Showing posts with label டாலர்-அரசியல். Show all posts
Showing posts with label டாலர்-அரசியல். Show all posts

Wednesday, April 01, 2009

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4




தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.

இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்ய படுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்ய படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு gold convertibility என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே.பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.

இதனால பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பலான பணம் வெளியிட படுவது "Money As Debt." என்று கூறபடும் பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.

உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன்.அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன் . என்னுடைய முந்தய பதிவில் கூறியது போல் வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன். பணம் எவ்வாறு பெருக்க பட்டுள்ளது என்று கூர்ந்து கவனியுங்கள்.

கடந்த பத்து வருடங்களாக நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கபடும் முதலீட்டு வங்கி(investment bank), ஹெட்ஜ் முதலீடு மற்றும் பிற வங்கி சாரா பொருளாதார அமைப்புகளின்(Non banking financial institutions) வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் கடன் மற்றும் எடுக்கும் Riskக்கிற்க்கு இணையாக ஒரு பகுதியை வைப்பு தொகையாக வைக்க வேண்டியதில்லை. இவர்கள் எடுக்கும் Risk மிக அதிகமாக இருக்கும். வங்கி பிறருக்கு கடனை கொடுக்கும் போது அதற்கான Riskஐ Shadow banking System எடுத்து கொண்டு அந்த Riskக்கிற்கான பணத்தை வங்கியிடம் இருந்து வசூளித்துக் கொள்ளும். இதனால் வங்கிகள் எந்த கவலையும் இல்லாமல் கடன் பெருபவரின் தரத்தை பற்றி கவலை படாமல் பெருமளவு கடன் கொடுக்க ஆரம்பிக்க தொடங்கினர். இது போன்று குழபத்தை ஏற்படுத்தும் பல புது வகையான பொருளாதார பொருட்கள்(Financial products) உருவாக்கபட்டன. இது கடன்களின் மொத்த மதிப்பை $62 ட்ரில்லியன் ஆக்கியது. மேற்கண்ட நிகழ்வுகளால் எளிமையான, வரவுக்கு சம்பந்தம் இல்லாத கடன்களால் நிலம்,பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு வளர்ச்சிக்கு(growth) பதில் வீக்கமடைந்து(swelling) $290 ட்ரில்லியன்களானது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க முயற்ச்சி செய்வது போல் உள்ளது.

பிஷ்சரின்(Fisher) எளிமை படுத்த பட்ட கீழ் காணும் சமன்பாடு(equation) பொருளாதாரத்தின் அடிப்படையை விளக்குகிறது

MV=PQ

M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.


ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.




நன்றி -Wikipedia and shadowstats.com


பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.

உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.







நன்றி--Lane Kenworthy


மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.



நன்றி—Lane Kenworthy


இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.
இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.

மேலே சொன்ன சமன்பாட்டில்(MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.

பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்க படும் முயற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.

இந்த பதிவிற்கு தொடர்புடைய மற்ற பதிவுகள்:

டாலர் அரசியல்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

--

Thursday, December 25, 2008

டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?


டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன என்றும் பார்த்தோம்.இந்த பதிவில் உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலை பற்றியும் அதன் விளைவு பற்றியும் பார்ப்போம்


சென்ற நூற்றாண்டின் இறுதி வரை உலகில் அதிக அளவு நிதி சேமித்து வைத்து அதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பன சேம நல நிதி நிறுவங்கள்(Pension fund), மியூட்சுவல் பண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.இந்த பணத்தில் பெரும் பங்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் நிறுவனங்களின் கையில் தான் இருந்தது.


இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிதிகளின் மதிப்பு மிக அதிக அளவில் இருந்ததால், உலக அளவில் நடைபெறும் மிக முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு(பங்கு வர்த்தக முதலீடுகள், பெரிய நிறுவங்களை வாங்குவது மற்றும் இணைப்பது,புதிய கம்பெனிகளை துவங்குவது மற்றும் பத்திர வர்த்தகம் etc) முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இவை பொருளாதார அதிகார மையங்களாக செயல் பட்டன.


