை தினமும் புதிதாக இந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது. இந்த தொழில்நுட்பம்   சுற்றுபுறசூழல் பிரச்சனை  ஏற்படுத்தினாலும் அதிகரித்து வந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் பொருளாதார ரீதியாக லாபமடைய அதிக எண்ணெய் எடுக்க பட்டு வருகிறது.களிப்பாறை தொழில்நுட்பம் மூலம் எணெணெய் எடுக்க பேரல்  ஒன்றுக்கு குறைந்த பட்சமாக பேரலுக்கு $40ம் அதிக பட்சமாக $110ம் தேவைபடுகிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் செய்தது போல் எண்ணெய் உற்பத்தியை அரபு நாடுகள் குறைத்து அதிக எண்ணெய் விலையை சர்வ தேச சந்தையில் நிலை நாட்டினால் என்ன நிகழும் என்பதற்கு வரலாற்று சான்றும் உள்ளது.

1980களின் நடுவில் கச்சா எண்ணெயின் விலை இது போலவே குறைந்தது. அப்போது அரபு நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி பிடிக்க முயன்றன. அனால் அதற்கான விளைவுகள் வேறு மாதிரியாக இருந்தது. எண்ணெய் விலை உயர்வதற்கு பதில் அமைப்பு OPEC அல்லாத பிற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து கொள்ள ஆரம்பித்தன.அதன் விளைவாக சர்வதேச கச்சா எண்ணெய் மார்கெட்டில் பிற நாடுகளின் பங்கு அதிகரித்தது.அரபு நாடுகளை பொருத்தவரை தற்போது எண்ணெய் உற்பத்தியை குறைத்தால் வரலாறு திரும்பி அமெரிக்க களிப்பாறை எண்ணெய் நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி மற்றும் சர்வதேச அளவிலான அதன் பங்கு அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்துமோ என்று அஞ்சுகிறது.குறுகிய காலத்திற்கு கச்சா எண்ணெயின் விலையை குறைவாக வைத்திருப்பதன் மூலம் களிப்பாறை எண்ணெய் உற்பத்தியை லாபமில்லாதாக மாற்றி அதற்கு வரும் முதலீடுகளை  குறைத்து  அந்த எண்ணெய் உற்பத்தி தொழிலுக்கு முட்டுகட்டை போட வாய்ப்புள்ளதாக  கருதுகிறது.

அரசியல்
பெரும்பாலான OPEC நாடுகள் தங்களது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க அதிக அளவு கச்சா எண்ணெய் விலையை நம்பி உள்ளனர். ஆனால் இந்த  தேவையானது ஒவ்வொரு நாட்டிற்கும் தனது பொருளாதரத்தை பொருத்து வெவ்வேறாக உள்ளது. உதாரணமாக குவைத், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் குறைவான கச்சா எண்ணை விலையிலேயே தனது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க முடியும். அதுமட்டுமின்றி தங்களிடம் உள்ள வெளிநாட்டு கரன்சி சேமிப்பு மூலம் பல வருடங்களுக்கு  குறைந்த எண்ணெய் விலையை தாக்கு பிடிக்க முடியும். ஆனால் அரசியல் ரீதியாக எதிரியாக கருதபடும் ஈரான், ஈராக் போன்ற நாடுகள் நிலை குறைவான கச்சா எண்ணெய் விலையால் பலவீனமடையும். தங்களது நாட்டின் மக்கள் நல திட்டங்களை குறைத்து பட்ஜெட் பற்றாகுறையை சமாளிக்க வேண்டும்.அது நாட்டின் பொருளாதாரம், அரபு நாடுகளின் அதிகார சமநிலை போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்

எது எப்படி  இருந்தாலும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பு ஒட்டு மொத்த மகக்ளின் வாழ்க்கை தரத்தில் சிறிது காலத்துக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த பலனை அதிக அளவு அனுபவிக்கும் வகையில் குறைந்த விலையில் எண்ணெயை வாங்கி சேமித்து வைக்க வசதி இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.






Sunday, August 24, 2014

தமிழ் Unicode எழுத்துரு அரசியல் - இந்தி வெறியர்களால் தமிழுக்கு கணிணி பயன்பாட்டில் ஏற்பட்ட பின்னடைவு

இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம்.

திரு மணி மணிவண்ணன் மற்றும் பேரா. செல்வகுமார் ஆகியோரின் தமிழ் கணிணி பற்றிய நேர்கோணல் சிறகு இதழில் வெளி வந்துள்ளது. இது.Unicode எழுத்துறு பற்றிய வரலாறை அறிந்து கொள்ள அனைவரும் படிக்க வேண்டிய நேர்கோணல்

http://siragu.com/?p=14890

நேர்கோணலிலிருந்து ஒரு பகுதி

கேள்வி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் Unicode, பல சிக்கல்கள், பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தது. அதில் தமிழுக்கான இடம் வேண்டும், இத்தனை இடம் வேண்டும், இந்த மாதிரியான பல பிரச்சனைகள் வந்தது. அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய Unicode, அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதிலும் சிலர் குறைகள் இருப்பதாக உணர்கிறார்கள். Unicode, ல் அடைந்த வெற்றி, நிறை மற்றும் குறை, அந்தக்குறைகளுக்கு என்ன தீர்வு?

பதில்(மணிவண்ணன்): தமிழ் யூனிகோடு, என்பது என்னைப்பொறுத்தவரையில் போற்றத்தக்க ஒரு குறியீடு. ஏனென்றால் பல்வேறு தனித்தனி குறியீடுகள் தமிழில் இருந்தபொழுது ஒருவர் எழுதியதை இன்னொருவர் படிக்கமுடியாத சிக்கல்கள் எல்லாம் இருந்தன. தமிழக அரசு TAM/TAB தரத்தை உருவாக்கியபொழுதும் அதையும் பலர் ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தது. இப்படிச் சிதறுண்டு கிடந்த தமிழ்ப்புலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது யூனிகோடு. அது அதனுடைய மாபெரும் நிறை என்று சொல்லவேண்டும். யூனிகோடு ஒரு பன்னாட்டுத் தரம் என்பதால் பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே இதை ஆதரிக்கின்றன. ஆதலால் முகநூல் என்று நாம் அன்போடு அழைக்கும் facebook இருக்கிறதே அதில் தமிழ் இயல்பாகவே வருகிறது. இதற்காகவென்று தனியாக facebook செய்யவேண்டிய தேவையில்லை. கூகுள் (google) வழியாகத் தமிழில் மின்னஞ்சல் அனுப்பமுடிகிறது. அதைப் பார்க்கவோ, தட்டச்சு செய்யவோ இயல்பாக முடிகிறது. இதுபோன்ற பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே ஒரே தரத்தை பின்பற்றுவதால் இது, என்ன கணினியாக இருந்தாலும் சரி மேசைக்கணினியாக இருந்தாலும் சரி, பலகைக் கணினியாக இருந்தாலும் சரி அல்லது smartphone என்னும் திறன்பேசிகளாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் தமிழ் இருக்கிறது. இதற்கென்று தனியாக யாரும் எதுவும் செய்யவேண்டியத் தேவையில்லை. இதுதான் உலகத்தரம் என்ற ஒரு ஆணிவேர் தரும் மிகப்பெரிய நிறைவு. ஆனால் இந்த மிகப்பெரிய நிறை ஒரு வலுவான தளத்தில் அமைக்கப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். யூனிகோடு ஒரு நல்ல நோக்குடன் அமைக்கப்பட்டது. உலகத்திலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் உள்ள குறியீடுகள் அதில் இருக்கவேண்டும் என்ற அடிப்படை நோக்கோடு கொண்டுவரப்பட்டது. அவர்கள் இந்திய மொழிகளுக்கு என்று குறியீடுகள் அமைக்க வந்தபொழுது அவர்கள் இந்திய அரசை வந்து கேட்டார்கள். அப்பொழுது இந்திய அரசு தமிழுக்கு என்று ஒரு தரத்தைக் கொண்டுவரும்பொழுது தமிழ்நாட்டைக் கலந்து ஆலோசித்திருந்தால் அப்போது தமிழக அரசு கணினித்தமிழர்களை, வல்லுனர்களைக் கேட்டு பேசியிருந்தால் ஒரு நல்ல தீர்வைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் என்ன காரணத்தாலோ யூனிகோடு க்கும் இந்தியாவிற்கும் நடந்த அந்த உரையாடலில் தமிழகத்தின் கணினி வல்லுநர்கள் யாருமே பங்கேற்கவில்லை. அதனால் யூனிகோடு இந்தியமொழி அனைத்தையும் ஒரே கட்டமைப்பில் பார்த்தது.
இந்திய மொழிகள் அனைத்தையும் தேவநாகரி என்ற ஒரு கட்டமைப்பு. அந்தச்சட்டத்திற்குள்ளேயே கட்டுப்பட்டவை. இது பல இந்திய மொழிகளுக்கு பெரிய குறைபாடாக இல்லை. ஏனென்றால் இந்தியமொழிகளில் கூட்டெழுத்துக்கள் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. கூட்டெழுத்துக்கள் இருக்கும் ஒரே காரணத்தால் ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு (one to one mapping) என்றவாறு பல இந்திய மொழிகளை அமைக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதம் இதற்கு ஒன்றுக்கு ஒன்று அமைக்க வேண்டும் என்றால் கோடிக்கான குறியீடுகள் தேவை என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் அப்படியல்ல. தமிழில் இரண்டே இரண்டு கூட்டெழுத்துக்கள்தான் இருக்கின்றன. அந்த இரண்டும் தமிழுக்குரிய இயல்பான எழுத்துக்கள் கிடையாது. ஸ்ரீ என்பது ஒரு கூட்டெழுத்து என்பது பல தமிழர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ என்பதில் இருக்கும் இரண்டு எழுத்துகள்:- ரீ அது தமிழ் எழுத்து, அந்த ஷ், வ வைத்திருப்பிப் போட்டால் வரும் கிரந்த எழுத்து. அது நிறையபேருக்கு அப்படி ஒரு எழுத்து இருக்கிறது என்பதே தெரியாது. இன்னொன்று க்ஷ; இது லக்ஷ்மி என்பதில் வரும். தமிழில் பெரும்பாலும் அவ்வாறு எழுதுவதில்லை. ரிக்.ஷா என்று உடைத்துத்தான் எழுதுவோம். சென்னையெங்கும் சுற்றிப் பார்த்தால் ரிக்.ஷா என்று எழுத்து வரக்கூடிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் உடைத்துத்தான் எழுதுகிறோம் இது தமிழின் இயல்பு. 

