Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, April 04, 2021

கண்ணகியின் பகுத்தறிவு

 பொதுவாக கண்ணகியை பிற்போக்குவாதியாக பார்க்கும் எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இதற்கு மாற்று கருத்தாக பல இடங்கள் உள்ளது.அவற்றில் ஒன்று இதோ.  கோவலன்  மாதவியிடம் சென்ற பின் கண்ணகி தனியே வருந்துகிறாள். இது போன்ற இழப்பு/வருத்தம் நிறைந்த காலங்களில் பரிகாரம் என்ர பெயரில் பூஜையோ அல்லது  சிறு தானமோ கொடுத்தால்  பிரச்சனை  விலகும் என்று யாரவது கூறினால் , அவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட செய்து பார்த்தால் என்ன தான் என்று நினைபார்கள்.


அதே போல் தேவந்தி என்னும் கண்ணகியின் பிராமண தோழி, கண்ணகியிடம் சூரிய, சந்திர துறைகளில் மூழ்கி, காமத்தேவன் கொவிலுக்கு சென்று  வழிபட்டால் உன் கணவன் திரும்பி வருவார் கூறி பரிகாரம் கூறுகிறாள்.


ஆனால் கண்ணகி தெளிவாக "அது எனக்கு பீடு அன்று" என்று கூறி தெளிவாக மறுத்து விடுகிறாள்.அந்த காலம் முதலே இது போன்ற பரிகார சடங்குகளும், அதை மறுக்கும்  தெளிவான மனநிலை உடையவர்கள் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர். அதைத்தான் இளங்கோ  அடிகள்  தெளிவாக காட்டுகிறார்.


தகவல் - பேரா.கண்ணபிரான் இரவிசங்கர்


பாடல்:

கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்

கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்

மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள

சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்

காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவ ருலகத்துத் தையலார்

போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்

ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்

பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய



Monday, March 01, 2021

வெட்டிவேலை

அன்றாடம் பேசும் போது நமது சொல்லாடலில் அடிக்கடி பயன்படுத்துவது வெட்டிவேலை.  சோழர்கள் கால கல்வெட்டுகளில் அவர்களது வரி வகைகள் பற்றி படிக்கும் போது அதற்கானஅடிப்படை அங்கிருந்து வந்திருக்குமோ என்று எண்ன தோன்றுகிறது. சோழர்கள் காலத்தில் வெட்டி வரி என்று ஒரு வரி இருந்திருக்கிறது. எந்த ஒரு ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு அல்லது ஊருக்கு செய்யும் ஊழியமே வெட்டி எனப்படுவதாகும். ஊழியமாக தரபட்டாலும் இதை வரி இனாமாக எடுத்து கொள்ளபடுவதே முறை. நீர் கிடைக்காத காலங்களில் ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி ஊற்று நீரை தேக்கி செய்யும் ஊழியத்தை செய்நீர் வெட்டி என்று குறித்தனர். வெள்ளாமை சார்ந்த பணிகளுக்கு செய்யும் வேலைகளை வெள்ளான் வெட்டி என்று கூறுகின்றனர். குடும்பத்தக்கு ஒருவர் கோடை காலங்களில் நீர் பாசன வேலைகளை செய்வதை சுமா 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கூட கிராமத்தில் பார்த்திருக்கிறேன். வேலை செல்ல ஆள் அனுப்பாதவர்கள் அதற்குன்டான பணத்தை செலுத்த வேண்டும்.


எனவே நீங்கள் ஊதியம் பெறாமல் செய்யும் பொது காரியங்கள் அனைத்தையும் வெட்டி வேலை என்று கூறலாம்.

தமிழக தொல்லியல் துறைக்கு மிக்க நன்றி.  அவர்கள் அனைத்து தொல்லியல் கல்வெட்டுகள் சார்ந்த புத்தகம் மற்றும் அனைத்து வெளியீடுகளையும் இலவசமாக இணையத்தில் கொடுத்துள்ளார்கள்.  அதன் மூலம் பல வரலாற்று செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.   https://www.tnarch.gov.in/e-publication-books




Monday, October 19, 2015

தமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall

ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.

அமெரிக்காவில் Solar Power

அமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும்  போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும்.  பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.
 

ஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.

மோடியின் டெஸ்லா விஜயம்

பாரத பிரதமர் மோடி சமீபத்தில்  சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின்  பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும்,  அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .


Powerwall

டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக  மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த  மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.





இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.


கடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார  தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel  மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம்  கிடைக்கும் நிலை
வெகு தொலைவில் இல்லை.


Monday, September 28, 2015

BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை

இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. . செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு  மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்

நாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 1:30 - 6:30
இடம்: Coconut Hill Party Hall,46129 Warm Springs Blvd, Fremont, CA 94539




.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

Sunday, January 08, 2012

கடைசியாக மதுரை வீரனுக்கு ஒரு கோவில்!

கடந்த வருடம் இதே மாதத்தில் பென்னி குயிக் பற்றி கோவில் இல்லா மதுரை வீரன் என்ற தலைப்பில் ஒரு பதிவை எனது தமிழ்மணம் நட்சித்திர வாரத்தில் இட்டிருந்தேன். சமீபத்திய முல்லை பெரியாறு பிரச்ச்னை காரணமாக அவருடைய பெருந்தன்மை மற்றும் தியாகம் பற்றி பல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு அவர் பற்றிய செய்திகளை மக்களை சென்றடைய உதவின.அந்த பதிவில் அவருக்கு நல்ல நினைவிடம் கூட கட்டபடவில்லை என்று பின் வருமாறு எனது மன வருத்தத்தை தெரிவித்திருந்தேன்.


//அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக். இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே? //


தற்போது முதல்வர் அவருக்காக மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி.

மணி மண்டபம் கட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்ககூடும். மணிமண்டபம் கட்டுவதன் மூலம் அவருடைய வரலாற்றை பல்லயிரகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இனி வரும் காலங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.அரசியல் மற்றும் அனைத்து துறைகளிளும் எதிர்மறையான தலைவர்களையே பார்க்கும் அவர்களுக்கு பென்னி குயிக் வரலாறு நேர்மறையான உத்வேகத்தை (Positive Inspiration)கொடுக்க வாய்ப்புள்ளது.

அதே போல பள்ளி பாடங்களில் அரசியல் காரணத்திற்கு வைக்க பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளின் பாடங்களை நீக்கி விட்டு பென்னி குயிக், சி.சுப்ரமணியம், காமராஜர் போன்றோரது வாழ்க்கை வரலாறை பாடங்களாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--

Sunday, January 30, 2011

சித்தாந்தமா? சுயலாபமா? தீர்மானிக்க வேண்டிய நேரம்

கம்யூனிசமும் முதலாளித்துவமும் சம அளவில் இருந்த போது உலகளவில் கம்யூனிச நாடுகளை எதிர்த்து போராட மேலை நாடுகளுக்கு ஒரு காரணம் தேவை பட்டது. கம்யூனிசத்தை சர்வாதிகாரம் என்று சொல்லி உலகெங்கிலும் மக்களாட்சியை கொண்டு வருவதையே தங்கள் சித்தாந்தம் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். கம்யூனிசம் மறையும் வரை அதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. அதன் பிறகு கூட மேல் நாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியிளிருந்து நீக்க அதே சித்தாந்தம் தொடர்ந்தது.

தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை நீக்க ராணுவமும், சாதகமான சர்வாதிகாரிகளுக்கு அறிக்கையும்( கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவாரே அது போல்!) ஆயுதமானது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் மேலை நாடுகளுக்கு ஆதரவனவர்களால் வண்ண புரட்சிகள் நடந்தன.

தனது வளர்ச்சிக்கு சாதகமான சர்வாதிகளை எதிர்த்து மக்கள் மக்களாட்சி கேட்டு போராடினால் என்ன செய்வது. அவ்வாறு போராடுபவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேலை நாடுகளின் interestகு எதிராக செயல் பட்டால் என்ன செய்வது?

அந்த நிலை தற்போது ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வண்ண புரட்சி நடந்த நாடுகளில் மாற்று புரட்சி நடக்க ஆரம்பித்து விட்டது. தற்போது டுனிசியா எகிப்து போன்ற நாடுகளில் நடைபெரும் புரட்சி புதிய மாற்றத்தை நோக்கி கொண்டு செல்கிறது.

ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது சொன்னது

"America's vital interests and our deepest beliefs are now one." The claim was that the source of threats to the welfare and security of the wealthy democratic world lay in the unfreedom of the populations of authoritarian countries:"

இனி சித்தாந்தம் முக்கியமா? சுய லாபம் முக்கியமா என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.

--

Saturday, January 29, 2011

கோவில் இல்லா மதுரை வீரன்

அரசு திட்டங்களை செயல் படுத்தும் போது அத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை அபகரிக்கும் அதிகாரிகள் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். ஆனால் மக்களின் வறுமையை போக்கும் ஒரு நீர்பாசன திட்டத்தை தன் மனைவியின் நகைகளை விற்ற பணத்தை கொண்டு கட்டி முடித்த ஒரு அரசு அதிகாரி பற்றி அறிந்து கொள்ள ஆச்ச்ரியமாக உள்ளதா? அதுவும் அந்த அதிகாரி தன் தாய் நாட்டு மக்களுக்காக செய்யாமல் வேறு நாட்டு மக்களுக்காக செய்தார் என்றால் நம்ப முடிகிறதா?

