Wednesday, December 31, 2008

T.R பாலு தமிழகத்திற்கு தரும் புத்தாண்டு பரிசு

கடுமையான முயற்ச்சிக்கு பிறகு கடல் சார் பல்கலை கழகம் ஒரு வழியாக தமிழகத்திற்கு வந்து விட்டது.கடல் சார் பல்கலை கழக நிர்வாக வளாகமும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டபட்டு விட்டது.இது மிக விரைவில் இந்த ஆட்சியிலே முழு அளவில் செயல் பட ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதை கொண்டு வருவதற்கு அவர் போராடிய போராட்டங்கள் பல. தமிழ் நாட்டு மக்களின் ஓட்டை வாங்கி கொண்டு பதவிக்கு வந்த சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் செய்த புல்லுருவி தனத்தையும் மீறி ஒரு வழியாக தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.(இதே தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் சேலம் கோட்டம் பிரிக்கும் போதும் இதே போன்ற செயளில் இறங்கியது குறிப்பிட தக்கது).இதே போல் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் அவர் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்

முக்கியமாக பாலு அவர்கள் தமிழகத்திற்கு செய்யும் பணிகளை பற்றி படித்து பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது.இந்த ஆட்சியில் மட்டும் 12,146 கோடி ரூபாயில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் பணிகள் செயல்படுத்த படுகின்றன.தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து 403,755.85 கோடி மதிப்புள்ள 868 பிராஜெட்கள் மத்திய அரசால் செயல் படுத்த பட்டுள்ளன. அவற்றில் 40900 கோடி மதிப்புள்ள பிராஜெட்கள், அதாவது ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒதுக்க பட்ட வளர்ச்சி தொகையில் 10% தமிழகத்திற்க்காக மட்டும் செயல்படுத்த பட்டுள்ளது.தமிழகம் தான் இந்தியாவிலே அதிக அளவு பிராஜெட்கள் மற்றும் நிதியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இவற்றில் பெரும் பங்கு T.R.பாலு தலமையில் உள்ள துறைகளால் நிறைவேற்ற படுகிறது.தமிழகத்தில் 850 கி.மி நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பட்டுள்ளன.

எனக்கு தெரிந்து இந்த அளவு மத்திய திட்டங்களை குறுகிய காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் இவராக தான் இருப்பார் என்று தோன்றுகிறது.இதில் மிகவும் வருத்த பட வேண்டிய செய்தி என்னவென்றால தமிழக பத்திரிக்கைகள் இந்த சாதனைகளை பற்றி பெரிய அளவில் பாராட்டி எழுதுவதே இல்லை. மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களின் முயற்ச்சியால் இவ்வளவு வளர்ச்சி பணிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள சாதனை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே.

பத்திரிக்கைகள் முதல்வரின் குடும்ப அரசியல்,நிர்வாக சீர்கேடு போன்ற குறைகளை அதிக அளவு விமர்சித்து முக்கியத்துவம் தந்து பிரசூரிக்கிறது. இது ஆட்சியாளர்களை திருத்தி கொள்ள நிச்சயம் தேவை. ஆனால் இதே போன்று ஆட்சியாளர்கள் செய்யும் சாதனைகளுக்கும் முக்கியத்துவம் தந்து பாராட்டி , பெரிதாக பிரசூரிக்க வேண்டும். அப்போது தான் அந்த சாதனைகள் மக்கள் கவனத்திற்கு சென்றடையும்.மேலும் அது நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளையும் ஊக்கபடுத்தும்.

தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்து விட்ட்டார்கள் என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளாவது இந்த சாதனைகளை படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

பத்திரிக்கையாளர்களே! ஒரு சில நல்ல செய்திகளையும் மக்களுக்கு அடிக்கடி தெரிய படுத்துங்கள். கட்சி பாரபட்சமின்றி இந்த சாதனைகள் அனைவராலும் பாரட்ட பட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய அமைச்சராக வருவது யாராக இருந்தாலும் இதை விட நன்றாக செய்ய முயர்ச்சி எடுக்க வேண்டும்

Tuesday, December 30, 2008

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி




அண்ணாமலை பல்கலைகழகத்தில் '90 களில் படித்தவர்கள்(பொறியியல் கல்லூரி நீங்களாக) அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்த கடை சண்முகம் கடை. அனைவருக்கும் தெரிந்த கடை என்றவுடன் நீங்கள் ஏதோ பெரிய ஆடம்பரமான கடை என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு சிறிய கீற்று கொட்டாயில் இயங்கும் கடை.காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வித விதமான பஜ்ஜி,வடை,போண்டா,காபி,டீ போன்றவை கிடைக்கும். நள்ளிரவு நேரங்களில் தோசை, நூடுல்ஸ் போன்ற டிபன் வகையறாக்கள் கிடைக்கும். அது இருக்கும் இடம் strategically important இடம்.மாணவர்களால் செல்லமாக PC என்று அழைக்கபடும் (Post office corner) இடத்தில் உள்ளது. பல்கலை கழக பெண்கள் விடுதி நுழைவாயிலிலிருந்து main roadற்கு சேரும் இடத்தின் அருகாமையில் உள்ளது. மேலும் பல்கலை கழகத்திற்குள் உள்ள கடை தெரு என்றால் அதை தான் கூற வேண்டும். அதற்கு அருகில் கோவில் கூட உண்டு.



காலையிலிருந்து மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் தாக்குதலில் நிலை குலைந்த மாணவர்கள், விடுதிக்கு சென்று ஒரு quick குளியல் எடுத்து கொண்டு, நன்றாக தங்களை அலங்கரித்து கொண்டு சிறு சிறு குழுவாக நண்பர்களுடன் PC நோக்கி புறப்பட்டு விடுவர். மாலை நேரத்தில் ஹாயாக நண்பர்களுடன் கூட்டாக அமர்ந்து அன்றைய தினம் வகுப்பில் எந்த பெண் எந்த பையனை பார்த்தார்,வகுப்பில் மாணவ்ர்கள் செய்த கலாட்டாக்கள், தமிழக அரசியல் போன்ற உலகில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் குறித்து தேனீர் அருந்திக்கொண்டே தங்களுடைய மேலான கருத்துகளை விவாதிக்கும் இடம் சண்முகம் கடை. கடை தான் சிறிய கடை என்றாலும் அங்கு கிடைக்கும் பஜ்ஜி, வடைகளின் சுவையே தனி. அரட்டை அடித்து கொண்டே கடையின் அடுப்பில் சூடாக அந்த நேரத்தில் எதை எடுக்கிறார்கள் என்று பார்த்து கொண்டு உடனடியாக அவற்றில் ஒரு set ஐ order செய்து தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்கடையின் உரிமையாளர் சண்முகம் தன் வாடிக்கையாளரிடம் வைக்கும் நம்பிக்கை அளாதியானது. ஒரு குழுவில் எந்த பதார்த்தம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கணக்கு வைத்து கொள்ளவே மாட்டார். நாங்கள் அரட்டையை முடித்து விட்டு, வயறு நிறைந்ததும் நாமாக என்னன்ன எவ்வளவு உண்டோம் என்று சொல்கிறோமோ அதற்குறிய பணத்தை மட்டும் கணக்கிட்டு வாங்கி கொள்வார்.அப்போது நம்மிடம் பணம் இல்லை என்றால் கூட கவலை பட வேண்டாம்.அடுத்த முறை கடைக்கு வரும் போது கொடுத்தால் போதும்.அந்த கடைக்கு வரும் கூட்டத்தை வைத்து பார்த்தால் அவர் அதை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பார் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் உண்ணும் பஜ்ஜி வடைக்கு கணக்கில்லை. சிலர் மாத கணக்கு வைத்து, அதன் மதிப்பு மாதம் 1000 ரூபாயை தாண்டும்(1990 களில்).