இந்த கூட்டெழுத்து வடமொழிக்கு தேவைப்பட்டது. வடமொழிக்கு மெய்யெழுத்து கிடையாது. புள்ளி கிடையாது. அதனால் ஒரு மெய்யெழுத்து இன்னொரு உயிர்மெய் எழுத்தோடு இணையும் பொழுது அதை எப்படிக் காட்டுவது என்பது அவர்களுக்கு ஒரு சிக்கலாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கூட்டெழுத்தை பயன்படுத்தினார்கள். தமிழுக்கு அது தேவையில்லை.


உங்களுக்கு ஒரு மெய்யெழுத்து வேண்டுமென்றால் அதற்கு மேலே ஒரு புள்ளி வைத்தால் போதும். ரிக்.ஷா என்பதை எப்படி உடைக்க முடிகிறது. க மேல் புள்ளி வைத்தால் க் ஆக மாறிவிடுகிறது. இடது பாகம் க் வலது பாகம் ஷா என்று சொல்லவேண்டிய தேவையேஇல்லை. அதேபோல் ஸ்ரீ என்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது தமிழ் மொழியே கிடையாது. இந்த இரண்டுமே வடமொழியிலிருந்து இரவலாக வாங்கியது. தமிழுக்கென்று உள்ள எழுத்துக்கள் இயல்பான தனி எழுத்துக்கள். கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை. இந்த கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை எனும்பொழுது தமிழின் மொத்த எழுத்துக்களே மொத்தம் 247 தான். இவையில்லாமல் நாம் இரவலாக வாங்கியிருக்கும் ஸ், ஷ், ஜ், ஹ் என்ற கிரந்த எழுத்துக்களும் அவற்றின் உயிர்மெய் வடிவங்களும், ஸ்ரீயும் வழக்கில் இருப்பதால் இந்த 247 எழுத்துக்களைத் தாண்டி மேலும் 53 எழுத்துகளைக் கூட்டி 300 எழுத்துகளோடு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இவைதான் தமிழுக்கு இருக்க வேண்டிய மொத்தக் குறியீடுகள். 


இப்படி தமிழுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு என்று இருந்தால் ஆங்கிலத்தில் என்னென்ன செய்கிறோமோ அனைத்தையும் தமிழில் செய்ய முடியும். அப்படி இல்லாததால் என்னாகிறது என்றால், யூனிகோடில் அகரமேறிய மெய்யெழுத்துக்களைத் தனியாக எழுதுகிறார்கள் (க,ங,ச,..). பிறகு துணைக்குறியீடுகளைத் (கால், கொம்பு, புள்ளி,..) தனியாக எழுதுகிறார்கள். இப்போது மெய்யெழுத்துகளையும், ஏனைய உயிர்மெய்யெழுத்துகளையும் காட்டவேண்டும் என்றால் இவ்விரண்டு குறியீடுகளையும் திரையில் நமக்குத் தெரியாமல் ஒட்டவைக்கிறார்கள். இவற்றை ஒட்டவேண்டி இருப்பதால் இதற்கு என்று தனியாக செயலிகள் தேவைப்படுகிறது. எளிமையான தமிழ் எழுத்துகளைத் தேவநாகரி எழுத்துகளைப் போலச் சிக்கலான எழுத்துகளாகப் பார்க்கிறார்கள். திரையில் காட்டுவதற்கு இடியாப்பச் சிக்கலான வடிவமைப்புச் செயலி (complex rendering engine) தேவைப்படுகிறது. இந்தச் செயலி இருக்கும் இடங்களிலெல்லாம் தமிழைத் திரையில நன்றாக காட்டமுடியும். இந்தச் செயலிகள் சரியாக இல்லாத இடங்களில் தமிழ் எழுத்துகள் சரியாக வராது. மேலும் தேடுவது கடினமாகிறது. அதனால்தான் அடோபியில் (Adobe) பல நேரங்களில் தமிழ்ச் சொற்களைத் தேடுவது வேலை செய்வதில்லை. பல திறன்பேசிகளில் தமிழ் உடைந்து உடைந்து தெரியும். பிடிஎப் (PDF) கோப்பில் தமிழை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் தேடமுடியாமல் போவதற்கும் இதுதான் காரணம். தமிழ் ஒரு சிக்கலான எழுத்தே அல்ல.




இதை இன்றைக்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்ற நம்பிக்கையில் யூனிகோடிடம் நாங்கள் பேசியிருந்தோம். தமிழ் அனைத்து எழுத்துக் குறியீடு என்பதை நாங்கள் பரிந்துரைத்தோம். முதலில் அவர்கள் குழம்பினார்கள், ஏன் நாங்கள் இந்தியஅரசோடு பேசும்பொழுது தமிழில் எந்தச் சிக்கலும் இருப்பதாகச் சொல்லவில்லையே என்றார்கள். 2007ல் யூனிகோடு தொழில்நுட்பக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் பேசியபொழுது இந்தக் கேள்வி இந்திய அரசின் பிரதிநிதியிடம் கேட்கப்பட்டது. இங்கே தமிழக அரசு ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக்குறியீடு வேண்டுமென்று கேட்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் பதினேழு ஆண்டுக்கு முன்னரே இந்திய அரசிடம் கேட்டபொழுது நீங்கள் எதுவும் சிக்கல் இருப்பதாக சொல்லவில்லையே, இப்போது இருப்பதாக சொல்கிறார்களே என்ன செய்வது என்றார்கள். அப்பொழுது இந்திய அரசின் பிரதிநிதி ஆணித்தரமாக கூறினார். பதினேழு ஆண்டுகளுக்கு முந்திய கதையை விடுங்கள். இந்தியா ஒரு கூட்டாட்சி, இந்திய மொழிகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கான தரப்பாடுகளை நிர்ணயிக்கும் முழுஉரிமையும் அந்தந்த மாநில அரசிற்கே உரியது. தமிழக அரசு தமிழுக்கென்று என்ன தரத்தை உருவாக்குகிறதோ அந்தத் தரத்தை இந்திய அரசு ஆதரிக்கும். இந்திய அரசு எந்த தரத்தை ஆதரிக்கிறதோ அந்தத் தரத்தை பன்னாட்டுத் தர அமைப்பிடம் (ISO) பரிந்துரைப்போம். அதனால் அரசுத்தரத்துக்கும் யூனிகோடுக்கும் வேறுபாடு இல்லாமல் என்ன செய்யலாம் என்று கேட்டார். இது யூனிகோடுக்கு அதிர்ச்சியளித்தது. ஏனென்றால் யூனிகோடு தரத்துக்கும், பன்னாட்டுத் தரம் அமைப்பின் தரமும் வேறுபட்டால் உலகில் இரண்டு தரங்களாகப் பிளவு வரும். யூனிகோடு, இதைச் சற்றிலும் விரும்பவில்லை. ஆனால், இந்திய அரசு அப்படி வலியுறுத்தியதால் முதலில் தமிழக அரசு ஒரு தரத்தை அறிவிக்கட்டும். பிறகு இந்தத் தரத்தில் தமிழகஅரசு பல ஆவணங்களை உருவாக்கட்டும். அதன்பிறகு இந்தியஅரசு அதை தரமாக ஏற்றுக்கொள்ளட்டும். பிறகு எங்களது கொள்கைகளை நாங்கள் மீண்டும் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ள ஒரு குறியீட்டை மாற்றுவது என்பது இயலாத காரியம்” என்று சொன்னார்கள். தமிழக அரசு 2010ல் தமிழ் அனைத்து எழுத்து குறியீட்டை தரமாக ஏற்றுக்கொண்டுவிட்டது.


