Sunday, March 01, 2009

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா?


இனி வரும் காலங்களில் தங்கம் விலை எந்த அளவு உயரும்? இதுதான் இன்று உலக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் மக்கள் முக்கியமாக இந்திய மக்களிடம் அதிகம் விவாதிக்க படும் செய்தியாக உள்ளது?

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து இந்திய பெண்மணிகளும் விரும்பி அணிவது தங்க ஆபரணங்கள். அப்படிபட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கான சாத்திய கூறுகளுக்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொருளாதார வல்லுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் தங்கம் என்பது பணத்தை போல் நினைத்த அளவு அதிகம் உற்பத்தி செய்ய முடியாது.அதை உற்பத்தி செய்யும் செலவும் பணத்தை உற்பத்தி செய்வதை விட மிக அதிகம். மேலும் தங்கத்தின் மதிப்பு பல காலமாக நிலை நிறுத்த பட்டுள்ளது(Stable Price). முக்கியமாக பணத்தை நாடுகள் செய்யும் உற்பத்தியை(Production) விட அதிக அளவு வெளியிடுவதால் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைந்து விடும் நேரங்களில், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை பணவீக்கத்தில் இருந்து காக்க தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கத்தின் மதிப்பு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று வாதிடுவர்.

தங்கத்தின் விலை உயராது என்று கூறுகிறவர்கள் தங்கம் என்பது ஆபரண மதிப்பு மட்டுமே உள்ள ஒரு பொருள். தங்கத்தின் மதிப்பு பணத்துக்கு பதிலாக தங்கத்தை மாற்றாக (gold convertibility) அரசுகள் கொடுத்த வரை இருந்தது. அமெரிக்கா 1971ல் இந்த முறையை கைவிட்டதிலிருந்து தங்கத்தின் செயற்கையான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. மேலும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை அரசாங்கம் அச்சிடும் பணத்தை அடிப்படையாக கொண்டவை,என்வே பணத்தை அடிப்படையாக கொண்ட இவ்வகை சொத்துக்களில் முதலீடு செய்தால் அவற்றின் வளர்ச்சி தற்போது குறைவாக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார சீர்கேடு சரியான பிறகு , தங்கத்தில் செய்யும் முதலீடு தரும் லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்பர். இவ்வகை காரணங்களால் தங்கத்தை Anti dollar(பணம்) என்று கூறுவர்


தங்கத்தை பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவும் ஆபரணம் செய்வதற்காகவும் வாங்குவார்கள். அரசோ செல்வ கையிருப்புக்காக (Reserve) வாங்குவர். உலகில் உள்ள தங்கத்தில் 19% நடுவண் வங்கிகளில்(Central Banks) சேமிப்பாக உள்ளது. பிற முதலீடுகளில்(அதாவது பாண்டுகள்,பங்கு சந்தை, நிலம் etc) அதிக அளவு லாபம் ஏற்படவிலலை என்றாலும், தங்கள் நாட்டின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தாலும் பொதுவாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முற்படுவர். உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கு காரணம் தங்கம் ஒவ்வொரு இந்தியராலும் முதலீடு செய்வதற்காகவோ அல்லது ஆபாரணம் செய்வதற்காகவோ வாங்குவதால் தான்.கடந்த சில வருடங்களாக சீன மக்களும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர்.அவர்களுடைய தங்கம் வாங்கும் திறன் அமெரிக்காவை தாண்டி விட்டது.


தங்கத்திற்கு எதிராக கூறப்படும் வாதம்.

1. தங்கத்திற்கு என்று தொழிற்சாலைகளில் பெரிய உபயோகம் கிடையாது. கச்சா எண்ணெய் போன்ற commodityகளுக்கு அனைத்து துறைகளிலும் உள்ள உபயோகம் போல் தங்கத்திற்கு இல்லை.டாலரை கொடுத்து தங்கத்தை திருப்பி பெற(convertibility to gold) வாய்ப்பு முன்பு இருந்ததால்(விவரத்திற்கு டாலர் அரசியல் படிக்கவும்) தங்கத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாததால் தங்கத்திற்க்கு மதிப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

2. உலகில் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்பர், ஆனால் பொருளாதார விழ்ச்சியின் போது அடிபடை பொருட்களின் தட்டுபாட்டாலும், மக்கள் வாங்கும் திறன் குறைவதாலும் அதன் மதிப்புதான் கூடுமே தவிர தங்கத்தின் விலை கூடபோவதில்லை.

3. பொருள்களுக்கு மதிப்பு உள்ளது.அனால் பணத்திற்கு? (டாலருக்கு) பணம் என்பது வெறும் பேப்பர் தான்.அதன் மதிப்போ மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. இதே போல் தான் தங்கதிற்கும். நாம் நம்பிக்கை வைத்துள்ளவரை தான் அதற்கு மதிப்பு. எனவே தங்கம் மற்றும் டாலர் இரண்டும் ஒரே நிலையில் தான் உள்ளது
‘Confidence is the most important thing, more important than gold or currency’

4. கடந்த கால வரலாற்றை பார்த்தால் பங்கு சந்தை மற்றும் Bondல் செய்த முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தந்துள்ளது. உதாரணமாக 1801ம் ஆண்டு ஒரு டாலர் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு $8.8 மில்லியனாக பெருகியிருக்கும். அதையே Bondல் முதலீடு செய்திருந்தால் அது $14,000 அகியிருக்கும். அதையே தங்கத்தில் முதலீடு செய்தால் அது இன்று $150 ஆக மட்டுமே ஆகியிருக்கும்.

தங்கத்திற்கு ஆதரவாக கூறப்படும் வாதம்

1. தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர். ஆனால் 1971 வரை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டதாக(Fixed Price) இருந்தது.அது முதலீடாக பார்க்க பட்டதை விட பணமாக தான் பார்க்க பட்டுள்ளது. அது போல் 1700ல் இருந்த எந்த கம்பெனியும் தற்போது இல்லை.எனவே தங்கத்தின் விலையை 1970க்கு பிறகுதான் பார்க்க வேண்டும் 1968- 80 க்குள் தங்கதின் விலை 230% உயர்ந்துள்ளது. ஆனால் பங்கு சந்தை அந்த அளவு உயரவில்லை. மேலும் பங்கு சந்தை வளர்ச்சியை, மூடிய நிறுவனங்கள் மற்றும் தோல்வி அடைந்த நிறுவனங்களை நீக்கி செயற்கையாக உயர்த்தி காண்பித்தும் தங்கதின் வளர்ச்சி அளவுக்கு அது இல்லை.

2. உலகின் சேமிப்பு செல்வமாக அதிக அளவில் இருப்பது டாலர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்க நிதி நெருக்கடியும் , அதன் அதிகரித்து வரும் பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் அது அதிக அளவில் டாலரை அச்சடித்து வினியோகம் செய்வதால் டாலரின் மதிப்பு நீண்ட கால அளவில் எவ்வாறு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. டாலருக்கு மாற்றாக கருதபட்ட யூரோவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எனவே உலக அளவில் அனைவரின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பணத்தை அடிப்பதால் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.என்வே பணத்தின் மதிப்பு மிக அதிக அளவில் குறையலாம். அவ்வாறு குறையும் போது தற்போது உள்ள செல்வத்தை மதிப்பிழக்காமல் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்தால் தான் முடியும்.எனவே தங்கத்தில் அதிக அளவு மக்கள் முத்லீடு செய்வர்(Gold is best inflation hedge). இதன் மூலம் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

3. தங்கத்தை நல்ல முதலீடாக கருதுபவர்கள் அதன் விலை பெருமளவுக்கு உயராமல் இருப்பதற்கான காரணம் தங்கத்தின் விலையை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதலீட்டு வங்கிகளும், மேல்நாட்டு மத்திய வங்கிகளும் நேரடியாக/மறைமுகமாக செய்த பரிவர்த்தணை காரணமாக செயற்கையாக குறைத்து வைத்து இருந்தது தான் என்கிறார்கள். இது நாள் வரை தங்கத்தின் விலை டாலரின் மதிப்பை சார்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.அதாவது இரண்டின் விலையும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருத பட்டது.தற்போது ஏற்பட்ட முதலீட்டு வங்கிகளின் வீழ்ச்சியால், இனி அவர்களால் இது போல் செய்வது கடினம் என்று கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் சர்வ தேச சந்தையிலும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில காலமாக டாலரின் ஏற்ற இறக்கத்திர்கு மதிப்பளிக்காமல் சீராக விலை ஏற தொடங்கி உள்ளது

4. Gold convertibility to dollar இல்லாததால் தங்கத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல படுவது உண்மை என்றால், தங்கத்தின் விலை 1971க்கு பிறகு பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ந்டக்க வில்லை. தங்கத்தின் விலை 1971 க்கு பிறகு gold convertibility to dollar மறைந்த பின்னும் விலை ஏறி கொண்டு தான் உள்ளது. எனவே அந்த கூற்று உண்மையில்லை.


உலக பொருளாதாரத்தில் எது எப்பொழுது நடைபெறும் என்று கணிப்பது இயலாத காரியம். சமீப காலமாக பொருளாதாரத்தின் அடிப்படை விதிகள் களங்கடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரியல் எஸ்டேட் துறை 30% மேல் வீழ்ச்சி அடையாது என்பது அனைவரின் கருத்து.அது பொய்த்து போனது தான் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது. இந்த பதிவை படிப்பவர்கள் தங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிப்பு கருத்துகளை படித்து இனி வரும் காலங்களில் எந்த கருத்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று முடிவு செய்து அதன் ஏற்றம் பற்றி முடிவு செய்யலாம்.

என்னை பொருத்தவரையில் தற்போதய நிதி நெருக்கடியால் டாலரின் தேவை அதிகம் இருப்பதால் தங்கம் விலை குறுகிய கால அளவில் தொடர்ந்து ஏறி கொண்டிருப்பது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் வங்கிகள் அவற்றை இன்னும் கடனுக்கு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அவற்றை கடன் கொடுக்க ஆரம்பித்தால் அது பல டிரில்லியன் டாலர்கள் பண புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்(பில்லியன் எவ்வாறு ட்ரில்லியன் ஆகிறது என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்).அப்போது பண வீக்கம் பெருமளவு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைய வய்ப்புள்ளது. எனவே அது போன்ற சூழ்நிலை(1-2 ஆண்டுகளில்) வந்தால் அல்லது வரும் என்று யூகம் கிளம்பும் போது தங்கம் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 1971 ல் Convertibility to gold எடுத்தது போன்ற தார்மீக ரீதியாக தவறான மற்றும் யாரும் எதிர் பார்க்காத unconventional ந்டவடிக்கை ஏதேனும் எடுத்து தங்கத்தின் விலையை குறைத்து டாலரின் மதிப்பை தக்க வைக்க முயலலாம்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை சிறிது சிறிதாக விற்க தொடங்கி உள்ளது.அதற்கு காரணம் அரசுகளின் பணத்தை(டாலர்) அடிப்படையான முதலீடுகளின் லாபம், தங்கத்தினால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம் என்று கூற பட்டாலும், உலகலவில் தங்கத்தை சேமிப்பு செல்வமாக இருக்கும் பழக்கத்தை சிறிது சிறிதாக அழித்து நாடுகள் அடிக்கும் பணத்திற்கு மற்றாக பெரிய அளவில் எந்த செல்வமும்(govt reserve) முக்கியமாக தங்கம் வந்து விட கூடாது என்பதே என்று கருத பட்டது. (இங்கிலாந்து சுமார் 400 டன் தங்கத்தை 1999- 2002 ல் விற்று, தற்போதைய தங்க விலை ஏற்றத்தால் $10 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளத்து என்பது வேறு விஷயம்! )தற்போது உலகில் உள்ள பல பெரிய வங்கிகள் வீழ்ந்து உலக அளவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மிக பெரிய வங்கிகள் உருவாவதால், இது போன்ற குறுக்கு வழி மற்றும் தார்மீகத்திற்கு அப்பாற்பட்ட வழிகளை உலக நாடுகளும் வங்கிகளும் சேர்ந்து பின் பற்றுவது மிகவும் எளிதாகலாம்.

Warren Buffett on Gold:
It gets dug out of the ground in Africa, or someplace. Then we melt it down, dig another hole, bury it again and pay people to stand around guarding it. It has no utility. Anyone watching from Mars would be scratching their head.