தினமும் எவ்வாறு அவ்வளவு செலவு செய்வது? அதற்கு பல வழிகள் உள்ளன. முதல் நாள் கூட்டத்தில் உள்ள ஒரு மாணவனிடம்,"மச்சி இன்னைக்கு அந்த $$$ பிகர் கிளாசில் உன்னையே பார்த்து கொண்டிருந்தாள் பார்த்தியா" என்று ஆரம்பிப்பார்கள். அந்த மாணவனும் அப்படியா என்று கேட்டு விட்டால் போதும். அவ்வளவு தான் treat படலம் அன்று ஆரம்பமாகும். முதல் நாள் பார்த்ததாக கூறியதற்கு treat கொடுப்பார். அன்றிலிருந்து அந்த பையன், அந்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பார். அவர் தொடர்ந்து பார்ப்பதால் அந்த பெண்ணும் பார்க்கும். அந்த பெண் அவரை பார்க்கும் ஒவ்வொரு நாளும் treat கள் தொடரும். அது மட்டும் அல்ல. இருவரும் ஒரே நிற உடை அணிந்தார்கள், பேசினார்கள் என பல வகையில் treat தொடரும். இது போல் சம்பந்தமே இல்லாத மாணவர் மாணவியிடையே treatக்காக நட்புறவை வளர்த்து, அது சில சமயம் காதலாகி, ஒரு சில சமயம் திருமணத்தில் கூட முடிந்துள்ளது.



சண்முகம் கடையின் மற்றொரு சிறப்பம்சம்- இரவு டிபன்.


மாலை டிபனை சண்முகம் கடையில் முடித்து விட்டு, வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு விடுதிக்கு வந்து, சில ரெக்கார்ட் மற்றும் அசைன்மன்ட் வேலைகளை முடித்து விட்டு இரவு சாப்பாடு முடிந்ததும், மாணவர்களின் அடுத்த shift தொடங்கும். ஆங்காங்கே மாணவர்களின் அறைகளில் குழுவாக கூடி அடுத்த அரட்டை கச்சேரி ஆரம்பமாகும். மாணவர்களிடம் பல குழுக்கள் இருக்கும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அங்கு விவாத பொருள் ஆன்மீகத்தில் தொடங்கி பில்லி சூனியம், வர்க்க அரசியல்,மாநில அரசியல்,இந்திய மற்றும் சர்வதேச அரசியல்,கல்லூரி ஆசிரியர்,சக மாணவிகள், மாணவிகளை பின் தொடரும் மாணவர்கள், கடலை போடும் மாணவர்களை கண்டு வயறெறியும் கும்பல்,கல்லூரி மாணவர்களிடையேயான அரசியல் என பல இருக்கும். இந்த விவாதம் முடிய நள்ளிரவு ஆகி விடும். விவாதத்தால் ஏற்படும் களைப்பு தீர மீண்டும் சண்முகம் கடை நோக்கி செல்வர்.அங்கு தோசை,ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற சுவையான சிற்றுண்டி உண்டு விட்டு விடுதி வந்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

ஒரு முறை என்னை பார்க்க விடுதிக்கு வந்த அண்ணணை அந்த கடைக்கு இரவு சாப்பாடு சாப்பிட அழைத்து வந்தேன். அந்த கடையின் தோற்றத்தை பார்த்து முதலில் முகம் சுளித்த அண்ணண்,அங்கு வாங்கி கொடுத்த நூடுல்ஸ் உண்டு விட்டு சுவையில் மகிழ்ந்து போனார். இன்றும் கூட சண்முகம் கடை நூடுல்ஸ் போல் எங்குமே உண்டது இல்லை என்று கூறி வருகிறார்.


பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றபோது சண்முகம் கடைக்கு மீண்டும் சென்றேன். தற்போது சில புது வகை பண்டங்களையும்(காளிபிளவர் பக்கோடா) சேர்த்துள்ளார்.

கடையை சுற்றி அதே மாணவர் கூட்டம்...

மீண்டும் கல்லூரி கால நினைவுகளை அசை போட தொடங்கியது மனது...

Thursday, December 25, 2008

டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?


டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன என்றும் பார்த்தோம்.இந்த பதிவில் உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலை பற்றியும் அதன் விளைவு பற்றியும் பார்ப்போம்


சென்ற நூற்றாண்டின் இறுதி வரை உலகில் அதிக அளவு நிதி சேமித்து வைத்து அதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பன சேம நல நிதி நிறுவங்கள்(Pension fund), மியூட்சுவல் பண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.இந்த பணத்தில் பெரும் பங்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் நிறுவனங்களின் கையில் தான் இருந்தது.


இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிதிகளின் மதிப்பு மிக அதிக அளவில் இருந்ததால், உலக அளவில் நடைபெறும் மிக முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு(பங்கு வர்த்தக முதலீடுகள், பெரிய நிறுவங்களை வாங்குவது மற்றும் இணைப்பது,புதிய கம்பெனிகளை துவங்குவது மற்றும் பத்திர வர்த்தகம் etc) முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இவை பொருளாதார அதிகார மையங்களாக செயல் பட்டன.


ஆனால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோல் விலை உயர்வாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தாலும் இந்த நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.பெட்ரோலை டாலரில் விற்பதன் மூலம் அமெரிக்கா அடையும் நன்மையை டாலர் அரசியல் என்ற பதிவில் பார்த்தோம்.மறுபுறம் பெட்ரோல் விலை உயர்வால் அரபு நாடுகள் மற்றும் அங்கு உள்ள ஆட்சியளர்களின் சொத்து மற்றும் டாலர் கையிருப்பு பல மடங்காக உயர தொடங்கியது.ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தால், சில நாடுகளின் டாலர் கையிருப்பு அதிகரித்தது. உலக மயமாக்களாலும் (globalization) முதலாளித்துவ வளர்ச்சியாளும் ஒரு சிலரின் தனிபட்ட சொத்து உலகின் சில நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை தாண்டி விட்டது.இதன் விளைவாக புதிய அதிகார மையங்கள் உலகில் உருவாக தொடங்கி உள்ளது.அத்தகைய பொருளாதார மையங்களில் சில

1. பெட்ரோல் மூலம் அதிக வருமானம் குவிக்கும் பெட்ரோடாலர் சொத்துகள்

2. ஆசிய மத்திய வங்கிகள்

3. Hedge funds

4. தனிபட்ட தனியார் முதலீடுகள்


நிதி நிர்வகிக்கும் அமைப்புகள்2006 ம் ஆண்டு மதிப்பு $ட்ரில்லியன்2000-2006 வளர்ச்சி விகிதம்% 2012(எதிர்பார்ப்பது)
$ட்ரில்லியன்*
பென்சன் Fund21.6 529
மியூச்சிவல் Fund 19.3831.2
காப்பீட்டு நிறுவன்ங்கள்18.5 1133.8
பெட்ரோடாலர் முதலீடுகள்3.8195.9
ஆசிய மத்திய வங்கிகள்3.1 205.1
Hedge Funds 1.5203.5
தனியார் முதலீடுகள் 0.7 14 1.4
*-கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $50 என கணக்கிடபட்டது
ஆதாரம்-McKinsey


மேற்கண்ட அட்டவனை உலக பொருளாதார அதிகார மையங்களின் அளவையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.அதில் கீழேயுள்ள நான்கு பிரிவின் மொத்த மதிப்பு 8- 9 ட்ரில்லியன் டாலர்கள்.இந்த மதிப்பு மொத்த தொகையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் 2000- 2006 ஆண்டு வரை உள்ள அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் ஒரு உண்மை புரியும்.பெட்ரோடாலர் சொத்துக்களின் மதிப்பின் வளர்ச்சி 19 சதமாகவும் ஆசிய வங்கிகளின் கையிருப்பு 20 சதமாகவும் pension பண்டின் வளர்ச்சி 20 சத்மாகவும் உள்ளது.உலகிள் உள்ள 10 மிகப்பெரிய நிறுவன்ங்களில் 6 நிறுவனங்கள் ஆசிய மற்றும் அரபு எண்ணெய் நிறுவனங்கள்.ஒரு சில எண்ணெய் நிறுவங்களின் மதிப்பு ஜெனரல் எலெக்ட்ரிக்கள்,மைக்ரோசாப்ட், சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களை விட அதிகம்.மேற்கூறிய நான்கு பிரிவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது அரபு நாடுகளின் பணமும், ஆசிய வங்கிகளின் பணமும் தான்.Hedge Fund மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களில் பெரும்பான்மையான முதலீடு செய்துள்ளதும் மத்திய ஆசிய நிறுவங்களும் அரபு நாட்டு செல்வந்தர்களும் தான்.