தமிழக கேரள எல்லையில் இருக்கும் பெரியார் அணை பற்றி பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் பழைய மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பல பகுதி விவசாய நிலங்களாக ஆனதற்கும் அந்த பகுதியில் உள்ள மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டதற்கும் இந்த அணை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.தற்போது கேரள அரசு கடலில் கலக்கும் நீரை தமிழகத்துக்கு தர மறுப்பதால் இந்த அணை பற்றியும் அது சார்ந்த பிரச்ச்னையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் இந்த அணை கட்ட பட்ட வரலாறு பற்றி தெரிந்தால் அனைவரும் ஆச்சரிய பட்டு போவீர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பென்னிகுயிக்(John Pennycuick) என்ற அதிகாரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்ச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து ஆராய்ந்தார். அப்போது அவரது மனதில் தோன்றிய திட்டம் பெரியாறு அணை திட்டம். கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகம் நோக்கி திருப்பி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் ராமனாதபுரம் ஆகியன பாசன வசதி பெறும் என்பது அவரது திட்டம். ஆனால் தண்ணீரை தமிழகத்தை நோக்கி திருப்பி விட்டால் அது மலையை கடந்து வர வேண்டும். எனவே அந்த திட்டத்திற்கு நிறைய செலவாகும் . எனவே ஆங்கிலேய அரசு அதற்கு ஒத்து கொள்ளவில்லை. ஆனால் பெனின்குயிக்கோ தன் முயற்சியை தளர விடாமல், அந்த திட்டத்தால் பயனடையும் லோக்கல் தொழிலாளர்களை கொண்டு வேலையை குறைந்த செலவில் முடிப்பதாக வாக்குறுதி கொடுத்து அரசிடம் வாதாடி இந்த திட்டத்துக்கான ஒப்புதலை பெற்றார்.

ஆனால் இந்த திட்டம் நடந்து வந்த போது செலவு அதிகமானதால் அரசு இந்த திட்டத்தை பாதியில் கை விட்டு விட்டது. ஆனாலும் மனம் தளராத ஆங்கிலேய அதிகாரி இங்கிலாந்து சென்று தன் மனைவியிடம் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதனால் பயனடைய போகும் ஏழை மக்களை பற்றியும் எடுத்து கூறினார். அவரது மனைவி தனது நகைகளையும், சில சொத்துக்களையும் விற்று பணமாக தன் கணவரிடம் கொடுத்தார். அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, அணை கட்டும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.

அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக்.

தமிழக கிரிகெட் ரசிகர்களும் இந்த அதிகாரியிடம் நன்றி கடன் பட்டவர்கள். ஏன் என்கிறீர்களா? இவர் தான் சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தை முதல் முதலாக கிரிகெட் விளையாட தயார் செய்தவர். இவர் அரசிடமிருந்து கிரிகெட் கிளப்பிற்காக சேப்பாக் ஸ்டேடியத்தின் இடத்தை வாங்கி கிரிகெட் மைதானத்தை உருவாக்கினார்.

இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே?

இன்னொரு பதிவில் நாம் வில்லனாக பார்க்கும் ஒரு ஆங்கிலேய அதிகாரி இந்தியாவிற்காக செய்த தியாகத்தை பற்றி பார்ப்போம்.


--

Thursday, January 27, 2011

திராவிட ஆட்சிகளின் சாதனைகளும் வேதனைகளும்

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சினிமா மற்றும் மீடியா போன்ற ஊடகங்களை பொருத்த வரை, கடந்த 40 வருடத்தில் ஒட்டு மொத்த தமிழகமே மாபெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு கொண்டு உள்ளனர். திராவிட கட்சிகளோ தன் எதிர் (திராவிட) கட்சிகளின் தவறை கூறுவதில் முக்கியத்துவம் காட்டுகிறார்கள்.

வாரிசு அரசியல் மற்றும் ஊழல் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு திராவிட ஆட்சியின் பங்களிப்பை பற்றிய் பார்வையை எங்குமே காணுவது அரிதாக உள்ளது. அனைத்து துறைகளிலும் திராவிட ஆட்சி ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை பற்றி பார்ப்போம்.

மக்களாட்சி

1.காங்கிரஸ் ஆட்சிக்கும் திராவிட ஆட்சிக்கும் இடையில் உள்ள மிக பெரிய வேறுபாடு, அரசியல் அதிகாரத்தில் சாதாரண மக்களின் பங்களிப்பை கொண்டு வந்தது எனலாம். காங்கிரஸ் ஆட்சியில் MLA மற்றும் MPக்கள் மிக பெரிய பணக்காரர்களாகவே இருந்தார்கள்(காமராஜர் மற்றும் கக்கன் போன்ற ஒரு சில விதி விலக்கு இருந்தாலும்). அது மட்டுமன்றி அரசியல் அதிகாரத்தில் இருந்தோரில் பெரும்பாலானோர் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள். திராவிட கட்சி ஆட்சியை பிடித்த போது பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஏழை/நடுத்தர வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது.அடித்தளத்தில்/ களத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததால், அவர்கள் அன்றாடம் பார்க்கும், தங்களை சுற்றி உள்ள மகக்ளின் தேவை சிலவற்றையாவது நிறைவேற்றினார்கள். சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பும் பலமானது. MGR ஆட்சியில் இருக்கும் போது MLAக்கள் சட்டசபை நடக்காத காலத்தில் கட்டாயம் தங்களது தொகுதியில் இருக்க பணித்திருந்தார்.மிக பெரிய மிராசுதாரர்கள் பதவியில் இருந்திருந்தால் அவர்கள் அடிமட்ட மக்களின் தேவையை உணர்ந்து அடிமட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவியிருப்பார்களா எனபது கேள்வி குறியே

2 MGR அட்சி காலத்தில் கிராம அளவில் பட்டாமணியார்களாக இருந்த ஆதிக்க சாதியினரை பதவியில் இருந்து நீக்கி ஆதிக்க சாதியினரின் கட்டுபாட்டை ஓரளவு குறைத்தார். ஆனால் ஒரு சிலர் இதனால் கிராம புறங்களில் மக்களிடமிருந்த கட்டுபாடு குறைந்து விட்டது என்று கூறுவார்கள்.

3.அரசியலில் அடிமட்ட மக்களின் பங்களிப்பு அதிகமானதால், அது சாதி அரசியலுக்கு கொண்டு சென்று விட்டதாக ஒரு குற்றசாட்டு உள்ளது.தற்போது நடக்கும் தேர்தலில் எல்லாம் அந்தந்த் தொகுதியில் இருக்கும் பெரும்பான்மை சாதியினரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதை ஒரு சிலர் தமிழகம் சாதியத்தை நோக்கி தள்ளபட்டு விட்டதாக பெரும் பாலோனோர் கூறுவார்கள்.ஆனால் பிற மாநிலங்களை பார்த்தால் அங்கு அரசியல் அதிகாரத்தில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் இருப்பது தெரிய வரும்.உதாரணமாக ஆந்திராவில் ரெட்டிகள், நாயுடுக்கள் மற்றும் ஒரு சில ஆதிக சாதியினர் 25 சதத்துக்கு குறைவாக இருந்தாலும் அவர்களின் அரசியல் அதிகாரம் பெரும்பான்மையாக இருக்கிறது.பெரும்பான்மை பிற்படுத்தபட்ட மக்கள் சிறுபான்மை அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளார்கள்.உண்மையில் இது சாதி ரீதியாக மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநித்துவம் கிடைப்பதாக எடுத்து கொள்ளலாம்.ஆனால் அவ்வாறு அதிகாரம் பெறுபவர்கள் உண்மையில் எந்த அளவுக்கு அடிமட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடு படுகிறார்கள் என்பது கேள்வி குறி.

4.மேற் சொன்ன கூற்றுகள் எல்லாம் கடந்த சில வருடங்களாக மாறிவிட்டன. தற்போது முன்பு போல் அடிமட்டத்திலிருந்து தலைவர்கள் வருவது நின்றுவிட்டது. வாரிசு அரசியலும், அரசியலை வியாபாரமாக கொள்பவர்களும் தான் அரசியல் தலைவர்களாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உணர்வு ரீதியான தொண்டர்கள் தலைவர்கள் ஆவது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. இது திராவிட கட்சிகளுக்கு மிக பெரிய பின்னடைவு அல்லது அழிவின் ஆரம்பம் என்று கூட கூறலாம். இதன் விளைவாக திராவிட கட்சிகளுக்கும் பிற கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடு குறைந்து விட்டது.

சமூகநீதி

1. திராவிட ஆட்சியின் முக்கிய சாதனையாக கருதபடுவது சமூக நீதியை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி. இட ஒதுக்கீடு என்பது நீதி கட்சி காலத்தில் அறிமுகபடுத்த பட்டாலும் திராவிட ஆட்சிகாலத்தில் அது முழுமையாக கடை பிடிக்க பட்டு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் முன்னேற வழி வகுத்தனர் என்றால் மிகையாகாது. (காமராஜர் காலத்தில் இந்த முயற்சி பலவிதமாக நடை முறைபடுத்தபட்டது. உதாரணமாக கிண்டி பொறியியல் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் G.R. தாமோதரன், ராஜகோபால், முத்தையன் போன்ற பிராமணரல்லாதவர்களை கொண்டு நேர்முக தேர்வு நடத்த பணித்தார்.).இட ஒதுக்கீடு ஆரம்ப காலத்திலே நடைமுறை படுத்த பட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் தலைமுறையில் வேலைக்கு போவோரை கண்டு சுற்று புறத்தில் இருப்பவர்களும் படிக்க ஆவல் காட்டியதால், அனைத்து தரப்பினரும் பரவலாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது.

