Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Monday, December 01, 2014

பெட்ரோல் விலை அரசியல்

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் மதிப்பானது பெருமளவில் குறைந்து வருவது எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் , பொதுமக்களையும் நிம்மதி அடைய செய்துவருகிறது. இந்த விலை இறக்கத்திற்கான காரணத்தையும் அதற்கு பின் இருக்கும் அரசியலையும் பார்த்தால் இந்த விலை குறைப்பு நிரத்தரமா? என்று புரிந்து கொள்ள முடியும். சர்வதேச அளவில் 60% கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒன்று சேர்ந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பை (OPEC) ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பில் சவுதி அரேபியா, எமிரேட்டுகள், இராக், இரான் போன்ற அரபு நாடுகளோடு  வெனிசூவேலா,ஈக்வேடார் போன்ற பிற நாடுகளும் உள்ளனர். உலகின் பெரும்பான்மையான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள் இவை என்பதால் கச்சா எண்னெய் விலை நிர்ணயிப்பதில் இந்த நாடுகளின் பங்கு முக்கியமானது ஆகும். சர்வதேச மார்க்கெட்டில்  தேவை - உற்பத்தி - விலை நிர்ணயம் போன்ற மார்கெட் விதிகளுக்கு ஏற்ப  கச்சா எண்ணெயின் விலையை  நிர்ணயிக்க விடாமல் தனது உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு கச்சா எண்ணெயை நிர்ணயிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.


பெட்ரோல் விலை கட்டுபாடு
2000ம் ஆண்டுகளின் தொடகத்தின் போது உலக பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணெயின் தேவையை அதிகரித்தது. அதனால் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெருமளவு அதிகரித்தது.இந்த அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. எனவே பெருமளவு கச்சா எண்ணெய் விலை குறைப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அளவு கச்சா எண்ணெயின் விலை குறையவில்லை. அதற்கு காரணம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்தது தான்.  கச்சா எண்ணெயின் தேவை மார்கெட்டில் குறைந்த போது தனது உற்பத்தியை குறைத்து விலை குறைவை கட்டுபடுத்தியது.அதன் விளைவாக மோசமான பொருளாதாரத்திலும் அதிக எண்ணெய் விலை இருந்துததால் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளும் பொதுமக்களும் பெருமளவு அவதிபட்டனர். நாடுகளின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு பிரச்சனையும் ஏற்பட்டது.

இன்று புதிய நாள்
கடந்த சில ஆண்டுகளாக  உலகளவில் எதிர்பார்த்த அளவு பொருளாதார  வளர்ச்சி அடையவில்லை. அதன் விளைவாக கச்சா  எண்ணெயின் விலையும் குறைய தொடங்கி உள்ளது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல் தற்போதும் OPEC அமைப்பு உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெயின் விலையை எற்றி விடுமா என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது கூடிய அமைப்பின் மாநாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதில்லை என்று முடிவெடுத்தது அனைவரது ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இதன் பின்னனியில் உள்ள பொருளாதார அரசியல் காரணங்களை பற்றி பார்ப்போம்.

கடந்த ஐந்தாண்டுகளாக சர்வதேச அளவில் அமைதியாக மாபெரும் மாற்றம் களிப்பாறை எரிவாயு/களிப்பாறை  எண்ணெய் என்ற பெயரில் நடந்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது , அமெரிக்காவில்   களிப்பாறையினுள் புதைந்துள்ள எரிவாயு மற்றும் எண்ணெயை பொருளாதார ரீதியாக லாபத்துடன் வெளிக்கொணறும் தொழில்நுட்பங்கள் வெளிவர தொடங்கின.  களிப்பாறை கச்சா எண்ணெயும் பெருமளவு எடுக்க பட்டது. அமெரிக்கா சுமார் 4 மில்லியன் பேரல் எண்ணெயை தினமும் புதிதாக இந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது. இந்த தொழில்நுட்பம்   சுற்றுபுறசூழல் பிரச்சனை  ஏற்படுத்தினாலும் அதிகரித்து வந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் பொருளாதார ரீதியாக லாபமடைய அதிக எண்ணெய் எடுக்க பட்டு வருகிறது.களிப்பாறை தொழில்நுட்பம் மூலம் எணெணெய் எடுக்க பேரல்  ஒன்றுக்கு குறைந்த பட்சமாக பேரலுக்கு $40ம் அதிக பட்சமாக $110ம் தேவைபடுகிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் செய்தது போல் எண்ணெய் உற்பத்தியை அரபு நாடுகள் குறைத்து அதிக எண்ணெய் விலையை சர்வ தேச சந்தையில் நிலை நாட்டினால் என்ன நிகழும் என்பதற்கு வரலாற்று சான்றும் உள்ளது.