இந்த புதிய பொருளாதார அதிகார மையங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இவை அமெரிக்க பன்னாட்டு நிறுவங்களின் (Multi national) பெரும் பங்கை வாங்க தொடங்கி உள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க நிதி நெருக்கடியினால், பல நிறுவங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பு பணம்(liquidity) மிக வேகமாக குறைந்து வருவதால், அதிக பணம் கொண்ட இந்த நிறுவனங்களின் சேவை மற்ற நிறுவனஙக்ளுக்கு தேவையாக உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் காரணாமாக இந்நிறுவனங்கள் வாங்கியிள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சிறிது நட்டத்தில் தெரிந்தாலும், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் போது அதன் மதிப்பு பல மடங்கு வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் பல நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் இவை பிற்காலத்தில் அமெரிக்க அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .தற்போதைய நிதி நெருக்கடி காரணாமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல அழிந்துள்ளதால், இந்நிறுவனங்கள் முதலீடு செய்து காப்பாற்றி உள்ள நிறுவனங்கள் Monopoly யாக வளர்ந்து பல மடங்கு லாபத்தை அள்ளி தர வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்-கிரடிட் சூயிச்,லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,மெரில் லின்ச்,AMD,பார்க்லே,பெராரி,டைம் வார்னர்,ஸ்டாண்டர்டு சார்ட்டட்,டைச் வங்கி,UBS,மோர்கன் ஸ்டான்லி,சிட்டி குரூப் etc. உலகில் நடக்கும் மிகப்பெரிய நிறுவங்களின் இணைப்பு மற்றும் வாங்குதலுக்கும் இந்த நிறுவங்களே நிதியுதவி செய்கின்றனர்.2007ம் ஆண்டு மட்டும் இதன் மொத்த மதிப்பு $4.5 டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.இதன் மூலம் மிகப்பெரிய நிறுவங்களில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடிகிறது. தற்போது அமெரிக்க Real Estate மிகவும் வீழ்ந்துள்ளது.இந்நேரத்தில் இந்நிறுவனங்கள் அமெரிக்க சொத்துகளை குறைவான விலையில் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்நிறுவங்கள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாது வளங்களில் மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்து தனது எதிர்கால தேவைகளுக்கும், எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யவும் உறுதி படுத்த தொடங்கி உள்ளனர்.இத்தகைய செயல் இதுநாள் வரை மேலைநாடுகள் மட்டுமே பின்பற்றும் அணுகு முறையாக இருந்தது.


தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முயற்ச்சிப்பதும் இக்காரணங்களுக்காதான். தற்போதைய நிறுவனங்களின் நெருக்கடியின் மூல காரணமே பண கையிறுப்பு குறைவு
தான். எனவே இது போன்ற நெருக்கடியான காரணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் பிற்காலத்தில் நூற்றுகணக்கான டாலரை சம்பாதித்து கொடுக்கும் வல்லமை படைத்தன. உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவை வகிக்கும் பங்கு வரும் காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.


பொதுவாக அமெரிக்காவின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியாக கருத படும். அமெரிக்காவும் அரசியல்,பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை மறைமுகமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும். இனி அந்நிறுவங்களில் பெருமளவில் முதலாளித்துவ கொள்கை இல்லாத கீழை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி விட்டால் அமெரிக்க அரசின் பார்வை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல, அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நாடுகளும் அவற்றை வர்த்தக ரீதியாக மட்டும் தான் அணுகுமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Saturday, December 20, 2008

டாலர் vs தங்கம்

1970 க்கு முன்பு வரை அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு நிகராக தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தது.டாலரின் மதிப்பு ஒரளவு தஙத்தினால் நிலைநிறுத்த பட்டிருந்தது. ஆனால் 1970களுக்கு பிறகு இந்த நிலை மாற தொடாங்கியது.இது பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி இருந்தேன். 1970களுக்கு பின் அமெரிக்கா கணக்கின்றி டாலரை அச்சிட தொடங்கியது. அமெரிக்கா தான் வாங்கிய கடனுக்கு தஙகத்தை திருப்பி தர வேண்டியிருந்தால், தற்போதைய சூழ்நிலையில் எந்த அளவுக்கு திரும்பி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)

அமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.

1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).

இந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்


அதாவது சுமார் 4842 சதம் வீக்கமடைந்துள்ளது(inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட பட்டது.உள் நாட்டு பண புழக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
அமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்க தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது(அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும்,தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.

சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்.

Friday, December 19, 2008

அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்


சமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம். இதன் விளைவாக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் லாபமும் குறைந்து வருகிறது. எனவே அரபு நாடுகள் தன் லாபத்தின் அளவை அதிகரிக்க பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முடிவு செய்து பெட்ரோல் உற்பத்தியையும் மிக பெரிய அளவில் குறைத்து வருகின்றனர். இதை மற்றொரு வகையில் பார்த்தால் உலகளவில் தேவை குறைவாக இருப்பதால்,உற்பத்தியை குறைக்கிறார்கள். ஒரு சாரார் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருந்து, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பெற்றால் தான் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டு பிடிக்க மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக ஆளவு செலவு செய்ய முடியும் என்கின்றனர்.

இதில் ஒரளவு உண்மை உள்ளது. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணைக்கு தற்போது எதிர் பாக்கும் விலை பேரல் ஒன்றுக்கு $75க்கும் மேல் என்று தெரிகிறது. நல்ல வேலையாக இதுவரை நடத்திய உற்பத்தி குறைப்பிற்கு பின்னும் அதன் விலை அந்த அளவு ஏறவில்லை.

இதன் பின்னனியை புரிந்து கொள்ள கடந்த சில வருடங்களாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க வேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு இருபது டாலருக்கும் குறைவாக்த்தான் இருந்தது. ஆனால் அதன் பின் ஈராக் போர் காரணமாகவும், உலக பொருளாதாரத்தில், குறிப்பாக இந்தியா சீனா போன்ற முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி காரணமாகவும், டாலரின் மதிப்பு சர்வ தேச சந்தையில் குறைய தொடங்கிய காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வரலாறு காண முடியாத அளவு ஏற தொடங்கியது.

தற்போதைய சூழ்நிலையில் கச்சா எண்ணையின் உபயோகம் ஒவ்வொரு நாட்டிலும் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.பெரும்பான்மையான நாடுகள் அதன் எண்ணை தேவைக்கு இறக்குமதியையே நம்பி உள்ளனர். நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்றுமதி-இறக்குமதி சமசீரின்மை ஏற்பட்டு balance of payment பிரச்சனை ஏற்படுகிறது.உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தால், வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவை அதிகரிக்கும். வளரும் நாடுகள் தங்கள் உற்பத்தியை பெருக்கி வளர்ந்த நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியை பெருக்கி ஒரளவிற்கு இந்த பிரச்சனையை சமாளிப்பார்கள். சில கனிம வளம் மிகுந்த ஏழை நாடுகள் சைனா போன்ற அதிக உற்பத்தி சாலை நிறைந்த நாடுகளுக்கு நல்ல விளைக்கு இந்த கனிம வளங்களை ஏற்றுமதி செய்து சமாளித்தனர்.மேலை நாட்டு நிறுவனங்களிடம் அதிக பண புழக்கம் இருந்ததால், பல நாடுகள் தங்கள் தொழில் துறையை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அது முதலீடு செய்யும் டாலரை கொண்டு இப்பிரச்சனையை ஒரளவிற்கு சமாளித்தனர்

பொருளாதாரம் நன்றாக இருந்த காலத்திலேயே பெரும்பாலான நாடுகளின் balance of payment negative ஆகவே இருந்தது.உதாரணமாக இந்தியாவின் BOP சுமாராக $10 பில்லியன் அளவுக்கு உள்ளது.தற்போது உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. முக்கியமாக உலக நாடுகளின் முக்கிய சந்தையான அமெரிக்க பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.எனவே வளரும் நாடுகளின் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து கொண்டுள்ளது.மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்கள் திவாலை சந்திப்பதும், தங்களின் Survivalக்கே பிரம்ம பிரயத்தினம் செய்து கொண்டுள்ளனர். எனவே இனி வளரும் நாடுகளில் அவர்களால் நேரடி அன்னிய முதலீடு செய்வது கடினம்.
எனவே வளரும் நாடுகள் தங்களது இறக்குமதியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பெரும் பாலான நாடுகளின் இறக்குமதியில் கச்சா எண்ணையே பெரும் பங்கு வகிக்கிறது, அவற்றின் தேவையை உள் நாட்டில் குறைப்பதும் மிகவும் கடினம்.அரபு நாடுகள் கூறும் $70 விலை என்பது ஈராக் போர் மற்றும் speculative trading போன்ற செயற்கையான காரணிகளால் உயர்த்தபட்ட விலை.பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்திலேயே வளரும் நாடுகள் அதை சமாளிக்க பெரும் பாடு பட்டனர்.