தமிழக அரசின் ஆவணங்களில் தமிழ் யூனிகோடு குறியீட்டை ஒரு தரமாகவும் எங்கெல்லாம் தமிழ் யூனிகோடு -வேலை செய்யவில்லையோ அங்கெல்லாம் தமிழ் அனைத்தெழுத்து குறியீட்டை (TACE – Tamil All Character Encoding) மாற்றுத் தரமாகவும் ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறது. அதன் பிறகும் 2010ல் இந்த அறிவிப்பு வந்த பிறகும் கூட இன்றுவரை தமிழக அரசின் வலைத்தளங்களில் யூனிகோடு -குறியீட்டிலும் சரி, அனைத்தெழுத்து குறியீட்டிலும் சரி அதிகமாக ஆவணங்கள் பதிப்பிக்கப்படவில்லை. அதனால் யூனிகோடைப் பொறுத்தவரை இது வெறும் வெற்றுப்பேச்சு. இந்த வெற்றுப்பேச்சிற்குப் பிறகு வேறு எந்த நோக்கும் இல்லையென்று அவர்கள் கருதுவதால் அனைத்து எழுத்துக் குறியீட்டிற்கான ஆதரவை அவர்கள் எந்தக்காலத்திலும் தெரிவிக்கப்போவதில்லை. இது மாறவேண்டுமென்றால் முதலில் தமிழ்நாட்டின் தமிழர்கள் தமிழில் இருக்கும் கணினி மென்பொருள்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். சந்தைக்கு ஏற்ப எந்த நிறுவனமும் இயங்கும். வாடிக்கையாளர்கள் எதை வாங்குகிறார்களோ அதை விற்பது எந்தவகையிலும் சாதாரண எண்ணமாக இருக்கும். தமிழர்கள் முதலில் காசுகொடுத்து வாங்கிப் பழகிக்கொள்ளவேண்டும். பிறகு தமிழக அரசு வெறும் தரத்தை அறிவிப்பதோடு மட்டும் நிற்காமல் இந்தத் தரத்தை அவர்கள் செயலுக்குக் கொண்டுவரவேண்டும். தமிழக அரசின் ஆண்டறிக்கைத் திட்டத்தையே இன்னும் யூனிகோடிலோ அல்லது அனைத்து எழுத்துக் குறியீட்டிலோ கொண்டுவரவில்லை. இன்னும் அவர்கள் பத்தாண்டுக்கும் பழமையான வானவில் – என்ற குறியீட்டில் தான் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் முதலமைச்சர் செயலகத்தில் இருப்பவர்களுக்கு வானவில் -மட்டும்தான் தெரியும். சென்ற ஆண்டில் அவர்கள் எதைப் பயன்படுத்தினார்களோ அதை வெட்டி ஒட்ட வேண்டும் என்றால் வானவில் -இருந்தால்போதும்.

வானவில்லிலிருக்கும் ஆவணங்களிலிருந்து சில பகுதிகளை வெட்டி எடுத்து யூனிகோடு ஆவணங்களில் ஒட்டினால் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். இவற்றிற்கெல்லாம் எளிமையான தீர்வுகள் இருக்கின்றன. யூனிகோடு -வந்தால் குழப்பமிருக்காது. வெட்டி ஒட்டுவதெல்லாம் மிக எளிமையான வேலை. இதை எத்தனை முறை வலியுறுத்தினாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. அண்மையில் 2014ல் தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது. அந்த ஆணையின் படி தமிழக அரசின் துறைகள் அனைத்தும் தமிழகத்தின் மாவட்டம், வட்ட அரசுகள் யாராக இருந்தாலும் 2010ல் அறிவிக்கப்பட்ட அந்த யூனிகோடு/ அனைத்தெழுத்துக்குறியீட்டை மட்டும்தான் புழங்கவேண்டும் என்பது அரசின் ஆணை. அந்த அரசின் ஆணை இதுவரை முதலமைச்சரின் செயலகத்தில் கூடச் செயல்படவில்லை. எப்பொழுது அது முதலமைச்சர் அலுவலகத்தில் செயல்படுகிறதோ, அதன் பின்னால்தான் தமிழகமெங்கும் பரவும். அப்படிப் பரவினால்தான் உலகத்தில் இருக்கும் தரப்பாட்டுக்குழுக்கள் தமிழகம் சொல்வதை மதிப்பார்கள். நம்பேச்சு வெறும் வெற்றுப்பேச்சாக இருக்காமல் இருக்கவேண்டும் என்றால் செயல்பாட்டில் காட்டவேண்டும். தமிழர்கள் வாய்சொல் வீரர்கள், வேறு என்ன சொல்ல முடியும்?

அனைவரையும் முழுமையாக இந்த நேர்கோணலை படிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து படிக்க இங்கு செல்லுங்கள்
http://siragu.com/?p=14890

Sunday, August 10, 2014

இந்தி திணிப்பு எதிர்ப்பு - வரலாறு முக்கியம் -உக்ரேனிய பிரச்சனையும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்

1960களின் இறுதி காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தால் ஜாடிக்குள் அடைக்க பட்ட இந்தி திணிப்பு என்ற பூதம் தற்போது சிறிது சிறிதாக வெளியே எட்டி பார்க்க  தொடங்கியுள்ளது.இன்றைய தலைமுறையினரில் (முக்கியமாக உயர் நடுத்தர வர்க்க மக்கள்) பெரும்பான்மையானோருக்கு  இந்தி திணிப்பின் பின்னனியில் உள்ள  அரசியல் பற்றியோ அது ஏற்படுத்த கூடிய  மோசமான தாக்கம் பற்றியோ தெரிவதில்லை. ஆதிக்க வர்க்கத்தினரால் கட்டு படுத்த பட்டுள்ள வெகுஜன ஊடகங்களினால்  மூளை சலவை செய்ய பட்டுள்ள நிலமையையே காண்கிறாம்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் பயனடைந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினர்  இந்தி படித்த செய்தியே மக்களிடம் இந்தி திணிப்பிற்கு ஆதரவாய் விளம்பர படுத்த படுகிறது.இந்தி திணிப்பு எதிர்ப்பிற்கு ஒரு சில தனிபட்ட மனிதர்களோ அல்லது  இயக்கமோ மட்டும் பொறுப்பல்ல. அது பல லட்சம் தமிழர்களின் ஒட்டு மொத்த போராட்ட வெளிப்பாடு. மாபெரும் போராட்டங்களில் தலைவர்களும், தொண்டர்களும்  வருவார்கள், செல்வார்கள், வெல்வார்கள், வீழ்வார்கள்  அல்லது மாறுவார்கள். போராட்டத்தின்  தேவையை தீர்மானிப்பது அதற்கான அடிப்படை காரணங்களும், அந்த  போராட்டத்திற்கான தேவை தற்போது இருக்கின்றதா? என்ற ஆய்வு தான். இங்கு தனிபட்ட மனிதர்கள் முக்கியமில்லை. அடிப்படை கொள்கை தான் முக்கியம்.



இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்  கடந்த கால மற்றும் நிகழ் கால தேவை ,இந்திய மற்றும் உலக வரலாற்றை முழுமையாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பன்முக மொழி கலாச்சாரம் உள்ள நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியையோ ,கலாச்சாரத்தையோ திணிக்க முயல்வதன் அரசியலையும், இது போல் வரலாற்றில் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் பற்றியும் இந்த கட்டுரையில் சிறிது காண்போம்.

பெரும்பான்மை மொழியை சிறுபான்மையினர் மீது திணிப்பது அது அவர்களின் தாய் மொழியின் மீது மட்டும் ஏற்படுத்தும் தாக்குதல் அல்ல. அது மக்களின்  கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்குதல் ஆகும்.ஏனென்றால் மொழி என்பது எண்ணங்களை பரிமாற்றம் செய்ய உதவும் காரணி  மட்டுமல்ல. அது மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளோடு ஒண்றிணைந்தது.அதானால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளின் எல்லைகளை  முடிவு செய்வது மொழியாக உள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் மொழி கொள்கையை வடிவமைக்க உதாரணமாக எடுத்து கொள்ளபட்ட நாடு சோவியத் யூனியன் ஆகும்.அதற்கு முக்கிய காரணம்  இந்தியாவை போன்று சோவியத் யூனியனிலும் ரஸ்ய மொழியை பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும், பிற மொழியை பேசும் இனகுழுக்கள் சிறு  நாடுகள்/மாநிலங்களில் மட்டும் பெரும்பான்மையாகவும் உள்ளனர். அதே சமயம் ஒட்டு மொத்தமாக சோவியத் யூனியனில் கணக்கிட்டால்  பிற மொழியை பேசுபவர்கள்  சிறுபான்மையாகவும் உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பெரும்பான்மை "இந்தி"யர்களும், இந்து -  இந்தி - இந்தியா என்ற சித்தாந்தத்தை கொண்ட"இந்து"யர்களும்  தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட அன்றைய சோவியத் மாதிரி மொழி கொள்கை உதவியாக   இருக்கும் என்று கருதினர். அன்றைய சோவியத் மாதிரி கொள்கை என்றால் என்ன என்றும் சோவியத் யூனியனின் மொழி கொள்கை லெனின் காலத்தில் எவ்வாறு  வரையறுக்க பட்டது என்றும் , அவரது காலத்திற்கு பிறகு என்ன ஆனது என்பது பற்றியும் அதன் விளைவுகள் மற்றும் தற்போதைய நிலை என்ன என்றும் முதலில்  பார்ப்போம்.