2.உண்மையில் சொல்ல போனால் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வந்ததன் மூலம் முன்னேறிய வகுப்பினரின் வளர்ச்சியும் அதிகமானது எனலாம்.முன்னேறிய வகுப்பினரின் போட்டியிடும் தன்மை அதிகமானது.அரசு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தனியார் துறையில் வேலைக்கு சென்ற முதல் தலைமுறையினரின் குழைந்தைகளுக்கு விழிப்புணர்வும், உலகளாவிய நோக்கும் அதிகமானது.

3.பெண்களுக்கான அரசியல் மற்றும் வேலை வாய்ப்பு ஒதுக்கீடு பெண்களின் மேம்பாடுக்கு பெருமளவு உதவியது என கூறலாம்.

4.தற்போது முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடை அனுபவித்தவர்களால் அதன் பயன் தேவையானவர்களை சென்றடைவது முற்றிலுமாக தடை பட்டுவிட்டது. அரசியல்வாதிகளுக்கும் பாமர ஓட்டு வங்கி தேவை என்பதால் உணமையில் உதவி தேவை படுவர்களுக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்க படுவது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் ஒடுக்க பட்ட மக்கள் நக்சல்பாரி இயக்கம் நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி தற்போதைய திராவிட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் தமிழகத்தை பேரழிவுக்கு இட்டு செல்லும்.(M.G.R ஆட்சி காலத்தில் இதை தடுக்க முயற்சி எடுத்தாலும் கடுமையான எதிர்ப்பினால் அவர் கை விட்டு விட்டார்.)

5.கிராமபுற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கருணாநிதி ஆட்சி காலத்தில் முயற்சி எடுத்தாலும் அது நீதி மன்றத்தால் தடைசெய்ய பட்டது வருத்தமான செய்தி

6.M.G.R காலத்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான நேர்முக தேர்வு தடை, கருணாநிதி காலத்து நுழைவு தேர்வு தடை போன்றவை அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது எனலாம்.

7.இட ஒதுக்கீடு காரணமாக தரம் குறைகிறது என்பது ஒரு சிலரின் குற்றசாட்டு. ஆனால் தற்போது பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான மார்க்கை ஒவ்வொரு பிரிவிலும் பார்த்தால் பெரிய அளவில் தரம் இல்லாதவர்களுக்கு சீட்டு கிடைப்பதாக தெரியவில்லை.அதிக மார்க் எடுத்த முன்னேறிய பிரிவினருக்கு முக்கிய கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்பதும் உண்மை)


கல்வி

1.காமராஜர் கிராம புற கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் திரவிட கட்சிகள் அரசு பள்ளிகளை மிக அதிக அளவில் அனைத்து கிராமங்களிலும் திறந்து ஒரு அறிவு புரட்சி ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகது.

2.கிராம பள்ளிகளின் தரம் மிகவும் கவலை கூறியதாக இருக்கிறது. அதை உயர்த்த திராவிட ஆட்சிகள் எடுக்கும் முயற்சி மிக குறைவே.

3.அரசு பொறியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் பலவற்றை தற்போதைய தி.மு.க அரசு திறப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. தமிழகத்தில் தான் இது போன்ற அரசு உயர் கல்லூரிகள் அதிகம் உள்ளது என்பது குறிபிடதக்கது.

4.தமிழகத்தின் இட ஒதுக்கீட்டின் பயானால் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தனியார் கல்லூரிகள் அதிகம் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்க பட்டு தற்போது ஊருக்கு பல கல்லூரிகள் திறக்க பட்டுள்ளன. கல்வி பெருமளவு வணிகமயமாக்க பட்டுள்ளது என்ற நிலை ஏற்பட்டாலும், பணம் இருந்து படிக்க விரும்புவர்கள் தாங்கள் படிக்க விரும்புவதை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதே சமயம் அரசு கல்லூரிகளும் பல திறக்கபட்டுள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும்

5.எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் கிராம கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூட இதை மாதிரி திட்டமாக அறிவித்துள்ளது.

6.பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், புத்தகம், முட்டை என பல திட்டங்கள் நல்ல விளைவையே ஏற்படுத்து உள்ளன.தமிழகத்தில் அனைத்து குழைந்தைகளும் தற்போது பள்ளியில் சேர்க்க படுகிறார்கள் எனபது குறிப்பிட தக்கது.

போக்குவரத்து

1.தி.மு.க ஆட்சி காலத்தில் தனியார் பஸ்களை அரசுடமை ஆக்கியதன் விளைவாக கிராமங்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி கிடைத்தது(இதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ்காரர்கள் தான். உதாரணம் - TVS, பொள்ளாச்சி மகாலிங்கம், காசி ராமன்,சிம்சன்,சக்திவிலாஸ் etc).மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகம் பஸ் வசதியில் எவ்வளவோ முன்னேறி உள்ளது.

2.போக்குவரத்து கழகங்களை ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு கார்ப்பரேசனாக பிரித்து இருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி ஓரளவு சீராக வளர்ச்சி அடைந்து உள்ளது.

3..தி.மு.க ஆட்சி காலத்தில் கிராமபுறங்களில் அறிமுக படுத்திய மினி பஸ் திட்டம் கிராம மக்களுக்கு ஒரு வர பிரசாதம்.

4.திராவிட கட்சிகள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்காததால் தமிழகத்தில் ரயில்வே துறை மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிட தக்கது.இது தமிழகத்துக்கு மிக பெரிய இழப்பு ஆகும்.

முக்கியமான அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள சாதக பாதக அம்சங்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். அதே போல் இந்திய அளவிலான மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி குறியீடுகளின் (Human Development Index,GDP,Industrialization, Agriculture growth rate etc) மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளையும் பார்ப்போம்..

மேலே உள்ள தலைப்புகளில் விடுபட்ட சாதக/பாதக அம்சங்களை பின்னூட்டத்தில் இட்டால் நன்றாக இருக்கும்.

--

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்

இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

--

Sunday, October 03, 2010

உல்லாச தலைநகரம் லாஸ் வேகஸ் -3 - சூதாட்டங்கள்

லாஸ் வேகாஸ் என்றவுடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூதாட்டம், மது ,மாது மற்றும் மாமிசம். சூதாட்டத்தில் உலக அளவில் சில காலம் முன்பு வரை முதலில் இருந்தது இந்த நகரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய பன்னாட்டு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் நூதனமான பல புதிய LIVE சூதாட்டங்களை அறிமுகபடுத்தி , சூதாட்டத்தின் மதிப்புகளும் டிரில்லியனை தாண்ட வைத்து நியூயார்க் நகரை சூதாட்டத்தின் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டர்கள்.

நெவேடா மாகாணத்தில் விபச்சாரம் ஒரு சில இடங்களில் அனுமதிக்க பட்டு இருந்தாலும் லாஸ்வேகாஸ் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை. இது சட்ட படி மட்டுமே. ஆனால் அங்கு தெருவெங்கும் மக்களுக்கு விபச்சாரத்துக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அழைப்பவர்கள் ஏராளம். இந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சி மறைமுகமாக நடைபெறுவதில்லை. நேரடியாகவே அனைத்து தெருக்களிலுமே நடைபெறுகிறது. ஆனால் இந்த தொழில் மிக பெரிய மபியாக்களின் கட்டு பாட்டில் உள்ளதால் அந்த விடுதிகளுக்கு செல்லும் மக்களின் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண நடன நிகழ்ச்சிகள் அனைத்து பெரிய விடுதிகளிளும் நடக்கும். அது மட்டுமன்றி ஒரு சில காசினோக்கள் நள்ளிரவு ஆப் சீசன் நேரங்களில் இது போன்ற நடனங்களை இலவசமாக சூதாடும் இடங்களில் நடத்தி வாடிக்கையாளர்களை இழுப்பதும் உண்டு.





தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு பாலைவனம் உண்டு என்று சொன்னால் அது லாஸ்வேகாசாக தான் இருக்கும். இங்கு அனைத்து வகை மது பாணங்களும் கிடைக்கும். வித்தியாசமான கோப்பைகளில் கிடைக்கும் மார்க்கரிட்டா இங்கு பிரபலம்

உணவு இங்கு மிக பிரபலம். ஒவ்வொரு விடுதியும் buffet வகை உணவை வைத்திருக்கும். அது மட்டுமன்றி பல வகையான சிறப்பு உணவுகளுக்குகான உணவு விடுதிகள் பல ஒவ்வொரு விடுதியிலும் இருக்கும். buffetல் உலகில் உள்ள அனைத்து வகையான உணவு(சீனா,மலசியா,தாய்லாந்து,ஜப்பான்,கொரியா,இத்தாலி,இங்கிலாந்து,பிரான்ஸ்,மெக்சிகன் ,american) வகைகளும் வைக்க பட்டிருக்கும். உணவு பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வர பிரசாதம்.