1980களின் நடுவில் கச்சா எண்ணெயின் விலை இது போலவே குறைந்தது. அப்போது அரபு நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி பிடிக்க முயன்றன. அனால் அதற்கான விளைவுகள் வேறு மாதிரியாக இருந்தது. எண்ணெய் விலை உயர்வதற்கு பதில் அமைப்பு OPEC அல்லாத பிற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து கொள்ள ஆரம்பித்தன.அதன் விளைவாக சர்வதேச கச்சா எண்ணெய் மார்கெட்டில் பிற நாடுகளின் பங்கு அதிகரித்தது.அரபு நாடுகளை பொருத்தவரை தற்போது எண்ணெய் உற்பத்தியை குறைத்தால் வரலாறு திரும்பி அமெரிக்க களிப்பாறை எண்ணெய் நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி மற்றும் சர்வதேச அளவிலான அதன் பங்கு அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்துமோ என்று அஞ்சுகிறது.குறுகிய காலத்திற்கு கச்சா எண்ணெயின் விலையை குறைவாக வைத்திருப்பதன் மூலம் களிப்பாறை எண்ணெய் உற்பத்தியை லாபமில்லாதாக மாற்றி அதற்கு வரும் முதலீடுகளை  குறைத்து  அந்த எண்ணெய் உற்பத்தி தொழிலுக்கு முட்டுகட்டை போட வாய்ப்புள்ளதாக  கருதுகிறது.

அரசியல்
பெரும்பாலான OPEC நாடுகள் தங்களது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க அதிக அளவு கச்சா எண்ணெய் விலையை நம்பி உள்ளனர். ஆனால் இந்த  தேவையானது ஒவ்வொரு நாட்டிற்கும் தனது பொருளாதரத்தை பொருத்து வெவ்வேறாக உள்ளது. உதாரணமாக குவைத், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் குறைவான கச்சா எண்ணை விலையிலேயே தனது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க முடியும். அதுமட்டுமின்றி தங்களிடம் உள்ள வெளிநாட்டு கரன்சி சேமிப்பு மூலம் பல வருடங்களுக்கு  குறைந்த எண்ணெய் விலையை தாக்கு பிடிக்க முடியும். ஆனால் அரசியல் ரீதியாக எதிரியாக கருதபடும் ஈரான், ஈராக் போன்ற நாடுகள் நிலை குறைவான கச்சா எண்ணெய் விலையால் பலவீனமடையும். தங்களது நாட்டின் மக்கள் நல திட்டங்களை குறைத்து பட்ஜெட் பற்றாகுறையை சமாளிக்க வேண்டும்.அது நாட்டின் பொருளாதாரம், அரபு நாடுகளின் அதிகார சமநிலை போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்

எது எப்படி  இருந்தாலும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பு ஒட்டு மொத்த மகக்ளின் வாழ்க்கை தரத்தில் சிறிது காலத்துக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த பலனை அதிக அளவு அனுபவிக்கும் வகையில் குறைந்த விலையில் எண்ணெயை வாங்கி சேமித்து வைக்க வசதி இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.