ரஸ்யா - சோவியத் - யுக்ரேன் - மொழி கொள்கை - Russification

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்ததையும் தற்போது யுக்ரேனில் நடக்கும் கலவரங்களில் பலர் கொல்ல படுவதையும்  பார்க்கிறோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ரஸ்ய பெரும்பான்மையினரின் மொழி மற்றும் கலாசாரத்தை சிறுபான்மையினர் மீது திணித்ததும் ஒரு முக்கிய   காரணம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது அல்லவா? ஆனால் அதுவே உண்மை. அந்த உண்மையை கண்டறிய வரலாற்றின் பின்னோக்கி சிறிது  பயணிப்போம். ரஸ்யாவை ஆண்ட சார் மன்னர்களின்  ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்த  பல்வேறு மொழிவாரி  சிறுபான்மையினரின் பகுதிகள் இருந்தது. சார் மன்னரின் ஆட்சி காலத்திலேயே ரஸ்ய மொழியை புகுத்தும் முயற்சிகள்  பல முறை எடுக்க பட்டது. ஆனால் அவை  மிக கடுமையாக புகுத்த படவில்லை. சோவியத் யூனியனில் உள்ள பல்வேறு மொழிவாரி சிறும்பான்மையினரின் வரலாறும் ஒத்துள்ளதால் இன்று உலகளவில்  அனைவராலும் கவனிக்க படும் உக்ரேனிய மொழியினரை சோவியத் மொழி சிறும்பான்மையினருக்கான எடுத்துகாட்டாக எடுத்து கொள்வோம்.

ரஸ்ய புரட்சிக்கு பின் போல்ஷ்விக்குகளிடம் ஆட்சி அதிகாரம் மாறியவுடன் அதுவரை சார் ஆட்சியில் நடைபெற்ற ரஸ்ய திணிப்பு முடிவுக்கு கொண்டு வர முடிவு  செய்யபட்டது.  லெனினால் இது பற்றி ஆராய பணிக்க பட்ட ஸ்டாலின், ஆரம்ப காலங்களில் சோவியத் யூனியனின் மிக பெரிய ஆபத்து அப்போது  பெரும்பான்மையினரான இருந்த ரஸ்ய மொழி மற்றும் அதிகார வெறியர்களின் ரஸ்ய பேரினவாதமும் அதை கண்டு பயம் கொண்ட பிற உள்ளூர் தேசியவாதமும் தான்  என கூறினார். இவற்றில் முக்கிய பிரச்சனை ரஸ்ய பேரிணவாதமே என்றார். (பிற்காலத்தில் கட்டுபாடற்ற அதிகாரத்தை கைப்பெற்ற ஸ்டாலின் ரஸ்ய பேரினவாதத்தை  முன்னெப்போதும் இல்லாதவாறு எடுத்து சென்றது சோக வரலாறு). சிறுபான்மை மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பற்றவும் அவர்களுடைய  கலாச்சாரத்துடன் தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் Korenizatsiya (உள்ளூர்மயமாக்கம்) என்ற கொள்கை வகுக்கபட்டது. அதன் படி சோவியத் யூனியனின்  அனைத்து பகுதிகளிளும் அந்த பகுதியில் இருந்த தாய் மொழி மொழியின் வாயிலாக கல்வி கற்று கொடுக்க ஊக்க படுத்த பட்டது. மக்கள் தங்கள் தாய் மொழியில்  படிக்கவாய்ப்பு கிடைத்ததாலும், கல்விக்கு அதிக அளவு செலவு  செய்ததாலும், நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும்மக்களிடம் வரலாறு காணாத அளவு  எழுத்தறிவு பரவியது.கிராமங்களில் இருந்த உக்ரேனிய மக்களின் படிப்பறிவு அதிகமானதால் பலர் படித்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.   அப்போது படித்த  ரஸ்ய மக்கள் முழுவதுமாக நகரங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளை எடுத்து கொண்டிருந்த நிலை மாறி  கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்த உக்ரேனியர்களும்  வேலை வாய்ப்பை பெற முடிந்தது.கிராமங்களில் இருந்த மொழி அடிப்படையில் நடந்த புரட்சி மொழியினை தொடர்ந்து உக்ரேனிய மக்களின் கலாச்சாரம், உக்ரேனிய  மொழி பேசும் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என தொடர்ந்தது. முக்கியமாக பெரும்பான்மை ரஸ்யர்களின் மத்திய அதிகார திணிப்பு குறைவாக  இருந்ததால் உள்ளூர் உக்ரேனியர்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடிந்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அப்போது கல்விஅதிகாரியாக  நியமிக்க  பட்டிருந்த Mykola Oleksiyovych Skrypnyk என்பவரையே சாரும். இந்த காலத்தில் உக்ரேனிய மொழியின் எழுத்து இலக்கணம் வரையரை செய்யபட்டது.  இதைSkrypnykivka அல்லது கார்கிவ் எழுத்திலக்கணம் என்ற பெயர் பெற்றது. உக்ரேனிய மொழியிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.,இந்த மறுமலர்ச்சி மொழி,  கலாச்சாரம், வாழ்க்கைதரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மட்டும் நடைபெறவில்லை.அப்போதைய கம்யூனிச கட்சி மற்றும் அரசியலில் முழுமையாக ரஸ்யர்களே  அதிக்கத்தில் இருந்த நிலை மாறி உக்ரேனியர்கள் பலர் கம்யூனிச கட்சியின் முக்கிய பதவிகளிலும் அரசு பதிவிகளிலும் பங்கு பெற்றனர்.