ஆனால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோல் விலை உயர்வாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தாலும் இந்த நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.பெட்ரோலை டாலரில் விற்பதன் மூலம் அமெரிக்கா அடையும் நன்மையை டாலர் அரசியல் என்ற பதிவில் பார்த்தோம்.மறுபுறம் பெட்ரோல் விலை உயர்வால் அரபு நாடுகள் மற்றும் அங்கு உள்ள ஆட்சியளர்களின் சொத்து மற்றும் டாலர் கையிருப்பு பல மடங்காக உயர தொடங்கியது.ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தால், சில நாடுகளின் டாலர் கையிருப்பு அதிகரித்தது. உலக மயமாக்களாலும் (globalization) முதலாளித்துவ வளர்ச்சியாளும் ஒரு சிலரின் தனிபட்ட சொத்து உலகின் சில நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை தாண்டி விட்டது.இதன் விளைவாக புதிய அதிகார மையங்கள் உலகில் உருவாக தொடங்கி உள்ளது.அத்தகைய பொருளாதார மையங்களில் சில

1. பெட்ரோல் மூலம் அதிக வருமானம் குவிக்கும் பெட்ரோடாலர் சொத்துகள்

2. ஆசிய மத்திய வங்கிகள்

3. Hedge funds

4. தனிபட்ட தனியார் முதலீடுகள்


நிதி நிர்வகிக்கும் அமைப்புகள்2006 ம் ஆண்டு மதிப்பு $ட்ரில்லியன்2000-2006 வளர்ச்சி விகிதம்% 2012(எதிர்பார்ப்பது)
$ட்ரில்லியன்*
பென்சன் Fund21.6 529
மியூச்சிவல் Fund 19.3831.2
காப்பீட்டு நிறுவன்ங்கள்18.5 1133.8
பெட்ரோடாலர் முதலீடுகள்3.8195.9
ஆசிய மத்திய வங்கிகள்3.1 205.1
Hedge Funds 1.5203.5
தனியார் முதலீடுகள் 0.7 14 1.4
*-கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $50 என கணக்கிடபட்டது
ஆதாரம்-McKinsey


மேற்கண்ட அட்டவனை உலக பொருளாதார அதிகார மையங்களின் அளவையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.அதில் கீழேயுள்ள நான்கு பிரிவின் மொத்த மதிப்பு 8- 9 ட்ரில்லியன் டாலர்கள்.இந்த மதிப்பு மொத்த தொகையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் 2000- 2006 ஆண்டு வரை உள்ள அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் ஒரு உண்மை புரியும்.பெட்ரோடாலர் சொத்துக்களின் மதிப்பின் வளர்ச்சி 19 சதமாகவும் ஆசிய வங்கிகளின் கையிருப்பு 20 சதமாகவும் pension பண்டின் வளர்ச்சி 20 சத்மாகவும் உள்ளது.உலகிள் உள்ள 10 மிகப்பெரிய நிறுவன்ங்களில் 6 நிறுவனங்கள் ஆசிய மற்றும் அரபு எண்ணெய் நிறுவனங்கள்.ஒரு சில எண்ணெய் நிறுவங்களின் மதிப்பு ஜெனரல் எலெக்ட்ரிக்கள்,மைக்ரோசாப்ட், சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களை விட அதிகம்.மேற்கூறிய நான்கு பிரிவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது அரபு நாடுகளின் பணமும், ஆசிய வங்கிகளின் பணமும் தான்.Hedge Fund மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களில் பெரும்பான்மையான முதலீடு செய்துள்ளதும் மத்திய ஆசிய நிறுவங்களும் அரபு நாட்டு செல்வந்தர்களும் தான்.