அரபு நாடுகள் எதிர்பார்க்கும் கச்சா எண்ணையின் விலை($70-90) எண்ணெய் உற்பத்தி குறைப்பின் மூலம் நிர்ணயிக்க பட்டால்,பின் வரும் விளைவுகள் ஏற்ப்டலாம்

1. இந்த வளரும் நாடுகளின் trade balance அதல பாதாளத்தை அடையும்.
2. இந்நாடுகளின் அன்னிய செலாவனி கையிருப்பு மிக வேகமாக குறையும்.
3.ஏற்கனவே IMF மற்றும் Worldbank போன்ற நிதி நிறுவங்களிடம் வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாமல் திவாலாகும் சூழ்நிலை ஏற்படலாம்.
4.உள்நாட்டு வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்க பட்டு மிக பெரிய பொருளாதார மந்த நிலை ஏற்படலாம்.
5.அதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி சமூக அமைதியின்மை ஏற்படலாம்.
6.இந்த சூழ்நிலையை உபயோகித்து IMF,Worldbank போன்ற நிறுவனங்கள் ஏழை நாடுகளில் வறுமையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு செய்யும் உதவியை குறைக்க நிர்பந்திக்கலாம்.
7.வளரும் நாடுகள் தங்களது நாணயத்தின் மதிப்பை பெருமளவு குறைக்க வேண்டி வரலாம்.
8.வளரும் நாடுகளும் அரிதாக கிடைக்கும் அன்னிய முதலீட்டை கவர நாட்டு மக்களின் நன்மைக்காக , அன்னிய முத்லீடுகளை மறுத்த துறைகளில் முதலீட்டை அனுமதிக்க தொடங்கும்.இது மோசமான நீண்ட கால விளைவை ஏற்படுத்தலாம்.

(Graph from BBC)

Monday, December 15, 2008

அமெரிக்க அரசின் வங்கிகள் மீட்பு திட்டம் பற்றிய Cartoon



இந்த படத்துக்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.இந்த நையாண்டி படம் உண்மையாகுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும். நன்றி Eric Lewis

Wednesday, December 10, 2008

விமான எரிபொருளாக வரப்போகிறது அடுத்த தலைமுறை உயிர்ம எரிபொருள்(Biofuel)

   உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்து பல வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.பெட்ரோலிய எரிபொருட்கள் தீர்ந்து வருவதாலும, அதன் உற்பத்தி ஒரு சில நாடுகளை நம்பி இருப்பதாலும்,உலகளாவிய
வளர்ச்சி ஏற்படும் போது அதன் தேவை அதிகமாவதலும் மற்றும் மேற்கூறிய காரணங்களை காட்டி அதன் விலையை இடைதரகர்கள் லாபநோக்குக்காக ஏற்றுவதாலும்,புதிய எரிபொருளுக்கு மாற்று தேடி உலகெங்கும் அராய்ச்சி நடை பெற்று வருகிறது.பெட்ரோலிய பொருட்களின் விலை 100$ தாண்டியதால் மாற்று எரிபொருளின் உற்பத்தி பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தது.

இதன் விளைவாக ஏற்பட்ட கண்டுபிடிப்பு தான் உயிர்ம எரிபொருள்.பயிர்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்பட்டு செயல்படுத்தபட்டும் வந்தது.ஆனால் பெரும்பாலான நாடுகள் உணவுக்கு பயன்படுத்தும் பயிர்களை உயிர்ம எரிபொருளுக்கு பயன் படுத்த ஆரம்பித்ததாலும், உணவு பயிர் பயிரிடும் இட்த்தில் உயிர்ம எரிபொருள் பயிரிட ஆரம்பித்ததாலும்( இது எந்த அளவு உணமை என்று தெரியவில்லை), உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து (உண்மையில் உணவு பொருட்களின் விலை உயர்விற்கு climate change மற்றும் speculative commodity trading போன்றவைதான் காரணம் என்பது வேறு விஷயம்) உணவு பொருள் vs உயிர்ம எரிபொருள்(Food vs Fuel) என்ற வாதத்திற்கு கொண்டு சென்றது. அவற்றில் ஜெட்ரோபா போன்ற சில எரிபொருட்கள் பயிகள் விளைவிக்க முடியாத வரண்ட நிலங்களில் வளரக்கூடியவை.ஆனால் அவை உற்பத்தியாகும் காலம் அதிகம் என்பதும் வணிக ரீதியாக லாபம் குறைவானது என்றும் சில குறைகள் இருந்தது .


 இதற்க்கெல்லாம் ஒரு மாற்றாக சப்பயர் என்ர்ஜி என்ற நிறுவனம் பாசியிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு
பிடித்துள்ளது.உயிம எரிபொருளுக்கு பாசி பயன்படுத்துவது என்பது பலவகையிலும் நன்மை பயக்க கூடியது. மிக குறைவான இடத்தில் அதிக அளவு பாசியை எளிதாக உற்பத்தி செய்யலாம்.இதனால் உணவு உற்பத்தி பாதிக்க படாது. இது வளி மண்டலத்தில் உள்ள கரியமில
வாயுவை உறிஞ்சுவதால் global warmingஐயும் குறைக்க உதவுகிறது.இது மற்ற பயிர்வகைகளை போல் இல்லாமல் ஒரு சில நாட்களிலேயே வளர்ச்சி அடைந்து உடனடியாக பலனளிக்க கூடியது. மேலும் எரிபொருளை பிரித்த பின்னர் எஞ்சியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம். தற்போது அந்த தொழில்நுட்பம் பொது உபயோகத்துக்கு வரும் காலம் வந்து விட்டது. விமான எரிபொருளுக்கு மாற்றாக பாசி மற்றும் ஜெட்ரோபாவிலிருந்து கிடைக்கும் எண்ணையை பயன்படுத்த Continental Airlines,Virgin Atlantic,Air Newzealand
போன்ற நிறுவனங்கள் முடிவெடுத்து சோதனை ஓட்டத்துக்கும் தயாராகின்றனர் .

இந்த முயற்ச்சி வெற்றி பெற்றால் இந்தியாவில் தரிசு நிலங்களில் ஜெட்ரோபா பயிரிடுவத்ற்கும் குறைந்த விலையில் பாசி உற்பத்தி செய்து லாபமீட்டவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Friday, December 05, 2008

அமெரிக்கா- நிதி நெருக்கடியை எதிர் கொள்ள உபயோகபடுத்த போகும் யுக்தி-Quantitative Easing

அமெரிக்க அரசின் நிதி பற்றாக்குறை அது நடத்தி வரும் போர்களினாலும்,சமீபத்திய நிதி நெருக்கடியாலும், டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.அது மேலும் பல நூறு பில்லியன் டாலர்களை மோட்டார் தொழிற்சாலை மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளது. இது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க போகிறது.
இந்த இக்கட்டான நிலையை அமெரிக்கா எவ்வாறு சமாளிக்க போகிறது என்று உலகமே ஆவலோடு எதிர் பார்க்கிறது.

அமெரிக்கா செய்ய போகும் யுக்தி பற்றி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை அழகாக கூறுகிறது
America is a much bigger country and its currency happens to be the world’s premier reserve currency. So it can print as much as it likes. For now, anyway.
எக்கனாமிஸ்ட் பத்திரிக்கையின் இந்த செய்தி அனைவரும் படிக்க வேண்டியது.

பொதுவாக இந்த நிலை பிற நாடுகளுக்கு வந்தால், அந்த நாடுகளின் அரசு செலவுகளை குறைத்தும், மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தும் சமாளிக்கும். நிச்சயம் அமெரிக்கா இப்போது அப்படி செய்ய போவது இல்லை. இதை சமாளிக்க பிறவழி, நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிப்பது. பொதுவாக இது போன்ற செயலால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்து மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்(உதாரணம் ஜிம்பாப்வே.அந்த நாட்டின் பணவீக்கம் ஒரு கோடியே இருபதாயிரம் சதவீதம்!.ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை 1.6 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் ).

இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் அமெரிக்கா எளிதாக இப்பிரச்சனையை கையாள போகிறது.தேவையான அளவு பணத்தை, பணவீக்கம் அதிகரிக்காமல் அச்சிட போகிறது.மேலும் பல பில்லியன் டாலர்களை முன்னேறும் ஆசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடம் கடனாக பெறபோகிறது.இதற்கு காரணம் சைனா மற்றும் முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி, அமெரிக்கர்களின் செலவிடும் தன்மையில் தான் உள்ள்து. அவர்களின் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கிராக்கி இருக்கவேண்டும் என்றால், அவ்ற்றின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு டாலரின் மதிப்பை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு டாலரின் மதிப்பு அதிகமாக வைக்க, அமெரிக்க டாலர்களை தங்கள் கையிருப்பாக வாங்கி குவிக்க வேண்டும். அதாவது உற்பத்தி செய்யும் பொருளையும் அமெரிக்காவுக்கு கொடுத்து, அதன் மூலம் வரும் டாலர் பணத்தையும் அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது தான்.

பெட்ரோல் மூலம் கொழிக்கும் அரபு நாடுகளும், டாலர் விற்று வந்த பணத்தை அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்க அரசிடமும் அமெரிக்க நிறுவனங்களிடமும் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு வெகுவாக குறையும்.
சுருங்க சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கர்கள் கூறுவது போல்

"The dollar is our currency, but your problem!"



Sunday, November 30, 2008

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் -தேவை சில மாற்றங்கள்

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் பயங்கிரவாதத்தை பார்க்கும் போது தோன்றிய சில எண்ணங்கள்.

1)1992ல் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை வந்த போது,அதை அரசியல்வாதிகளால் சமாளிக்க முடியாது எனற நிலை வந்தது.அதற்கொரு தீர்வாக உண்மையான திறமையான நிர்வாக அதிகாரியாக செயலபட்ட மன்மோகன் சிங் அவர்களை அப்போதைய பிரதமரான நரசிமம ராவ் நிதி அமைச்சராக பதவி அமர்த்தினார். அதற்கு நல்ல பலன் இருந்தது.அன்று நிதி அமைச்சகம் இருந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் உள்ளது.
எனவே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் திறமையான மற்றும் நேர்மையான ரொபைரோ போன்ற அதிகாரிகளை உள்துறை அமைச்சராக நியமித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

2)ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கான கோடி பணத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறோம். ஆனால் அவற்றில் பெரும் பகுதி F16 போன்ற மிகவும் costly ஆயுதங்கள் வாங்கவே செல்விடுகிறோம். அவற்றில் பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்க்ளிடமும் லஞ்சமாக தஞ்சமடைகிறது. இவ்வகை ஆயுதங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய போரில் எப்போதாவது தான் தேவைப்படும். ஆனால் வருடத்தில் பலமுறை தீவிரவாத தாக்குதல்தான் நமக்கு பெரும் பிரச்சனை.என்வே பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையில் பெரும் பகுதியை இனியாவது தீவரவாதத்தை கட்டு படுத்தும் உளவு பிரிவிற்கும்,
தீவிரவாத எதிர் தாக்குதல் நடத்த பயிற்ச்சி,அதற்கு தேவையான உபகரணங்கள்(மும்பை எதிர் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் bullet proof கூட தரமற்றதாக செய்திகள் வந்துள்ளது)
மற்றும் அதிக அளவு கமாண்டொ படையினரை தயார் செய்தல் போன்று செலவிடலாம்.

3)கடந்த பல மாதங்களாக பல தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அதில் பல அப்பாவி மக்களும், பாதுகாப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரும் இறந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத உள்துறை அமைச்சரை இத்தனை நாள் மாற்றாமல் இருப்பதற்கான காரணம், கடவுளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.(இந்த பதிவை எழுதும் போதுதான் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ள செய்தி வந்துள்ளது).அதைவிட மிக கொடுமையான விஷயம், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு முக்கியவத்துவம் கொடுப்பதை விட்டு ஒட்டு மொத்த இந்திய பாதுகாப்பு துறையின் focusயை தேவையின்றி இலங்கை அரசுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு இந்திய அரசின் தலமை அதிகாரியாக செயல்படாமல் இலங்கை அரசுக்கு தரகு வேலை பார்ப்பதில் மட்டுமே குறியாக இருந்த பாதுகாப்பு துறை ஆலோசகர் நாராயணன் போன்ற அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கி, இனியாவது இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவிற்கும் accountability உள்ள நல்ல அதிகாரிகளை நியமித்து, அமைச்சர்களும் அவர்களுக்கு தெளிவான பாதையை காட்டி வழி நடத்த வேண்டும்.உளவுதுறை மராட்டிய மற்றும் குஜராத் கடற்பகுதியை பற்றி பல முறை எச்சரித்தும், அங்கு கடற்படையை அனுப்பாமல், கடற்படையின் முதன்மை பணியாக, அவற்றை இலங்கை அரசின் உதவிக்காக வங்காள விரிகுடாவில் நிறுத்தி விட்டு(இந்திய மீனவர்களை காப்பதையும் அவர்களுக்கு முக்கிய பணியாக கொடுக்கவில்லை), இந்தியர்களின் பாதுகாப்பை முற்றிலும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளை உடனடியாக நீக்கி இந்தியாவுக்காக உழைக்கும் அதிகாரிகளை பதவியில் அமர்த்த வேண்டும் .

Tuesday, November 18, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்

கடந்த சில மாதங்களாக நிகழும் அமெரிக்க நிதி நெருக்கடியின் காரணமாக அங்கு பெரிய நிதி நிறுவனங்கள் வீழ்வதும், பல நிறுவனங்களின் மதிப்பு மிகவும் குறைவதாகவும் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள 3 மிகபெரும் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களை மிக குறைந்த விளையில் வாங்கிகுவித்து கொண்டு உள்ளது.அரசாங்கமும் நாட்டில் மிகபெரிய நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக பல வகை சலுகைகளை கொடுத்து இந்த செயலை ஊக்குவிக்கிறது.இதன் விளைவாக அமெரிக்கர்களின் 40 சதவித (டெபாசிட்)சேமிப்பு பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப், மற்றும் சேஸ் ஆகிய நிறுவனங்களின் கைகளுக்கு வந்துள்ளது.

அமெரிக்க நிதி நிலமை சரியாக வளர்ச்சி பாதையை அடையும்போது இந்த நிறுவனகளின் வளர்ச்சியும் மிகப் மிகபெரிய வளர்ச்சியாக இருக்கும்.அமெரிக்க பொருளாதாரமும் அதன் மூலம் உலக பொருளாதாரமும் இவர்கள் கட்டுபாட்டுக்கு வந்து விட சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.அந்த அளவிற்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்த உடன் அமெரிக்க அரசால் எந்த அளவுக்கு இந்நிறுவனங்களை கட்டுபடுத்த முடியும் என்பது கேள்விகுறியே. மேலும் இந்நிறுவனங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ,அவற்றை எந்த தடங்களும் இன்றி செய்ய தொடங்கும்.இந்நிறுவனங்கள் எத்தகைய தவறு செய்து வீழும் நிலை வந்தாலும் அமெரிக்க அரசால் காப்பாற்ற பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை வரலாம்.Fannie mac மற்றும் Freddie mac போன்ற நிறுவனங்களை போல தைரியமாக பொறுப்பின்றி செயல் பட முயலலாம். ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் நிலை வந்தாலும் அமெரிக்காவின் FDIC(Fedral Deposit Insurance Corporation) ஒட்டு மொத்த நிதியும் காலியாகும் நிலை ஏற்படும். மொத்ததில் உலக பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் காரணிகளாக வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.

Tuesday, October 21, 2008

கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு உயர்தர மழலையர் பள்ளி



நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் மழலையர் பள்ளி சென்னையிலோ அல்லது பிற நகரத்திலோ செயல்படவில்லை. இது அமைந்திருக்கும் இடம் மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு என்னும் கிராமம். இதில் படிக்கும் மழலையர் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள்.