Tuesday, August 12, 2014

இந்தியாவில் Pepsiயின் வரவேற்கதக்க முயற்சி

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்யும் வட மாவட்டங்கள் பலவற்றில் முந்திரி பரவலாக பயிரிட படுகிறது. தானே புயல், குறைவான விளைச்சலை கொடுக்கும் ரகங்கள், முறையான முதல்லிடு இன்மை போன்ற பல பிரச்சனைகளால் முந்திரி விவசாயம் பெரிதும் பாதிக்க பட்டது. சில ஆண்டுகள் முன் வரை முந்திரி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கேரள மாநிலத்தவர் மற்றும் இடை தரகர்களால் முந்திரி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கபட்டு இருந்தார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது முழுவதும் கேட்காமல் முந்தி கொண்டு பேசுபவர்களை முந்திரி கொட்டை என்பது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு நினைக்க தோண்றலாம். மற்ற பழங்களில் எல்லாம் பழத்திற்கு உள் தான் கொட்டை இருக்கும். ஆனால் முந்திரி பழத்தில் மட்டும் பழத்தை முந்தி முந்திரி கொட்டை வெளியில் நீட்டி இருக்கும். அதனால் தான் அந்த வழக்கம் வந்தது.

நன்றி Wiki
முந்திரியை பொருத்த வரை முந்திரி பருப்பு நல்ல விலை பொருளாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு பருப்பிறிகும் மேல் இருக்கும் முந்திரி பழம் மிக பெரிதாக இருக்கும். இதன் சுவையும் நன்றாக இருக்கும். இதற்கு சிறிது உவர்ப்பு தன்மை உள்ளதால் இதில் உப்பு தடவி சாப்பிடலாம். இதன் சுவையே தனி.ஆனால் இந்த பழத்தை பரித்த உடனே உண்ண வேண்டும். இல்லை என்றால் நொதித்தல் ஏற்பட்டு வீணாகி விடும்.இதன் காரணமாக முந்திரி பழத்தை விவசாயிகள் உபயோக படுத்தாமல் அழித்து விடுவார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் போது பல்கலைகழகங்கள் எதாவது செய்து இந்த முந்திரி பழத்தை மற்றும் விளைபொருளாக மாற்றி விட்டால் முந்திரி விவசாயம் மிகவும் லாபகரமானதாக மாறிவிடும் என்று பேசி கொண்டிருப்போம்.அப்போது ஆராய்ந்த போது கோவாவில் முந்திரி பழத்திலிருந்து தயாரிக்க படும் Feni என்ற மது பானம் மிகவும் பிரபலமானது என்றும் கோவா பகுதி விவசயிகள் அதனால் ஓரளவு பயனடைகிறார்கள் என்றும் படித்தோம்.தமிழ்நாடு அரசும் இது போன்ற முயற்சி எடுத்தாலோ அல்லது இந்தியாவில் இருக்கும் மது பான கம்பெனிகள் தமிழகத்தில் இந்த ஆலை அமைத்தால் முந்திரி விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என்று பேசி கொண்டு இருப்போம்.

முந்திரி பழத்திலிருந்து வேறு எந்த உணவு பொருள் எடுக்கும் முயற்சி பெரிய அளவில் எடுக்க பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. தற்போது
பெப்சி நிறுவனம் இந்த முந்திரி பழத்திலிருந்து பழச்சாறு எடுக்க முயற்சி செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த முந்திரி பழ சாறு உபயோகம் உள்ளதை பார்த்த பெப்சி நிறுவனத்தினர் இதை பெரிய அளவில் கொண்டு செல்ல முடிவி செய்துள்ளனர்.பெப்சி நிறுவனம் முந்திரி பழத்திலிருந்து மதுபான வகை தயாரிக்காமல் பழச்சாறு தயாரிக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. பழத்தை பறித்த 24 மணி நேரத்தில் பத படுத்தி சாறு எடுக்க வேண்டும்.அதற்கு கிளிண்டன் தோன்டு நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளனர். கிளிண்டன் தொண்டு நிறுவனத்தின் உதவியால் உருவாக்கபட்ட Acceso Cashew Enterprise என்ற நிறுவனம் தற்போது கோவா பகுதியில் சிறு விவசாயிகளிடமிருந்து  முந்திரி பழத்தை வாங்க தொடங்கி உள்ளது.இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு 2.50 - 3 ரூபாய்க்கு முந்தரி பழத்தை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் 20% கூடுதல் லாபம் கிடைக்கிறது.