இந்த புதிய பொருளாதார அதிகார மையங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இவை அமெரிக்க பன்னாட்டு நிறுவங்களின் (Multi national) பெரும் பங்கை வாங்க தொடங்கி உள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க நிதி நெருக்கடியினால், பல நிறுவங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பு பணம்(liquidity) மிக வேகமாக குறைந்து வருவதால், அதிக பணம் கொண்ட இந்த நிறுவனங்களின் சேவை மற்ற நிறுவனஙக்ளுக்கு தேவையாக உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் காரணாமாக இந்நிறுவனங்கள் வாங்கியிள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சிறிது நட்டத்தில் தெரிந்தாலும், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் போது அதன் மதிப்பு பல மடங்கு வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் பல நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் இவை பிற்காலத்தில் அமெரிக்க அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .தற்போதைய நிதி நெருக்கடி காரணாமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல அழிந்துள்ளதால், இந்நிறுவனங்கள் முதலீடு செய்து காப்பாற்றி உள்ள நிறுவனங்கள் Monopoly யாக வளர்ந்து பல மடங்கு லாபத்தை அள்ளி தர வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்-கிரடிட் சூயிச்,லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,மெரில் லின்ச்,AMD,பார்க்லே,பெராரி,டைம் வார்னர்,ஸ்டாண்டர்டு சார்ட்டட்,டைச் வங்கி,UBS,மோர்கன் ஸ்டான்லி,சிட்டி குரூப் etc. உலகில் நடக்கும் மிகப்பெரிய நிறுவங்களின் இணைப்பு மற்றும் வாங்குதலுக்கும் இந்த நிறுவங்களே நிதியுதவி செய்கின்றனர்.2007ம் ஆண்டு மட்டும் இதன் மொத்த மதிப்பு $4.5 டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.இதன் மூலம் மிகப்பெரிய நிறுவங்களில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடிகிறது. தற்போது அமெரிக்க Real Estate மிகவும் வீழ்ந்துள்ளது.இந்நேரத்தில் இந்நிறுவனங்கள் அமெரிக்க சொத்துகளை குறைவான விலையில் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்நிறுவங்கள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாது வளங்களில் மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்து தனது எதிர்கால தேவைகளுக்கும், எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யவும் உறுதி படுத்த தொடங்கி உள்ளனர்.இத்தகைய செயல் இதுநாள் வரை மேலைநாடுகள் மட்டுமே பின்பற்றும் அணுகு முறையாக இருந்தது.


தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முயற்ச்சிப்பதும் இக்காரணங்களுக்காதான். தற்போதைய நிறுவனங்களின் நெருக்கடியின் மூல காரணமே பண கையிறுப்பு குறைவு
தான். எனவே இது போன்ற நெருக்கடியான காரணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் பிற்காலத்தில் நூற்றுகணக்கான டாலரை சம்பாதித்து கொடுக்கும் வல்லமை படைத்தன. உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவை வகிக்கும் பங்கு வரும் காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.


பொதுவாக அமெரிக்காவின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியாக கருத படும். அமெரிக்காவும் அரசியல்,பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை மறைமுகமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும். இனி அந்நிறுவங்களில் பெருமளவில் முதலாளித்துவ கொள்கை இல்லாத கீழை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி விட்டால் அமெரிக்க அரசின் பார்வை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல, அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நாடுகளும் அவற்றை வர்த்தக ரீதியாக மட்டும் தான் அணுகுமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Friday, September 28, 2007