சூதாட்ட விடுதியில் நீங்கள் 1 செண்டு முதல் பல்லாயிரம் வரை வைத்து சூதாட்ட வசதி உள்ளது( மகாபாரதத்தில் வருவது போல் நாடு,நகரம் போன்றவற்றை வைத்து சூதாட வசதி உள்ளதா என்று தெரியவில்லை!). அங்கு இருக்கும் slot Machineகளில் 1 செண்டு முதல் சில டாலர் வரை வைத்து சூதாடலாம். குறைந்த முதலீட்டில் விளையாட வாய்ப்புள்ளதால் பெரும்பாலானோர் இதை தான் விரும்புவார்கள். ஸ்லாட் இயந்திரங்களில் பல வகை உள்ளது. அவற்றில் முக்கியமானது எண்கள்/எழுத்துக்கள் சுத்தும் வகை தான். அதாவது ஒவ்வொரு முறை விளையாடும் போதும் 3 - 5 row-க்களில் எண்கள் சுழன்று கொண்டு randomஆக ஒரு இடத்தில் நிற்கும். அப்போது கிடைக்கும் எண்களின் ஒப்பீட்டிற்கு(Combination) ஏற்றவாறு பரிசு இருக்கும். உதாரணமாக 333 என்று ஒரே எண் வந்தால் அதற்கு ஒரு பரிசு பொருள் இருக்கும். குறிப்பிட்ட எண்கள் combination வருவதற்கான நிகழ்தகவு(probability) குறைவாக இருந்தால் அதற்கு பரிசு அதிகம் இருக்கும்.



இந்த விளையாட்டுகளில் வரும் லாபமும் முதலீட்டை போலவே மிக குறைவு என்பது தான் பல பேருடைய கணிப்பு. ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் இது போன்ற Slot Machine களை வைத்து விளையாடுவதில் ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன் படி ஒவ்வொரு விடுதியிலும் ஸ்லாட் இயந்திரங்களில் மக்கள் விளையாட போடும் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை, கட்டாயமாக சூதாட்ட விடுதிகள் பரிசு பொருளாக விளையாடுபவர்களுக்கே கொடுத்து விட வேண்டும்.உதாரணமாக நெவேடா மாகாணத்தில் குறைந்தது 75% பணத்தை விளையாடுபவர்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.இந்த பரிசு பொருள் randomஆக வெவ்வேறு slot mnachineமூலம் jackpot என்ற பெயரில் பெரிய தொகையாக வழங்கபடும். எனவே அதிர்ஷ்டம் இருந்தால் குறைந்த முதலீட்டில் ஜாக்பாட் அடித்து நிறைய பணம் பார்க்கலாம். இங்கு விளையாட வருபவர்களில் ஒரு சிலர் இது போன்ற ஸிலாட் இயந்திரங்களில் நிறைய நேரம் விளையாடி விட்டு எழுந்து போகும் மக்களின் body language-ஐ கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களிடம் ஏமாற்றம் அதிகம் தெரிந்தால் அந்த இயந்திரங்களில் நிறைய நேரம் ஜாக்பாட் வரவில்லை என்று பொருள். எனவே அங்கு விளையாடினால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த இயந்திரங்களில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஸிலாட் இயந்திரங்களுக்கு அடுத்த படியாக உள்ளது பிற Board Gameகள். கள் விளையாட மிக அதிக பணம் செலவ்ழிக்க வேண்டும் என்பது பலரின் நினைப்பு. ஆனால் உணமை அதுவல்ல. குறைந்த பணத்தை கொண்டே போர்ட் கேம்கள் விளையாடலாம். இனிவரும் பதிவுகளில் BlackJack,Roulette,Craps போன்ற விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

--

Wednesday, September 22, 2010

இந்தியாவுக்கான ஒளி மயமான எதிர்காலம்

ஆண்டு முழுவதும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு ஆன மத்திய பட்ஜெட்டின் ஆரம்ப கல்வி செலவு(பட்ஜெட்டில் ஒதுக்கபட்டது) - 36000 கோடி

ஒபாமா இந்திய வரும் போது போயிங் நிறுவனத்திடம் இருந்து C-17 Globmaster III ரக விமான படைக்கான விமானம் 10 மட்டும் வாங்க ஆகும் செலவு - 26680 கோடி

--

Saturday, September 18, 2010

அமெரிக்கா , சீனா --இரு செய்திகள் இந்தியாவிற்கு?

கடந்த வாரம் இரு வேறு செய்தி தாள்களில் வந்த இரு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும் உரியது.

முதலில் நியுயார்க் டைம் செய்திதாளில் வந்த இந்த செய்தி பற்றி பார்ப்போம்.

இந்த செய்தி அமெரிக்கா சிறந்த நாடுகள் வரிசையில் 11ம் இடத்துக்காக தள்ள பட்டதாக நியீஸ் வீக் பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றிய பிரெட்மேன் இன் அலசல். அமெரிக்காவின் இந்த பின்னைடைவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பள்ளியிலேயிருந்து மாணவர்கள் படிப்பின் ஆர்வம் குறைந்து வருவது தான் என்கிறார்.மேலும் அவர் முக்கிய காரணமாக கூறுபவை

the decline in U.S. education, competitiveness and infrastructure, as well as oil addiction and climate change.

அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா, சீனா வருவதற்கான காரணங்கள் பற்றி பின் வருபவற்றை குறிப்பிடுகிறார்

China and India have been catching up to America not only via cheap labor and currencies. They are catching us because they now have free markets like we do, education like we do, access to capital and technology like we do, but, most importantly, values like our Greatest Generation had

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றியது.முதலாவதாக இந்தியாவில் பல்கலை கழக மற்றும் உயற் கல்வி கூடங்களின் தரம் பற்றி பார்ப்போம். மேலை நாடுகளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பல்கலை கழகங்கள். அனைத்து அடிப்படை ஆராய்ச்சிகளும் அங்கு பல்கலை கழகங்களில் தான் நடைபெருகிறது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்க பட்ட உண்மைகளை கொண்டு அதை சந்தை படுத்தலுக்கு தேவையான பொருளாக மாற்றும் ஆராய்ச்சியும் பல்கலை கழகங்களில் தான் நடக்கும். அதற்கு பின் தனியார் கம்பெனிகள் உள் புகுந்து சிறிது முதலீடு செய்து மீண்டும் பல்கலை கழகங்களின் உதவியோடு ஆராய்ச்சியை தொடர்ந்து சந்தைக்கு உரிய பொருளாக கொண்டு வருவார்கள். எனவே பல்கலை கழக ஆராய்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பு. இந்தியாவிலோ முதலாளித்துவ பாதை தான் ஏற்றது என்று தேர்ந்தெடுத்தாலும் பல்கலைகழக ஆராய்ச்சியை உயர்த்துவது பற்றி யாருமே சிந்திப்பது இல்லை.

இங்கு உள்ள மத்திய கல்வி அமைச்சர்களின் குறிக்கோள் எல்லாம் எவ்வாறு இந்தியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்தி, ஆங்கிலத்தை ஒழித்து ஒட்டு மொத்த இந்திய கல்வி கட்டுமானத்தையே சீரழிப்பது என்பது பற்றி தான் உள்ளது.

எதோ வளர்ந்த நாடுகள் தான் பல்கலை கழக ஆரய்ச்சியில் முன்னேற்றம் செலுத்துகிறது என்று இல்லை. சீனா பல்கலை கழக ஆராய்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 5 வருடத்துக்கு 1 மில்லியன் டாலர் என்று நிதி உதவி அளித்து சீனா பல்கலைகழகத்துக்கு அழைக்கிறது. அவர்களுக்கு கொடுக்க படும் டார்கெட் எல்லாம் சயின்ஸ், நேச்சர் போன்ற உயர் தர அராய்ச்சி இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பதே.அவ்வாறு கட்டுரை வெளியிட இல்லை என்றால் 5 வருடத்துடன் அவர்களுடைய கான்ட்ராக்ட் விலக்க படும்.மிக பெரிய விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்வதால் அங்கு தரமான ஆராய்ச்சி ஆரம்பிக்க படுவதுடன், பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் அதிகமாகிறது. பிறகு ஒவ்வோரு மாணவனும் தரமான மற்றும் லேட்டஸ்டான ஆரய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவின் பல்கலை கழகங்களில் பல மாணவர்கள் நல்ல தரமான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சேர்கிறார்கள். ஆனால் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்களின் அறிவோ 40 வருட பின் தங்கியதாக உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி தலைப்பும் ஒன்றுக்கும் உதவாத தலைப்பாக இருக்கும். பல்கலைகழகங்களில் நடக்கும் அரசியலில் மாணவர்கள் வீழ்ந்து கடைசியில் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். தற்போது மத்திய அரசு ஆராய்ச்சிக்கு என பல கோடி செலவு செய்தாலும், பலன் மிக குறைவே. அந்த பிராஜெக்ட் வாங்கவே சில சமயம் நீங்கள் திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இந்திய பல்கலை கழக ஆராய்ச்சி பற்றிய என்னுடைய அனுபவத்தை தனி பதிவாக இடுகிறேன்.