முந்திரி பழத்தில் வைட்டமின்கள், பிற சத்துக்கள் மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும் தன்மையுள்ள பொருட்கள் இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும்  முறையாக விளம்பர படுத்தினால் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகளில் மிக பெரிய சந்தையை உருவாக்க கூடிய சாத்தியகூறு உள்ளது ( அக்காய்பெரிக்கு சந்தையை உருவாக்கியது போல்) . இந்தியாவின் சிறு மற்றும் பெரிய குளிர்பான கம்பெனிகளை அழித்தது என்று பெப்சியை விமரிசித்தவர்கள், பல்லாண்டு காலமாக வீணாகி கொண்டிருந்த  முந்தரி பழம் போன்ற வற்றை  முறையாக பத படுத்தி பழசாறாக மாற்ற முயற்சி எடுக்காத அன்றைய இந்திய பெரு வணிக நிறுவனங்களை பற்றி விமர்சித்து  பேசுவது இல்லை.விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தி கொடுக்கும் பெப்சி நிறுவனத்தின் இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி இந்த முயற்சி தற்போது கோவாவில் தான் ஆரம்பிக்க பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மற்றும் தமிழக முந்திரி விவசாயிகள் இந்த முயற்சியை தமிழகத்திலும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

Tuesday, May 20, 2014

மோடியை நம்பியிருக்கும் ஜப்பான் கம்பெனிகள்

மோடியின் வரவை பாக்கிஸ்தான், இலங்கை என்று  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு  விதமாக கணக்கிடுகிறது. மற்ற நாடுகள் எப்படி கணக்கிட்டாலும் இந்தியா தற்போது கவனிக்க வேண்டியது ஜப்பான் கம்பெனிகள் இந்தியா மீது காட்டும் ஆர்வம்.பொதுவாக மூலதனம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலை நாடுகளை தான் எதிர்பார்ப்போமே! ஏன் ஜப்பான் மீது இந்த ஆர்வம் என்று எண்ண தோன்றும்.

கடந்த சில ஆண்டுகளாக சீனா மற்றும் ஜப்பானிடையே` அரசியல்  உறவு மிகவும் நலிந்து வருகிறது. கிழக்கு சீன பகுதியில் உள்ள சில ஜப்பானிய தீவுகள் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது.கடந்த 2012ம் ஆண்டு சீனாவில் உள்ள  ஜப்பானிய வணிக ஸ்தாபனத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது.

ஜப்பானின் மிகப்பெரிய தொழில்  நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழில் நிறுவனங்களை மலிவான உற்பத்தி செலவுக்காக சீனாவில் வைத்திருந்தன. தற்போது சீனா - ஜப்பான் உறவு சீர்குலைந்து வருவதால் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளின் நிலை கேள்விக்குறையதாக போக வாய்ப்புள்ளதால் மாற்று வழியை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக scalability அதிகம் உள்ள நாடு இந்தியா தான்.

ஜப்பானிய கம்பெனிகள் எளிமையான முதலீடு, முதலீட்டிற்கு பாதுகாப்பு,  எளிமையான தொழிலாளர் சட்டங்கள் (???),முதலீட்டுக்கான ஊக்கதொகை, எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படை கட்டுமான வளர்ச்சி போன்றவற்றை மோடியிடமிருந்து எதிர்பார்க்கிறது.

மேற்கூறிய எந்த மாற்றத்தை மோடி  ஏற்படுத்த தொடங்கினாலும் உற்பத்தி தொழிற்துறையில் ஜப்பானிய தொழிற்நிறுவனக்களின் முதலீட்டை அதிகளவு எதிர்பார்க்களாம்.