--

Monday, February 23, 2009

ஆஸ்கார் விருது சந்தோஷமும்(A.R.Rahman) ,வருத்தமும்(MIA)




இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று A.R.Rahman சரித்திரம் படைத்த செய்தி உண்மையிலேயே உலக தமிழர்களுக்கு எல்லாம் மாபெரும் சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும். அதுவும் இளம் வயதில் இவ்விருது பெற்றதாலும், அவருக்கு ஹாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகம் கிடைத்ததாலும் அவருக்கு ஹாலிவிட்டில் மிகப்பெரிய பிராஜெக்ட்களில் இனி வாய்ப்பு கிடைத்து உலகலவில் அவர் பல சாதனைகளை படைக்க போகிறார் என்பதும் நிச்சயம்.அவருடைய வெற்றி பயணம் தொடர நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

இந்த ஆஸ்காரில் வருத்தம் அடைய வைத்த செய்தி, விருது பெற பரிந்துரைக்க பட்டவர்களில் ஒருவரான MIAக்கு இந்த முறை விருது கிடைக்க வில்லை என்பது. ஹிப் ஹாப் படகர்களில் உலக அளவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர் MIA. இலங்கையில் நடைபெரும் இன அழிப்பு பற்றி தைரியமாக மேல் நாட்டு மீடியாக்களில் எடுத்து கூரியவர் .அவருக்கு இந்த ஆண்டு கிராமி விருது பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தும் அது கிடைக்க வில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் கிடைக்காமல் போய்விட்டது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நிச்சயம் அவர் பல ஆஸ்கார் மற்றும் கிராமி விருது பெறுவார் என்பது நிச்சயம்

சுவிஸ் வங்கியின் ரகசியம்- அமெரிக்காவை பின்பற்றுமா இந்தியா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிளும் உள்ள பெரிய ஊழல் பெருச்சாளிகளின் பணத்திற்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ளது சுவிஸ் வங்கி. அதற்கு முக்கிய காரணம் அங்கு பணத்தை முதலீடு செய்பவர்களின் பெயரும் கணக்கும் மிகவும் ரகசியமாக வைக்கபடுவது தான்.இவ்வாறு தன் சொந்த நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் கணக்கில் வைப்பதால் அந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றில் சில- வரி இழப்பு,பணத்தை வங்கியில் போட்டால் அதன் மூலம் புதிதாக உருவக்க படும் பணப்புழக்கம் குறைவு, ஊழல் மற்றும் லஞ்சப்பெருக்கம் மற்றும் சமூக விரோத கும்பல்களின் குழுமம் பெருக்கம் போன்றவை.

இந்த பிரச்சனகள் அமெரிக்காவை கூட விட்டு வைக்கவில்லை.2002 - 2006 வரை அமெரிக்கர்கள் சுமார் $20 பில்லியன் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து உள்ளனர். இதன் மூலம் $200 மில்லியன் அமெரிக்க அரசுக்கு வரி இழப்பாகி உள்ளது. சுவிஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை இரகசியமாக வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். ஆனால் அமெரிக்கா தற்போது சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவித்து இவ்வாறு சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்யும் அமெரிக்கர்களின் பட்டியலை அமெரிக்க அரசிடம் தெரிவிக்க அனுமதி பெற்று விட்டது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்ட விரோதமாக வைத்திருக்கும் பணம் தான் அதிக அளவு உள்ளது என்று ஒரு பேச்சு வெகு காலமாக உள்ளது. அமெரிக்க அரசு செய்ததை போல் ஏன் இந்திய அரசும் சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவிக்க கூடாது? மற்ற அனைத்திற்கும் அமெரிக்காவை பின் பற்றும் மன்மோகன் அரசு இதற்கு மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது. இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஏன் அனைத்து கட்சியினரும் எழுப்ப முற்படவில்லை? மற்ற விஷயத்திற்கு எல்லாம் பத்திரிக்கை தர்மம் பேசி பெரிய பிரச்சனையை கிளப்பும் இந்திய பத்திரிக்கைகள் இந்த அத்தியாவசிய முக்கிய பிரச்சனையில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்?

சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளது பெரும்பாலும் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்,மாபியாக்களும் அவர்களின் பிடியில் இருக்கும் பத்திரிக்கை உலகும் தான் என்பது இதன் மூலம் புலனாகிறது. மற்ற பிரச்சனைகளுக்கு பார்லிமெண்ட் மற்றும் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இடது சாரிகள் இந்த பிரச்சனையில் மட்டும் ஓடி ஒளிவது ஏன்?

அமெரிக்கா தற்போது நடவடிக்கை எடுத்து உள்ளதால், இந்த சந்தர்பத்தை இந்தியா அழகாக பயன் படுத்தி அங்கு பதுக்க பட்டுள்ள இந்திய பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். உண்மையிலேயே இந்தியா முயற்சி செய்யுமா? இது பற்றி யார் கவலை பட போகிறார்கள்.


--

Tuesday, February 17, 2009

இந்திய steelகளில் கதிரியக்க(radioactive) பொருட்கள் கலப்படம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் steelகளில் கதிரியக்க பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.முதலில் ரஷ்யாவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய பட்ட பொருட்களில்(steel) கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய steelகள் வெளியிடுவது கண்டுபிடிக்கபட்டது.உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த steel முறையாக அழிக்கபட்டுள்ளதா? அல்லது அது இந்திய சந்தையில் விற்க பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

ரஷ்யாவிற்கு அனுப்ப பட்ட steelகளில் மட்டும் இவ்வகை கதிரியக்க பொருள் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட steelலும் கதிரியக்க பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. கதிரியக்க பொருட்கள் உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. இவை கேன்சரை கூட விளைவிக்களாம்.

இந்த செய்தியை நான் இது வரை இந்திய செய்தி தளங்களில் காண வில்லை.இது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. இந்த steelஐ உற்பத்தி செய்த நிறுவனம் மும்பையை சேர்ந்த Vipras Casting.

மேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் இதை முக்கிய ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான steelகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டிலேயே லாப நோக்கில் விற்று விட கூடாது.இது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்பு செய்தியாக வெளியுட்டுள்ளது குறிப்பிட தக்கது.

--

Thursday, February 05, 2009

சிதம்பரம்- இன்னொரு சுனாமியை தமிழகம் தாங்குமா?

இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு தற்போது தமிழ் நாட்டில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப புதிய சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே உண்மையான செய்தி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்தது நினைவிருக்களாம். இந்த துயர சம்பவத்துக்கான காரணத்தை கமல் போன்ற நோபல் பரிசு பெற தவறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து தசாவதாரம் படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலில் செய்யும் ஆன்மீக பணிகளில் அரசியல்வாதிகள்(சோழ மன்னர்கள் ) தலையிட்டதுதான் சமீபத்திய சுனாமிக்கு காரணம் என்ற அறிவியல் உண்மையை அறிவியல் உலகின் சமீபத்திய கண்டு பிடிப்பான String Theoryயின் மூலம் சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் கமலகாசன் அவர்கள் நிருபித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீதி துறையின் உதவியோடு நடராஜரையும்,கோவிலையும் அங்கு வரும் வருமானத்தையும் தீட்சிதர்களிடமிருந்து விடுவித்து தன் பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது. அன்று ஒரு அந்தணரை வெளியேற்றியதற்கே இன்று மாபெரும் சுனாமி தாக்கி உள்ளது. இன்று அனைவரின் அதிகாரத்தையும் பிடுங்கியதால் உலகில் என்ன என்ன அழிவுகள் ஏற்படும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது. இதன் விளைவு தமிழகத்தின் அழிவோடு விட்டு விடுமா அல்லது ஒட்டு மொத்த இந்தியா அல்லது உலகத்தையே அழிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்விகுறியாக உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆச்சாரியார்கள் கண்டறிந்து அதை நிறைவேற்றினால் உலகை காக்கும் புண்ணியமாவது கிடைக்கும்.

--

Sunday, February 01, 2009

தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கபடும் கம்பெனிகளின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளை கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள் நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில் துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்க்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு சில உள்நாட்டு தொழில் அதிபர்கள இதையே போட்டியை குறைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, தனக்கு கிடைக்கும் லாபங்களை அத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடாமல், தவறான வழிகளில் தங்களுடைய சொந்த லாபங்களுக்கு பயன்படுத்த தொடங்கினர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளால் உலகுக்கு திணிக்க பட்ட உலகமயமாதல் கொள்கை(Globalalization) ,உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் களங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கின.வளரும் நாடுகள் மற்றுமின்றி வளர்ந்த நாடுகளிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது.தேசியவாதிகளிடம் தற்போது ஏற்பட்டுள்ள மிக பெரிய குழப்பம், உண்மையிலேயே எந்த கம்பனியை தங்களுடைய நாட்டின் கம்பெனி என்று அழைப்பதுதான்.இதில் எதற்கு குழப்பம், இது மிகவும் எளிதான விஷயம் தான் என்று நினைக்கிறார்களா?தற்போது கம்பெனிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களும் பாருங்களேன். உலகமயமாக்காலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது பொருளின் உற்பத்தியை எப்பாடுபட்டாவது மலிவாக உற்பத்தி செய்வதும், மூலதனங்கள் நாடுகளின் எல்லையை கடப்பது எளிதானதும் ஆகும்.

பொருளின் உற்பத்தியை மலிவாக்க கம்பெனிகள் செய்யும் முயற்ச்சியால் ஏற்படும் பாதிப்பு பற்றி பார்ப்போம்.ஒரு உற்பத்தி பொருளை சுதேசி பொருள் என்று எப்படி அழைப்பது?அந்த பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி துவங்க பட்ட நாடு சொந்த நாடாக இருந்தால் அதை சுதேசி பொருள் என்று அழைப்பதா? அல்லது அந்த பொருளின் உற்பத்தி முழுவதும் அந்நாட்டு தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் வியாபார பெருக்கம் செய்யும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட கம்பெனிதயாரித்த பொருளை சுதேசி பொருள் என்பதா?. இப்பிரச்சனை அமெரிக்க கார் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது பெருமளவு வெளியில் பேச தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக போர்டு கம்பெனியின் கார்களின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்ய பட்டு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் இணைக்க படுகின்றன. ஆனால் கம்பெனி அமெரிக்காவை தலமையிடமாக கொண்டுள்ளது.ஒரு சில டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் 85% பகுதிகள் அமெரிக்காவில், அமெரிக்கர்களை கொண்டு தயாரிக்க படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வெளி நாட்டினரை வைத்து வெளி நாட்டில் தயாரித்து அமெரிக்காவில் விற்கும் காரை அமெரிக்க கார் என்பதா? அல்லது அமெரிக்கர்களை வைத்து அமெரிக்காவில் தயாரிக்கும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட காரை அமெரிக்க கார் என்பதா?(ஏனென்றால் லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது). இதை படிக்கும் உஙகளுக்கு இதன் விடை தெரிந்தால் அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியபடுத்துங்களேன்?.

அடுத்ததாக ஒரு சில கம்பெனிகளை சுதேசி கம்பெனி என்று அரசு பல சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அந்த நிறுவனம் பலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவங்களோடு போட்டி போட வேண்டும் என்பதால் அதற்கு பல சலுகைகளை இந்தியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டு கம்பெனிக்கு பல சலுகைகளை கொடுத்து ஊக்குவிக்கிறது. கம்பெனியும் நன்கு குறிப்பிடதக்க வளர்ச்சியை அடைந்த பின் அதை ஒரே நாளில் மற்றொரு பன்னாட்டு கம்பெனி வாங்கிவிடுகிறது. அதுவரை அதன் வளர்ச்சிக்கு lobby செய்த தேசியவாதிகள் வாயடைத்து போகின்றனர். இதற்கு ரான்பாக்சி கம்பெனி ஒரு நல்ல உதாரணம்.மருந்து உற்பத்தி தொழிலில்(Pharmaceutical) இந்திய திறமைக்கு ஒரு எடுத்துகாட்டாக உலக அரங்கில் பேச பட்டது.அரசும் நேரடியான மற்றும் மறைமுக சலுகைகள் பல அளித்தது. ஆனால் ஜப்பானை சேர்ந்த டெய்ச்சி நிறுவனம் அதை வாங்கிவிட்டது.தற்போது அது ஜப்பானிய நிறுவனமாக ஆகிவிட்டது.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடைக்கலமாவது மேற்கண்ட முறையில் மட்டும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், உலகமயமாக்களாலும் பல நாடுகளும்(உதாரணமாக அரபு நாடுகள்), தனியாரும் தங்களிடம் உள்ள அளவிட முடியாத செல்வங்களை சொவரைன் முதலீடு மூலமும் பிற வழிகளிளும் சிறிது சிறிதாக நல்ல எதிர்காலம் உள்ளதாக கருத படும் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இவை வளரும் நாடுகள் அன்றி வளர்ந்த நாடுகளில் உள்ள சிட்டி குரூப்,UBS போன்ற நிறுவனக்களில் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது கம்பெனிகளின் பங்குகளில் இவர்களது பங்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் முடிவுகளை கட்டுபடுத்தும் அளவுக்கு அதிகாரம் உள்ள நிலையை நோக்கி அவை நகர்ந்து வருகிறது.கம்பெனி உள்நாட்டு கம்பெனியாக இருந்தாலும் அதை கட்டு படுத்துவது(நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) வெளி நாட்டினர் என்றால் அது உள்நாட்டு கம்பெனியா அல்லது வெளிநாட்டு கம்பெனியா என்ற வாக்குவாதம் கூட வர தொடங்கியுள்ளது.