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்

சென்ற பதிவில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேச சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தை உலகின் முன்னனியில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்.
பத்திரிக்கைகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா படைத்து வரும் சாதனைகளை எண்ணி பூரிப்படைகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்று கனவு காண்கிறோம். இத்தனை நல்ல செய்திகள் வரும் பத்திரிக்கையில் வரும் ஒரு சிறு செய்தியை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டும் அந்த செய்திதான் என்ன?
இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம் உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம். ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம் 181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நமது இறக்குமதியில் பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர குறைய போவதில்லை.
இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது? இதற்கு தீர்வு காண நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் எத்தனால். எத்தனாலை தாவரத்திருந்து பிரித்து எடுக்கலாம். இவ்வளவு நாட்களாக எத்தனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் கவனிப்பாரற்று இருந்தது. இன்று பெட்ரோல் விலை பேரலுக்கு $70 தாண்டி விட்டதால், உலகமே எத்தனாலின் மீது அதன் பார்வையை செலுத்த தொடங்கி உள்ளது.
எத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம். ஆனால் இறக்குமதி செய்யும் பெட்ரோலின் ஒரு பகுதியை எத்தனாலை கொண்டு சமாளிக்கலாம். ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோக படுத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர். எத்தனாலின் விலையை மட்டும் பெட்ரோலுடன் சம்மந்த படுத்தி பார்க்க கூடாது. எத்தனாலை உபயோக படுத்துவதனால் எற்படும் பிற நன்மைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு, மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள் வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள் மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார் தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நம் அரசாங்கம் ஒரு புறம் தனக்கு கிடைக்கும் டாலர் பணத்தையெல்லாம் பெட்ரோல் வாங்க செலவு செய்து வருகிறது, இதனால் மிகபெரிய டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.
அதற்கு பதில் அரசாங்கம் எத்தனாலுக்கு வரி விலக்கு அளித்து, மானியம் கொடுத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தினால் இறக்குமதிக்கு செலவு செய்யும் டாலரின் செலவை குறைக்கலாம். உலக வங்கியிடம் வாங்கும் டாலர் கடனையும் குறைக்கலாம்.வறுமை ஒழிப்பையும் எளிதில் அமல்படுத்தலாம். கிராம புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமுமே வளரும். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் எவருமே இல்லாததால் இந்த திட்டத்தை கனவு திட்டமாக எடுத்து முழுமையாக நிறைவேற்ற எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை.
அடுத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கம். இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகைதான் இன்றைய வளர்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்க தோன்றும். உலக அரங்கில் இரண்டாம் உலகபோரிலிருந்து கடந்த நூற்றாண்டின் முடிவு வரை அலசி பார்த்தோமானால் ஒரு உண்மை புரியும்.உலகில் எந்த தொழில் துறையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நூற்றுகணக்கான நிறுவனங்கள் வருடம் தோறும் தொடங்கபட்டு வளர்ச்சி அடைந்துள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து விட்டது. எனவே அந்த நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, இதன் விலைவாக தங்களுக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய தொடங்கினர் அல்லது தொழிலாளர்களை வெளி நாடுகளிருந்து தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து கொண்டனர். கல்வி மற்றும் தொழிற்துறையில் நன்கு கவனம் செலுத்தி முன்னேற துடித்த இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் இதை நன்கு பயன் படுத்தி கொண்டனர்.
அனால் இந்த நூற்றாண்டில் நிலமை அடியோடு மாற தொடங்குகிறது. Meger மற்றும் Acquisition மூலமாக பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளன. இந்தநிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்க தொடங்கி விட்டன. எனவே ஒவ்வொரு துறையிலும் oligopoly அல்லது monopoly என்ற நிலை வர தொடங்கியுள்ளது. WTO இந்த மாற்றத்தை துரித படுத்தியுள்ளது. இதன் விளைவு தொழிலாளர்களின் தேவை இந்த நிறுவனங்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், கணிணி மயமாக்கலாலும் மற்றும் இயந்திர மயமாக்களாலும் தொழிலாளர்களின் தேவை பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ந்தால் அவர்களுக்கு உள்நாட்டு வேலை கிடைப்பதும் அரிதாகிவிடும், வெளி நாட்டு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிடும். உதாரணமாக Retail துறையில் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளதுதான். இந்த நிறுவனங்களால் லட்சகணக்கானோர் வேலை இழக்க போவதை கண் கூடாக காண்கிறோம். இந்த நிலை நாளை அனைத்து துறைகளிலும் உலகளவில் வரத்தான் போகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள நாம் என்ன ஏற்பாடு செய்துள்லோம் என்பது கேள்விக்குறியே. எனவே அரசாங்கம் உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம், இந்த மக்கள் தொகை பெருக்கம்.