Sunday, March 09, 2014

நாணயம் இல்லாத நாணயம்

கடை தெருவில் காய்கறி வாங்கும் போது  பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள் முழுதும் உபயோக படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்கு தெரியாமல் யாரால் எவ்வாறு பல மடங்கு குறைக்க படுகிறது என்றோ? நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்க படுகிறது என்பது பற்றியோ சிந்திப்பதில்லை.நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்கு ஈடாக தங்கத்தை வைத்து கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது  பொருளாதாரம் சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில் பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நேர்மையற்ற அரசாங்கத்தின் கையில் இந்த கடன் அடிப்படையிலான பணம்  என்னும் ஆயுதம் கிடைத்தால் என்ன  நடக்கும் என்பதை தான் இந்தியா கடந்த சில வருடங்களாக பார்த்து கொண்டுள்ளது..பணவீக்கம் என்ற பெயரில் இந்த தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கவும், வரைமுறையற்ற கடன் என்ற பெயரில் வருங்கால  சந்ததியினரை அடிமை சமூகமாகவும் மாற்றவும் கூடிய சாத்திய கூறுகளை நாம் இப்போது காண்கிறோம்.

வரவு எட்டணா! செலவு பத்தணா!

ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலங்களில் உள்ளது போல் தான் நாட்டிற்கும் வரவு மற்றும் செலவு உண்டு. நாட்டிற்கு வரவாக வரி , பொது சொத்துகளிலிருந்து (இயற்கை வளம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) வருமானம் என பல  வகைகளில் வருமானம் வருகிறது. அரசு ஊழியர்கள் சம்பளம், அடிப்படை கட்டுமான வளர்ச்சி, வளர்ச்சி திட்டங்கள்மானியங்கள், ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, இலவச திட்டங்கள் என பல வகையிலான செலவீனங்கள் உள்ளன.வரவு மற்றும் செலவை திட்டமிட ஒவ்வொரு அரசாங்கமும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். வரவை விட செலவு அதிகமாகும் போது கடன் வாங்க வேண்டியுள்ளது. நம்முடைய வீட்டு பட்ஜெட் என்றால் நாம் வாங்கும் கடனை நாம் திரும்ப செலுத்தியாக வேண்டும் என்று ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவு செய்வோம்.ஆனால் அரசில் இருப்பவர்களுக்கோ, எவ்வளவு கடன் வாங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போகாததால் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கி குவிக்கிறார்கள்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வரவு செலவு கணக்கு பற்றி பார்ப்போம். பொதுவாக கடன் வாங்க "விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்" என்று சொல்வார்கள். அது போல நாட்டின் பொருளாதார வளத்திற்கு ஏற்றவாறு   கடன் வாங்க வேண்டும். எனவே அரசின் நிதி பற்றாகுறை அந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பில் (GDP) எத்தனை சதம் உள்ளது என்று பார்த்தால் அது வாங்கிய கடன் எவ்வளவு என்று புரிய வரும்.. கடந்த ஆறு ஐந்து வருடங்களில் அரசின் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் சுமார் ஆறு சதவித அளவில் உள்ளது..நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நம்பி பற்றாக்குறையை அதிகரித்து கொண்டே செல்லும் அரசாங்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் அதற்கு ஏற்றவாறு செலவீனங்களை குறைப்பது இல்லை. அது மிக பெரிய கடன் சுமைக்கு இட்டு செல்கிறது.. அது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரமும் வரி வருவாயும் அதிகரிக்கும் போது, அந்த அதிக வருமானத்தை கொண்டு  கடனை அடைக்காமல், புதிய கடனின் அளவை மட்டுமே அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.

இந்த கடனின் அளவை அறிந்து கொள்ள மற்றொரு அளவீட்டை பார்ப்போம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை விட எத்தனை சதவீதம் அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்று மேலே உள்ள வரை படம் விளக்குகிறது. அதாவது 2010ம் ஆண்டு வருமனம் 100 ரூபாய் என்றால் செலவு 173 ரூபாய் செய்துள்ளது அரசு. 2008 ம் ஆண்டு வாக்கில் மேற்கத்தைய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இல்லாமலேயே இந்த செலவீனங்கள் என்றால் நாடு எங்கு செல்கிறது என்று நினைத்து பாருங்கள்.