அடுத்தது கல்லூரிகளில் கல்வி தரம். 3 முதல் 6 ஆண்டுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அங்கு கொடுக்க படும் கல்வியின் தரம் மிக கவலை கூறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஒரு பாடத்தில் மேல் படிப்பு வரை படித்தால் உண்மையிலேயே அவருக்கு அந்த பாடத்தில் நுண்ணிய அறிவு இருக்கும். ஆனால் இந்தியாவிலோ கல்லுரி முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் இருக்கும் அறிவு மிக மிக குறைவு. பாடத்தின் சிலபஸ் எல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது. லோக்கல் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,பள்ளி கூடத்தில் படிக்கும் போது அந்த பாட புத்தகத்துக்கு உள்ள தரத்தை விட குறைவாக ஒவ்வொரு பேப்பருக்கும் புத்தகம் போட்டு விடுகிறார்கள். மாணவர்களும் அதை மனபாடம் செய்து விட்டு சென்று வாந்தி எடுத்து விடுகிறார்கள். மேலை நாடுகளில் உள்ள மிக பெரிய பேராசிரியர்கள சிந்தனையை தூண்டும் விதமாக புத்தகங்கள் போடுகிறார்கள். அதை வாங்கி யாரும் படிப்பது கிடையாது. மேலும் ஆராய்ச்சி ஜேர்னல்கள் போன்றவற்றை புரட்டி பார்த்து படிப்பது என்பது விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் உள்ளது(அவை கல்லூரிகளில் வர வழிப்பதே குதிரை கொம்பு)

பல்கலை கழக ஆராய்ச்சி இப்படி என்றால் மற்றொரு முக்கிய பிரச்சனை கிராமபுற பள்ளிகளின் கல்வித்தரம்.கிராமபுறங்களில்(முக்கியமாக அரசு பள்ளிகளில்) உள்ள படிக்கும் பெருபான்மையான மாணவர்களின் கல்வி தரம் மிக மோசமாக உள்ளது. தற்போது தமிழகமெங்கும் கல்லூரிகள் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடங்க பட்டதாலும், ஏழை மக்களுக்கு பள்ளி இலவச கல்வி கிடைப்பதாலும், அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதால் ஏழைமக்களின் சேமிப்பு மூலம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடிவதாலும், அதை விட முக்கியமாக ஏழை மக்கள் தங்கள் குழைந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பல தியாகங்களை செய்வதாலும் கிராம புரங்களிளிருந்து ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. அவர்களை பள்ளி படிப்பில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய கிராம புற பள்ளிகள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். இதற்கு பல காரணம் உள்ளன, ஆசிரியர்களின் அலட்சியம்,முக்கியமாக ஆசிரியர்கள் நியமிக்க படாமல் இருப்பவை, அதை விட முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிலும் ஏதும் படிக்காமலேயே பாசாகி வந்து விடலாம் என்ற நிலமை. கடுமையான கஷ்ட்டதிற்கு நடுவில் தன் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். ஆனால் கல்வி தரத்தில் போட்டி போட முடியாததால் அவர்களால் நல்ல வேலைகளுக்கும் போட்டியிட்டு செல்ல முடியாத நிலை.அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடின் பயனையும் முந்தய தலைமுறையில் முன்னேறிய பெற்றோரின் பிள்ளைகளே அனுபவிக்கும் நிலை. நேற்று பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருக்கும் என் நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் தற்போது கிராம புறத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் தரம் பற்றிய கூறிய செய்திகள் மிக அதிர்ச்சியாக இருந்தது(அவர் கிராம புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று, கிராம புற மாணவர்களுக்கு உதவ பல முயற்சி எடுப்பவர். ஆனால் அவர் உதவ முன் வந்தாலும் அதை ஏற்று முன்னேற 90% மணவர்கள் தயாரக இல்லை என்பது கொடுமை)

இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

மற்றொரு செய்தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த செய்தி. இது சீனாவின் சமீபத்தய பொருளாதாரம் மற்றும் வணிப ரீதியான செயல்பாடுகள் பற்றியது.

சீனா தற்போது மூல பொருட்கள் அதிகம் உள்ள தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெரும் அளவு மூல பொருட்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்கிறது.இதில் குறிப்பிட தக்க நாடு பிரேசில். உலகளவில் மூலபொருட்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிப்பது பிரேசில். இங்கு தற்போது மூல பொருட்களோடு பெட்ரோலும் பெருமளவு கண்டு பிடிக்க பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை 100 மில்லியனுக்கும் குறைவாக இருந்த பிரேசிலுக்கான சீன முதலீடு இந்த ஆண்டு 10 பில்லியனை தாண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.உதாரணமாக சீனா, பிரேசிலின் எண்ணெய் கம்பெனியான பெட்ரோபிராசில் 10 பில்லியன் டாலரும் , இரும்பு கம்பெனியில் 1.25 பில்லியனும் முதலீடு செய்துள்ளது.மூல பொருட்களின் முதலீடு மட்டுமல்ல. இரயில் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள் என உயர் தொழில்நுட்ப துறைகளிலும் தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவிடம் அதிகம் இருக்கும் அன்னிய செலாவனி கையிருப்பு இதற்கு பெருமளவில் கை கொடுக்கிறது. சீனா அமெரிக்க பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்து வளர்ந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் வளரும் நாடுகளின் தொழிற்துறையிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

கீழ் காணும் வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்தால் இரு நாடுகளுக்கான வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று புரியும்.வேல் எனப்படும் பிரேசிலின் இரும்புதாது வெட்டி எடுக்கும் கம்பெனி சீனாவை சேர்ந்த இரு வங்கிகளிடமிருந்து 1.23 பில்லியன் கடன் வாங்க உள்ளது. இந்த கடன் மூலம் அது 12 மிக பெரிய கார்கோ கப்பல்களை வாங்கும். அந்த கப்பல்கள் சீனாவில், சீன தொழிலாளிகளால் தயாரிக்க படும். அவ்வாறு வாங்கிய கப்பல் பிரேசிலில் உற்பத்தி செய்த இரும்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய உபயோக படுத்தபடும்.

தற்போது உலகளவில் டாலர் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்து சீனா தன்னுடைய நாணயத்தின் அடிப்படையில் நடத்த முயற்சிகள் எடுக்க தொடங்கி உள்ளது. உலகளவில் பெருமளவில் மூல பொருட்களை உற்பத்தி செய்யும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளும், உலகளவில் உற்பத்தி தொழிலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும் தன் வர்த்தகத்தை முழுமையாக டாலரில் நடத்தாமல் சீனாவினுடைய நாணயத்தில் நடத்தினால் அதன் விளைவு உலக பொருளாதாரத்தில் மிக பெரியதாக இருக்கும்


சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய உற்பத்தி துறை தொழில் சீனாவுடன் போட்டி போட்டு கொண்டு வளர வேண்டிய நிலையில் உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு முக்கிய தேவை மனித உழைப்பு, மூல பொருட்கள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி. மனித உழைப்பு இந்தியா மற்றும் சீனாவில் எளிதாக கிடைக்கும். மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு "தெளிவான" திட்டமிடலுடன் செயல் படுத்துதல் உள்ளது என்பது பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தி தொழிலுக்கான அடிப்படை தேவையான் மூல பொருட்களை அடைய சீனா எவ்வாறு முயற்சி செய்கிறது என்று மேல் சொன்ன செய்தியில் பார்த்தோம். இந்தியா அது போன்ற பெரிய முயற்சிகளை எடுக்க வில்லை என்றால் வருங்காலத்தில் மூலபொருட்கள் பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் சீனா நோக்கி செல்ல தொடங்கிவிடும்.ஏற்கனவே பல தொழில் துறைகளில் சீனா மூல பொருட்கள் சப்ளையை இந்தியாவிற்கு தடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.'

இந்தியாவில் தொழில்மயமாக்கள் அறைகுறையாக நடைபெற்று பின் மீண்டும் உற்பத்தி தொழிற்துறை நலிவடைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். தொழில்மயமாக்கள் நடை பெரும் போது கிராமத்தில் உள்ள சிறு ,குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று நகர் நோக்கி தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து இருப்பார்கள். விவசாய கூலி தொழிலாளர்களும் நகர் நோக்கி வந்திருப்பார்கள். இதனால் கிராமபுரங்களில் நில உடமையின் அளவு அதிகமாகி, விவசாயியின் கையிருப்பு நிலத்தின் அளவு அதிகமாகும். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதும் அரிதாகும். தற்போது தமிழக கிராமத்தில் அந்த நிலை வர தொடங்கை உள்ளது. அதனால் விவசாயம் இயந்திர மயமாகும். அங்கு தொழிலாலர்களின் தேவையும் இருக்காது.சில காலம் கழித்து தொழில்துறை நலிவடைந்து தொழிலாளிகள் மீண்டும் கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றாலும் அங்கு வழி இருக்காது.அதன் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் பெரும்பாலோனோரை தொழிற்துறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என கூறி உள்ளார். தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?