உலகமயமாக்கலாலும், சமீபத்திய பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதிக பணம் சிலரிடம் சேர்ந்ததாலும், அமெரிக்க நிதி நெறுக்கடியால் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது மதிப்பின் பெரும் பகுதியை இழக்க ஆரம்பித்ததாலும் இது போன்ற குழப்பங்கள் மிக அதிகமாகி பின் வரும் காலங்களில் மிக பெரிய வாதபொருளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிறுவனங்களின் முதலீட்டளர்களினால் நிறுவனங்களுக்கு மட்டும் இந்நிலை என்றால் பரவாயில்லை. தற்போது மேலை நாடுகளின் அரசும் ஒரு நிறுவனம் போல்தான் செயல்படுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. அது தன் பற்றாக்குறையை ஈடுகட்ட சீனா மற்றும் ஜப்பானின் முதலீட்டை தான் நம்பி உள்ளது. அமெரிக்க அரசின் பெரும்பகுதி முதளீட்டாளர்களாக இந்நாடுகள் ஆகி விட்டால், அமெரிக்காவை அமெரிக்க அரசு என்றழைப்பதா? அல்லது ஆசிய அமெரிக்க அரசு என்று அழைப்பதா? என்ற விவாதம் பிற்காலத்தில் வராமல் இருந்தால் நல்லதுதான்!


--

Friday, January 23, 2009

புஷ்ஷை (அமெரிக்க)வரலாறு விடுதலை செய்யுமா?

புஷ்ஷின் பதவிகாலம் முடிவை நோக்கி நெருங்க தொடங்கிவிட்டது. அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த ஜனாதிபதிகளில் ஒருவராக புஷ் கருதபடுகின்றார். தற்போது ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் அதிருப்தியையும் அவர் பெற்றுள்ளார். அவரது தோல்விகளை பட்டியலிட்டால் ஒரு பதிவு போதாது. அவரது தோல்விகளில் முக்கியமானதாக கருதபடுவது
1.தேவையற்ற ஈராக் போர்
2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி
3.நிதி நெருக்கடி
4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை


புஷ்ஷின் தோல்விகளை விளாவாரியாக விவரித்து பதிவுகள் இணையமெங்கும் வந்து விட்டது. அது பற்றி கைக்குழந்தைக்கு கூட விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அவருக்கு ஆதரவான கருத்துக்களை அறிவது மிகவும் கடினமாகவே உள்ளது. தனிபட்ட முறையில் புஷ்ஷின் ஆட்சியில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அவருக்கு சாதகமாக கூறபடும் கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவை இடுகிறேன்.

1.தேவையற்ற ஈராக் போர்

தோல்வி -ஈராக்கில் Weapans of Mass Destruction(WMD) இருக்கிறது என்று கூறி போர் செய்ய சென்று விட்டு அங்கு கத்தி,கடப்பாறை,ரைபிள் போன்ற WMD மட்டுமே கண்டுபிடித்தார்.

உண்மை காரணமாக கூறபடுபவை :அமெரிக்கா மனதில் வைத்திருந்த WMD என்பது அணு ஆயுதங்கள் அல்ல. யூரோ நாணயம்.அமெரிக்காவின் இந்த அளவு வளர்ச்சிக்கும், அதன் மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டிற்கும், அது உலகின் மிகப்பெரிய ராணுவ சக்த்தியாக இருப்பதற்கும் முக்கிய காரணம் டாலர் உலக நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது தான். இது பற்றி என்னுடைய டாலர் அரசியல் என்ற பதிவில் கூறி இருந்தேன். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு டாலருக்கு போட்டியாக எந்த நாணயமும் இல்லாமல் இருந்தது.புஷ் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வருடம் முன்பு தான் யூரோ புழக்கத்துக்கு வந்தது. டாலரின் மதிப்பு உலக சந்தையில் நன்கு இருப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டாலரில் விற்கபடுவது தான். ஈராக்கிய அதிபர் சதாம் அமெரிக்காவின் மீது நடத்திய மிக பெரிய தாக்குதல், பெட்ரோலை யூரோவில் விற்பனை செய்ய முன் வந்தது தான். அதற்கு பதில் நடத்திய எதிர் தாக்குதல் தான் ஈராக் போர். இராக்கை அமெரிக்கா பெட்ரோலை டாலரில் விற்க அனுமதித்திருந்தால் உலக சேமிப்பு நாணய சந்தையில் பெருமளவை யூரோ பிடித்திருக்கும். அது அமெரிக்காவிற்கு பொருளாதார அணுகுண்டு தாக்குதல் போன்றது.ஈராக்கின் இந்த முயற்ச்சி இல்லாமலேயே யூரோ உலக சேமிப்பு நாணய சந்தையில் 10 வருடத்தில் 25% பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக பொருளாதாரமே அரபு நாடுகளின் கச்சா எண்ணையை நம்பி இருப்பதால், அரபு நாடுகளிடையே ஒரு வலிமையான அரசு தோன்றி, அவர்களுக்குள் வலுவுள்ள leadership பிற்காலத்தில் தோன்றுவதை அமெரிக்காவினால் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.போருக்கு சென்ற பின் அங்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஒரு இசுலாமிய நாட்டில் முழு அமெரிக்க ஆதரவுள்ள அரசை அமெரிக்க ஆதரவுடன் ஏற்படுத்துவது இயலாத காரியம்.இனி வரும் காலங்களில் பிற அரபு நாடுகள் நாணயத்தை டாலரிலிருந்து மாற்றும் போது , அப்போதய அமெரிக்க அதிபர் அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே புஷ்ஷின் செயலுக்கு ஒப்பீடாக அமையும்.

2.உலகெங்கிலும் தீவிரவாதத்தின் வளர்ச்சி


தோல்வி -உலகெங்கிளும் தீவிரவாதத்தின் வளர்ச்சி அதிகரித்த்ள்ளது. அமெரிக்காவில் நடை பெற்ற தீவிரவாத செயலை தடுக்க தவறிவிட்டார்

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:சோவியத் யூனியன் உடையும் வரை விடுதலை போராட்ட வீரர்களாக, அமெரிக்காவினால் வளர்த்து விடபட்டவர்கள் தான் இன்று தீவிரவாதிகளாக கருதபடுபவர்கள். சோவியத் யூனியன் அழிந்தவுடனே அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கிளிண்டனின் ஆட்சியின் போது அவர்கள் குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கால கட்டத்தில் தங்கு தடையின்றி networkஐ உலகெங்கும் விரிவு படுத்தினர்.மேலும் செப்டம்பர் 11 தாக்குதல் புஷ் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே நடைபெற்றது. எனவே அந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அவருக்கு முன் இருந்த ஆட்சியாளர்களே. மேலும் அந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் நடைபெறாமல் தடுத்ததே புஷ் இன் சாதனையாக கருதபடுகிறது.அல் கொய்தா மற்றும் தலிபான் கூட்டனியின் வளர்ச்சியை பெருமளவு தௌத்து பெரிய தாக்குதலை ஏற்படுத்த முடியாமல் தடுத்ததும் அவரது வெற்றியாகவே கருத படுகிறது.

3.நிதி நெருக்கடி

தோல்வி-புஷ் ஆட்சியின் முக்கிய தோல்வியாக கருதபடுவது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டு உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பை குறைத்தது

அவர் பக்க நியாமாக கூறபடுபவை:இப்போது ஏற்பட்ட நிதி நெறுக்கடிக்கு முக்கிய காரணமாக கருத படுவது subprime என்றழைக்கபடும் கடனை திருப்பி தர இயலாதவர்களுக்கு தந்த கடன்கள்,பெரிய அளவில தங்கு தடையற்ற கடன் கொடுத்து ஒரு housing bubbleஐ வங்கிகள் உருவாக்க விட்டது மற்றும் Credit Default Swapஎன்னும் கடன் வகை .
அவர் பக்க நியாமாக கூறபடுபவை: கிளிண்டன் ஆட்சி காலத்தில் , ஏழை மக்கள் அனைவரும் வீடு வாங்க வேண்டும் என்பதற்காக Community ReInvestment Act என்னும் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஏழை மக்களுக்கும் வீட்டு கடன் எளிதாக கிடைத்தது. அவ்வாறு கடன் பெற்றவர்களில் பெரும்பாலோனோர்க்கு கடனை திருப்பி தரும் வளிமை குறைவாகவே இருந்தது. அந்த வகை கடன்கள் தான் இன்று ட்ரில்லியன் டாலரை தாண்டி விட்டது. என்வே இந்த Subprime கடன்களுக்கு மூல கார்த்தாவாக கிளிண்டனே உள்ளார்.
1930களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகபெரிய நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் கொண்டுவர பட்ட சட்டம் தான் Glass-Steagall சட்டம்.
அது மக்களிடம் டெப்பாசீட் வாங்கி வியாபாரம் செய்யும் வங்கிகள் அந்த பணத்தை பொறுப்பின்றி Investment Bankingல் முத்லீடு செய்வதை தடுத்தது.
கிளிண்டன் ஆட்சி காலத்தில் அதில் திருத்தம் செய்ய பட்டு சாதாரன வங்கிகளும் Investment bankingல் செயல்படலாம் என்று அறிவிக்க பட்டது. அதன் விளைவாக பெருமளவிலான் மக்கள் பணம் speculation அடிப்படையாக கொண்ட மற்றும் risk அதிகம் உள்ள முதலீடுகளில் முதலீடு செய்ய பட்டு பொருளாதாரம் சூதாட்டம் போல் வளர ஆரம்பித்தது.அதுவும் நெறுக்கடிக்கு ஒரு காரணமாகியது.
Credit Default swap என்ப்படும் சந்தை product கூட அறிமுக படுத்த பட்டது கிளிண்டனின் ஆட்சிகாலத்தில் தான். (ஆனால் அது பூதாகரமாக வளர்ந்தது புஷ்ஷின் ஆட்சிகாலத்தில்).

தவறுகளுக்கு மூல காரணம் கிளிண்டன் என்றாலும் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்க தோன்றும். புஷ்ஷை பொருத்தவரை அவர் தீவிர முதலாளித்துவ கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்.அவருடைய அரசியல் ஆசானாக கருதபடும் ரொனால்ட் ரீகனுடைய கட்டுபாடற்ற பொருளாதாரம் மற்றும் உலகளாவிய கட்டுபடுத்தல் போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கையில் அதீத நம்பிக்கையுடையவர் புஷ்.அவருக்கு ஓட்டளித்தவர்களும் அப்படி பட்ட கொள்கையை பின் பற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டளித்தனர். ரீகன் காலத்தில் வெற்றி சூத்திரமானது புஷ் கலத்தில் தோல்விக்கு இட்டு சென்றது. எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையால் அவர் அவற்றை சந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டார்.(சில நிறுவனங்கள் அழிவை நோக்கி சென்ற போது அதையும் மார்கெட் தான் தீர்மானிக்க வேண்டும் என்று விடாமல், அவை அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை காரணம் காட்டி அவற்றை மீட்டு லிபெரல் கன்செர்வேட்டிவ்களிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தது வேறு விஷயம்.)
இதைதான் புஷ் பின்வருமாறு கூருகிறார்.
“I inherited a recession, I’m ending on a recession,”

4.காத்ரீனா சூறாவளி நிவரணத்தில் திறமையின்மை

இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக எவரும் எதுவும் கூறவில்லை.இந்த விஷயம் அவரது நிர்வாக திறமையின்மையையே எடுத்து காட்டுகிறது.எதிபாராத மாபெரும் இயற்கை சீரழிவு வரும் போது, அதை அமெரிக்க எதிர்கொள்ள தயார்படுத்த படவில்லை. இனி அது போன்ற எதிர்பாராத இயற்கை பேரிழப்பு நடைபெரும் போது அதை எதிர் கொள்ள அமெரிக்கா தன்னை தயார் படுத்தி உள்ளதா? என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புஷ் பின்பற்றிய கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் , குறைவான வரி நிர்ணயம் (அதிகம் பணம் சம்பாதிக்கும் மேல் நிலையில் உள்ள 1% அமெரிக்கர்களுக்கு $1.35 ட்ரில்லியன் வரி விலக்கு அளித்தார்.)மற்றும் உலகளாவிய ராணுவ வலிமையை நிலைநாட்டுதல் காரணமாக $5.6 ட்ரில்லியன் அதிக இருப்பாக இருந்த அமெரிக்க நிதி நிலைமையை $6 ட்ரில்லியன் இழப்பாக இட்டு சென்றது.ஓய்வு பெற்றவர்களுக்கான health care benefit செலவு $13 ட்ரில்லியனிலிருந்து $43 ட்ரில்லியனாக உயர்ந்ததற்கு புஷ்ஷின் medicare drug benefit திட்டமும் ஒரு காரணம். இந்த செலவுகளை செய்ய இது வரை ஒவ்வொரு வருடமும் அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
கட்டுபாடற்ற சந்தையில் முழு நம்பிக்கை வைத்திருந்த புஷ் தனது ஆட்சியின் இறுதியில் deregulation என்ற நிலையிலிருந்து மாறி reregulation என்று நிலைக்கு இட்டு சென்றது. அனைத்து துறையிலும் தனியாருக்கு முழு பங்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கொள்கையை மாற்றி மிக பெரிய நிதி நிறுவனம் மற்றும் கார் நிறுவனங்களில் அரசின் பங்கை அதிக படுத்தும் நிலைக்கு தள்ளபட்டார்.