இந்த அதிசயத்தை நிகழ்த்துவது தேசிய வேளாண் நிறுவனம்(NAF) என்னும் அரசு சாரா நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் திரு.சி.சுப்ரமணியம். பசுமை புரட்சியை செயல்முறை படுத்தி நாட்டில் பலகோடி பட்டினி சாவை தடுத்த சி.எஸ் அவர்களால் விவசாய மற்றும் கிராமபுற வளர்ச்சிக்காக தோற்றுவிக்கபட்ட நிறுவனம் இது. அவர் இறந்த பின்பும் அவரது கனவை நனவாக்க அயராது பாடுபடுகிறது இந்த நிறுவனம். விவசாய வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் ஆற்றும் பணிகளை பிறிதொரு பதிவில் இடுகிறேன்.

இந்த மழலையர் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் விவசாய தின கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கிழே உள்ள மக்களின் குழந்தைகள். இவர்களுக்கு தரமான தொடக்க கல்வி வழங்கபடுகிறது. இவர்கள் பாடும் Rhymes கேட்டால், பல ஆயிரம் கொடுத்து நகரத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையாக உள்ளது. இந்த குழந்தைகளுக்கு இளமையிலேயே நல்ல பழக்க வழக்கங்கள் கற்று கொடுக்க படுகிறது. இந்த பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஏழை குழந்தைகளுக்கு ஊட்டசத்துமிக்க உணவு கொடுப்பது. காலை சிற்றுண்டி,Snacks, மதிய உணவு, பால் போன்றவை அறிவியல் பூர்வமான தேவையை கணக்கில் கொண்டு,தேவையான சத்து தேவையான அளவு உள்ளவாறு சரியான் நேரத்தில் கொடுக்க படுகிறது. இதனால் குழந்தைகள் Malnutrition அடைவது தடுக்கபடுகிறது.

நகர்புற நடுத்தர மற்றும் உயர் நடுத்தற பிரிவு குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் கிராமத்தில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அளிக்க படுகிறது

இட ஒதுக்கீட்டின் பயன் உண்மையிலேயே தேவையான மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் இது போன்ற அதிசயங்கள் அனைத்து கிராமத்திலும் நடந்தால் மட்டுமே முடியும்.

இந்த சேவையை இந்நிறுவனம் முழுவதும் இலவசமாக செய்து கொடுக்கவில்லை. இலவசமாக எதை கொடுத்தாலும் அதனது முக்கியத்துவம் மக்களுக்கு தெரியாமல் முழுமையாக பயன் பெற மாட்டர்கள் என்பதால் மிக சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதை நடத்த தேவைபடும் பெரும்பான்மையான செலவை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெருகிறார்கள். நீங்களும் இது போன்ற காரியத்துக்கு உதவ நினைத்தால், ஒன்று அல்லது சில குழந்தைகளுக்கு தேவை படும் செலவை பொறுப்பேர்க்களாம்.


இதை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்

Monday, September 15, 2008

கண்டிப்பாக சுவைக்க வேண்டிய இந்திய உணவு வகைகள்


இந்தியாவில் மொழி, மதம், இனம்,வானிலை என அனைத்திலும் பன்முகத்தன்மை உள்ளது. இது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய உணவு வகைகளை இங்கே காணலாம். எனக்கு மின்மடலில் வந்த இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

இனி எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இந்த படியலில் உள்ள உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.

Sunday, February 24, 2008

சென்னையும் சான்பிரான்சிஸ்கோவும் பொட்டிபுரமும்

சென்னைக்கும் சான்பிரான்சிஸ்கோவுக்கும்
இடைபட்ட தூரமோ பல ஆயிரம் மைல்கள்
இடைவெளியோ சில நூறு மைல்கள்
சென்னைக்கும் பொட்டிபுரத்துக்கும்
இடைபட்ட தூரமோ சில நூறு மைல்கள்
இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள்
உலகலவில் நகரங்கள் இணைகின்றன
கிராமங்களை விட்டு வெகுதூரம் விலகி!

Tuesday, February 12, 2008

CPI(M) கட்சியின் திடீர் ஞானோதயம்

இலங்கையில் JVP கட்சி ஒரு இனவாத மற்றும் மதவாத கட்சி என்பது உலகறிந்த ரகசியம். பல்லாயிரம் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த கட்சி. கம்யூனிச தோல் போர்த்தி கொண்டு ரதத வெறி பிடித்து தமிழர்களை கொன்று குவித்த வரலாறு உலகெங்கும் தெரியும். அப்படி பட்ட கட்சியை தனது பொலிட்பீரோ கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டு, அவர்களுடைய படுகொலைகளை நியாய படுத்தி, தனது தார்மீக ஆதரவை கொடுத்து வந்து கொண்டிருந்தது CPM. அது மட்டுமல்லாது, அகில உலக கம்யூனிசத்தின் எழுச்சி நாயகனான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர்(இவரும் கட்சியின் power center)N.Ram அடிக்கடி இலங்கை சென்று JVP கட்சியினருக்கு பாராட்டு தெரிவித்து, பல அறிய "நல்ல" யோசனைகளும் சொல்லி வருவார்.
ஒரு வழியாக JVP கட்சியினரின் செயல்பாடுகள் எப்படியோ இப்போது CPI(M) கட்சியினருக்கு தெரிந்து விட்டது.இந்த ஆண்டு JVP கட்சியினரை தனது பொலிட்பியூரோ கூட்டத்துக்கு அழைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. செய்திக்கு இங்கு சென்று பார்க்கவும். தாமதமான முடிவு என்றாலும் வரவேற்க தக்கதே.

Monday, January 21, 2008

MONOPOLY விளையாட்டில் சென்னை நகரை சேர்க்க வாக்களியுங்கள்

Monopoly விளையாட்டு சிறுவயதில் நம்மில் பெரும்பாலானோரை கவர்ந்த விளையாட்டு ஆகும். பல பெயர்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும். நான் Trade என்ற பெயரில் இதை விளையாடி இருக்கிறேன்.விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் பொழுதை கழிக்க , இது ஒரு அருமையான விளையாட்டு. Monopoly கம்பெனியினர், இனி வரும் காலங்களில் எந்த நகரை இந்த விளையாட்டில் சேர்ப்பது என்பதை பொதுமக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானிக்க முடிவு செய்துள்ளனர்.நம் சென்னை நகரத்தையும் இதில் சேர்க்க இது ஒரு சரியான வாய்ப்பு. நான் சென்னை நகரை இன்று wildcard ரவுண்டில் இனைத்திருக்கிறேன் இந்த தளத்துக்கு சென்று சென்னைக்கு வாக்களிக்கவும்.

Friday, January 11, 2008

விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக அபரிமிதமாக உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியை அனுபவிப்பவர்கள் 20% மக்கள் தொகையினர் மட்டுமே. மறுபுறம் ஏழை-பணக்காரர்களிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. மாநகர-நகர, கிராம புற வேறுபாடு அதிகரித்துள்ளது. விவசாயம் மற்றும் சிறு தொழில் மிகவும் பாதிக்கபடுகிறது. பட்டினிச்சாவும் அதிகரிக்கிறது.
இத்தகைய வளர்ச்சியை ஆதரிப்பவர்கள் இதன் மூலம் பயனடைந்த மக்களை ஆதாரம் காட்டியும், அரசின் macro economic indicator ஆதாரம் காட்டியும் பொருளாதார தாராலமயமாக்களினாலான வளர்ச்சியை அதிகரிக்கின்றனர். இந்த வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் இந்திய விவசாயத்தின் அழிவை காட்டியும், பட்டினி சாவை அதாரம் காட்டியும் எதிர்க்கின்றனர்.
இந்த மாற்றத்தினால் 20% மக்களிடம் வங்கும் சக்தி அதிகமாக உள்ளது. எற்றுமதி வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இந்த 20% மக்களின் வாங்கும் சக்தியின் பயன் 60% ஏழை விவசாயிகளிடம் எவ்வறு கொண்டு போய் சேர்ப்பது என்று எந்த அரசியல்வாதியோ, சமூகசீர்திருத்தவாதியோ அல்லது திட்டமிடும் அதிகாரிகளோ சிந்திப்பதே இல்லை. அனைவரும் தங்கள் வாதத்தினால் மக்களை கவர நினைக்கிறார்களே தவிர நல்ல தீர்வை சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றிகரமாக முடிக்க நினைப்பதே இல்லை. வெகு சிலரே அவ்வாறு செயல்படுகிறார்கள்.
உதாரணமாக தமிழகத்தில் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு அரசு மானிய விலையில் நிலம் கொடுத்து நிறைய கம்பெனிகளை சென்னைக்கு இழுத்துள்ளது.சென்னையில் லட்சகணக்கானோர் சாப்ட்வேர் மற்றும் அது சார்ந்த தொழிலில் உள்ளனர் மற்றொரு புறம் விவசாயிகள் தங்கள் பயிரிட்ட பயிருக்கு நல்ல விலை கிடைக்காமல் இடை தரகர்களிடம் விற்று நட்டத்தில் வாழ்கின்றனர்.பல்வேறு இடை தரகர் உள்ள இந்த விற்பனை முறைக்கு மாற்றாக Reliance போன்ற பெருநிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து
விற்பனை செய்ய தொடங்கியது. இந்த முறையில் விவசாயிகளுக்கு தங்களுடைய விளை பொருளை விற்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் நல்ல விலை கிடைப்பதற்கான சாத்தியம் குறைவே.