--

Sunday, August 29, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு- அன்று கோவை பல்கலையில் நடந்த போராட்டம்


வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட பதிவு இது. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை அநியாயமாக உய்ரோடு கொளுத்தி எரிய செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி. அந்த நிகழ்வு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று கோவை வேளாண் பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தியும் அதை எவ்வாறு நடந்தது என்பதும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். அது பற்றி பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அந்த போரட்டத்தில் பங்கு பெற்றவன் என்பதாலும் அப்போது நடந்த செய்திகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன். இது எந்த கட்சியையும் குறை கூற எழுதபட்டதல்ல. ஆனால் உண்மையில் நடந்த செய்தி

இந்த துயர செய்தி நடந்து பல காலங்கள் ஆகி விட்டதால், அன்று நடந்த ஒரு சில நிகழ்வுகள் மறந்து இருக்கவும் ஒரு சில பிழைகள் இருக்கவும் சாத்தியகூறு உள்ளது. ஆனால்
தற்காலத்தில் நடக்கும் மாணவர் போராட்டம் எவ்வாறு தலைமை, வழி நடத்தல் மற்றும் தெளிவான குறிக்கோள் இல்லாமல் நடை பெறுகிறது என்றும் எவ்வாறு அரசியல் கட்சிகள் குறுக்கிடுகின்றன என்றும் அதிகாரம் எப்படி பயன் படுத்தபடுகின்றன என்பது பற்றியும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பிப்ரவரி 2ம் நாள் 2000ம் ஆண்டு அந்த துயர நிகழ்ச்சி நடந்த போது கோவை வேளாண் பல்கலையில் அனைத்து இளம் அறிவியற் (Bachelors) படிக்கும் மாணவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியே சென்றிருந்தனர். எனவே அங்கு இருந்தது
முதுகலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தான்.மாணவர்கள் மத்தியில் மாபெரும் துயரமும் மறுபுறம் கொந்தளிப்பும் இருந்தது. ஏதாவது போராட வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியவர்களோ அப்போதைய எதிர்
கட்சியினர். எனவே ஆளுங்கட்சி நடைவடிக்கை எடுக்க போவது நிச்சயம். அது மட்டுமன்றி போராட்டம் என்று போராடி என்ன கோரிக்கையை வைப்பது? ஆனாலும் உணர்வு ரீதியாக கொந்தளித்திருந்த மாணவர்கள் நீதி கேட்டு ஏதாவது போராட வேண்டும் என்ற வெறியில் இருந்தனர். மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.

ஆனால் போராட்டத்தை தலைமை ஏற்று, நூதனமான முறையில் வழி நடுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது முழுக்க முழுக்க மாணவர்கள் தான். ஆனால் அப்போது என்ன
கோரிக்கைகளை வைப்பது என்று முடிவாக இல்லை. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான மாணவர்கள் அறியாமலேயே ஒரு நிகழ்வு நடந்தது. மணவர்களில் ஒரு சிலர் கம்யூனிச கட்சிகளுடன் தொடர்பு இருந்தது(அந்த மாணவர்கள் போராட்ட களத்தில் முன்னனியில் இல்லை என்பது வேறு விஷயம்). அந்த மாணவர்களுக்கு கம்யூனிச மாணவர்கள் அமைப்பிலிருந்து தொலைபேசி வந்தது. அப்போது கை தொலைபேசி எல்லாம் இல்லை. மாணவர்களை தொடர்வு கொள்ள ஒரே வழி விடுதியில் இருக்கும் பொது தொலைபேசி தான். விடுதி பொது தொலை பேசி மூலம் மாணவர்களை அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் விடுதி தொலைபேசி முழுவது அரசாங்கத்தால் ஒட்டு கேட்க பட்டது அவர்களுக்கு அப்போது தெரியாது.

அப்போது கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க வுனருடன் கூட்டில் இருந்தனர். அது மட்டுமன்றி தமிழக சட்டமன்றத்திற்கான இடை தேர்தல் அப்போது நடை பெற இருந்த சமயம். தர்மபுரி சம்பவத்தால் மக்களிடம் அதிமுக எதிர்ப்பு அலை பரவ தொடங்கி இருந்தது. அந்த எதிர்ப்பு அலையை எப்படியாவது தணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர் எதிர்கட்சி கூட்டணியினர். அதனால் மிக பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பு அலையை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பியோ அல்லது
இடைதேர்தலை சிறிது காலம் தள்ளி போடவைப்பதோ அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.மேலும் பஸ் எரிப்பு விசாரனையை CBI வசம் ஒப்ப்டைக்க வேண்டும் போன்ற கோரிகைகளும் இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாணவர்களிடையே தொடர்பு
கொண்ட செய்தியை அறிந்தவுடன் ஆளும் அரசு தரப்பினர் உஷாராக ஆகினர். அது மட்டுமன்றி மாணவர் போராட்டமே எதிர் கட்சியினரின் தூண்டுதல் பேரில் தான் நடக்க உள்ளதோ என்ற சந்தேகம் ஆளும் தரப்பினரிடம் பரவ தொடங்கியது.

வழக்கமான மாணவர் போராட்டங்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இந்த போராட்டம் எதிர் கொண்டது. கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை விட்டு கல்லூரி விடுதியிலுருந்து வலுகட்டாயாமாக மாணவர்கள் வெளியேற்ற பட்டனர்.உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட மறுக்க பட்டன. (அப்போதைய விடுதி வார்டன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சில உதவிகளை செய்தார்) அப்போது போராட்டத்தில் ஈடுபட்டது முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க பட்டு போராட்டத்தை கைவிட அறிவுருத்தபட்டனர்.கல்லூரி எங்கும் போலீஸ்
குவிக்க பட்டு தீயணைப்பு வண்டி என அனைத்தும் கல்லூரியை சுற்றி நிறுத்த பட்டது.பல்கலையின் கதவுகள் அனைத்தும் மூட பட்டு அதை சுற்றியும் பல்லாயிரகணக்கான போலீசார் குவிக்க பட்டனர். வெளியிலிருந்து எந்த மாணவர்களோ அல்லது பொது மக்களோ
பல்கலை கழகத்தின் உள்வர தடை விதிக்க பட்டது பல்கலை கழகம் இருந்த தெருவே போலிசாரால் மறிக்க பட்டது. இதன் மூலம் பிற கல்லூரி மாணவர்களோ அல்லது மாணவர் அமைப்புகளோ போராடத்தில் ஈடுபடும் மாணவர்களை தொடர்பு கொள்வது தடுக்க பட்டது.கல்லூரி எங்கிலும் ஒரு சில புது முகங்கள் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் உளவு துறையை சேர்ந்தவர்கள். மாணவர்கள் அவர்களை ஒவ்வொருவராக விரட்டி அடித்து கொண்டு இருந்தார்கள்

இனி மாணவர்கள் பக்கம் வருவோம். போராட்டம் ஆரம்பித்தாகி விட்டது. இனி கோரிக்கைகளை தொகுக்க வேண்டுமே. போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி மாணவர்களிடையே விவாதிக்க பட்டது. ஒரு புறம் மாணவர்கள்(முக்கியமாக மாணவிகள்) உணர்ச்சி வசத்தில் இருந்தனர். மறுபுறம் எதிர்கட்சி சார்பு கொண்ட மாணவர்களோ மாணவர்களின் இந்த மனநிலையை நன்கு பயன் படுத்த தொடங்கினர். ஒரு சிலர் இடை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். ஒரு மாணவர் முதல்வர் நேராக கோவை பல்கலை கழகத்திற்கு வந்து போராட்ட மாணவர்களிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றார். (அப்போது முதல்வன் திரைப்டம் வந்த சமயம் என்று நினைக்கிறேன்). அது நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் கேட்டவுடன், கட்சி காரர்களின் திருமண விழாவுக்கு வரும் முதல்வர் இதற்கு ஏன் வர கூடாது? என்றார். பிறகு அது போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்க பட்டது. முதல்வர் வந்து நேரிடையாக பேசும் வரை போராட வேண்டும் என்று கோரினர்.இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், இந்த பிரச்ச்னையை தேர்தலுக்கு பயன் படுத்த கூடாது(அவ்வாறு பயன் படுத்தினால் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது மாணவர்களை கொன்று பிரச்ச்னையாக்க முயல்வார்கள் என்ற சந்தேகத்தால்), மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வேண்டும், நடு நிலையான விசாரணை வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்க பட்டன.அது தவிர பலகலை கழகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளும் இருந்தது. முதல்வர் நேரில் வர வேண்டும் என்பது தவிர மற்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தனர்.

ஆனால் முதல்வர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையால் போராட்டம் இழுத்து கொண்டே சென்றது. அப்போது த.மா.க மற்றும் பிற கட்சியினரும் இதை பயன் படுத்த முனைந்தனர். த.மா.கவின் உள்ளூர் தலைவர் மூலம் மாணவர்கள் ஆமோதித்தால் மூப்பனார் உடனடியாக மாணவர்களை சந்திக்க வர தயாராயிருப்பதாக் தெரிவிக்க பட்டது. மாணவர்கள் இதை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். அது மட்டுமன்றி ஒரு சில உள்ளுர் வாரிசு அரசியல்வாதிகள் இப்பிரச்ச்னைக்குள் நுழைந்து சமரசம் செய்து தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர். ஆனால் மணவர்கள் அதற்கும் ஒத்து கொள்ளவில்லை.