இந்தியாவை பொருத்த வரை புஷ் ஆட்சி இந்திய-அமெரிக்க உறவை வேறெப்போது இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பது உண்மை.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமலேயே அணு தொழில்நுட்ப தடையிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்தததற்கு புஷ்ஷின் தனிபட்ட ஆதரவே காரணம் எனலாம்.வேறு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இது போன்ற ஒப்ப்ந்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. புஷ் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரச்சனையில் சிறிதளவும் தலையீடு செய்ய வில்லை என்பதும் குறிப்பிட தக்கது.எந்த ஒரு பிரச்சனையிலும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு, இந்திய எதிர்ப்பு என்ற நிலை மாறி இந்திய ஆதரவு என்ற நிலையும் இந்த ஆட்சியில் தான் ஏற்படுத்த பட்டது என்பது குறிப்பிட தக்கது.outsourcingக்கு எந்த தடையும் விதிக்காமல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிருவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தார்.


இனிவரும் காலங்களில் அமெரிக்க எதிர் கொள்ள போகும் பிரச்சனைகளும், அதை அப்போது இருக்கும் ஜனாதிபதிகள் எவ்வாறு கையாள போகிறார்கள் என்பதை பொருத்து தான் புஷ்ஷை வரலாறு விடுதலை செய்யுமா என்பது முடிவு செய்ய படும்.


--

Saturday, January 17, 2009

தமிழ் Typewritterயை உங்கள் blogல் எளிதாக இணைப்பது எப்படி?

தமிழ் எழுத்துகளை ஆங்கில வார்த்தை கொண்டு எழுத உபயோகபடுத்தும் unicode writterஐ என்னுடைய தளத்தில் இணைப்பது பற்றி பல நாட்களாக முயன்று எளிதான வழி ஒன்றும் என்க்கு கிடைக்கவிலலை. அந்த நேரத்தில் கூகிளின் AJAX API பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் Transliteration எழுதி செய்வதற்கான APIஐ பொது உபயோகத்திற்காக வெளியிட்டுள்ளது.அதை உபயோகபடுத்தி ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழி மாற்றும் Transliterator எழுதுவது மிக எளிதானது.

நான் கூகிளின் இந்த APIஐ பயன் படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றும் எழுதி ஒன்றை தயாரித்துள்ளேன். இதை எளிதில் மற்றவர்களும் பயன்படுத்த widgetஆக உருவாக்கி http://www.widgetbox.comல் போட்டுள்ளேன். இதை அனைவரும் எளிதாக ஒரு கிளிக்கில் உங்களது blogல் இணைத்து கொள்ளலாம்.

பதிவர்கள் இந்த எழுதியை உங்கள் blogல் இணைக்கும் முறை

1.இந்த பதிவின் வலது புறம் உள்ள amma=அம்மா என்ற எழுதி widgetன் கீழ் உள்ள Get Widget linkஐ சொடுக்கவும் அல்லது
widgetஐ பெற இங்கு(http://www.widgetbox.com/widget/thanglish) சுட்டவும்.

2.அது திறக்கும் பக்கத்தில்(http://www.widgetbox.com/widget/thanglish) வலது புறம் உள்ள get widget ஐ சொடுக்கவும்

3.அது இன்னொரு சன்னலை திறக்கும். அந்த சன்னலின் அடியில் blogger,wordpress,typepad,igoogle போன்ற iconகள் இருக்கும்.

4.நீங்கள் உபயோகபடுத்தும் blogging வகையை சொடுக்கினால் அது login க்கு இட்டு செல்லும். அதன் பின் உங்கள் பிளாக்கில் எளிதாக இணைக்கலாம் .
அதில் கூறபட்ட blogging toolஐ நீங்கள் உபயோக படுத்தவில்லையென்றால், அது தரும் javascript code ஐ உங்கள் இணைய தளத்தில் தேவையான இடத்தில் paste செய்தால் உஙகள் இணைய தளம் எதுவானாலும், அதில் இந்த தமிழ் எழுதியை உபயோகபடுத்த முடியும்.

இதில் எதாவது பிரச்சணை இருந்தால் இதன் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இது பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்.


--

Wednesday, January 14, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதலாளித்துவம் உலகம் எங்கும் மிக வேகமாக பரவியது. சோவியத் யூனியன் இடத்தை இனி பிடிக்க போவது யார் என்று நினைத்த போது, பொருளாதார வல்லுனர்கள் கூறியது பான்டுகளை தர வரிசை படுத்தும் அமைப்புகள் என்றனர். அப்போது நகைச்சுவையாக கருதபட்டது தற்போது உண்மையாக மாற தொடங்கியது.

முதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன? என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது? அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு "AAA" என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody's,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.
தனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.
இனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு


--

Monday, January 12, 2009

நிதி நெருக்கடி பற்றி படிக்க! சிரிக்க!




நிதி நெருக்கடியை பற்றிய சில நகைச்சுவை வாதங்கள் மின்னங்ஞ்சல் மூலம் வந்தது. உண்மையிலேயே நகைச்சுவையாக உள்ளது. இதை முன்பே படிக்காதவர்கள் படித்து ரசிக்கலாம்(நிதி நெருக்கடியின் தாக்கம் உஙகளை பாதிக்காதவரை )


1. The US has made a new weapon that destroys people but keeps the building standing,. Its called the stock market - Jay Leno

2. Do you have any idea how cheap stocks are ?? Wall Street is now being called Wal Mart Street Jay Leno

3. The difference between a pigeon and a London investment banker . The pigeon can still make a deposit on a BMW

4. What's the difference between a guy who lost everything in Las Vegas and an investment banker ? A tie

5. The problem with investment bank balance sheet is that on the left side nothing's right and on the right side nothing's left.

6. I want to warn people from Nigeria who might be watching our show, if you get any e mails from Washington asking for money, it's a scam. Don't fall for it - Jay Leno

7. Bush was asked about the credit crunch. He said it was his favourite candy bar - Jay Leno

8. The rescue bill was about 450 pages. President Bush's copy is even thicker. They had to include pictures Jay Leno

9. President Bush's response was to meet some small business owners in San Antonio last week. The small business owners are General Motors, General Electric and Century 21. - Jay Leno

10. What worries me most about the credit crunch, is that if one of my cheques is returned stamped 'insufficient funds'. I won't know whether that refers to mine or the bank's.


--

Friday, January 09, 2009

IT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு IT நிறுவனங்களை தங்களது மாநிலத்தில் தொடங்க வைக்க முயற்ச்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தொழில் துறை வளர்ச்சியை ஒதுக்கி வந்த மேற்கு வங்காளம் போன்ற பிற்பட்ட மாநிலங்கள் கூட தற்போது IT நிறுவங்களை தங்கள் மாநிலத்தில் இழுக்க முயற்ச்சி செய்து வருகிறது.ஆனால் ஒரே ஒரு மாநிலம் மட்டும் தன் மாநிலத்தில் கம்பெனிகளை தொடங்க வருபவர்களை, இங்கு தொடங்க கூடாது என்று அறிவுறித்தி திரும்பி அனுப்ப முயற்ச்சி செய்கிறது. அந்த மாநிலம் தமிழகம்
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க
அனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்
இல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்
அறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்
இருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா? அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்
பொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.

தற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.

தமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்
பாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்


--

Thursday, January 08, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு

கடந்த சில மாதங்களாக உலகில் நடந்து வரும் பொருளாதார மாற்றங்கள், இதுவரை நடைமுறை உண்மைகளாக நம்பப்பட்டு வந்த அடிப்படை விதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நிறைய பாடங்களை நிகழ்காலத்திற்கு மற்றும் வருங்காலத்திற்கு அளித்துள்ளது. முக்கியமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் தான் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று நம்பப்பட்டு வந்தது. அரசாங்களின் அதிகார எல்லை குறைக்கபட்டு கார்பரேட்டுகளின் எல்லை விரிவாக்க தொடங்கியது.வளர்ந்த நாடுகளில் இந்த மாற்றம் பல காலமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் வேகம் சில காலமாக அதிகரிக்க தொடங்கியது. IMF மற்றும் உலக வங்கிகளின் மூலமாக இந்த மாற்றங்கள் வளரும் நாடுகளின் மீதும் திணிக்க பட்டுள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சில விளைவுகளையும்,அது கொடுக்கும் சில பாடங்களையும் இனி வரும் சில பதிவுகளில் காண்போம்.

சந்தையில் அரசின் கட்டுப்பாடு

பொருளாதார சந்தையில் அரசின் கட்டுப்பாடு கூடாது என்றும் பொது சந்தையில் அரசின் தலையீடு இருக்க கூடாது (Free Market)என்றும், எந்த செயல் நடந்தாலும் அது நல்லதா அல்லது கெட்டதா என்பதை சந்தை தான் தீர்மானிக்க வேன்டும் என்றும் வளர்ந்த நாடுகள் கூறி வந்தன. கடந்த சில வருடங்களாக சந்தையில் பலவிதமான புதிய வகை விற்பனை பொருட்கள்(Credit Default Swap போன்றவை) அறிமுகபடுத்த பட்டு மிக அதிக ஆளவில் சந்தையில் கலக்க தொடங்கியது.அது போன்ற பொருட்கள் சந்தையில் எந்த அளவு பெருகி வருகிறது? அது சந்தையில் ஏற்படுத்த போகும் உண்மையான பாதிப்பு போன்றவற்றை அரசு கண்காணிக்க தவறியது.

கம்பெனிகளும் உண்மை நிலமையை மூடி மறைக்க தொடங்கியது. அதிக அளவு லாபம் ஏற்படுவதாக கணக்கு காட்டி,நிதி நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பல பில்லியன் டாலர்களை போனசாக பெற்றெனர்.அரசாங்கம் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்காக
கண்காணித்திருந்தால் இது போன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க பட்டு, பிரச்சனை இந்த அளவு வராமல் தடுக்க பட்டிருக்களாம்.

நிதி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுக்கு மீறி இருந்த போது அமெரிக்க அரசு அதை எவ்வாறு கையான்டது என்று பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும்.அமெரிக்காவின் பொது சந்தையில் உள்ள Riskஐ கண்காணிக்கும் அமைப்பு Securities & Exchange Commission (SEC).பொருளாதாரமும் அதில் உள்ள complexity அதிகரிக்கும் போது அந்த நிறுவனத்தின் பணியாற்றும் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை சில நூற்றிலிருந்து வெறும் ஒன்றாக குறைக்க பட்டுள்ளது.நீங்களே நினைத்து பாருங்கள், ஒரே ஒருவர் உலக பொருளாதாரத்தையே எவ்வாறு கண்காணிக்க முடியும் என்று?

செனட் விசாரணையில் நடந்த உரையாடல் இங்கே

In recent testimony under oath by Mr Lynn Turner, Chief Accountant of the Securities & Exchange Commission (SEC) testified that the SEC Office of Risk Management which had oversight responsibility for the Credit Default Swap market, an exotic market worth nominally some $62 trillions, was cut in Administration ‘budget cuts’ from a staff of one hundred down to one person. Yes, that was not a typo. That’s one as in ‘Uno.’

Vermont Democratic Congressman Peter Welsh queried Turner, ‘... was there a systematic depopulating of the regulatory force so that it was impossible actually for regulation to occur if you have one person in that office? ...and then I understand that 146 people were cut from the enforcement division of the SEC, is that what you also testified to?’ Mr. Turner, in Congressional testimony replied, ‘Yes…I think there has been a systematic gutting, or whatever you want to call it, of the agency and it's capability through cutting back of staff.’