பொருளின் மதிப்பும் உற்பத்தி செலவும்:
கடந்த நூற்றாண்டில் ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவை மற்றும் உற்பத்தி (Demand and supply) பொருத்தும், உற்பத்தி செலவு பொருத்தும் தான் இருந்தது. எந்த ஒரு புதிய பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனரோ அந்த பொருளையே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்து விற்க்கும். எனவே பொருளின் விலை பெரும்பாலும் உற்பத்தி செலவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையை முதலில் மாற்றியது Branding கலாச்சாரமே. அதாவது ஒரு பொருளை முதலில் தரமாக மார்க்கெட்டில் வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியவைத்து நுகர்வோர் மதிப்பை பெறுவதன் மூலம், அந்த பொருள் சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படும். அதிக அளவு விளம்பரம் மூலம் தங்களது கம்பெனியின் பெயரை நிலை நாட்டிய பின், அவர்கள் விற்பனைக்கு கொண்டுவரும் அத்தனை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பார்கள். இதன் மூலம் உயர் மற்றும் மேல் நடுத்தர வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வார்கள். WTO வந்தபின்பு நிலைமையே மாற தொடங்கின. WTO சட்டங்கள் முழுமையாக நடை முறை படுத்தப்பட்டால், எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் கம்பெனிக்கு மட்டுமே குறிப்பிட்ட காலம் வறை உற்பத்தி செய்யும் உரிமம் வழங்கப்படும். இதன் விளைவாக வேறு எந்த கம்பெனிகளும் இந்த பொருளை தயாரிக்க முடியாது. ஆகையால் அந்த பொருளின் விலை அந்த பொருளுக்கு மக்களிடையே உள்ள அவசியத்தையோ அல்லது விளம்பரம் மூலமாக அது மக்களிடம் எற்படும் தாக்கத்தையோ கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக IPhone 4GB ஒன்றின் விலை $500 என்றால் அதை உற்ப்த்தி செய்யும் ஆசிய கம்பெனிக்கு $230 விலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை Apple நிறுவனம் விளம்பரம் மற்றும் இதர செலவுகளை மட்டும் செய்து ஒரு IPhoneக்கு 270 டாலர்கள் லாபம் அடைகிறது. அந்நிறுவனம் அதனுடைய முதல் IPhone தயாரிப்புக்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கும். பிறகு அதற்கு உரிமம் வாங்கி அதில் சில மாறுதல்களை செய்து அடுத்தடுத்து version வெளியிட்டு பலமடங்கு லாபம் அடைகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு அடுத்த கண்டுபிடிப்பை தொடர்கிறது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால் மூல பொருட்களை வாங்கி அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவே லாபம் பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.
இன்று இந்தியாவின் உற்பத்திதுறை பெருமளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி மட்டும் செய்து கொடுத்து புதியன கண்டு பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சர்வதேச அளவில் Brand பெயர் உருவாக்கவும் பெரிதாக முயற்ச்சி செய்வது இல்லை. உலக சந்தையில் இந்திய கம்பெனிகள் நிலைபெற வேண்டுமானால் இதுபோல் கண்டுபிடிப்பு மற்றும் Brandingல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சில முயற்சிகள் இன்றும் நடந்து வருகின்றன. டாடா நிறுவனம் Tetley என்ற இங்கிலாந்து டீ Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. விஜய்மால்யாவின் நிறுவனம் Whyte & Mackay Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. இத்தகைய முயற்ச்சி ஒவ்வொரு துறையிலும் தொடர வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்து மக்கள் விரும்பும் புதிய பொருட்களை கண்டு பிடித்து உரிமம் பெற வேண்டும். அத்தகைய வளர்ச்சிதான் உண்மையாக அதிக நாட்கள் நிலை பெறும் வளர்ச்சியாக இருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இடம் எது என்று பார்த்தால் அது பல்கலை கழகங்களாக தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்கலைகழகங்கள் அந்த அளவிற்கு முதிர்ச்சி பெறவில்லை. பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பல மடங்கு உயர வேண்டும்.
இந்திய மருந்து கம்பெனிகள் தற்போது Generic Drug எனப்படும் உரிமம் பெறாத அல்லது உரிமம் (patent) காலாவதியான மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடைகிறனர். அந்த கம்பெனிகள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆகியவற்றை கொண்டு புதிய மருந்து பொருட்களை கண்டு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டும்
இந்திய IT கம்பெனிகள், இந்தியாவில் ஆங்கிலம் பேச தெரிந்த மற்றும் மலிவான தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பெரு வளர்ச்சி அடைகின்றன. நாளை இதே ஆங்கிலம் பேச தெரிந்த தொழில் நுட்ப வல்லுனர்களை, மிகவும் மலிவாக சீனா போன்ற நாடுகள் உருவாக்கினால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை நோக்கி சென்றுவிடுவர். அது மட்டுமன்றி இந்திய நிறுவனங்களும் பிற நாட்டு வல்லுனர்களை கொண்டு வளர்ச்சியடைய தொடங்கிவிடும். இதனால் இந்தியா ஒரு பெரும் சரிவை சந்திக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்கள் Services தொழிலில் மட்டும் கவனம் கொள்ளாமல் IT Product செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல தரமான Productகளை தயார் செய்வதன் மூலம் நிலையான சந்தையை பெற முடியும். இந்தியாவில் உலகதரத்துடன் Product செய்த ஒரே கம்பெனியான iFlex நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான Oracle நிறுவனம் முழுமையாக வாங்க அமெரிக்க அரசே இந்திய அரசை நிர்பந்தித்ததாக செய்திகள் வந்தது. இதிலிருந்து Product தொழிலின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகபெரும் IT நிறுவனங்கள் அனைத்தும் தரமான Product செய்ய முன்வர வேண்டும்.
அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி பெருக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில் தொடங்குவோருக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல சாலை, விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள், நவீன துறைமுகம், தகவல் தொடர்புதுறை, கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலே கண்ட நிகழ்வுகளுக்கான தொடக்கத்தை நாம் இன்று செய்தால்தான் இந்தியா கி.பி. 2020ல் வல்லரசாகும் என்ற கனவை நாம் காண தொடங்கலாம்