அப்போதைய துணைவேந்தர் கண்ணையன் பிரச்ச்னையை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தாலும், அவர் சசிகலா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கட்சிக்கு அவர் மேலும் சிறிய சந்தேகம் இருந்ததாக தெரிகிறது.அப்போது தீவிரமாக போரட வேண்டும் என்பதில் மாணவர்களை விட மாணவிகள் தீவிரமாக இருந்தனர்.போராட்டம் அப்படியே சென்று கொண்டு இருந்த போது கடைசியாக மாணவர்களில் ஒரு 10 பேரை தேர்ந்து எடுத்து அவர்கள் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.துணைவேந்தருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் குழு சனி ஞாயிறு விடுமுறைக்கு பின் முதல்வரை சென்னை கோட்டையில் சந்திப்பது என முடிவானது.பிறகு தான் பிரச்சனைகள் பின் புறமாக வர தொடங்கின. முதல்வரை சந்திக்க சென்ற 10 மாணவர்கள் வீட்டு விலாசமும் காவல் துறையினரால் சேகரிக்க பட்டு அனைவரின் வீட்டுக்கும் போலீசார் நேரிடையாக சென்றனர். மாணவர்களின் பெற்றோரிடம் போலீசார் நேரிடையாக அழுத்தம் கொடுக்க தொடங்கினர். போராட்டத்தை உடனடியாக முடிக்கவில்லை என்றால் ஏற்பட போகும் பின் விளைவுகளை(மிரட்டல்?) அவர்களிடம் சொன்னார்கள். அதன் விளைவு பெரும்பாலான பெற்றோர்கள் உடனடியாக கோவை கல்லூரி விடுதிக்கே வந்து மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

பிறகு மாணவர்கள் குழு தனி வேனில் சென்னை நோக்கி சென்றது. முன்புறம் பின் புறம் காவல் துறை பாதுகாப்பு வாகனங்களோடு வேறு யாரும் மாணவர்களை இடையில் சந்திக்காத படி வாகனம் சென்னை சென்றது. பேச்சி வார்த்தையின் போது மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்று கொள்ளபட்டன அல்லது பரிசீலனை செய்வதாக ஒத்து கொள்ள பட்டன. மாணவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்த கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது அவர் கூறியது-

நாங்கள் சாதனைகளை சொல்லி தான் ஓட்டு வாங்குவோமே தவிர
வேதனைகளை சொல்லி ஓட்டு வாங்க மாட்டோம்

இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவும் செய்தது.

இந்த சம்பவத்திலேயே மிகவும் சோகமான செய்திகள் சில.

தர்மபுரியில் பஸ்ஸில் மாணவிகள் எரிந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர , யாருமே காப்பாற்ற முன்வரவே இல்லை. மனித நேயம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியை மூவர் இறந்த செய்தியாகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பஸ்ஸில் இருந்த அனைத்து மாணவிகளையும் முழுவதுமாக எரிப்பதே இந்த செயலை நடத்தியவர்களின் நோக்கம். பஸ்ஸில் பின் புறம் முழுவதும் மாணவிகளின் பெட்டிகள் இருந்ததால் பின் புற கதவை திறக்க வழியே இல்லை. வன்முறை கும்பலோ பஸ்ஸின் முன் வாசம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு விட்டதால் முன் வாசல் வழியேயும் தப்ப வழி இல்லை. அப்போது அடுத்த பஸ்ஸில் இருந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் துணிச்ச்லான முயற்சியால் தான் மற்ற மாணவிகளை காப்பாற்ற முடிந்தது. பின் கதவின் கண்ணாடியை உடைக்க கூட அப்பகுதி பொது மக்களிடமிருந்து அவர்களுக்க உதவி கிடைக்க வில்லை.அந்த மாணவர்களின் துணிச்சலையும் முயற்சியையும் அளவிடவே முடியாது.

பேருந்தில் தர்மபுரி அருகே சென்று கொண்டு இருந்த போது ஜெயலலிதாவின் கோர்ட் தீர்ப்பு பிரச்சனை பற்றி தெரிந்தவுடன் அந்த வாகன ஓட்டுனர் பாதுகாப்பான பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தினார்.கலெக்டர்
அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தினாலும் பஸ் முழுமையாக கருகி எரியும் வரை தீயணைப்பு வண்டி அங்கு வரவே இல்லை.

கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை ஒரு பஸ்ஸிலும் மாணவிகளை ஒரு பஸ்ஸிலும் அமர்த்தி அழைத்து சென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்ள maturityகூட ஆசிரியர்களுக்கு இல்லாதது கொடுமை. மாணவ மாணவிகள் என்று பிரிக்காமல் பேட்ச் வாரியாக பிரித்து
இருந்தால் அந்த பஸ்ஸின் உள் இருந்திருக்க கூடிய மாணவிகளை மாணவர்கள் நிச்சயம் முழுமையாக காப்பாற்றி இருப்பார்கள்.

அப்போது போலீசார் நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.கதறிய வேளாண் கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது.
அந்த மாணவர்கள் கூறிய ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தனரா என்று தெரியவில்லை.


கோர்ட்டில் வன்முறை கும்பலின் பலவகை மிரட்டலையும் மீறி தைரியமாக சாட்சி சொன்ன பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் நெஞ்சுரம் அதசயிக்க தக்கது.

அதன் பிறகு இறந்த குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பல்கலை கழகம் சார்பில் சென்ற குழுவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தன் மகளை எறியும் தீயில் இழந்த அந்த குடும்பத்தினரின் கதறல் மிகவும் கொடுமையாக இருந்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக முதல்வருக்கு கோவை வேளாண் பல்கலை கழகம் மேல் ஏற்பட்ட கோபத்தை தவிர்க்க, புதிதாக கட்டபட்ட பட்டமளிப்பு விழா கட்டிடத்துக்கு "கலைஞர் அரங்கம்" என்று பெயர் வைக்க பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தின்
மேல் ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்தை அகற்ற மகராசி சிலை( மக - ராசி- ஜெயலலிதா மக ராசியை சேர்ந்தவர்) வைக்க பட்டது.

இந்த பதிவை எழுதி முடிக்கும் போது அந்த கொடும்பாவிகளுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட செய்தி வந்துள்ளது. நீதி இன்னும் இந்தியாவில் முழுமையாக சாகவில்லை!

--

Sunday, August 22, 2010

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

லாஸ் வேகஸ்

இது மண்ணில் மனிதன் நிர்மாணித்த சொர்க்கம்

அடர்ந்த பாலைவனத்திற்கு நடுவே ஒர் புதிய உலகம்

இங்கு வரும் மக்களை நேற்றைய நினைவிலிருந்தும் நாளைய கனவில் இருந்தும் மறக்கடித்து இன்றைய நினைவில் (இங்கு தங்கியிருக்கும் வரை) வாழ வைக்கும் இடம்

மதங்களால் பாவங்கள் என நிர்ணயம் செய்தவை அனைவற்றையும் மக்கள் சுதந்திரமாக செய்ய அனுமதி பெற்றுள்ள பாவ நகரம்(Sin City)

நாள் தோறும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியும் அழித்து கொண்டும் இருக்கும் இடம்

உலகின் உல்லாச தலை நகரம்(Entertainment Capital od World)



அமெரிக்க மக்கள் வேலை மற்றும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து சில நாட்கள் முழு சந்தோசமாக கழிக்க விரும்பும் இடம் லாஸ் வேகஸ். மக்கள் மகிழ்ச்சி கொடுக்க கூடியது என்று எதை பிரதானமாக நினைக்கிறார்களோ அது அனைத்தும் இங்கு கிடைக்கும். மது, மாது,மாமிசம்,சூதாட்டம்,கலை நிகழ்ச்சிகள்,உல்லாசம் மற்றும் பிரமாண்டம் அனைத்தும் உலகளவில் அதிகம் கிடைக்கும் இடம் என்றால் லாஸ் வேகஸை கூறலாம்.



(ஈபில் கோபுர உயரத்திலிருந்து இரவு நேர வேகாஸ்)





(ஸ்டிராட்டோஸ்பியர் உயரத்திலிருந்து பகல் நேர வேகாஸ்)

இந்த நகரின் சிறப்பே இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான சூதாட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் தான். லாஸ் வேகஸின் முக்கிய பகுதி முக்கிய ஸ்டிரிப்(Main Strip) என்று அழைக்க படும் வீதி தான். அந்த வீதியின் இரு ஒரங்களிலும் ராட்சஸ சூதாட்ட விடுதிகள் இருக்கும்.


ஒவ்வொரு விடுதியும் தனக்கென சில சிறப்பான கலை நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும். கலை நிகழ்ச்சி என்பது சிறந்த இசை நிகழ்ச்சியாகவோ, நகைச்சுவை நிகழ்ச்சியாகவோ அல்லது தனி திறமைகளை காட்டும் நிகழ்ச்சியாகவோ இருக்கலாம்.புளு மேன் காட்சி,சர்க் டியூ சொலி காட்சி, லயன் கிங் காட்சி போன்றவை இங்கு பிரபலம்.


அதே போல் ஒவ்வொரு விடுதியும் எதாவது ஒரு தீம் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஒவ்வொரு விடுதியும் பிரமாண்டத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போடும்.ஒவ்வொரு விடுதிக்கும் எதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.ஒரு சில விடுதிகளை பற்றி பார்ப்போம்.





MGM விடுதி சிங்கத்திற்கு பெயர் போனது. அங்கு எப்போதும் மக்கள் பார்வைக்காக நிஜ சிங்கம் வைக்க பட்டிருக்கும்.






லக்ஸார் விடுதியின் தீம் எகிப்து. அது பிரமாண்ட பிரமீடு வடிவில் கட்டபட்டிருக்கும். அதன் மேல் அமைக்க பட்டுள்ள விளக்கு பல மைல் தூரத்திற்கு வெளிச்சம் தரும். சில வருடங்களுக்கு முன் வரை அங்கு பண்டைய எகிப்து நாகரீகத்தை விவரிக்கும் விதம் அழகிய சிலைகள் இருக்கும். ஆனால் தற்போது அவற்றில் பெருமளவு அகற்றபட்டு மக்களை கவரும் பைக் போன்றவை வைக்க பட்டுள்ளது.இங்கு மனித உடல் மற்றும் டைடானிக் கப்பலின் நிஜ பாகங்களை கொண்ட கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.