அன்னிய செலாவணி சமசீரற்ற நிலை

அரசாங்கத்தின் வரவு செலவு மற்றும் பற்றாக்குறையை பார்த்தோம். அடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நிலையை பார்ப்போம். ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான பொருளை இறக்குமதியும், பிற நாடுகளுக்கு தேவையான பொருளை ஏற்றுமதியும் செய்கிறது. இந்த வரவு செலவிலும் ஒரு சம நிலை வேண்டும். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அங்கும் ஒரு சமமற்ற நிலை நிலவுகிறது.
  கீழே உள்ள வரை படம் , இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி பற்றாக்குறையை மொத்த் உற்பத்தி திறனுடன் ஒப்பிட்டு காட்டுகிறது.
இதற்கு பெட்ரோல் விலையேற்றம், மக்களுக்கு இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை இழப்பு (தங்க இறக்குமதி), ஏற்றுமதி வளர்ச்சி குறைவு போன்றவை முக்கிய காரணம்.இந்த பற்றாக்குறை பணத்தை பெரும்பான்மையாக டாலரில் ஈடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுண்டு

அரசங்கம் தன் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் வாங்குகிறது. சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் மற்றும் வேறு பல பொருளாதார சாதனங்கள் கொண்டு கடன் வாங்குகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள்  மற்றும் பல முதலீட்டு நிறுவனங்கள் இந்த கடனை வாங்குகின்றன. இந்த கடன் பத்திரங்கள் சந்தையில் பிற பொருளாதார சாதனங்கள் போல் விற்க படும். இந்த கடன் பத்திரத்திற்கு அரசு வட்டி செலுத்த வேண்டும்.

 பல லட்சம் கோடி கடனை அரசாங்கம் பொது சந்தையில் வாங்கும் போது அங்கு முதலீடு செய்பவர்களின் மொத்த பணமும் அரசாங்கத்துக்கு போக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி முதலீட்டிற்கு தயாராக  உள்ள பணத்தின் அளவு மிக குறைவாகவும், முதலீட்டை ஈர்க்கும் கடனின்  அளவு மிக அதிகமாகவும் ஆகும் போது தேவை - அளிப்பு (Demand - Supply) இடையே ஒரு சமசீரற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் விளைவாக அரசங்கம் வாங்கும் கடனுக்கு வட்டி அதிக அளவு செலுத்த வேண்டி இருக்கும். ஒவ்வொரு வருடமும் அரசு தனது கடனுக்கான வட்டிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தால், வரும் காலத்தில் பட்ஜெட்டின் போது அரசுக்கு செலவிட கிடைக்கும் பணத்தின் அளவு பெருமளவு குறையும்.அது மட்டுமின்றி அரசாங்கமே தன்னுடைய கடனுக்காக சந்தையில் இருக்கும் பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டால், தனது தேவைக்கு கடன் வாங்கும் பிற தனியார் துறை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்களின் வட்டி விகிதம் கட்டுபடியாகாத அளவிலோ அல்லது கடனே கிடைக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. எனவே அரசு தனது கடனுக்கான ஆதாரத்திற்கு வேறு ஆதாரத்தை பார்க்க வேண்டியுள்ளது.