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசயம், சிறு தொழில் போன்றவற்றின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

Friday, September 07, 2007

டாலர் அரசியல்

உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை,சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தேயிருக்கிறது.உலகிலேயே அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின்பொருளாதாரம் எப்படி,உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது? "கோட்டீஸ்வரன்" நிகழ்ச்சியிலோ அல்லது "kaun banega crorepathi " யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது!.அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன? விடை அளிக்கவே இக்கட்டுரை.
இந்த கதையின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தி திறன் வெகு அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அமெரிக்கா, தொழில் நுட்ப மற்றும் உற்பத்தி துறையில் வெகு முன்னேறிய நாடாக இருந்தது. முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரு இழப்பை போல் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் நன்கு முன்னேற்றம் அடைந்தது. ஹிட்ல்ரின் கொள்கையினால் நாடு பெயர்ந்த யூதர்களின் மூளையை கொண்டு அதன் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் மேற்கத்திய நாடுகளுக்கு உதவி செய்து கைமாறாக பெரும் தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது. டாலரின் மதிப்பு அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்பை கொண்டு மதிப்பிடபட்டது. டாலர் ஒரு வலுவான நாணயமாக இருந்தது. இரண்டாம் உலகபோரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80% மற்றும் உற்பத்தி துறையில் 40% அமெரிக்கா கையில் இருந்தது. வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பி கொடுக்கும் நிலையில் இருந்தது. உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை கையிருப்பாக கொண்டு தங்களது நாணயத்தை வெளியிட தொடங்கின. உலகின் பல நாடுகளின் வங்கிகள் டாலரை தனது முதலீட்டு கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன, 1960 வரை இந்த நடைமுறை நன்றாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
வியட்நாம் போர்-மாபெரும் மாற்றத்தை எற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த போருக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டி வந்தது. அதுவரை தங்க கையிருப்பிற்கு எற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதிக அளவு டாலரை வெளியிட தொடங்கியது. ஒருநிலையில் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை கொடுத்து அமெரிக்காவிடம் தங்கம் கேட்டால் அதனால் தரமுடியாது என்ற நிலை எற்படும் நிலை வந்தது. 1971ம் ஆண்டு நிக்ஸன் நிர்வாகம் உலக முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன் படி டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது அமெரிக்க அரசாங்கம். அதன் படி டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது. அதன் பின்னர் நடந்த மாற்றங்கள் தான் உலகை இன்றைய நிலைக்கு இட்டு சென்று உள்ளது.
1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விளைவு ஒரு புறம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தது. அந்த நாடுகளிடம் தேவைக்கு மிக அதிகமான பணம் இருந்ததால் அந்த டாலரை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தன. அதற்கு அமெரிக்கா அந்த நாடுகளிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய treasury bond வெளியிட்டு அதில் முதலீடு செய்ய வைத்தது. அவர்கள் பணத்தை மேன்மேலும் அமெரிக்காவின் bondல் முதலீடு செய்தனர். மற்றொரு பக்கம் பெட்ரோல் உபயோகப்படுத்தும் நாடுகள் பெட்ரோல் கிடைக்க டாலர் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா. எனவே அமெரிக்காவுக்கு தேவையான பொருள்கள் எவையோ, அவற்றை உற்ப்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருளை வாங்க வேண்டுமானால் விலை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அந்த