இந்த பிரச்சனைக்கு முதல்வர் சென்ற ஆட்சி காலத்தில் உழவர்சந்தையை தீர்வாக கொண்டு வந்தார் அது ஒரு நல்ல திட்டம். அது நடுத்தர மக்களிடமும் விவசாயிகளிடமும் நல்ல ஆதரவை பெற்றது.சென்னையில் இருக்கும் உயர் நடுத்தர ம்ற்றும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்களிடமும் இத்தகைய ஒரு திட்டத்தை அறிமுக படுத்த வேண்டும். சாதாரண உழவர் சந்தை போல் இங்கு அறிமுகபடுத்தினால் அது தோல்வியுரும். இந்த மக்களை பொருத்தவரை அவர்களுக்கு நல்ல தரமான காய்கறிகள் மிகவும் அருகாமையில் கிடைக்க வேண்டும். அதற்காக சிறிது விலையை அதிகம் கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் வாங்கும் இடமும் வசதியாகவும், அலங்காரமாகவும் இருக்க வேண்டும். தேவையான பொருள்கள் அனைத்தும் ஒரு இடத்தில் கிடைக்க வேண்டும். இதை தற்போதைய உழவர்சந்தை மூலம் நடைமுறை படுத்துவது கடினம்.
தற்போது நிறைய அரசுசாரா நிறுவனங்கள்(தான் பவுண்டேசன்) மிகவும் சிறப்பாகவும், நல்ல மேலாண்மை திறமையுடனும் விவசாயிகளுக்கு பணி புரிந்து வருகிறது. அவ்வாறு "உண்மையிலேயே" சிறப்பாக பணிபுரியும் NGO வை நடுவர்களாக நியமித்து அவர்கள் மூலம் அனைத்து காய்கறிகள் மற்றும் பிற பொருள்களை விவசாயிகளிடம் நேரடியாக வாங்க வேண்டும்.அவர்களுடைய முக்கிய வேலை தரக்கட்டுப்பாடு மற்றும் கொள்முதல். அரசு மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் நில மானியம் கொடுத்துள்ளது. அவர்களது கட்டிடங்களும் பல ஏக்கர்கள் பரந்து விரிந்துள்ளது, எனவே இது போன்ற பெரிய கம்பெனியிலேயே ஒரு சிறிய கடை ஒன்றை தொடங்க அவர்களிடம் அனுமதி பெற வேன்டும். அந்த கடையை ரிலையன்ஸ் போன்ற கடையின் தரம் மற்றும் அமைப்புடன் அமைக்க பட வேண்டும். அது போன்ற கடைகளில் விவசாயிகளின் தரமான விளைபொருட்கள் நேரடியாக அங்கு பணி புரிபவர்களிடம் விற்க்கபட வேண்டும்.1000 பணியாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் இவ்வாறு கடை அமைக்கலாம். மேலும் IT Highway, Mahindra city போன்ற இடங்களில் பொதுவாக பெரிய கடை அமைத்து விவசாயிகளின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்.
மேலும் தரத்தை உறுதி செய்து மக்களிடம் நற்பெயர் பெற்றுவிட்டால் internetன் மூலம் நேரடியாக ஆர்டர் பெற்று மக்களிடம் நேரிடையாக விநியோகம் செய்யுமளவு விரிவு படுத்தலாம்.
இதன் மூலம் 20% மக்களின் வளர்ச்சியின் பயனின் ஒரு பகுதியாவது ஏழை விவசாயியை சென்றடையும். மேலும் அனைத்து கம்ப்யூட்டர் நிறுவனங்களும் சமூக சேவைக்கென்று ஒரு பகுதியை செலவழிக்கின்றனர். எனவே Infosys போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த நடுவர் வேலையை (NGOக்கு பதிலாக) செய்யலாம். இதைவிட சமூக சேவை வேறு எதுவும் இருக்காது. இந்த நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிறைய பேர் volunteer ஆக பணி புரிய ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் தரக்கட்டுபாட்டு சோதனையை தன்னிச்சையாக செய்யலாம். எனவே தரமும் நன்றாக இருக்கும் அந்த அமைப்பின் மீது நம்பிக்கையும் ஏற்படும்.
இவ்வாறான முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் இந்திய வரலாற்றிலேயே Amul, பசுமை புரட்சிக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் நடக்கும் மாபெரும் புரட்சியாக இது இருக்கும். ஒரு லட்சம் உயர் நடுத்தர மற்றும் உயர் தர வகுப்பை சேர்ந்த மக்கள் நேரடியாக விவசாயிகளின் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி வாங்குகிறார்கள் என்பதை நினைக்கவே அபரிமிதமாக இருக்கிறது.
இப்படிபட்ட ஒரு முயற்சியினால் கிடைக்கும் நன்மைகள்:
1. விவசாயிகளுக்கு நிரந்தர விற்பனை சந்தை கிடைக்கிறது
2. அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
3. மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் கிடைக்கிறது.
4. மக்களுக்கு தரமான பொருட்கள் அருகாமையிலேயே கிடைக்கிறது.
5. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கபடுகிறார்கள்,
6. ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் விவசாயிகளின் பலனை அபகரிப்பதா? அல்லது சிறு வணிகர்கள் மற்றும் இடைதரகர்கள் விவசாயிகளின் பயனை அபகரிப்பதா என்ற கேள்வி போய் பலன் அனைத்தும் விவசாயிகளுக்கே போய் சேரும்.
7. இந்த முறை வெற்றிகரமாக செயல் படுத்தபட்டால் வரும் காலங்களில் விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு இதையே பயன்படுத்தலாம்.
8. நல்ல கட்டுபாட்டின் மூலம் இயற்கை விவசாய(organic) பொருட்களுக்கு தனியான விற்பனை சந்தையை உருவாக்கமுடியும்.

Monday, January 07, 2008

ம.க.இ.க- உயிர்ம எரிபொருள் எதிர்ப்பு(Jatropha(காட்டாமணக்கு) )- சில எண்ணங்கள்


இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்பி உள்ளனர்.ஏழை மக்களின்
எண்ணிக்கையும் கிராமத்தில்தான் அதிகம் உள்ளது. வளர்ந்து வரும் ஏழை-பணக்காரர் பிளவை குறைக்க வேண்டுமானால் விவசாய விளைபொருள்களின் தேவை வளர்ந்த சமூகத்திடையே அதிகரிக்க பட வேண்டும். அவர்களுடைய பணம் கிராம மக்களை கொண்டு போய் சேரவேண்டும்.

Jatropha(காட்டாமணக்கு)வின் மற்றொரு குணம், அது குறைந்த நீர்வளம் உள்ள பகுதியைலும் வளரும். இதன் மூலம் மிகவும் பின் தங்கிய வறண்ட மாவட்டங்களில் வாழும் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. அவர்களின் முன்னேற்றத்துக்கு இது ஒரு அரிய வரபிரசாதம்.

நெல் மற்றும் கரும்பின் விலை உயரும் போதெல்லாம் ,கூலி தொழிலாளின் கூலி உயர்ந்து
உள்ளது வரலாற்று உண்மை. அது போல் Jetrobaவும் வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கை
தரத்தை வளர நிச்சயம் உதவும்.