அங்குதான் பிரச்சனையின் பரிமாணம் மிக பெரிய அளவில் அதிகரிக்கிறது. நமக்கு கடன் வாங்க மற்றும் பிற பொருளாதார பரிவர்த்தனைகள் செய்ய வங்கியாளர்கள் இருப்பது போல் அரசங்கத்துக்கும், நாட்டிற்கும்   ஒரு வங்கி உள்ளது. அது தான் இந்திய ரிசர்வ் வங்கி. அது நாட்டின் பண புழக்கம், பண வீக்கம், வட்டிவிகிதம், வங்கித்துறை மற்றும் நாணய மாற்று விகிதம் போன்றவற்றை கட்டுபடுத்துகிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள மிக பெரிய அதிகாரம், பணத்தை தானே அச்சடிக்கலாம்.இது போல அரசாங்கம் கட்டுக்கடங்கா கடன் பிரச்ச்னையை ஏற்படுத்தும் போது மத்திய ரிசர்வ் வங்கி தன் செயல்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும். திறந்த சந்தை பரிவர்த்தனை (Open Market Operation) மூலம் சந்தையில் உள்ள அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க ஆரம்பிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Quanitative Easing என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் கடனை காப்பீட்டு நிறுவனங்கள் வாங்கும் போது மக்கள் காப்பீடு செய்வதற்கு மாதா மாதாம் கொடுக்கும் பணத்திலிருந்து வாங்குவார்கள். மற்ற பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது முதலீட்டாளர்களின் பணத்தை கொண்டு வாங்கும். மிக பெரிய கடனை வாங்கும் அளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா?கடனை வாங்க  பணத்தை பெற ரிசர்வ் வங்கி  கடின படவில்லை. தாங்களே அச்சிட்டு கொள்ளலாம். அது தற்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் அச்சிட பேப்பருக்கு கூட செலவு செய்ய வேண்டியதில்லை. கணிணி மென் பொருளில் ஒரு சில என்ட்ரிக்கள் போட்டால் மட்டும் போதும்! பணம் தயாராகி விடும்.


கடந்த ஐந்தாண்டுகளில் ரிசர்வ் வங்கி இது போல் உற்பத்தி செய்த பணத்தை பார்ப்போம். மேலே உள்ள வரை படத்தை பார்த்தால் அரசின் கடனில் எந்த அளவு பணத்தை புதிதாக அச்சிடுவதன் மூலம்  பெற்றுள்ளது என்று தெரியும். சராசரியாக அரசு தனது செலவில் சுமார்  25 சதவீதத்தை புதிதாக அச்சடிப்பதன் மூலம் பெற்றுள்ளது. பணத்தை  உருவாக்குவது எவ்வளவு எளிதாக இருக்கிறதே. ரிசர்வ் வங்கி பேசாமல் பணத்தை அதிக அளவு அச்சடித்து அனைவருக்கும் மாதா மாதம் கொடுத்தால் வறுமையே இருக்காதே என்று நினைக்க தோன்றும். உண்மையில் பார்த்தால் தற்போது பணமும் சந்தையில் ஒரு வித விலைபொருள் தான். எப்போது எல்லாம் பெரிய அளவில் புதிய பணம் சந்தையில் புழங்க விட படுகிறதோ அப்பொழுதெல்லாம் சந்தையில் உள்ள பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.இது பணத்தின் மதிப்பை குறைத்து பணவீக்கத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.

எங்கே போகும் பாதை?
பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டினால் பல தீமைகள் உள்ளன.

1.  ஒவ்வொரு ஆண்டும் அரசின் கடன் அதிகரித்து கொண்டே வரும் போது அந்த கடனுக்கு வட்டியாக தர வேண்டிய பணத்தின் மதிப்பும் அதிகரித்து கொண்டே வரும். வரும் ஆண்டுகளில் புதிய பட்ஜெட் போடும் போது அரசு தனது வருவாயில் பெரும் பகுதியை வட்டிக்கே செலவிட வேண்டி வரும். அதன் விளைவாக அடிப்படை கட்டுமானத்திற்கான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, அடிப்படை தேவைகளுக்கான மானியம் போன்றவற்றிற்கு செலவிட பட கூடிய பணத்தின் மதிப்பு குறைந்து நாட்டின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கை தரமும் பாதிக்க பட வாய்ப்புள்ளது. அதாவது நமது சந்ததியினர் நமது கடனை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