ரஸ்ய பேரினவாதத்தின் துணையோடு ஸ்டாலின் கட்டற்ற அதிகாரத்தை எடுக்க முனைந்த பின் நிலைமை மாற தொடங்கியது. (இதில் ரஸ்ய பேரினவாதத்தின் துணை  கொண்டு அதிகாரத்தை எடுக்க கடுமையான வழிமுறைகளை கையாண்ட ஸ்டாலின் ரஸ்யாவை சேர்ந்தவர் அல்ல என்பது சோகமான வரலாறு.). லெனின் ஆதரவுடன்  வந்த உள்ளூர்மயமாக்கல் முடிவுக்கு கொண்டு வரபட்டது. ரஸ்ய பேரினவாதம் முழுமையாக மொழிவாரி சிறும்பான்மையினரின் மேல் திணிக்கபட்டது.உக்ரேனில் ரஸ்ய  மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பிற்கு ஸ்டாலினால் உக்ரேனுக்கு அனுப்பபட்ட அதிகாரியின் பெயர் PavelPostyshev. அவர் பதவியேற்ற சில  மாதத்திலேயே Skrypnyk பதவி விலகி சித்ரவதையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து உக்ரேனில் ரத்த அறு ஓட  தொடங்கியது.உக்ரேனிய மக்கள் தாய் மொழியில் படிக்கும் உரிமை சிறிது சிறிதாக பறிக்க பட்டு அனைத்து பள்ளிகளிலும்  ரஸ்ய வழி கல்வி கட்டாயமாக்கபட்டது.  மக்களின் தாய் மொழியான உக்ரேனிய மொழி சிறிது சிறிதாக வழக்கத்திலிருந்து மறைக்க பட தொடங்கி இரண்டாம் தர மொழியாக தாய் நாட்டிலேயே  பொலிவிழக்கபட தொடங்கியது.அனைத்து பத்திரிக்கைகள், புத்தக அச்சகம்  போன்றவை உக்ரேனிய மொழியிலிருந்து  ரஸ்ய மொழிக்கு மாற்றபட்டது.மொழியின்  எழுத்துருவின் மீதும் தாக்குதல் தொடங்கியது. உக்ரேனிய மொழியின் எழுத்து வடிவத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி ரஸ்ய மொழியின் எழுத்து வடிவுடன் அதிக  அளவு ஒத்து போகும் படி செய்தனர் . (ஜெயமோகனின் எழுத்து சீர்திருத்ததுடன் இந்த எழுத்து சீர்திருத்தத்தை ஒப்பிட்டு நீங்கள் பார்த்தால் நான்  பொருப்பல்ல,)பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய மொழியியல் அறிஞர்கள் மற்றும் மொழியியலாளர்கள் கடுங்குளிரில் அடிமை முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர்  அல்லது கொலை செய்ய பட்டனர். இதற்கு Executed Renaissance என்று பெயர்(The term Executed Renaissance is used to describe generation of Ukrainian writers and  artists of 1920s and early 1930s who were performing in Ukrainian Socialist Soviet Republic and were executed  or repressed by Stalin's totalitarian regime.).சுமார் 2.5 லட்சம் உக்ரேனியர்கள் அரசியல் அதிகாரம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து  வெளியேற்றபட்டு,பெரும் பாலோனோர் படுகொலை செய்யபட்டனர். ரஸ்ய மொழி ஆதிக்கமும், ரஸ்ய பேரினவாதமும் நாம் கனவிலும் காண முடியாத கோர  தாண்டவத்தை உக்ரேனில் நிகழ்த்தியுள்ளது. உக்ரேன் நாட்டை சோவியத்தின் கோதுமை களஞ்சியம் என்பார்கள்.  உக்ரேனிய விவசாயம் பிரசித்தி பெற்றது. கூட்டு  பண்ணை விவசாயத்தை  நடைமுறை படுத்தி விவசாயிகளிடமிருந்து பெரும்பான்மையான விளை பொருட்களை பறிமுதல் செய்து ரஸ்யர்களுக்கு உணவளிக்க  ரஸ்யாவிற்கு அனுப்பி விட்டு உக்ரேனிய மக்களிடம்செயற்கையான பஞ்சத்தை ஏற்படுத்தி சுமார் 40 லட்சம் உக்ரேனியர்களை படுகொலை செய்தனர்.இதற்கு   Holodomor என்று பெயர்.ஒரு புறம் உக்ரேனியர்கள் படுகொலை செய்யபட்டனர். மறுபுறம் ரஸ்யர்கள் மிக பெரிய அளவில் ரஸ்யாவிலிருந்து கொண்டு வரபட்டு  உக்ரேனில் குடியமர்த்த பட்டனர்.நகர்புற தொழிற்சாலை சார்ந்த வேலைகள் பெருமளவில் ரஸ்யர்களுக்கு கிடைத்தது. அதிகாரம் மிக்க   உக்ரேனிய கம்யூனிஸ்ட்  கட்சியிலும் ரஸ்யர்கள் பெருமளவு நிரப்பபட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினர். பெரும்பான்மை  பள்ளி , உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் ரஸ்ய  மொழி கட்டயமாக்க பட்டு உக்ரேனிய மொழி வீழ்த்தபட்டது. இந்த கொடுமையான நிலை ஸ்டாலின்  உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்தது.இதற்கு  Russification  என்பார்கள்

Holodomor - நன்றி www.worldtruth.org/


குருசேவ் பதவி ஏற்றவுடன் ரஸ்ய பேரிணவாதம் மற்றும் மொழி ரீதியான அடக்குமுறை குறைந்தது. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு  செய்ய வாய்ப்பளிக்க பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு வேலைகள் மற்றும் வெகுஜன தொடர்பு போன்றவற்றிற்கு ரஸ்ய மொழியை கட்டாயமாக்கி மற்ற  மொழியினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காததால் கட்டயத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்காவிட்டலும் அவசியத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்க  பட்டது.

அன்று ஸ்டாலின் காலத்தில் இடபட்ட ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரிணவாத தீ 1980 களில் சோவியத் நாட்டின் முப்புறத்திலும் கொழுந்து விட்டு  எரிந்து மாபெரும் மக்கள் புரட்சிக்கு  ஒரு காரணியாக வித்திட்டு  சோவியத் யூனியனை சுக்குநூறாக செய்தது.

உக்ரேனின் இன்றைய நிலை

சோவியத் யூனியன் உடைந்து உக்ரேன் தனி நாடான பின்  உக்ரேனிய மொழியை படிப்பு, அரசு அலுவல் , வணிகம்  என அனைத்து வழிகளில் மீண்டும் உயிரூட்ட தொடங்கி உள்ளனர். ஆனால்  50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஸ்ய மொழியும், ரஸ்ய பேரிணவாதமும் பெருமளவில் திணித்து  உக்ரேனிய  தாய் மொழியை அழித்து வந்ததால் உக்ரேனிய மக்கள் பெருமளவு russified  ஆகி விட்டிருந்தனர்.
2001 புள்ளி விவரத்தின் படி உக்ரேனின் தலைநகரான கீவ் நகரில் தாய் மொழியாக மக்கள் கூறிய மொழி
75% உக்ரேனை தாய் மொழியாகவும்
25% ரஸ்ய மொழியை தாய்மொழியாகவும் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பான்மையாக உபயோகிக்க படும் மொழியாக
52% பேர் ரஸ்ய மொழியையும்
32% ரஸ்ய மற்றும் உக்ரேனிய மொழியையும்
14% பெரும்பாலும் உக்ரேனிய மொழியையும்
4.3% முழுமையாக உக்ரேனிய மொழியய்யும்  பயன் படுத்துவதாக கூறியுள்ளனர்.
அதாவது சுமார் 60% உக்ரேனிய மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் ரஸ்ய மொழியை பெரும்பான்மையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்..ஆனால் தற்போது  நிலைமை  சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.

இதுதான் பெரும்பான்மையானோரின்  மொழி திணிப்பும் , பெரும்பான்மையானோரின் பேரிணவாத  திணிப்பும் மொழிவாரி சிறும்பான்மையினர் மீது திணிக்கபடுவதன்  விளைவு..இன்று உக்ரேனில் நடக்கும் பிரச்ச்னைகளின் அடிப்படையும் அன்று ரஸ்ய பேரிணவாத திணிப்பின் விளைவே ஆகும். அதாவது  ரஸ்ய பேரிணவாதிகளால்  குடியேற்ற பட்டு பல்கி பெருகி வந்த ரஸ்ய மொழி வாரி மக்களுக்கும் , உக்ரேனிய மக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இன்று உக்ரேனில் நடக்கும்  போராட்டம. உக்ரேனியர்கள் தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த அரசை மீண்டும் நிலை நாட்ட துடிக்கிறார்கள்.உக்ரேனியர்களுக்கோமீண்டும் ரஸ்யாவுடன் தங்களது பகுதி இணைக்க பட்டால் மீண்டும் ரஸ்ய  பேரிணவாத திணிப்பு ஆரம்பித்து மீண்டும் மாபெரும் சமுதாய கொலை (genocide) நடக்குமோ என்று பயப்படுகிறார்கள்.எனவே உக்ரேனியர்கள் ரஸ்யாவின்  ஆபத்திலிருந்து தப்பிக்க ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து விட வேண்டும் என துடிக்கின்றனர்.ஆனால் உக்ரேனிய பொருளாதாரம் எரிசக்தி, ஏற்றுமதி, இறக்குமதி  போன்றவற்றில் ரஸ்ய நாட்டினை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.அதை துருப்பு சீட்டாக ரஸ்யா தற்போது பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசுகளை  மிரட்டி வந்தது. தற்போது நிலமை கைமீறி போய் உள்னாட்டு போர் தொடங்கி உள்ளது. உக்ரேனிய தேசியவாத அரசுகளால் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி ரஸ்யர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள  மக்கள் ரஸ்யாவோடு தங்களது பகுதியை இணைக்க துடிக்கின்றனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் ரஸ்யாவிலிருந்து குடியேறி  சில தலைமுறைகளாக உக்ரேனில் வாழ்ந்து , அதிக கல்வி அறிவு மற்றும் முக்கிய பதிவியில் இருக்கும் ரஸ்ய இனத்தவரின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது.

வரலாற்றை படிக்கும் போது நாம் அறிந்து கொள்ளூம் உண்மை என்னவென்றால்  பெரும்பான்மையான தலைவர்கள் மற்றும் சமூகத்தின் தோல்விகளுக்கு காரணம்  அவர்கள் வரலாறை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளாதது தான் எனலாம்.அன்று நெப்போலியன் சீதோஷ்ண நிலை மற்றும் புவியியல் அமைவிடம்பற்றி புரிந்து  கொள்ளாமல் ரஸ்யாவின் மீது போரிட்டு தன் பெரும்பான்மை படைகளை இழந்து, நம்பிக்கை இழந்து தனது உலகளாவிய பேரரசு லட்சியத்தை கனவாக்கி மாய்ந்து  போனான். அந்த சரித்திர உண்மையை படித்து உணராத  ஹிட்லர் மீண்டும் அதே தவறை செய்து அழிந்து போனான். அதே போல, மத, இனம் மற்றும் கலாச்சார வழி  பன்முக சமுதாயமான சோவியத் யூனியன் ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பு மூலம் சிதறுண்டு போனது. அந்த உண்மையை உணராத "இந்து -  இந்தி - இந்தியா"  தேசியவாதிகள் இந்தி மொழியையும், இந்து ஆதிக்கவாதத்தையும் திணித்து பேரழிவுக்கு இட்டு செல்ல முயல்கிறார்கள்.