நாடுகளில் உற்பத்தி செலவை குறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி, நாட்டின் நாணயத்தின் மதிப்பை குறைக்க ஆரம்பித்தன. அதாவது தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அமெரிக்க மார்க்கெட்டில் மலிவான விளைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்தன. அந்த நாடுகள் தங்கள் சுய தேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு எற்றபடி முன்னேற்ற திட்டங்கள் வகுப்பதை விட்டு விட்டு, டாலர் கிடைக்க எந்த பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின. தனது முழு உழைப்பையும் செலவிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபங்களை அரசாங்கங்கள், மீண்டும் அமெரிக்க வங்களிடம் Bond வாங்கி சேமித்து வைக்க தொடங்கின. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகள் தனது சக்தி(energy),மனிதவளம், மற்றும் பொருளாதார வளங்களை கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து டாலர் வாங்கி மீண்டும் அதனை அமெரிக்காவிடமே குறைந்த வட்டிக்கு பத்திரமாக முதலீடு செய்கிறது. இதன் விளைவாக டாலருக்கு சர்வதேச சந்தையில் அதிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஆசிய மற்றும் பிற நாடுகளின் கையிருப்பில் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு treasury bond உள்ளது. இதில் சைனா மட்டுமே 350 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளது.
அமெரிக்காவை பொருத்தவரை அது உற்பத்தி செய்யும் டாலருக்கு உலக மார்கெட்டில் என்றுமே தேவை இருக்கும். அந்த டாலரை எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பி கொடுத்து அதற்குரிய பொருளை கேட்க போவதில்லை. அதன் விளைவாக அமெரிக்கா உற்பத்தியை மீறி நிறைய டாலரை வெளியிட ஆரம்பித்தது. அதன் விளைவாக வருமானத்தை மீறி அமெரிக்கா செலவு செய்ய ஆரம்பித்தது. மாபெரும் தொகையை தன் இராணுவ ஆராய்ச்சி மற்றும் பிற நாடுகள் மீது படையெடுப்பு போன்றவற்றுக்கு செலவு செய்ய ஆரம்பித்தது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதி பொருள்கள் மூலம் பெரும் லாபம் சேர்க்க ஆரம்பித்தன. அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் எற்றுமதியை விட 811 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு லாபம் ஈட்ட தொடங்கின.
அதன் விளைவு, அதிக பணத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு செலவிட முடிந்தது. இனி WTO சட்டதிட்டங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், எந்த புதிய மருந்து/கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் கம்பெனிகளுக்கும் முழுமையாக உரிமை கிடைத்துவிடும். அந்த உரிமம் மூலம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் அவற்றை விற்று பெருத்த‌ லாபம் ஈட்டமுடியும். அவ்வாறு கிடைக்கும் லாபம் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். சிறு கம்பெனிகள் அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும். இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது இரண்டு கம்பெனிகள் ஏகபோக(monopoly) உரிமை தாரர்களாக ஆகி விடுவர். இன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மூலமாக, இந்த நிறுவனங்கள் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமையாளர்களாக மாறி, உலகின் அனைத்து செல்வங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வரும். இதற்கிடையில் அமெரிக்கா அதிக அளவு இராணுவ தொழில்நுட்பத்திற்கு செலவு செய்து உலக பொருளாதாரத்தையும் இராணுவ பலம் மூலமாக கட்டுப்படுத்த தொடங்கலாம். அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பாதகமாக செயல்படும் நாடுகளை இராணுவ பலம் கொண்டு அடக்கும். இதன் விளைவாக உலக நாடுகளுக்கு எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இதன் மூலம் நிறைய நன்மை கிடைக்கிறது. இந்தியாவிற்கு கிடைகும் குறுகிய கால நன்மை என்ன என்பது பற்றியும் அந்த நன்மைகளை நீண்ட கால ஆதாயமாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் அடுத்த பகுதியில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4

--