இதே அமெரிக்க ஊடகங்கள்தான் இந்தியாவில், அரசு சந்தையை கண்காணிப்பதும் கட்டுபடுத்துவதும் தவறு என்று கூறி வந்துள்ளது.தற்போது மேல்நாட்டு கம்பெனிகள் இந்திய பங்கு சந்தையில் அதிக அளவு செயல்பட ஆரம்பித்துள்ளனர். எனவே தவறுகள் நிறைய நடக்க சாத்திய கூறுகள் உள்ளது.எனவே அரசும் கண்காணிப்பை அதிக படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

1930களில் நடைபெற்ற மாபெரும் பொருளாதார நெருக்கடியில் கற்ற பாடங்களின் அடிப்படையில், மக்களின் நன்மைக்காகவும், சந்தையின் நன்மைக்காகவும் பல முக்கிய கட்டுபாட்டு சட்டங்கள்(Glass-Steagall Act of 1933) இயற்றப்பட்டன.50 ஆண்டுகளாக அந்த சட்டங்களும் நன்றாக செயல் படுத்த பட்டு பெரிய விபரீதங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டு வந்தது. ஆனால் ரீகன் ஆட்சி காலத்திலிருந்து கட்டுபாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் காலத்தில் அதில் பெரிய அளவு கட்டுபாடுகள் தளர்த்த பட்டது.கட்டுபாடுகளை தளர்த்த நிதி நிறுவன லாபிக்கள் சுமார் $200 மில்லியன் செலவு செய்துள்ளனர்.அதன் விளைவு பல ட்ரில்லியன் டாலர் இழப்பு உலகத்துக்கும், பல பில்லியன் டாலர்கள் லாபமாக நிதி நிறுவன நிர்வாகிக்களுக்கும் கிடைத்தது.

அடுத்த பதிவில் கடன் தரச்சான்றிதழ்(Credit Rating Agency) கொடுக்கும் நிறுவனங்களின் பங்கு பற்றி காண்போம்


--

Tuesday, January 06, 2009

Humpty Dumpty பொருளாதாரம்-அமெரிக்கா?

இந்த பாடல் குழந்தைக்கா? அமெரிக்க பொருளாதாரத்திற்கா?

Humpty Dumpty sat on a Wall
Humpty Dumpty had a great Fall
All the Kings Horses and All the Kings Men
Could not put Humty Together Again?!





--

Friday, January 02, 2009

விலகுகிறது சனிபகவானின் கண் திரை, 4th Sep 2009ல் உலகம் அழியுமா? - கண்டுபிடித்தது NASA

சனி பகவானின் கண் கட்டபட்டுள்ளதன் காரணம் அனைவரும் அறிவர். உலகில் உள்ள அனைத்து பாவங்களையும் தன்னுள் சுமந்து கொண்டுள்ளதால் அவரின் கண்கள் கட்ட பட்டுள்ளது.

அவர் கண்ணை திறந்தால் பாவம் அனைத்தும் எதிரில் உள்ளவர்களை (பூமி போன்ற கிரகங்கள்) தாக்கி சிரமத்தில் ஆழ்த்தும்.இது இந்தியாவை சேர்ந்த அறிவாற்றல் நிறைந்த சோதிடர்களால் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.

தற்போது சில காலமாக உலகில் சுனாமி,பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களும், பொருளாதார நெருக்கடி, மத சண்டைகள் போன்ற சமூக பிரச்சனைகளும் மிக அதிகமாகி
உள்ளது.இதன் மூல காரணத்தை அறிய முடியாமல் பல்வேறு துறை நிபுணர்களும்,ஞானிகளும்,சோதிடர்களும் திணறி வந்த நேரத்தில்,ஒரு புதிய உண்மையை கண்டுபிடித்து பிரச்சனைக்கான மூல காரணத்தை NASA சோதிடர்களுக்கு ஒரு முக்கிய clueவாக கொடுத்துள்ளது.

NASA கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். பாவத்தை அடக்கி வைத்திருந்த சனி பகவானின் கண்ணை மறைத்து கட்ட பட்டிருந்த திரை அவிழ தொடங்கியுள்ளது. அவர் பாவ
கணைகளை பூமி மீது வீச தொடங்கி விட்டார்.அவரது கண்திறை மெல்ல மெல்ல விலகுவதை நாமும் கண்கூடாக பூமியிலிருந்து செப்டம்பர் 4 2009 வரை பார்க்கலாம்.செப்டம்பர் 4 அன்று அவரது கண் திறை முழுமையாக விலகி விடும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் NASAவின் இந்த செய்தியை படித்து பாருங்கள்.

இதை படித்த பின் நீங்கள் உடனடியாக கூகிளில் தேட போவது சனி பகவானின் பாவ கணைகளின் தாக்குதலுக்கு எதாவது பரிகாரம் கிடையாதா என்பதாகத்தானே இருக்கும். கவலை
படாதீர்கள் அதையும் நானே உங்களுக்காக கண்டுபிடித்து இலவசமாக இந்த பதிவிலேயே இணைத்துள்ளேன். வைத்தீசுவரன் கோவில் பகுதியில் இருக்கும் பழங்கால ஓலை சுவடியில் இதற்கு பரிகாரம் உள்ளது.பரிகாரமும் மிகவும் எளிமையானது. இந்த பதிவை படித்து முடித்த இரண்டு நாட்களுக்குள் 10 பேருக்கு இந்த பதிவை forward செய்தால் பாவம் உடனே விலகும்.

சற்றுமுன் வந்த தகவல்:பொதுவாக உலகில் எந்த தீய நிகழ்வுகள் நடந்தாலும் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பிறகே நாஸ்ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை கணித்துள்ளார் என்று செய்தி வரும். ஆனால் இம்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பே நாஸ்டர்டாம் சனி பாகவானின் இந்த நிகழ்வை பற்றி முன்னறிவிப்பு செய்த செய்தியும் கசிய தொடங்கி உள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நன்கு விவரம் தெரிந்த வாசகர்கள் இந்த நிகழ்வுக்கும் 2012 prophecyக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னூட்டமிட்டால் வாசகர்களுக்கும் நன்மையாக இருக்கும்.

--

2008ல் படிக்க மறந்த செய்தி

2008ல் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. பெரும்பாலான செய்தியை நாம் படித்திருப்போம். ஆனால் ஒரு சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் சிறு செய்தியாக வந்து நம் கண்ணுக்கு படாமல் இருக்க வாய்ப்புண்டு.நான் தற்போது படித்த இந்த செய்தி முன்பு என் கண்ணில் அகப்படவில்லை.செய்தி இது தான்...

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏவுகணை தாக்குதல் தடுப்பு உதவி(Missile Shield) ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முதற் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி கேட்ஸ் இது பற்றிய பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.பிற்காலத்தில் சீனா இந்தியாவை தாக்கினால், அந்த நேரத்தில் இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும் என்று கூற படுகிறது. அது போல அமெரிக்காவிற்கும் ,ஆசியாவில் சீனாவிற்கு எதிராக ஒரு பிடியாக கருதபடுகிறது.பின் வரும் காலங்களில் சீனா அமெரிக்காவிற்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவிற்கும் இந்த ஒப்ப்ந்தம் உபயோகமாகயிருக்கும். இதனால் அமெரிக்கவும் பல கோடி மதிப்புள்ள ஆயுத தளவாடங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.

விரிவான செய்திக்கு இங்கு சுட்டவும்

Wednesday, December 31, 2008

T.R பாலு தமிழகத்திற்கு தரும் புத்தாண்டு பரிசு

கடுமையான முயற்ச்சிக்கு பிறகு கடல் சார் பல்கலை கழகம் ஒரு வழியாக தமிழகத்திற்கு வந்து விட்டது.கடல் சார் பல்கலை கழக நிர்வாக வளாகமும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டபட்டு விட்டது.இது மிக விரைவில் இந்த ஆட்சியிலே முழு அளவில் செயல் பட ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதை கொண்டு வருவதற்கு அவர் போராடிய போராட்டங்கள் பல. தமிழ் நாட்டு மக்களின் ஓட்டை வாங்கி கொண்டு பதவிக்கு வந்த சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் செய்த புல்லுருவி தனத்தையும் மீறி ஒரு வழியாக தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.(இதே தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் சேலம் கோட்டம் பிரிக்கும் போதும் இதே போன்ற செயளில் இறங்கியது குறிப்பிட தக்கது).இதே போல் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் அவர் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்

முக்கியமாக பாலு அவர்கள் தமிழகத்திற்கு செய்யும் பணிகளை பற்றி படித்து பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது.இந்த ஆட்சியில் மட்டும் 12,146 கோடி ரூபாயில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் பணிகள் செயல்படுத்த படுகின்றன.தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து 403,755.85 கோடி மதிப்புள்ள 868 பிராஜெட்கள் மத்திய அரசால் செயல் படுத்த பட்டுள்ளன. அவற்றில் 40900 கோடி மதிப்புள்ள பிராஜெட்கள், அதாவது ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒதுக்க பட்ட வளர்ச்சி தொகையில் 10% தமிழகத்திற்க்காக மட்டும் செயல்படுத்த பட்டுள்ளது.தமிழகம் தான் இந்தியாவிலே அதிக அளவு பிராஜெட்கள் மற்றும் நிதியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இவற்றில் பெரும் பங்கு T.R.பாலு தலமையில் உள்ள துறைகளால் நிறைவேற்ற படுகிறது.தமிழகத்தில் 850 கி.மி நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பட்டுள்ளன.

எனக்கு தெரிந்து இந்த அளவு மத்திய திட்டங்களை குறுகிய காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் இவராக தான் இருப்பார் என்று தோன்றுகிறது.இதில் மிகவும் வருத்த பட வேண்டிய செய்தி என்னவென்றால தமிழக பத்திரிக்கைகள் இந்த சாதனைகளை பற்றி பெரிய அளவில் பாராட்டி எழுதுவதே இல்லை. மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களின் முயற்ச்சியால் இவ்வளவு வளர்ச்சி பணிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள சாதனை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே.

பத்திரிக்கைகள் முதல்வரின் குடும்ப அரசியல்,நிர்வாக சீர்கேடு போன்ற குறைகளை அதிக அளவு விமர்சித்து முக்கியத்துவம் தந்து பிரசூரிக்கிறது. இது ஆட்சியாளர்களை திருத்தி கொள்ள நிச்சயம் தேவை. ஆனால் இதே போன்று ஆட்சியாளர்கள் செய்யும் சாதனைகளுக்கும் முக்கியத்துவம் தந்து பாராட்டி , பெரிதாக பிரசூரிக்க வேண்டும். அப்போது தான் அந்த சாதனைகள் மக்கள் கவனத்திற்கு சென்றடையும்.மேலும் அது நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளையும் ஊக்கபடுத்தும்.

தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்து விட்ட்டார்கள் என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளாவது இந்த சாதனைகளை படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

பத்திரிக்கையாளர்களே! ஒரு சில நல்ல செய்திகளையும் மக்களுக்கு அடிக்கடி தெரிய படுத்துங்கள். கட்சி பாரபட்சமின்றி இந்த சாதனைகள் அனைவராலும் பாரட்ட பட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய அமைச்சராக வருவது யாராக இருந்தாலும் இதை விட நன்றாக செய்ய முயர்ச்சி எடுக்க வேண்டும்

Tuesday, December 30, 2008

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி




அண்ணாமலை பல்கலைகழகத்தில் '90 களில் படித்தவர்கள்(பொறியியல் கல்லூரி நீங்களாக) அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்த கடை சண்முகம் கடை. அனைவருக்கும் தெரிந்த கடை என்றவுடன் நீங்கள் ஏதோ பெரிய ஆடம்பரமான கடை என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு சிறிய கீற்று கொட்டாயில் இயங்கும் கடை.காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வித விதமான பஜ்ஜி,வடை,போண்டா,காபி,டீ போன்றவை கிடைக்கும். நள்ளிரவு நேரங்களில் தோசை, நூடுல்ஸ் போன்ற டிபன் வகையறாக்கள் கிடைக்கும். அது இருக்கும் இடம் strategically important இடம்.மாணவர்களால் செல்லமாக PC என்று அழைக்கபடும் (Post office corner) இடத்தில் உள்ளது. பல்கலை கழக பெண்கள் விடுதி நுழைவாயிலிலிருந்து main roadற்கு சேரும் இடத்தின் அருகாமையில் உள்ளது. மேலும் பல்கலை கழகத்திற்குள் உள்ள கடை தெரு என்றால் அதை தான் கூற வேண்டும். அதற்கு அருகில் கோவில் கூட உண்டு.



