Saturday, July 10, 2010

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1


கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



உலகிலேயே தண்ணீருக்கு அடுத்த படியாக அதிகம் குடிக்கபடும் பாணம் தேயிலை. தேயிலை தோன்றியது வடகிழக்கு இந்தியா,பர்மா, சீனா போன்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதபடுகிறது.இந்தியாவில் பல நூற்றாண்டுக்கு முன்பே தேயிலையை உபயோகபடுத்திய சான்று இருந்தாலும் சீனாவில் தான் தேயிலை அதிக அளவில் உபயோகபடுத்த பட்டு, அதிக அளவில் பயிரிட பட்டும் வந்தது.இங்கிலாந்தில் தேயிலை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அறிமுகம் இல்லாமல் தான் இருந்தது. சார்லஸ் 2ம் மன்னர் 1660ல் ஆட்சிக்கு வந்தார். அவருடைய போர்ச்சுகீசிய மனைவிக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது.இதை தொடர்ந்து 1664 ம் ஆண்டு 100 பவுண்டு தேயிலையை கிழக்கிந்திய கம்பெனி முதன் முதலாக ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்தது. நாட்டின் ராணி டீ குடிப்பார் என்ற உண்மையை பயன் படுத்தி சிறிது சிறிதாக ராஜ குடும்பம் மற்றும் பணக்கார இங்கிலாந்து பிரபுக்களிடம் அதை விற்க தொடங்கியது. ( இன்றும் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் உற்பத்தி செய்யும் புதிய பொருட்களுக்கு விளம்பரம் மற்றும் மற்ற வழிகளில் சந்தையை உருவாக்குவது போல்?).தேயிலையின் பயன்பாடும் இங்கிலாந்தில் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.1813ம் ஆண்டு இறக்குமதி செய்ய பட்ட தேயிலையின் அளவு 1.45 கோடி கிலோவை தொட்டது.அந்த கால கட்டத்தில் கி.இ.கம்பெனியின் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பில் 60% தொட்டது தேயிலை வர்த்தகம்.இங்கிலாந்து அரசின் வரி வருவாயில் 10% வருவாய் தேயிலையின் மீது விதிக்க பட்ட வரி மூலம் மட்டும் கிடைத்தது என்றால் தேயிலை இறக்குமதியின் அளவை புரிந்து கொள்ளுங்களேன்!.

இங்கிலாந்து வேலு நாயக்கர்கள்

சீனா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு கி,இ.கம்பெனிக்கு ஏக போக உரிமையை அளித்திருந்தது ஆங்கில அரசு. அதன் விளைவாக தேயிலையின் விலையை மிக அதிக அளவிற்கு நிர்ணயித்து பெரும் லாபத்தை கண்டது கம்பெனி. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு நடத்திய போர்களுக்கு செலவிழிக்க தேயிலைக்கு அதிக வரி விதித்தது. அதன் விளைவாக தேயிலையின் விலை அதிகமானது.சாதாரண மக்கள் தேயிலையை வாங்குவது கடினமானது. அதே நேரத்தில் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் தேயிலை மிக குறைந்த விலைக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதன் விளைவு இங்கிலாந்தில் பல "வேலு நாயக்கர்கள்" தோன்றினர். தேயிலை கடத்தல் மிக பெரிய தொழிலாக வளர்ந்தது. தேயிலை கடத்தல் மூலம் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் டீ கிடைத்ததால், தேயிலை கடத்தல் மன்னர்கள் சாதாரண மக்களிடையே ஹீரோவானார்கள். அது மட்டுமல்ல. கி.இ.கம்பெனி ஊழியர்கள் கப்பலில் திரும்பி வரும் போது தனிபட்ட முறையில் நிறைய தேயிலை கொண்டு வந்து நன்கு பணம் பார்த்தார்கள்.