இன்று இந்தியாவின் உழைப்பு மற்றும் செல்வங்கள் எல்லாம் பெட்ரோலை டாலரில்
வாங்க வேண்டிய காரணத்தால்(அது மட்டுமல்ல காரணம் என்றாலும் அதுவும் ஒரு முக்கிய
காரணம்) அமெரிக்க டிரசரியில் முதலீடு செய்து உள்ளோம். டாலர் மற்றும்
பெட்ரோலுக்கிடையே உள்ள தொடர்பை இந்த பதிவு விளக்குகிறது.

http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

ம.க.இ.க வினர் தினமும் எதிர்க்கும் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியின் அடிப்படை காரணமே பெட்ரோலை பலநாடுகள் இறக்குமதி செய்வது தான். Jetroba பயிரிட்டு பெட்ரோல் இறக்குமதியை குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். இந்த அடிப்படை உண்மையை கூட ம.க.வி.கவினர் புரிந்து கொள்ள முடியாதது ஆச்சிரியமாக உள்ளது.

அடுத்து சுற்றுப்புற சூழல். உண்மையிலேயே சுற்று புற சூழலுக்கு பாடு படுபவர்களாக
இருந்தால் அவர்கள் எதிர்த்து போராட வேண்டியது, பெட்ரோல் உபயோகம், பாரம்பரிய நெல் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான். அவை தான் green house gas அதிகம் வெளியிடுகிறது.அவர்க்ளுடைய இந்த கருத்து சரியான பிதற்றல்.
மேலும் jetroba பயிரிடுவது என்பது இறால் வளர்ப்பு போன்று ஒட்டு மொத்தமாக
விளைநிலத்தை பாழாக்குவது அல்ல.

உண்மையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்றால்

1.விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.

2.Jatropha(காட்டாமணக்கு) என்பது மேலை நாடுகள் பயிரிடும் பயிர் அல்ல. என்வே நல்ல வித்து உருவாக்குவது, அதற்கு தேவையான agronomic practise கண்டு பிடிப்பது போன்ற விவசாய ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இந்திய அரசாங்கம் அதிக அளவு பணத்தை அராய்ச்சிக்காக விவசாய பல்கலை
கழகங்கள் மூலம் செலவிடுகிறது. அவர்களுடைய அராய்ச்சி திருப்தி அளிப்பதாக இல்லை.
கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவர்களை விட நன்றாக செயல்படுகிறார்கள்.
அது போல் தனியார் நிறுவனங்களை jetroba அராய்ச்சிக்காக ஊக்குவிக்க வேண்டும்

3.Jetroba தொழில் நுட்பத்தில் உள்ள் மற்ற technology gapsம் சரி செய்ய பட வேண்டும்

4.கலைஞர் செய்யும் நில சீர்திருத்த திட்டத்தை jetroba பயிரிடும் பகுதிகளில் முழுமையாக
செயல் படுத்த வேண்டும். அதாவது நிலமற்றவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது.

5.அங்கு இருக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம்,நில சீர்திருத்த வசதி போன்ற
capital investment இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

6. Jatropha(காட்டாமணக்கு) விளை பொருளுக்கு நல்ல குறைந்த பட்ச ஆதார விலையை கொடுக்க வேண்டும்.

7.அரசு உதவியுடன் நல்ல பயிர் காப்பீட்டு திட்டத்தை(crop Insurance) அறிமுகபடுத்த
வேண்டும். இது புதிய பயிர் என்பதால், பயிர் காப்பீட்டு திட்டத்தை எளிதாக அறிமுக
படுத்தலாம்.

8.Contarct farming அறிமுகபடுத்தி விவசாயிகளுக்கு நல்ல தொழில்
நுட்பமும்,இடுபொருள்களுக்கான முதலீடும் எப்போதும் கிடைக்க செய்ய வேண்டும்.

பிடரல் காஸ்ட்ரோ உண்மையான தலைவர்தான். தன் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க உதவியவர். பன்னாட்டு
கம்பெனிகளுக்கு விலை போகாதவர். ஆனால் அவர் கூறும் அனைத்தையும் எடுத்து கொள்ள
வேண்டும் என்று அவசியம் இல்லை. முன்பு சோவியத் கூறிய அனைத்தையும் எடுத்து
கொண்டு அதை utopean சமூகமாக கம்யூனிஸ்டுகள் காட்டினர் .அதனால் சோவியத் சரிவு
மக்களிடம் அவர்களின் சித்தாந்தத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.பிறகு சைனாவை
உதாரணம் காட்டினர்.அது சர்வாதிகார மற்றும் முதலாளித்துவ பாதைக்கு சென்ற போது
மக்களும், கம்யூனிசத்தின் ஒரு பகுதியினரும்(CPM) சித்தாந்ததின் மீது நம்பிக்கை இழந்தனர்.
CPM முதலாளித்துவ/சர்வாதிகார பாதைக்கு சென்றது. மீதமுள்ளோர் மக்களிடம் உள்ள
வெறுப்பு, ஏழ்மை போன்றவற்றை வைத்து கொள்கை, தீர்வு எதுவும் இல்லாமல் சில அன்னிய model வைத்து போராடுகின்றனர்.

கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்ததை மட்டும் வைத்து இந்தியா-இந்தியர்களின்
தேவையை கொண்டு கொள்கைகளை இந்தியர்களுக்காக வடிவமைத்து இருந்தால் இந்த
வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.இந்த வெற்றிடத்தால் ஏழை மக்க்ளுக்கு உண்மையிலேயே
போராட ஒரு உண்மையான அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.

தமிழ்மணி அவர்களின் இந்த பதிவு பார்த்து , அதன் மூலம் உயிர்ம எரிபொருள் பற்றிய இந்த கட்டுரையை படித்த பின் எழுதிய பதிவு இது. அவருடைய பதிவில் பின்னூட்டமாக இட்டது.

Friday, January 04, 2008

ஜப்பானியர்களை கவரும் இந்திய கல்விதரம்

ஜப்பானியர்களிடம் இந்திய கல்வி முறை அதிக பிரபலமடைவதாக செய்திகள் வருகின்றது. ஜப்பானில் உள்ள இந்திய பள்ளிகளில் இந்தியர்களை விட ஜப்பானியர்களே விரும்பி படிக்கிறர்களாம். இந்திய கல்வியில் உள்ள கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கிலம் அதிக தரமுள்ளதாக கருதுகிறார்கள். புத்தக கடைகளிலும் இந்திய கணித புத்தகங்கள் அதிகம் கிடைக்கிறதாம். முழு செய்திக்கு இங்கு போய் பார்க்கவும்.

Wednesday, January 02, 2008

ஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்-Corporatocracy

இன்றைய உலகில் ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளான போர்,வறுமை,பட்டினி
போன்றவற்றிற்கான மூல காரணத்தை ஜான் பெர்க்கின்ஸ் அழகாக விளக்குகிறார்.MNC எவ்வாறு
வளரும் நாடுகளின் அரசியல்வாதிகளோடு சேர்ந்து மக்கள் வாழ்வை சீரழிக்கிறது என்பதை
"Confessions of an Economic Hit Man" என்ற தனது புத்தகத்தில் அழகாக
எழுதியிருந்தார்.பேராசை பிடித்த இந்த corporations அணுகுமுறையை இந்த வீடியோவில்
அழகாக விவரிக்கிறார்.
முதலில் பணத்தாசை காட்டி நாட்டின் தலைவர்களை தன் பக்கம் இழுப்பார்கள்.
அது முடியவில்லை என்றால் கொலை மிரட்டல் விடப்படும்.
இந்த வேலையை செய்பவர்கள் Economic Hitman எனப்படுவோர். ஒரு காலத்தில் இந்த
ரகத்தை சேர்ந்தவர் John Perkins. இவர் பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க சவுதி
அரேபியாவுடன் பேச்சி நடத்தியதில் முக்கியமானவர்.அந்த முடிவின் முக்கியத்துவத்தை இந்த
பதிவில் காணலாம்.
அதற்கு அந்த தலைவர்கள் மசியவில்லை என்றால், Jackals என்ப்படும் கொலையாளிகள்
அனுப்பபடுவர்.
கொலையாளிகள் மூலமும் கொல்ல முடியவில்லை என்றால் கடைசியில் ராணுவம்(ஈராக்கில்
நடந்தது) அனுப்பபடும்.
சமூக அக்கறை உள்ளவர்கள் அனைவறும் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்க
வேண்டும்
.
முதல் பகுதியில் ஈராக் மற்றும் பெட்ரோல் அரசியலை விளக்குகிறார்.



இரண்டாவது வீடியோவில் தென் அமெரிக்க நாடுகளில் நடக்கும் அரசியலை விவரிக்கிறார் .




மூன்றாவது வீடியோவில் நாம் என்ன செய்யலாம் என்று விளக்குகிறார்.