காலையிலிருந்து மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் தாக்குதலில் நிலை குலைந்த மாணவர்கள், விடுதிக்கு சென்று ஒரு quick குளியல் எடுத்து கொண்டு, நன்றாக தங்களை அலங்கரித்து கொண்டு சிறு சிறு குழுவாக நண்பர்களுடன் PC நோக்கி புறப்பட்டு விடுவர். மாலை நேரத்தில் ஹாயாக நண்பர்களுடன் கூட்டாக அமர்ந்து அன்றைய தினம் வகுப்பில் எந்த பெண் எந்த பையனை பார்த்தார்,வகுப்பில் மாணவ்ர்கள் செய்த கலாட்டாக்கள், தமிழக அரசியல் போன்ற உலகில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் குறித்து தேனீர் அருந்திக்கொண்டே தங்களுடைய மேலான கருத்துகளை விவாதிக்கும் இடம் சண்முகம் கடை. கடை தான் சிறிய கடை என்றாலும் அங்கு கிடைக்கும் பஜ்ஜி, வடைகளின் சுவையே தனி. அரட்டை அடித்து கொண்டே கடையின் அடுப்பில் சூடாக அந்த நேரத்தில் எதை எடுக்கிறார்கள் என்று பார்த்து கொண்டு உடனடியாக அவற்றில் ஒரு set ஐ order செய்து தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்கடையின் உரிமையாளர் சண்முகம் தன் வாடிக்கையாளரிடம் வைக்கும் நம்பிக்கை அளாதியானது. ஒரு குழுவில் எந்த பதார்த்தம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கணக்கு வைத்து கொள்ளவே மாட்டார். நாங்கள் அரட்டையை முடித்து விட்டு, வயறு நிறைந்ததும் நாமாக என்னன்ன எவ்வளவு உண்டோம் என்று சொல்கிறோமோ அதற்குறிய பணத்தை மட்டும் கணக்கிட்டு வாங்கி கொள்வார்.அப்போது நம்மிடம் பணம் இல்லை என்றால் கூட கவலை பட வேண்டாம்.அடுத்த முறை கடைக்கு வரும் போது கொடுத்தால் போதும்.அந்த கடைக்கு வரும் கூட்டத்தை வைத்து பார்த்தால் அவர் அதை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பார் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் உண்ணும் பஜ்ஜி வடைக்கு கணக்கில்லை. சிலர் மாத கணக்கு வைத்து, அதன் மதிப்பு மாதம் 1000 ரூபாயை தாண்டும்(1990 களில்).



தினமும் எவ்வாறு அவ்வளவு செலவு செய்வது? அதற்கு பல வழிகள் உள்ளன. முதல் நாள் கூட்டத்தில் உள்ள ஒரு மாணவனிடம்,"மச்சி இன்னைக்கு அந்த $$$ பிகர் கிளாசில் உன்னையே பார்த்து கொண்டிருந்தாள் பார்த்தியா" என்று ஆரம்பிப்பார்கள். அந்த மாணவனும் அப்படியா என்று கேட்டு விட்டால் போதும். அவ்வளவு தான் treat படலம் அன்று ஆரம்பமாகும். முதல் நாள் பார்த்ததாக கூறியதற்கு treat கொடுப்பார். அன்றிலிருந்து அந்த பையன், அந்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பார். அவர் தொடர்ந்து பார்ப்பதால் அந்த பெண்ணும் பார்க்கும். அந்த பெண் அவரை பார்க்கும் ஒவ்வொரு நாளும் treat கள் தொடரும். அது மட்டும் அல்ல. இருவரும் ஒரே நிற உடை அணிந்தார்கள், பேசினார்கள் என பல வகையில் treat தொடரும். இது போல் சம்பந்தமே இல்லாத மாணவர் மாணவியிடையே treatக்காக நட்புறவை வளர்த்து, அது சில சமயம் காதலாகி, ஒரு சில சமயம் திருமணத்தில் கூட முடிந்துள்ளது.



சண்முகம் கடையின் மற்றொரு சிறப்பம்சம்- இரவு டிபன்.


மாலை டிபனை சண்முகம் கடையில் முடித்து விட்டு, வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு விடுதிக்கு வந்து, சில ரெக்கார்ட் மற்றும் அசைன்மன்ட் வேலைகளை முடித்து விட்டு இரவு சாப்பாடு முடிந்ததும், மாணவர்களின் அடுத்த shift தொடங்கும். ஆங்காங்கே மாணவர்களின் அறைகளில் குழுவாக கூடி அடுத்த அரட்டை கச்சேரி ஆரம்பமாகும். மாணவர்களிடம் பல குழுக்கள் இருக்கும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அங்கு விவாத பொருள் ஆன்மீகத்தில் தொடங்கி பில்லி சூனியம், வர்க்க அரசியல்,மாநில அரசியல்,இந்திய மற்றும் சர்வதேச அரசியல்,கல்லூரி ஆசிரியர்,சக மாணவிகள், மாணவிகளை பின் தொடரும் மாணவர்கள், கடலை போடும் மாணவர்களை கண்டு வயறெறியும் கும்பல்,கல்லூரி மாணவர்களிடையேயான அரசியல் என பல இருக்கும். இந்த விவாதம் முடிய நள்ளிரவு ஆகி விடும். விவாதத்தால் ஏற்படும் களைப்பு தீர மீண்டும் சண்முகம் கடை நோக்கி செல்வர்.அங்கு தோசை,ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற சுவையான சிற்றுண்டி உண்டு விட்டு விடுதி வந்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

ஒரு முறை என்னை பார்க்க விடுதிக்கு வந்த அண்ணணை அந்த கடைக்கு இரவு சாப்பாடு சாப்பிட அழைத்து வந்தேன். அந்த கடையின் தோற்றத்தை பார்த்து முதலில் முகம் சுளித்த அண்ணண்,அங்கு வாங்கி கொடுத்த நூடுல்ஸ் உண்டு விட்டு சுவையில் மகிழ்ந்து போனார். இன்றும் கூட சண்முகம் கடை நூடுல்ஸ் போல் எங்குமே உண்டது இல்லை என்று கூறி வருகிறார்.


பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றபோது சண்முகம் கடைக்கு மீண்டும் சென்றேன். தற்போது சில புது வகை பண்டங்களையும்(காளிபிளவர் பக்கோடா) சேர்த்துள்ளார்.

கடையை சுற்றி அதே மாணவர் கூட்டம்...

மீண்டும் கல்லூரி கால நினைவுகளை அசை போட தொடங்கியது மனது...

Thursday, December 25, 2008

டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?


டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன என்றும் பார்த்தோம்.இந்த பதிவில் உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலை பற்றியும் அதன் விளைவு பற்றியும் பார்ப்போம்


சென்ற நூற்றாண்டின் இறுதி வரை உலகில் அதிக அளவு நிதி சேமித்து வைத்து அதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பன சேம நல நிதி நிறுவங்கள்(Pension fund), மியூட்சுவல் பண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.இந்த பணத்தில் பெரும் பங்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் நிறுவனங்களின் கையில் தான் இருந்தது.


இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிதிகளின் மதிப்பு மிக அதிக அளவில் இருந்ததால், உலக அளவில் நடைபெறும் மிக முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு(பங்கு வர்த்தக முதலீடுகள், பெரிய நிறுவங்களை வாங்குவது மற்றும் இணைப்பது,புதிய கம்பெனிகளை துவங்குவது மற்றும் பத்திர வர்த்தகம் etc) முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இவை பொருளாதார அதிகார மையங்களாக செயல் பட்டன.


ஆனால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோல் விலை உயர்வாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தாலும் இந்த நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.பெட்ரோலை டாலரில் விற்பதன் மூலம் அமெரிக்கா அடையும் நன்மையை டாலர் அரசியல் என்ற பதிவில் பார்த்தோம்.மறுபுறம் பெட்ரோல் விலை உயர்வால் அரபு நாடுகள் மற்றும் அங்கு உள்ள ஆட்சியளர்களின் சொத்து மற்றும் டாலர் கையிருப்பு பல மடங்காக உயர தொடங்கியது.ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தால், சில நாடுகளின் டாலர் கையிருப்பு அதிகரித்தது. உலக மயமாக்களாலும் (globalization) முதலாளித்துவ வளர்ச்சியாளும் ஒரு சிலரின் தனிபட்ட சொத்து உலகின் சில நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை தாண்டி விட்டது.இதன் விளைவாக புதிய அதிகார மையங்கள் உலகில் உருவாக தொடங்கி உள்ளது.அத்தகைய பொருளாதார மையங்களில் சில

1. பெட்ரோல் மூலம் அதிக வருமானம் குவிக்கும் பெட்ரோடாலர் சொத்துகள்

2. ஆசிய மத்திய வங்கிகள்

3. Hedge funds

4. தனிபட்ட தனியார் முதலீடுகள்


நிதி நிர்வகிக்கும் அமைப்புகள்2006 ம் ஆண்டு மதிப்பு $ட்ரில்லியன்2000-2006 வளர்ச்சி விகிதம்% 2012(எதிர்பார்ப்பது)
$ட்ரில்லியன்*
பென்சன் Fund21.6 529
மியூச்சிவல் Fund 19.3831.2
காப்பீட்டு நிறுவன்ங்கள்18.5 1133.8
பெட்ரோடாலர் முதலீடுகள்3.8195.9
ஆசிய மத்திய வங்கிகள்3.1 205.1
Hedge Funds 1.5203.5
தனியார் முதலீடுகள் 0.7 14 1.4
*-கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $50 என கணக்கிடபட்டது
ஆதாரம்-McKinsey


மேற்கண்ட அட்டவனை உலக பொருளாதார அதிகார மையங்களின் அளவையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.அதில் கீழேயுள்ள நான்கு பிரிவின் மொத்த மதிப்பு 8- 9 ட்ரில்லியன் டாலர்கள்.இந்த மதிப்பு மொத்த தொகையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் 2000- 2006 ஆண்டு வரை உள்ள அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் ஒரு உண்மை புரியும்.பெட்ரோடாலர் சொத்துக்களின் மதிப்பின் வளர்ச்சி 19 சதமாகவும் ஆசிய வங்கிகளின் கையிருப்பு 20 சதமாகவும் pension பண்டின் வளர்ச்சி 20 சத்மாகவும் உள்ளது.உலகிள் உள்ள 10 மிகப்பெரிய நிறுவன்ங்களில் 6 நிறுவனங்கள் ஆசிய மற்றும் அரபு எண்ணெய் நிறுவனங்கள்.ஒரு சில எண்ணெய் நிறுவங்களின் மதிப்பு ஜெனரல் எலெக்ட்ரிக்கள்,மைக்ரோசாப்ட், சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களை விட அதிகம்.மேற்கூறிய நான்கு பிரிவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது அரபு நாடுகளின் பணமும், ஆசிய வங்கிகளின் பணமும் தான்.Hedge Fund மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களில் பெரும்பான்மையான முதலீடு செய்துள்ளதும் மத்திய ஆசிய நிறுவங்களும் அரபு நாட்டு செல்வந்தர்களும் தான்.


இந்த புதிய பொருளாதார அதிகார மையங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இவை அமெரிக்க பன்னாட்டு நிறுவங்களின் (Multi national) பெரும் பங்கை வாங்க தொடங்கி உள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க நிதி நெருக்கடியினால், பல நிறுவங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பு பணம்(liquidity) மிக வேகமாக குறைந்து வருவதால், அதிக பணம் கொண்ட இந்த நிறுவனங்களின் சேவை மற்ற நிறுவனஙக்ளுக்கு தேவையாக உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் காரணாமாக இந்நிறுவனங்கள் வாங்கியிள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சிறிது நட்டத்தில் தெரிந்தாலும், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் போது அதன் மதிப்பு பல மடங்கு வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் பல நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் இவை பிற்காலத்தில் அமெரிக்க அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .தற்போதைய நிதி நெருக்கடி காரணாமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல அழிந்துள்ளதால், இந்நிறுவனங்கள் முதலீடு செய்து காப்பாற்றி உள்ள நிறுவனங்கள் Monopoly யாக வளர்ந்து பல மடங்கு லாபத்தை அள்ளி தர வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்-கிரடிட் சூயிச்,லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,மெரில் லின்ச்,AMD,பார்க்லே,பெராரி,டைம் வார்னர்,ஸ்டாண்டர்டு சார்ட்டட்,டைச் வங்கி,UBS,மோர்கன் ஸ்டான்லி,சிட்டி குரூப் etc. உலகில் நடக்கும் மிகப்பெரிய நிறுவங்களின் இணைப்பு மற்றும் வாங்குதலுக்கும் இந்த நிறுவங்களே நிதியுதவி செய்கின்றனர்.2007ம் ஆண்டு மட்டும் இதன் மொத்த மதிப்பு $4.5 டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.இதன் மூலம் மிகப்பெரிய நிறுவங்களில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடிகிறது. தற்போது அமெரிக்க Real Estate மிகவும் வீழ்ந்துள்ளது.இந்நேரத்தில் இந்நிறுவனங்கள் அமெரிக்க சொத்துகளை குறைவான விலையில் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்நிறுவங்கள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாது வளங்களில் மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்து தனது எதிர்கால தேவைகளுக்கும், எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யவும் உறுதி படுத்த தொடங்கி உள்ளனர்.இத்தகைய செயல் இதுநாள் வரை மேலைநாடுகள் மட்டுமே பின்பற்றும் அணுகு முறையாக இருந்தது.


தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முயற்ச்சிப்பதும் இக்காரணங்களுக்காதான். தற்போதைய நிறுவனங்களின் நெருக்கடியின் மூல காரணமே பண கையிறுப்பு குறைவு
தான். எனவே இது போன்ற நெருக்கடியான காரணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் பிற்காலத்தில் நூற்றுகணக்கான டாலரை சம்பாதித்து கொடுக்கும் வல்லமை படைத்தன. உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவை வகிக்கும் பங்கு வரும் காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.


பொதுவாக அமெரிக்காவின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியாக கருத படும். அமெரிக்காவும் அரசியல்,பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை மறைமுகமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும். இனி அந்நிறுவங்களில் பெருமளவில் முதலாளித்துவ கொள்கை இல்லாத கீழை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி விட்டால் அமெரிக்க அரசின் பார்வை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல, அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நாடுகளும் அவற்றை வர்த்தக ரீதியாக மட்டும் தான் அணுகுமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Saturday, December 20, 2008

டாலர் vs தங்கம்

1970 க்கு முன்பு வரை அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு நிகராக தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தது.டாலரின் மதிப்பு ஒரளவு தஙத்தினால் நிலைநிறுத்த பட்டிருந்தது. ஆனால் 1970களுக்கு பிறகு இந்த நிலை மாற தொடாங்கியது.இது பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி இருந்தேன். 1970களுக்கு பின் அமெரிக்கா கணக்கின்றி டாலரை அச்சிட தொடங்கியது. அமெரிக்கா தான் வாங்கிய கடனுக்கு தஙகத்தை திருப்பி தர வேண்டியிருந்தால், தற்போதைய சூழ்நிலையில் எந்த அளவுக்கு திரும்பி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)

அமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.

1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).

இந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்


அதாவது சுமார் 4842 சதம் வீக்கமடைந்துள்ளது(inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட பட்டது.உள் நாட்டு பண புழக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
அமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்க தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது(அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும்,தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.

சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்.

Friday, December 19, 2008

அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்


சமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம். இதன் விளைவாக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் லாபமும் குறைந்து வருகிறது. எனவே அரபு நாடுகள் தன் லாபத்தின் அளவை அதிகரிக்க பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முடிவு செய்து பெட்ரோல் உற்பத்தியையும் மிக பெரிய அளவில் குறைத்து வருகின்றனர். இதை மற்றொரு வகையில் பார்த்தால் உலகளவில் தேவை குறைவாக இருப்பதால்,உற்பத்தியை குறைக்கிறார்கள். ஒரு சாரார் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருந்து, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பெற்றால் தான் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டு பிடிக்க மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக ஆளவு செலவு செய்ய முடியும் என்கின்றனர்.

இதில் ஒரளவு உண்மை உள்ளது. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணைக்கு தற்போது எதிர் பாக்கும் விலை பேரல் ஒன்றுக்கு $75க்கும் மேல் என்று தெரிகிறது. நல்ல வேலையாக இதுவரை நடத்திய உற்பத்தி குறைப்பிற்கு பின்னும் அதன் விலை அந்த அளவு ஏறவில்லை.

இதன் பின்னனியை புரிந்து கொள்ள கடந்த சில வருடங்களாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க வேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு இருபது டாலருக்கும் குறைவாக்த்தான் இருந்தது. ஆனால் அதன் பின் ஈராக் போர் காரணமாகவும், உலக பொருளாதாரத்தில், குறிப்பாக இந்தியா சீனா போன்ற முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி காரணமாகவும், டாலரின் மதிப்பு சர்வ தேச சந்தையில் குறைய தொடங்கிய காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வரலாறு காண முடியாத அளவு ஏற தொடங்கியது.

தற்போதைய சூழ்நிலையில் கச்சா எண்ணையின் உபயோகம் ஒவ்வொரு நாட்டிலும் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.பெரும்பான்மையான நாடுகள் அதன் எண்ணை தேவைக்கு இறக்குமதியையே நம்பி உள்ளனர். நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்றுமதி-இறக்குமதி சமசீரின்மை ஏற்பட்டு balance of payment பிரச்சனை ஏற்படுகிறது.உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தால், வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவை அதிகரிக்கும். வளரும் நாடுகள் தங்கள் உற்பத்தியை பெருக்கி வளர்ந்த நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியை பெருக்கி ஒரளவிற்கு இந்த பிரச்சனையை சமாளிப்பார்கள். சில கனிம வளம் மிகுந்த ஏழை நாடுகள் சைனா போன்ற அதிக உற்பத்தி சாலை நிறைந்த நாடுகளுக்கு நல்ல விளைக்கு இந்த கனிம வளங்களை ஏற்றுமதி செய்து சமாளித்தனர்.மேலை நாட்டு நிறுவனங்களிடம் அதிக பண புழக்கம் இருந்ததால், பல நாடுகள் தங்கள் தொழில் துறையை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அது முதலீடு செய்யும் டாலரை கொண்டு இப்பிரச்சனையை ஒரளவிற்கு சமாளித்தனர்

பொருளாதாரம் நன்றாக இருந்த காலத்திலேயே பெரும்பாலான நாடுகளின் balance of payment negative ஆகவே இருந்தது.உதாரணமாக இந்தியாவின் BOP சுமாராக $10 பில்லியன் அளவுக்கு உள்ளது.தற்போது உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. முக்கியமாக உலக நாடுகளின் முக்கிய சந்தையான அமெரிக்க பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.எனவே வளரும் நாடுகளின் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து கொண்டுள்ளது.மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்கள் திவாலை சந்திப்பதும், தங்களின் Survivalக்கே பிரம்ம பிரயத்தினம் செய்து கொண்டுள்ளனர். எனவே இனி வளரும் நாடுகளில் அவர்களால் நேரடி அன்னிய முதலீடு செய்வது கடினம்.
எனவே வளரும் நாடுகள் தங்களது இறக்குமதியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பெரும் பாலான நாடுகளின் இறக்குமதியில் கச்சா எண்ணையே பெரும் பங்கு வகிக்கிறது, அவற்றின் தேவையை உள் நாட்டில் குறைப்பதும் மிகவும் கடினம்.அரபு நாடுகள் கூறும் $70 விலை என்பது ஈராக் போர் மற்றும் speculative trading போன்ற செயற்கையான காரணிகளால் உயர்த்தபட்ட விலை.பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்திலேயே வளரும் நாடுகள் அதை சமாளிக்க பெரும் பாடு பட்டனர்.

அரபு நாடுகள் எதிர்பார்க்கும் கச்சா எண்ணையின் விலை($70-90) எண்ணெய் உற்பத்தி குறைப்பின் மூலம் நிர்ணயிக்க பட்டால்,பின் வரும் விளைவுகள் ஏற்ப்டலாம்

1. இந்த வளரும் நாடுகளின் trade balance அதல பாதாளத்தை அடையும்.
2. இந்நாடுகளின் அன்னிய செலாவனி கையிருப்பு மிக வேகமாக குறையும்.
3.ஏற்கனவே IMF மற்றும் Worldbank போன்ற நிதி நிறுவங்களிடம் வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாமல் திவாலாகும் சூழ்நிலை ஏற்படலாம்.
4.உள்நாட்டு வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்க பட்டு மிக பெரிய பொருளாதார மந்த நிலை ஏற்படலாம்.
5.அதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி சமூக அமைதியின்மை ஏற்படலாம்.
6.இந்த சூழ்நிலையை உபயோகித்து IMF,Worldbank போன்ற நிறுவனங்கள் ஏழை நாடுகளில் வறுமையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு செய்யும் உதவியை குறைக்க நிர்பந்திக்கலாம்.
7.வளரும் நாடுகள் தங்களது நாணயத்தின் மதிப்பை பெருமளவு குறைக்க வேண்டி வரலாம்.
8.வளரும் நாடுகளும் அரிதாக கிடைக்கும் அன்னிய முதலீட்டை கவர நாட்டு மக்களின் நன்மைக்காக , அன்னிய முத்லீடுகளை மறுத்த துறைகளில் முதலீட்டை அனுமதிக்க தொடங்கும்.இது மோசமான நீண்ட கால விளைவை ஏற்படுத்தலாம்.

(Graph from BBC)

Monday, December 15, 2008

அமெரிக்க அரசின் வங்கிகள் மீட்பு திட்டம் பற்றிய Cartoon



இந்த படத்துக்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.இந்த நையாண்டி படம் உண்மையாகுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும். நன்றி Eric Lewis

Wednesday, December 10, 2008

விமான எரிபொருளாக வரப்போகிறது அடுத்த தலைமுறை உயிர்ம எரிபொருள்(Biofuel)

   உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்து பல வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.பெட்ரோலிய எரிபொருட்கள் தீர்ந்து வருவதாலும, அதன் உற்பத்தி ஒரு சில நாடுகளை நம்பி இருப்பதாலும்,உலகளாவிய
வளர்ச்சி ஏற்படும் போது அதன் தேவை அதிகமாவதலும் மற்றும் மேற்கூறிய காரணங்களை காட்டி அதன் விலையை இடைதரகர்கள் லாபநோக்குக்காக ஏற்றுவதாலும்,புதிய எரிபொருளுக்கு மாற்று தேடி உலகெங்கும் அராய்ச்சி நடை பெற்று வருகிறது.பெட்ரோலிய பொருட்களின் விலை 100$ தாண்டியதால் மாற்று எரிபொருளின் உற்பத்தி பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தது.

இதன் விளைவாக ஏற்பட்ட கண்டுபிடிப்பு தான் உயிர்ம எரிபொருள்.பயிர்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்பட்டு செயல்படுத்தபட்டும் வந்தது.ஆனால் பெரும்பாலான நாடுகள் உணவுக்கு பயன்படுத்தும் பயிர்களை உயிர்ம எரிபொருளுக்கு பயன் படுத்த ஆரம்பித்ததாலும், உணவு பயிர் பயிரிடும் இட்த்தில் உயிர்ம எரிபொருள் பயிரிட ஆரம்பித்ததாலும்( இது எந்த அளவு உணமை என்று தெரியவில்லை), உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து (உண்மையில் உணவு பொருட்களின் விலை உயர்விற்கு climate change மற்றும் speculative commodity trading போன்றவைதான் காரணம் என்பது வேறு விஷயம்) உணவு பொருள் vs உயிர்ம எரிபொருள்(Food vs Fuel) என்ற வாதத்திற்கு கொண்டு சென்றது. அவற்றில் ஜெட்ரோபா போன்ற சில எரிபொருட்கள் பயிகள் விளைவிக்க முடியாத வரண்ட நிலங்களில் வளரக்கூடியவை.ஆனால் அவை உற்பத்தியாகும் காலம் அதிகம் என்பதும் வணிக ரீதியாக லாபம் குறைவானது என்றும் சில குறைகள் இருந்தது .


 இதற்க்கெல்லாம் ஒரு மாற்றாக சப்பயர் என்ர்ஜி என்ற நிறுவனம் பாசியிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு
பிடித்துள்ளது.உயிம எரிபொருளுக்கு பாசி பயன்படுத்துவது என்பது பலவகையிலும் நன்மை பயக்க கூடியது. மிக குறைவான இடத்தில் அதிக அளவு பாசியை எளிதாக உற்பத்தி செய்யலாம்.இதனால் உணவு உற்பத்தி பாதிக்க படாது. இது வளி மண்டலத்தில் உள்ள கரியமில
வாயுவை உறிஞ்சுவதால் global warmingஐயும் குறைக்க உதவுகிறது.இது மற்ற பயிர்வகைகளை போல் இல்லாமல் ஒரு சில நாட்களிலேயே வளர்ச்சி அடைந்து உடனடியாக பலனளிக்க கூடியது. மேலும் எரிபொருளை பிரித்த பின்னர் எஞ்சியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம். தற்போது அந்த தொழில்நுட்பம் பொது உபயோகத்துக்கு வரும் காலம் வந்து விட்டது. விமான எரிபொருளுக்கு மாற்றாக பாசி மற்றும் ஜெட்ரோபாவிலிருந்து கிடைக்கும் எண்ணையை பயன்படுத்த Continental Airlines,Virgin Atlantic,Air Newzealand
போன்ற நிறுவனங்கள் முடிவெடுத்து சோதனை ஓட்டத்துக்கும் தயாராகின்றனர் .