இதே நிலையை ஈழத்தில் சிங்கள பேரினவாதம் நடைமுறைபடுத்த துடிக்கிறது.உக்ரேனிய மொழிக்கும் உக்ரேனிய மக்களுக்கும் ஏற்பட்ட கையறு நிலை பிற்கால தமிழ் சந்ததியினருக்கு வராமல் தடுத்த பெருமை அன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு  இயக்கத்தில் கலந்து கொண்ட  தியாகிகளின் ரத்தத்தினால் தான் என்றால் மிகையாது. 


சிறகுவில் வெளி வந்த கட்டுரை


Thursday, May 22, 2014

கோச்சடையான் - விமர்சனம்

கோச்சடையான்  - ஒரு வரலாற்று கதையை  Motion Capture  மற்றும்  Animation  மூலம் அழகாக கொடுக்க முயன்று இருக்கிறார்கள். பழங்காலத்தில் கலிங்கபுரம், கோட்டைய பட்டினம் என்னும் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் பகையை அடிப்படையாக கொண்ட படம். ரஜினி இப்படத்தில் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கலிங்கபுரத்தில் ஆனாதையாக வந்து தளபதியாக வளர்ந்து வெற்றி வீரனாக வலம் வந்து கோட்டையபட்டிணம் போரின் போது நடக்கும் திடீர் திருப்பத்தையும் அதை தொடர்ந்து வரும் திருப்பங்களையும் நல்ல கதையாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள்.

முழு கதையையும் சொல்ல விரும்ப வில்லை.சௌந்தர்யாவிற்கு இது நல்ல முதல் முயற்சி.படத்தில் அனிமேஷன் ஹாலிவுட் படங்களை தோற்கடிக்கும் அளவுக்கு இருந்தது என்றெல்லாம் ரொம்ப hype கொடுத்தார்கள்.Hype கொடுத்த அளவு நன்றாக இல்லை. ஓரளவு ameture தனமாகவே இருந்தது. ஆனால் மிகவும் மோசம் என்று சொல்லி விட முடியாது.தமிழ் படத்தில் இந்த அளவு முயற்சி எடுத்ததிற்கு நிச்சயம் பாரட்ட வேண்டும்.அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஸ்டைல்களை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே போகிறது. இரண்டாவது பாதி ஓரளவு பரவாயில்லாமல் வேகமாக  போகிறது. கோச்ச்டையான் வரும் flashback  பகுதி  கொஞ்சம் நன்றாக உள்ளது.

படம் முழுக்க எப்போது பார்த்தாலும் பாட்டு வந்து கொண்டே இருப்பது எரிச்ச்லை உண்டு பண்ணுகிறது. ரஜினிகாந்துக்கு இன்னும் படத்தில் ஆன்மீக தாகத்தை சேர்த்து கொள்ளும் ஆசை விடாது போலிருக்கிறது.பண்டைய கால அரண்மனை மற்றும் பிற அமைப்புகளை கொண்டு வர மிகவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள்.படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் தொழில்நுட்பத்தை பற்றியும், அனைவரின் உழைப்பு பற்றியும் அழகாக விளக்கி அந்த பின்னனியில் படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.அந்த யோசனை கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.

நாகேஷ் பாத்திரத்தை அழகாக வடிவமைத்து அவருக்கு மிக பொருத்தமாக வசனம் எழுதி அழகாக பேசவைத்திருப்பது படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. படத்தில் உண்மையான நாகேஷ் நடித்திருப்பது போலவே உள்ளது.

இந்த படத்தை பார்க்கும் போது பொன்னியின் செல்வன் கதையை இதே தொழில் நுட்பத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றியது.

அதிக எதிர்பார்ப்பில்லாமல் நிச்சயமாக ஒரு முறை பார்க்களாம்.

Tuesday, May 20, 2014

மோடியை நம்பியிருக்கும் ஜப்பான் கம்பெனிகள்

மோடியின் வரவை பாக்கிஸ்தான், இலங்கை என்று  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு  விதமாக கணக்கிடுகிறது. மற்ற நாடுகள் எப்படி கணக்கிட்டாலும் இந்தியா தற்போது கவனிக்க வேண்டியது ஜப்பான் கம்பெனிகள் இந்தியா மீது காட்டும் ஆர்வம்.பொதுவாக மூலதனம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலை நாடுகளை தான் எதிர்பார்ப்போமே! ஏன் ஜப்பான் மீது இந்த ஆர்வம் என்று எண்ண தோன்றும்.

கடந்த சில ஆண்டுகளாக சீனா மற்றும் ஜப்பானிடையே` அரசியல்  உறவு மிகவும் நலிந்து வருகிறது. கிழக்கு சீன பகுதியில் உள்ள சில ஜப்பானிய தீவுகள் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது.கடந்த 2012ம் ஆண்டு சீனாவில் உள்ள  ஜப்பானிய வணிக ஸ்தாபனத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது.

ஜப்பானின் மிகப்பெரிய தொழில்  நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழில் நிறுவனங்களை மலிவான உற்பத்தி செலவுக்காக சீனாவில் வைத்திருந்தன. தற்போது சீனா - ஜப்பான் உறவு சீர்குலைந்து வருவதால் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளின் நிலை கேள்விக்குறையதாக போக வாய்ப்புள்ளதால் மாற்று வழியை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக scalability அதிகம் உள்ள நாடு இந்தியா தான்.

ஜப்பானிய கம்பெனிகள் எளிமையான முதலீடு, முதலீட்டிற்கு பாதுகாப்பு,  எளிமையான தொழிலாளர் சட்டங்கள் (???),முதலீட்டுக்கான ஊக்கதொகை, எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படை கட்டுமான வளர்ச்சி போன்றவற்றை மோடியிடமிருந்து எதிர்பார்க்கிறது.

மேற்கூறிய எந்த மாற்றத்தை மோடி  ஏற்படுத்த தொடங்கினாலும் உற்பத்தி தொழிற்துறையில் ஜப்பானிய தொழிற்நிறுவனக்களின் முதலீட்டை அதிகளவு எதிர்பார்க்களாம்.

Monday, April 21, 2014

கோச்சடையானுக்காக மோடியை சந்தித்த ரஜினி - பின்னனி தகவல்கள்

சமீபத்தில் சென்னையில் நடந்த மோடி மற்றும்  நடிகர் ரஜினி காந்தின் சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான பின்னனி செய்திகள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. கோச்சடையான் படத்தை சிந்துபாத் தொடர் போல கடந்த சில வருடங்களாக முடிவே இல்லாமல் தொடர்ந்து எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.பல முறை படத்தை பார்த்தும் படம் திருப்தி இல்லாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தும் பட குழுவினருக்கு திருப்தி இல்லையாம்.படகுழுவினருக்கே இந்த நிலை என்றால் மக்களிடம் இந்த படம் எவ்வாறு வெற்றி பெரும் என்று கவலையில் இருந்தவர்களுக்கு கடந்த சில காலங்களாக தமிழ் திரை உலகில் நடந்த சில நிகழ்ச்சிகள்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

கமலஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் படம் இதே போல் தமிழக மக்களை கவரும் விதத்தில் இல்லாமல் இருந்தது.  சாதாரணமாக வெளியிட்டிருந்தால் அதிக பட்சம் ஒரு சில நாட்களே ஓடியிருக்கும். ஆனால் ஜெயா டிவியினருக்கு கேபிள் ரைட்ஸ் கொடுக்கும் பிரச்ச்னையால் தமிழக முதல்வரின் கோப பார்வைக்கு ஆளாகி,படம் வெளியிட தடை விதிக்க பட்டு மாபெரும்  எதிர்ப்பு மற்றும் மீடியா பப்ளிசிட்டிக்கு பிறகு வெளியிடபட்டு வெற்றியும் பெற்றது அனைவருக்கும் நினைவிருக்களாம்.அதே போல் விஜய் படமும்  தமிழக முதல்வரின் கோபத்தால் ஏற்பட்ட தடையால் படு தோல்வியிலிருந்து தோல்வி படம் என்ற நிலைக்கு முன்னேறியது.