2. ஏற்றுமதி - இறக்குமதியில் பற்றாக்குறை ஏற்படும் போது அதை டாலர் மற்றும் பிற அன்னிய செலாவணிகள் கொண்டு தான் சரிகட்ட முடியும். இந்த சமநிலை மிக மோசாமாக போகும் போதும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி வீதத்தில் தளர்ச்சி ஏற்படும் போது நாட்டின் நாணயத்தின் மேலிருக்கும் நம்பிக்கை குறைகிறது. அது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. ரிசர்வ் வங்கி அந்த தாக்கத்தை குறுகிய காலத்துக்கு தடுக்க முடியும் என்றாலும் நீண்ட காலத்தில் அது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது
அந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்க வேண்டியது அவசியாமாகிறது. அப்போது போட படும் கடுமையான நிபந்தனைகளால் உள் நாட்டு தொழில் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசும் காலத்தின் கட்டாயமாக அதை ஏற்று கொள்ள வேண்டி வரலாம்.
 
3. மேலை நாடுகளை போலில்லாமல் இந்தியாவிற்கு  வறுமை ஒழிப்பு, மிகுந்த மானிய சுமை போன்ற பல சவால்கள் உள்ளன. ஆனால் அதே போல் வருமானத்திற்கான வழிகளும் பல உள்ளன. நிலக்கரி, பெட்ரொல் போன்றல் இயற்கை வளங்கள் மற்றும் தொலைதொடர்பு  ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை நியாயமான முறையில் ஏலத்தில் விட்டாலே அதிக வருவாய் ஈட்டமுடியும். ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை கட்டு படுத்தும் மிக பெரிய நிறுவனங்களின் ஏக போக உரிமையால் பல்லாயிரம் கோடி பணத்தை அரசு இழக்கிறது. அது மட்டுமன்றி நியாயமற்ற வரி விலக்கு மற்றும் பிற ஊழல்களால் ஏற்படும் வருவாய் இழப்பு கணக்கிலடங்கா. ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் நடை முறைபடுத்தும் மலிவான தேவையற்ற இலவச திட்டங்கள் இந்த பற்றாக்குறையை மேலும் அதிகமாக்குகின்றன.ஆனால் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டு படுத்தாமல் அரசு பட்ஜெட் பற்றாகுறையை காரணம் காட்டி வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை மானியங்களையும், கல்வி மற்றும் சுகாரத்துக்கு செலவிடும் பணத்தை குறைத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்க செய்வது தொடர்கதை ஆக வருகிறது.

4.  அரசு புதிதாக உற்பத்தி செய்யும் பணம் ஒழுங்காக நாட்டின் உற்பத்தி  பெருக்கத்திற்கு உதவினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். அரசு செலவிடும் பணத்தில் பெரும்பான்மையான பகுதி உற்பத்தியை பெருக்கும் வகையில் செலவிட படுவதில்லை. அதன் விளைவு சந்தையில் குறைவான பொருளும் அதிக அளவு பணமும் இருக்கிறது. அது நாட்டில் பணவீக்கத்தை அதிக படுத்துகிறது. அதனால் பணத்தின் மதிப்பு குறைகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டில் உள்ள பணபுழக்கத்தையும், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியையும் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.


ஆதாரம்- Equitymaster.com
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையற்ற இந்த வீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் குறைகிறது. ஓய்வு கால தேவைக்காக சிறுக சிறுக சேமித்து காப்பீடு மற்றும் பிற வகையில் முதலீடு செய்யும் மக்கள் தங்கள் ஓய்வு காலத்தில் தாம் சேமித்த பணத்தின் மதிப்பு குறைந்து அடிப்படை தேவைக்கு செலவிடுவதே கடினம் என்ற நிலை அடைவர்.

நாட்டிற்கு  பொருளாதார ரீதியாக மாபெரும் வீழ்ச்சியையும், இன்றைய மற்றும் நாளைய சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கும் இந்த பற்றாக்குறை பிரச்சனை இன்றுவரை முக்கிய பிரச்ச்னையாக எந்த ஒரு  பிரதான அரசியல் கட்சியும் எடுத்து செல்லாதது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.

சிறகு இதழில் வெளிவந்த கட்டுரை.

நாணயம் இல்லாத நாணயம்