எக்ஸ்காலிபர் விடுதி அரண்மனை தீமை கொண்டது.



மிக பெரிய பாலைவனத்தின் நடுவே அமைந்த இந்நகரில் உள்ள மாண்டலி பே விடுதியின் தீமோ கடல்(குடா?)!.இங்கு டால்பின் கண்காட்சி, கடல் சார்ந்த உணவு பொருட்களுக்கான சிறப்பான உணவகங்கள் மற்றும் செயற்கையாக அலை எழுப்பும் அழகிய கடல் ஒன்றையும் நிர்மானித்துள்ளனர்.

மற்ற விடுதிகள் மற்றும் சூதாட்டங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Tuesday, June 15, 2010

சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்


இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.

அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .

“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”

இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"

ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.

"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "

அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.

தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "

அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.

மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html


--

Sunday, April 04, 2010

அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் வெளி நாட்டவரின் பங்கு

நியுயார்க் டைம்ஸ்ல் தாமஸ் பிரெட்மென் பகுதியில் அவர் இன்று எழுதிய கட்டுரை . அமெரிக்க வேலைவாய்ப்பு பெருக்கத்தில் சிறு நிறுவனங்கள் பங்கு பற்றியும் வெளிநாட்டினரின் பங்கு பற்றியும் உள்ளது. அதில் உள்ள செய்தி படி பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்பு பெரும் பாலும் கீழை நாடுகளில் தான் உள்ளது???. அக்கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கு அழுத்தவும்

http://www.nytimes.com/2010/04/04/opinion/04friedman.html?hp

கடந்த வாரம் அவர் எழுதிய இந்த பதிவையும் படித்து பாருங்கள்


-

Wednesday, June 17, 2009

பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தின் Trailer

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களுக்கு எல்லாம் அதை திரைப்படமாக பார்ப்பது என்பது வாழ்வின் முக்கிய ஆசையாக இருக்கும்.

இந்த கதையை கமல் படமாக எடுக்க போவதாகவும் சீரியலாக வர போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது நாமும் ஆவலுடன் கத்திருந்ததுதான் மிச்சம்.

ஆனால் தற்போது Rewinda Movietoons என்ற கார்டூன் பட தயாரிப்பு நிறுவனம், பொன்னியின் செல்வன் கதையை கார்டூன் படமாக எடுக்கின்றனர்.
டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் மிகவும் நன்றாக வந்துள்ளது. நீங்களும் பாருங்களேன்




தமிழக வரலாற்று செய்திகளை விவாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பொன்னியின் செல்வன் என்னும் யாகு குழுமத்தில் இணைந்தால் உங்கள் ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்


--

Wednesday, June 03, 2009

உலகம் இவர்கள் கையில்!- பில்டெர்பெர்க் குழுமம்

உலகில் நடக்கும் மற்றும் நடைபெற போகும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு யார் காரணம்? இந்த கேள்வியை சாதாரண மக்களிடம் கேட்டால் பொது மக்கள் என்ற விடை தான் கிடைக்கும். இடது சாரி சார்புடைய மக்களிடம் கேட்டால் அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு அரசாங்கம் என்பார்கள். சோஷியலிஸ்டுகளிடம் கேட்டால் பணத்தாசை பிடித்த பன்னாட்டு கம்பெனியினர் என்பார்கள். ஆனால் சர்வ தேச நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களை கேட்டால் அவர்களது பதில் புதுமையானதாக இருக்கும். அந்த புதுமையான பதில் தான் பில்டெர்பெர்க் குழுமம். என்ன இது உங்களுக்கு புதுமையான பெயராக இருக்கிறதா?

முதலில் பில்டெர்பெர்க் குழுமம் என்றால் என்ன என்று பார்ப்போம். இது மேலை நாட்டு அரசாங்கம், மிகபெரிய வங்கி,கம்பெனிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அதிகார வர்க்கங்களில் இருக்கும் ஒரு சில முக்கியமான புள்ளிகளின் அதிகார பூர்வமற்ற குழுமம். 1954ல் மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்பு அலைகளை பற்றி ஆராய முதன் முதலாக நெதர்லாந்து நாட்டில் உள்ள பில்டெர்பெர்க் என்ற உணவகத்தில் கூட்டபட்டதால் இதற்கு பில்டெர்பெர்க் குழுமம் என்ற பெயர் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,வங்கி நிறுவனர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனியை சேர்ந்தவர்கள் என சுமார் 150 பேரை கொண்ட குழுமம் இது.இதன் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களும் மிகவும் ரகசியமாக வைக்க படுகிறது.இதில் கலந்து கொள்வர்களின் முக்கியத்துவமும்,அதன் ரகசியம் காக்கும் தன்மையாலும் அந்த கூட்டத்தில் நடைபறும் செய்தி பற்றி பலவாறாக ஊகங்களும், புரளிகளும் வெளிவரும். பில்டெர்பெர்க் குழுமம் என்பது அதிகார பூர்வமற்ற குழுமமாதலால் அது பற்றி வரும் செய்திகள் பற்றி யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை .

இந்த வருடத்திற்கான பில்டெர்பெர்க் கூட்டம் மே மாதம் 14 - 17 வரை கிரீஸ் நாட்டில் நடந்தது. இந்த கூட்டத்தின் கரு பொருள் உலகின் தற்போதய பொருளாதார மந்த நிலையை குறுகிய காலத்தில் முடிப்பதா? அல்லது இதனை நீண்ட நாட்களுக்கு இழுப்பதா? என்பதுதான் என்று கூறபடுகிறது. உலகில் உள்ள முக்கியமான அறிவு ஜீவிகள் ஒன்று கூடி உலகில் உள்ள பிரச்சனைகளை நாடுகளின் எல்லைகளை தாண்டி சிந்திப்பதன் மூலம் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாக கூறபடுகிறது.ஆனால் பெரும்பான்மையானோரின் கருத்தோ, அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தை நாடுகளை தாண்டி உலக அளவில் குவித்து அவற்றை தங்கள் கட்டு பாட்டில் எடுப்பதுதான் இவர்களது நோக்கம் என்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை உருவாக்கி ஐய்ரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகாரத்தை இந்த யூனியனுக்கு மாற்ற முயற்சி செய்வது இக்குழுவின் முயற்சி என்றும் பேச்சு உள்ளது.

இந்த வருட கூட்டத்தில் உலக அளவில் மத்திய வங்கி உருவாக்குவது, IMF இன் பங்கை விரிவாக்குவது மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவற்றை பற்றியும் பேசியதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளன.
“உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்‘ என்ற புதிய முழக்கம் எந்த அளவு வெற்றி பெரும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


--

Friday, May 29, 2009

மன்மோகன் சிங் இனிமேல் இதை மட்டும் செய்ய வேண்டாம்

20,000 மக்களை சில நாளில் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட்டு தன் மன சாட்சியை கழற்றி வைக்க முடிவெடுத்தது மிகவும் கண்டிக்க தக்க செயல். இத்தனை நாட்களாக பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மேல் நாட்டு அரசாங்கத்தையும், மேல் நாட்டு கம்பெனிகளையும் பற்றி ஆப்ரிக்க ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி பல காலம் பேசினோம். தற்போது அதைவிட மோசமான செயலை இந்தியா,சீனா போன்ற சோசியலிச நாடுகள் செய்து வருகிறது. மேலை நாடுகள் இவ்வாறு தவறு செய்யும் போதாவது அங்குள்ள மீடியா மற்றும் சிறு பிரிவினர் அந்த செய்தியை அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்வர். ஆனால் இந்திய பெரும்பான்மை மீடியாக்கள் இந்த செய்தியை கையாண்ட விதம் அனைத்து இந்தியரையுமே தலை குனிய செய்கிறது.

இந்த மனித பேரவலத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கு பல கோடி பெருமான காண்டிராக்ட்கள் இலங்கையில் கிடைக்கலாம். அதனால் பல கோடி பெரும்பாலான பணம் ஆட்சியாலர்களுக்கும், கட்சிக்கும்,பின்னனியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கிடைக்கலாம்.



இந்தியரின் பல கோடி பணத்தை லஞ்சமாக பெற்ற குவாட்ரோச்சி போன்ற ஆயுத இடை தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயலும் போது அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளை கண்டு மனம் உருகும் ஜீவ காருண்ய சீலரான மன்மோகனுக்கு பல்லாயிரம் மக்கள் கொல்ல படும் போதும் அதற்கு அவர் நேரிடையாக மற்றும் மறைமுகமாக உதவும் போது மட்டும் மன உளைச்சல் வராதது யாருக்கும் புரியாத புதிர்.

இதற்கு தனி மனித வன்மம்,ராஜ தந்திரம், பேராசை என எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இனி தயவு செய்து காந்தி படத்துக்கு மட்டுமாவது அஞ்சலி செலுத்தாமல் இருக்கட்டும். காந்தியின் அற வழி கொள்கையை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டு அவர் படத்துக்கும் அவர் சமாதிக்கும் மட்டும் உலகை ஏமாற்ற அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

--