பொதுவாக ரஜினி காந்த படம் வெளியாகும் போது அரசிலில்  இறங்குவதாக மறைமுக அறிக்கை அல்லது அரசியல் சார்பு அறிக்கை மூலம் பரபரப்பு ஏற்படுத்த படும். ஆனால் தற்போது அதுவும் "புலி வருது, புலி வருது" கதையை போல் மக்கள் நம்பாமல் இருப்பதால் வேறு வழி பார்த்த போது தான்  கமல் மற்றும் விஜய் படங்களின் சமீபத்திய வெற்றி நினைவுக்கு வந்துள்ளது. ரஜினியின் முக்கிய அரசியல் ஆலோசகரான டாஸ்மாக் புகழ் பத்திரிக்கையாளர் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க ஆலோசனை கொடுத்ததாக கூறபடுகிறது.தேர்தல் களம் சூடு பிடித்து மோடி அலையை கண்டு ஆளும் தரப்பு அஞ்சும் இந்த நிலையில் மோடியை ரஜினியை காந்த் சந்தித்தால் நிச்சயம் ஆளும் தரப்புக்கு கோபம் ஏற்பட்டு கோச்சடையான் பட வெளியீட்டிற்கு தடை ஏற்படுத்துவார் என்று யூகத்தை தெரிவித்துள்ளார்.அவ்வாறு தடை ஏற்படுத்தினால் அதிவே படத்திற்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்துவதோடு , அப்போது அனல் பறக்கும் வசனத்தை மீடியாக்களில் பேசுவதன் மூலம் மக்களின் உணர்ச்சியை தூண்டி கோச்ச்டையானை வெற்றி படமாக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியே ரஜினி - மோடி சந்திப்பு என்று கூறபடுகிறது. இதன் மூலம் கோச்சடையானுக்கு வெற்றி கிடைப்பதோடு, ரஜினி ரசிகர்களின் ஓட்டை பெற்று பா.ஜ.க கூட்டணிக்கு 20க்கும்  மேலான தொகுதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பது அந்த பத்திரிக்கையாளரின் கணக்கு.இதை உணர்ந்த விஜய்யும் அதே   யுக்தியை பயன்படுத்த  உடனடியாக மோடியை சந்தித்தாக கூறபடுகிறது. ஆளும் தரப்பு இந்த வஞ்சக சூழ்ச்சியை புரிந்து கொண்டு திரைபட வெளியீட்டை பிரச்சனையாக்கமல் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காவே எழுதபட்டது. முழுவதும் கற்பனையே. இதுவே உண்மையாக இருந்திருந்தால் நிர்வாகம்  பொறுப்பல்ல!

Sunday, March 09, 2014

நாணயம் இல்லாத நாணயம்

கடை தெருவில் காய்கறி வாங்கும் போது  பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள் முழுதும் உபயோக படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்கு தெரியாமல் யாரால் எவ்வாறு பல மடங்கு குறைக்க படுகிறது என்றோ? நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்க படுகிறது என்பது பற்றியோ சிந்திப்பதில்லை.நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்கு ஈடாக தங்கத்தை வைத்து கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது  பொருளாதாரம் சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில் பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நேர்மையற்ற அரசாங்கத்தின் கையில் இந்த கடன் அடிப்படையிலான பணம்  என்னும் ஆயுதம் கிடைத்தால் என்ன  நடக்கும் என்பதை தான் இந்தியா கடந்த சில வருடங்களாக பார்த்து கொண்டுள்ளது..பணவீக்கம் என்ற பெயரில் இந்த தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கவும், வரைமுறையற்ற கடன் என்ற பெயரில் வருங்கால  சந்ததியினரை அடிமை சமூகமாகவும் மாற்றவும் கூடிய சாத்திய கூறுகளை நாம் இப்போது காண்கிறோம்.

வரவு எட்டணா! செலவு பத்தணா!

ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலங்களில் உள்ளது போல் தான் நாட்டிற்கும் வரவு மற்றும் செலவு உண்டு. நாட்டிற்கு வரவாக வரி , பொது சொத்துகளிலிருந்து (இயற்கை வளம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) வருமானம் என பல  வகைகளில் வருமானம் வருகிறது. அரசு ஊழியர்கள் சம்பளம், அடிப்படை கட்டுமான வளர்ச்சி, வளர்ச்சி திட்டங்கள்மானியங்கள், ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, இலவச திட்டங்கள் என பல வகையிலான செலவீனங்கள் உள்ளன.வரவு மற்றும் செலவை திட்டமிட ஒவ்வொரு அரசாங்கமும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். வரவை விட செலவு அதிகமாகும் போது கடன் வாங்க வேண்டியுள்ளது. நம்முடைய வீட்டு பட்ஜெட் என்றால் நாம் வாங்கும் கடனை நாம் திரும்ப செலுத்தியாக வேண்டும் என்று ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவு செய்வோம்.ஆனால் அரசில் இருப்பவர்களுக்கோ, எவ்வளவு கடன் வாங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போகாததால் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கி குவிக்கிறார்கள்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வரவு செலவு கணக்கு பற்றி பார்ப்போம். பொதுவாக கடன் வாங்க "விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்" என்று சொல்வார்கள். அது போல நாட்டின் பொருளாதார வளத்திற்கு ஏற்றவாறு   கடன் வாங்க வேண்டும். எனவே அரசின் நிதி பற்றாகுறை அந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பில் (GDP) எத்தனை சதம் உள்ளது என்று பார்த்தால் அது வாங்கிய கடன் எவ்வளவு என்று புரிய வரும்.. கடந்த ஆறு ஐந்து வருடங்களில் அரசின் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் சுமார் ஆறு சதவித அளவில் உள்ளது..நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நம்பி பற்றாக்குறையை அதிகரித்து கொண்டே செல்லும் அரசாங்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் அதற்கு ஏற்றவாறு செலவீனங்களை குறைப்பது இல்லை. அது மிக பெரிய கடன் சுமைக்கு இட்டு செல்கிறது.. அது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரமும் வரி வருவாயும் அதிகரிக்கும் போது, அந்த அதிக வருமானத்தை கொண்டு  கடனை அடைக்காமல், புதிய கடனின் அளவை மட்டுமே அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.

இந்த கடனின் அளவை அறிந்து கொள்ள மற்றொரு அளவீட்டை பார்ப்போம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை விட எத்தனை சதவீதம் அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்று மேலே உள்ள வரை படம் விளக்குகிறது. அதாவது 2010ம் ஆண்டு வருமனம் 100 ரூபாய் என்றால் செலவு 173 ரூபாய் செய்துள்ளது அரசு. 2008 ம் ஆண்டு வாக்கில் மேற்கத்தைய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இல்லாமலேயே இந்த செலவீனங்கள் என்றால் நாடு எங்கு செல்கிறது என்று நினைத்து பாருங்கள்.

அன்னிய செலாவணி சமசீரற்ற நிலை

அரசாங்கத்தின் வரவு செலவு மற்றும் பற்றாக்குறையை பார்த்தோம். அடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நிலையை பார்ப்போம். ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான பொருளை இறக்குமதியும், பிற நாடுகளுக்கு தேவையான பொருளை ஏற்றுமதியும் செய்கிறது. இந்த வரவு செலவிலும் ஒரு சம நிலை வேண்டும். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அங்கும் ஒரு சமமற்ற நிலை நிலவுகிறது.
  கீழே உள்ள வரை படம் , இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி பற்றாக்குறையை மொத்த் உற்பத்தி திறனுடன் ஒப்பிட்டு காட்டுகிறது.
இதற்கு பெட்ரோல் விலையேற்றம், மக்களுக்கு இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை இழப்பு (தங்க இறக்குமதி), ஏற்றுமதி வளர்ச்சி குறைவு போன்றவை முக்கிய காரணம்.இந்த பற்றாக்குறை பணத்தை பெரும்பான்மையாக டாலரில் ஈடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுண்டு

அரசங்கம் தன் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் வாங்குகிறது. சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் மற்றும் வேறு பல பொருளாதார சாதனங்கள் கொண்டு கடன் வாங்குகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள்  மற்றும் பல முதலீட்டு நிறுவனங்கள் இந்த கடனை வாங்குகின்றன. இந்த கடன் பத்திரங்கள் சந்தையில் பிற பொருளாதார சாதனங்கள் போல் விற்க படும். இந்த கடன் பத்திரத்திற்கு அரசு வட்டி செலுத்த வேண்டும்.

 பல லட்சம் கோடி கடனை அரசாங்கம் பொது சந்தையில் வாங்கும் போது அங்கு முதலீடு செய்பவர்களின் மொத்த பணமும் அரசாங்கத்துக்கு போக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி முதலீட்டிற்கு தயாராக  உள்ள பணத்தின் அளவு மிக குறைவாகவும், முதலீட்டை ஈர்க்கும் கடனின்  அளவு மிக அதிகமாகவும் ஆகும் போது தேவை - அளிப்பு (Demand - Supply) இடையே ஒரு சமசீரற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் விளைவாக அரசங்கம் வாங்கும் கடனுக்கு வட்டி அதிக அளவு செலுத்த வேண்டி இருக்கும். ஒவ்வொரு வருடமும் அரசு தனது கடனுக்கான வட்டிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தால், வரும் காலத்தில் பட்ஜெட்டின் போது அரசுக்கு செலவிட கிடைக்கும் பணத்தின் அளவு பெருமளவு குறையும்.அது மட்டுமின்றி அரசாங்கமே தன்னுடைய கடனுக்காக சந்தையில் இருக்கும் பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டால், தனது தேவைக்கு கடன் வாங்கும் பிற தனியார் துறை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்களின் வட்டி விகிதம் கட்டுபடியாகாத அளவிலோ அல்லது கடனே கிடைக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. எனவே அரசு தனது கடனுக்கான ஆதாரத்திற்கு வேறு ஆதாரத்தை பார்க்க வேண்டியுள்ளது.