இந்த முயற்ச்சி வெற்றி பெற்றால் இந்தியாவில் தரிசு நிலங்களில் ஜெட்ரோபா பயிரிடுவத்ற்கும் குறைந்த விலையில் பாசி உற்பத்தி செய்து லாபமீட்டவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Friday, December 05, 2008

அமெரிக்கா- நிதி நெருக்கடியை எதிர் கொள்ள உபயோகபடுத்த போகும் யுக்தி-Quantitative Easing

அமெரிக்க அரசின் நிதி பற்றாக்குறை அது நடத்தி வரும் போர்களினாலும்,சமீபத்திய நிதி நெருக்கடியாலும், டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.அது மேலும் பல நூறு பில்லியன் டாலர்களை மோட்டார் தொழிற்சாலை மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளது. இது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க போகிறது.
இந்த இக்கட்டான நிலையை அமெரிக்கா எவ்வாறு சமாளிக்க போகிறது என்று உலகமே ஆவலோடு எதிர் பார்க்கிறது.

அமெரிக்கா செய்ய போகும் யுக்தி பற்றி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை அழகாக கூறுகிறது
America is a much bigger country and its currency happens to be the world’s premier reserve currency. So it can print as much as it likes. For now, anyway.
எக்கனாமிஸ்ட் பத்திரிக்கையின் இந்த செய்தி அனைவரும் படிக்க வேண்டியது.

பொதுவாக இந்த நிலை பிற நாடுகளுக்கு வந்தால், அந்த நாடுகளின் அரசு செலவுகளை குறைத்தும், மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தும் சமாளிக்கும். நிச்சயம் அமெரிக்கா இப்போது அப்படி செய்ய போவது இல்லை. இதை சமாளிக்க பிறவழி, நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிப்பது. பொதுவாக இது போன்ற செயலால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்து மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்(உதாரணம் ஜிம்பாப்வே.அந்த நாட்டின் பணவீக்கம் ஒரு கோடியே இருபதாயிரம் சதவீதம்!.ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை 1.6 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் ).

இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் அமெரிக்கா எளிதாக இப்பிரச்சனையை கையாள போகிறது.தேவையான அளவு பணத்தை, பணவீக்கம் அதிகரிக்காமல் அச்சிட போகிறது.மேலும் பல பில்லியன் டாலர்களை முன்னேறும் ஆசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடம் கடனாக பெறபோகிறது.இதற்கு காரணம் சைனா மற்றும் முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி, அமெரிக்கர்களின் செலவிடும் தன்மையில் தான் உள்ள்து. அவர்களின் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கிராக்கி இருக்கவேண்டும் என்றால், அவ்ற்றின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு டாலரின் மதிப்பை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு டாலரின் மதிப்பு அதிகமாக வைக்க, அமெரிக்க டாலர்களை தங்கள் கையிருப்பாக வாங்கி குவிக்க வேண்டும். அதாவது உற்பத்தி செய்யும் பொருளையும் அமெரிக்காவுக்கு கொடுத்து, அதன் மூலம் வரும் டாலர் பணத்தையும் அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது தான்.

பெட்ரோல் மூலம் கொழிக்கும் அரபு நாடுகளும், டாலர் விற்று வந்த பணத்தை அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்க அரசிடமும் அமெரிக்க நிறுவனங்களிடமும் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு வெகுவாக குறையும்.
சுருங்க சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கர்கள் கூறுவது போல்

"The dollar is our currency, but your problem!"



Sunday, November 30, 2008

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் -தேவை சில மாற்றங்கள்

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் பயங்கிரவாதத்தை பார்க்கும் போது தோன்றிய சில எண்ணங்கள்.

1)1992ல் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை வந்த போது,அதை அரசியல்வாதிகளால் சமாளிக்க முடியாது எனற நிலை வந்தது.அதற்கொரு தீர்வாக உண்மையான திறமையான நிர்வாக அதிகாரியாக செயலபட்ட மன்மோகன் சிங் அவர்களை அப்போதைய பிரதமரான நரசிமம ராவ் நிதி அமைச்சராக பதவி அமர்த்தினார். அதற்கு நல்ல பலன் இருந்தது.அன்று நிதி அமைச்சகம் இருந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் உள்ளது.
எனவே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் திறமையான மற்றும் நேர்மையான ரொபைரோ போன்ற அதிகாரிகளை உள்துறை அமைச்சராக நியமித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

2)ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கான கோடி பணத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறோம். ஆனால் அவற்றில் பெரும் பகுதி F16 போன்ற மிகவும் costly ஆயுதங்கள் வாங்கவே செல்விடுகிறோம். அவற்றில் பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்க்ளிடமும் லஞ்சமாக தஞ்சமடைகிறது. இவ்வகை ஆயுதங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய போரில் எப்போதாவது தான் தேவைப்படும். ஆனால் வருடத்தில் பலமுறை தீவிரவாத தாக்குதல்தான் நமக்கு பெரும் பிரச்சனை.என்வே பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையில் பெரும் பகுதியை இனியாவது தீவரவாதத்தை கட்டு படுத்தும் உளவு பிரிவிற்கும்,
தீவிரவாத எதிர் தாக்குதல் நடத்த பயிற்ச்சி,அதற்கு தேவையான உபகரணங்கள்(மும்பை எதிர் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் bullet proof கூட தரமற்றதாக செய்திகள் வந்துள்ளது)
மற்றும் அதிக அளவு கமாண்டொ படையினரை தயார் செய்தல் போன்று செலவிடலாம்.

3)கடந்த பல மாதங்களாக பல தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அதில் பல அப்பாவி மக்களும், பாதுகாப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரும் இறந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத உள்துறை அமைச்சரை இத்தனை நாள் மாற்றாமல் இருப்பதற்கான காரணம், கடவுளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.(இந்த பதிவை எழுதும் போதுதான் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ள செய்தி வந்துள்ளது).அதைவிட மிக கொடுமையான விஷயம், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு முக்கியவத்துவம் கொடுப்பதை விட்டு ஒட்டு மொத்த இந்திய பாதுகாப்பு துறையின் focusயை தேவையின்றி இலங்கை அரசுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு இந்திய அரசின் தலமை அதிகாரியாக செயல்படாமல் இலங்கை அரசுக்கு தரகு வேலை பார்ப்பதில் மட்டுமே குறியாக இருந்த பாதுகாப்பு துறை ஆலோசகர் நாராயணன் போன்ற அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கி, இனியாவது இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவிற்கும் accountability உள்ள நல்ல அதிகாரிகளை நியமித்து, அமைச்சர்களும் அவர்களுக்கு தெளிவான பாதையை காட்டி வழி நடத்த வேண்டும்.உளவுதுறை மராட்டிய மற்றும் குஜராத் கடற்பகுதியை பற்றி பல முறை எச்சரித்தும், அங்கு கடற்படையை அனுப்பாமல், கடற்படையின் முதன்மை பணியாக, அவற்றை இலங்கை அரசின் உதவிக்காக வங்காள விரிகுடாவில் நிறுத்தி விட்டு(இந்திய மீனவர்களை காப்பதையும் அவர்களுக்கு முக்கிய பணியாக கொடுக்கவில்லை), இந்தியர்களின் பாதுகாப்பை முற்றிலும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளை உடனடியாக நீக்கி இந்தியாவுக்காக உழைக்கும் அதிகாரிகளை பதவியில் அமர்த்த வேண்டும் .

Tuesday, November 18, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்

கடந்த சில மாதங்களாக நிகழும் அமெரிக்க நிதி நெருக்கடியின் காரணமாக அங்கு பெரிய நிதி நிறுவனங்கள் வீழ்வதும், பல நிறுவனங்களின் மதிப்பு மிகவும் குறைவதாகவும் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள 3 மிகபெரும் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களை மிக குறைந்த விளையில் வாங்கிகுவித்து கொண்டு உள்ளது.அரசாங்கமும் நாட்டில் மிகபெரிய நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக பல வகை சலுகைகளை கொடுத்து இந்த செயலை ஊக்குவிக்கிறது.இதன் விளைவாக அமெரிக்கர்களின் 40 சதவித (டெபாசிட்)சேமிப்பு பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப், மற்றும் சேஸ் ஆகிய நிறுவனங்களின் கைகளுக்கு வந்துள்ளது.

அமெரிக்க நிதி நிலமை சரியாக வளர்ச்சி பாதையை அடையும்போது இந்த நிறுவனகளின் வளர்ச்சியும் மிகப் மிகபெரிய வளர்ச்சியாக இருக்கும்.அமெரிக்க பொருளாதாரமும் அதன் மூலம் உலக பொருளாதாரமும் இவர்கள் கட்டுபாட்டுக்கு வந்து விட சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.அந்த அளவிற்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்த உடன் அமெரிக்க அரசால் எந்த அளவுக்கு இந்நிறுவனங்களை கட்டுபடுத்த முடியும் என்பது கேள்விகுறியே. மேலும் இந்நிறுவனங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ,அவற்றை எந்த தடங்களும் இன்றி செய்ய தொடங்கும்.இந்நிறுவனங்கள் எத்தகைய தவறு செய்து வீழும் நிலை வந்தாலும் அமெரிக்க அரசால் காப்பாற்ற பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை வரலாம்.Fannie mac மற்றும் Freddie mac போன்ற நிறுவனங்களை போல தைரியமாக பொறுப்பின்றி செயல் பட முயலலாம். ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் நிலை வந்தாலும் அமெரிக்காவின் FDIC(Fedral Deposit Insurance Corporation) ஒட்டு மொத்த நிதியும் காலியாகும் நிலை ஏற்படும். மொத்ததில் உலக பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் காரணிகளாக வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.

Tuesday, October 21, 2008

கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு உயர்தர மழலையர் பள்ளி



நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் மழலையர் பள்ளி சென்னையிலோ அல்லது பிற நகரத்திலோ செயல்படவில்லை. இது அமைந்திருக்கும் இடம் மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு என்னும் கிராமம். இதில் படிக்கும் மழலையர் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள்.

இந்த அதிசயத்தை நிகழ்த்துவது தேசிய வேளாண் நிறுவனம்(NAF) என்னும் அரசு சாரா நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் திரு.சி.சுப்ரமணியம். பசுமை புரட்சியை செயல்முறை படுத்தி நாட்டில் பலகோடி பட்டினி சாவை தடுத்த சி.எஸ் அவர்களால் விவசாய மற்றும் கிராமபுற வளர்ச்சிக்காக தோற்றுவிக்கபட்ட நிறுவனம் இது. அவர் இறந்த பின்பும் அவரது கனவை நனவாக்க அயராது பாடுபடுகிறது இந்த நிறுவனம். விவசாய வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் ஆற்றும் பணிகளை பிறிதொரு பதிவில் இடுகிறேன்.

இந்த மழலையர் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் விவசாய தின கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கிழே உள்ள மக்களின் குழந்தைகள். இவர்களுக்கு தரமான தொடக்க கல்வி வழங்கபடுகிறது. இவர்கள் பாடும் Rhymes கேட்டால், பல ஆயிரம் கொடுத்து நகரத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையாக உள்ளது. இந்த குழந்தைகளுக்கு இளமையிலேயே நல்ல பழக்க வழக்கங்கள் கற்று கொடுக்க படுகிறது. இந்த பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஏழை குழந்தைகளுக்கு ஊட்டசத்துமிக்க உணவு கொடுப்பது. காலை சிற்றுண்டி,Snacks, மதிய உணவு, பால் போன்றவை அறிவியல் பூர்வமான தேவையை கணக்கில் கொண்டு,தேவையான சத்து தேவையான அளவு உள்ளவாறு சரியான் நேரத்தில் கொடுக்க படுகிறது. இதனால் குழந்தைகள் Malnutrition அடைவது தடுக்கபடுகிறது.

நகர்புற நடுத்தர மற்றும் உயர் நடுத்தற பிரிவு குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் கிராமத்தில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அளிக்க படுகிறது

இட ஒதுக்கீட்டின் பயன் உண்மையிலேயே தேவையான மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் இது போன்ற அதிசயங்கள் அனைத்து கிராமத்திலும் நடந்தால் மட்டுமே முடியும்.

இந்த சேவையை இந்நிறுவனம் முழுவதும் இலவசமாக செய்து கொடுக்கவில்லை. இலவசமாக எதை கொடுத்தாலும் அதனது முக்கியத்துவம் மக்களுக்கு தெரியாமல் முழுமையாக பயன் பெற மாட்டர்கள் என்பதால் மிக சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதை நடத்த தேவைபடும் பெரும்பான்மையான செலவை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெருகிறார்கள். நீங்களும் இது போன்ற காரியத்துக்கு உதவ நினைத்தால், ஒன்று அல்லது சில குழந்தைகளுக்கு தேவை படும் செலவை பொறுப்பேர்க்களாம்.


இதை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்

Monday, September 15, 2008

கண்டிப்பாக சுவைக்க வேண்டிய இந்திய உணவு வகைகள்


இந்தியாவில் மொழி, மதம், இனம்,வானிலை என அனைத்திலும் பன்முகத்தன்மை உள்ளது. இது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய உணவு வகைகளை இங்கே காணலாம். எனக்கு மின்மடலில் வந்த இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

இனி எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இந்த படியலில் உள்ள உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.