அங்குதான் பிரச்சனையின் பரிமாணம் மிக பெரிய அளவில் அதிகரிக்கிறது. நமக்கு கடன் வாங்க மற்றும் பிற பொருளாதார பரிவர்த்தனைகள் செய்ய வங்கியாளர்கள் இருப்பது போல் அரசங்கத்துக்கும், நாட்டிற்கும்   ஒரு வங்கி உள்ளது. அது தான் இந்திய ரிசர்வ் வங்கி. அது நாட்டின் பண புழக்கம், பண வீக்கம், வட்டிவிகிதம், வங்கித்துறை மற்றும் நாணய மாற்று விகிதம் போன்றவற்றை கட்டுபடுத்துகிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள மிக பெரிய அதிகாரம், பணத்தை தானே அச்சடிக்கலாம்.இது போல அரசாங்கம் கட்டுக்கடங்கா கடன் பிரச்ச்னையை ஏற்படுத்தும் போது மத்திய ரிசர்வ் வங்கி தன் செயல்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும். திறந்த சந்தை பரிவர்த்தனை (Open Market Operation) மூலம் சந்தையில் உள்ள அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க ஆரம்பிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Quanitative Easing என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் கடனை காப்பீட்டு நிறுவனங்கள் வாங்கும் போது மக்கள் காப்பீடு செய்வதற்கு மாதா மாதாம் கொடுக்கும் பணத்திலிருந்து வாங்குவார்கள். மற்ற பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது முதலீட்டாளர்களின் பணத்தை கொண்டு வாங்கும். மிக பெரிய கடனை வாங்கும் அளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா?கடனை வாங்க  பணத்தை பெற ரிசர்வ் வங்கி  கடின படவில்லை. தாங்களே அச்சிட்டு கொள்ளலாம். அது தற்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் அச்சிட பேப்பருக்கு கூட செலவு செய்ய வேண்டியதில்லை. கணிணி மென் பொருளில் ஒரு சில என்ட்ரிக்கள் போட்டால் மட்டும் போதும்! பணம் தயாராகி விடும்.


கடந்த ஐந்தாண்டுகளில் ரிசர்வ் வங்கி இது போல் உற்பத்தி செய்த பணத்தை பார்ப்போம். மேலே உள்ள வரை படத்தை பார்த்தால் அரசின் கடனில் எந்த அளவு பணத்தை புதிதாக அச்சிடுவதன் மூலம்  பெற்றுள்ளது என்று தெரியும். சராசரியாக அரசு தனது செலவில் சுமார்  25 சதவீதத்தை புதிதாக அச்சடிப்பதன் மூலம் பெற்றுள்ளது. பணத்தை  உருவாக்குவது எவ்வளவு எளிதாக இருக்கிறதே. ரிசர்வ் வங்கி பேசாமல் பணத்தை அதிக அளவு அச்சடித்து அனைவருக்கும் மாதா மாதம் கொடுத்தால் வறுமையே இருக்காதே என்று நினைக்க தோன்றும். உண்மையில் பார்த்தால் தற்போது பணமும் சந்தையில் ஒரு வித விலைபொருள் தான். எப்போது எல்லாம் பெரிய அளவில் புதிய பணம் சந்தையில் புழங்க விட படுகிறதோ அப்பொழுதெல்லாம் சந்தையில் உள்ள பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.இது பணத்தின் மதிப்பை குறைத்து பணவீக்கத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.

எங்கே போகும் பாதை?
பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டினால் பல தீமைகள் உள்ளன.

1.  ஒவ்வொரு ஆண்டும் அரசின் கடன் அதிகரித்து கொண்டே வரும் போது அந்த கடனுக்கு வட்டியாக தர வேண்டிய பணத்தின் மதிப்பும் அதிகரித்து கொண்டே வரும். வரும் ஆண்டுகளில் புதிய பட்ஜெட் போடும் போது அரசு தனது வருவாயில் பெரும் பகுதியை வட்டிக்கே செலவிட வேண்டி வரும். அதன் விளைவாக அடிப்படை கட்டுமானத்திற்கான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, அடிப்படை தேவைகளுக்கான மானியம் போன்றவற்றிற்கு செலவிட பட கூடிய பணத்தின் மதிப்பு குறைந்து நாட்டின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கை தரமும் பாதிக்க பட வாய்ப்புள்ளது. அதாவது நமது சந்ததியினர் நமது கடனை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

2. ஏற்றுமதி - இறக்குமதியில் பற்றாக்குறை ஏற்படும் போது அதை டாலர் மற்றும் பிற அன்னிய செலாவணிகள் கொண்டு தான் சரிகட்ட முடியும். இந்த சமநிலை மிக மோசாமாக போகும் போதும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி வீதத்தில் தளர்ச்சி ஏற்படும் போது நாட்டின் நாணயத்தின் மேலிருக்கும் நம்பிக்கை குறைகிறது. அது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. ரிசர்வ் வங்கி அந்த தாக்கத்தை குறுகிய காலத்துக்கு தடுக்க முடியும் என்றாலும் நீண்ட காலத்தில் அது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது
அந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்க வேண்டியது அவசியாமாகிறது. அப்போது போட படும் கடுமையான நிபந்தனைகளால் உள் நாட்டு தொழில் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசும் காலத்தின் கட்டாயமாக அதை ஏற்று கொள்ள வேண்டி வரலாம்.
 
3. மேலை நாடுகளை போலில்லாமல் இந்தியாவிற்கு  வறுமை ஒழிப்பு, மிகுந்த மானிய சுமை போன்ற பல சவால்கள் உள்ளன. ஆனால் அதே போல் வருமானத்திற்கான வழிகளும் பல உள்ளன. நிலக்கரி, பெட்ரொல் போன்றல் இயற்கை வளங்கள் மற்றும் தொலைதொடர்பு  ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை நியாயமான முறையில் ஏலத்தில் விட்டாலே அதிக வருவாய் ஈட்டமுடியும். ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை கட்டு படுத்தும் மிக பெரிய நிறுவனங்களின் ஏக போக உரிமையால் பல்லாயிரம் கோடி பணத்தை அரசு இழக்கிறது. அது மட்டுமன்றி நியாயமற்ற வரி விலக்கு மற்றும் பிற ஊழல்களால் ஏற்படும் வருவாய் இழப்பு கணக்கிலடங்கா. ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் நடை முறைபடுத்தும் மலிவான தேவையற்ற இலவச திட்டங்கள் இந்த பற்றாக்குறையை மேலும் அதிகமாக்குகின்றன.ஆனால் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டு படுத்தாமல் அரசு பட்ஜெட் பற்றாகுறையை காரணம் காட்டி வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை மானியங்களையும், கல்வி மற்றும் சுகாரத்துக்கு செலவிடும் பணத்தை குறைத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்க செய்வது தொடர்கதை ஆக வருகிறது.

4.  அரசு புதிதாக உற்பத்தி செய்யும் பணம் ஒழுங்காக நாட்டின் உற்பத்தி  பெருக்கத்திற்கு உதவினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். அரசு செலவிடும் பணத்தில் பெரும்பான்மையான பகுதி உற்பத்தியை பெருக்கும் வகையில் செலவிட படுவதில்லை. அதன் விளைவு சந்தையில் குறைவான பொருளும் அதிக அளவு பணமும் இருக்கிறது. அது நாட்டில் பணவீக்கத்தை அதிக படுத்துகிறது. அதனால் பணத்தின் மதிப்பு குறைகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டில் உள்ள பணபுழக்கத்தையும், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியையும் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.


ஆதாரம்- Equitymaster.com
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையற்ற இந்த வீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் குறைகிறது. ஓய்வு கால தேவைக்காக சிறுக சிறுக சேமித்து காப்பீடு மற்றும் பிற வகையில் முதலீடு செய்யும் மக்கள் தங்கள் ஓய்வு காலத்தில் தாம் சேமித்த பணத்தின் மதிப்பு குறைந்து அடிப்படை தேவைக்கு செலவிடுவதே கடினம் என்ற நிலை அடைவர்.

நாட்டிற்கு  பொருளாதார ரீதியாக மாபெரும் வீழ்ச்சியையும், இன்றைய மற்றும் நாளைய சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கும் இந்த பற்றாக்குறை பிரச்சனை இன்றுவரை முக்கிய பிரச்ச்னையாக எந்த ஒரு  பிரதான அரசியல் கட்சியும் எடுத்து செல்லாதது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.

சிறகு இதழில் வெளிவந்த கட்டுரை.

நாணயம் இல்லாத நாணயம்