சீனாவும் அபினி போரும்

தேயிலை இறக்குமதியின் அளவு அதிகம் ஆகி கொண்டே சென்`ற போது மற்றொரு விளைவும் ஏற்பட்டது. தேயிலையை எதாவது கொடுத்து தானே வாங்க வேண்டும். இங்கிலாந்து பொருட்களை சீனர்கள் விரும்பி வாங்குவது இல்லை. சீனர்கள் தேயிலைக்கு மாற்றாக கேட்டது வெள்ளி.17ம் நூற்றாண்டின் நடு பகுதி வரை அய்ரோப்பிய நாடுகள் சுமார் 28 மில்லியன் கிலோகிராம் வெள்ளியை சீனாவிடம் கொடுத்து தேயிலையை வாங்கின. இதன் விளைவு பெருமளவு செல்வம் சீனா நோக்கி செல்ல ஆரம்பித்தது. வெள்ளிக்கு மாற்று எது என்று அய்ரோப்பியர்கள் யோசித்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஒரு அதிசய பொருள் கிடைத்தது. அது தான் ஓப்பியம். அதாவது நம்ம ஊர் அபின் தான் அது.சீனர்களுக்கு ஒப்பியத்தை விற்று அதற்கு மாற்றாக தேயிலையை வாங்க ஆரம்பித்தார்கள்.அதனால் ஓப்பியத்தின் தேவை அதிகமானது. இந்திய வங்க மாநிலத்தில் பெருமளவு ஓப்பியத்தை பயிரிட தொடங்கியது. ஒப்பியம் என்பது போதை பொருள் ஆனாலும் லாபம் ஒன்றே குறிக்கோளான கி.இ.கம்பெனிக்கு நியாய தர்மம் பற்றி யோசிக்க அவசியமில்லை.சீன மக்கள் போதைக்கு அடிமை ஆவதை தடுக்க சீன அரசு ஒப்பியம் விற்பனையை தடை செய்தது. ஆனால் கி.இ.கம்பெனி சீன வியாபாரிகளிடம் சீனாவில் கடனுக்கு தேயிலை வாங்கி, வங்காலத்தில் அதற்கு ஈடான ஓப்பியத்தை சீனா வியாபரிகளுக்கு விற்பனை செய்தது. அது கி.இ.கம்பெனியின் கப்பலில் சீனாவின் கடல் ஓரத்தில் இறக்க பட்டு அதை சினாவிற்குள் சீன வியாபரிகளால் கடத்த பட்டு கொண்டு செல்ல பட்டது.இந்த போதை பொருள் வியாபாரத்தை சீனா முழுமையாக தடை செய்ய முயன்ற போது கி.இ.கம்பெனி மற்றும் சீனாவிடையே இரு ஓப்பியம் போர்கள்(அபினி போர்கள்) நடந்தது. இதன் மூலம் கி.இ.கம்பெனிக்கு சீனாவில் நிறைய இடங்களில் வியாபாரம் செய்யும் உரிமையும் ஹாங்காங் நகரின் மீது முழு கட்டுபாடும் கிடைத்தது.

போஸ்டன் தேனீர் விருந்து

கி.இ.கம்பெனிக்கும் இந்திய அரசியலுக்கும் இடைபட்ட தொடர்பை தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பர். கி.இ.கம்பனிக்கும் அமெரிக்க விடுதலை போருக்கும் மிக பெரிய நெருக்கம் உள்ளது.கி.இ.கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருந்ததாலும் இங்கிலாந்து அரசு போர்களை புரிய அதிக அளவு செலவிட வேண்டியதாலும் அரசு மற்றும் கி.இ.கம்பெனியின் வருமானத்தை பெருக்க புதிய யுத்தியை கையாண்டது. அதன் படி அமெரிக்கா உட்பட்ட இங்கிலாந்து காலனி நாடுகளில் தேயிலையை இங்கிலாந்தில் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று சட்டமியற்றியது. அதாவது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு தேயிலையை க்.இ.கம்பெனி மட்டும் வாங்கி விற்க முடியும். அந்த தேயிலை இங்கிலாந்தில் விற்பனை செய்ய பட்ட பின் , அதை வர்த்தகர்கள் இங்கிலாந்திலிருந்து வாங்கி அமெரிக்காவில் விற்பனை செய்வார்கள்.இங்கிலாந்தில் தேயிலைக்கு விதிக்க பட்ட வரி அதிகமாக இருந்ததாலும் டச்சு காரர்கள் அய்ரோப்பாவில் வரியின்றி தேயிலை விற்றதாலும் டச்சு காரர்கள் மற்றும் பிற அய்ரோப்பியர்களின் தேயிலை மிக மலிவாக கிடைத்தது. இதனால் அமெரிக்காவில் பெருமளவு கடத்தல் தேயிலை விற்பனை ஆனது..இங்கிலாந்திலிருந்து பல இடை தரகர்களை கடந்து அமெரிக்காவிற்கு தேயிலை செல்ல வேண்டியிருந்ததால், கடத்தல் தேயிலையை விட இந்த தேயிலையின் விலை மிக அதிகமாக இருந்தது. எனவே அங்கீகரிக்க பட்ட தேயிலை வியாபாராம் மிகவும் குறைந்தது. இதனால் கி.இ.கம்பெனியின் வருமானமும், அரசுக்கு தேயிலை வரி மூலம் வரும் வருமானமும் குறைந்தது.


இதை சரிகட்ட 1773ம் ஆண்டு கி.இ.கம்பெனிக்கு தேயிலையை அமெரிக்காவில் நேரடியாக விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. மேலும் காலனி நாடுகளில்(அமெரிக்காவில்) விற்பனை செய்யும் தேயிலைக்கென்று தனி வரி விதித்தது..இதன் விளைவாக கி.இ.கம்பெனி இடை தரகர்களை நீக்கி குறைந்த விளைக்கு தேயிலையை அமெரிக்காவில் விற்க தொடங்கினர். இது அமெரிக்காவில் தேயிலையை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பேரிடியாக இருந்து. அமெரிக்கர்களுக்கோ காலனி நாட்டின் மீது இங்கிலாந்து தனி வரியை விதித்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் கி.இ.கம்பெனி பிற பொருட்களின் விற்பனைக்கும் பிற்காலத்தில் தனியுரிமை பெற்றுவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தேயிலை ஏற்றி வந்த கப்பல் போஸ்டன் துறைமுகத்தில் நின்றது..கி.இ.கம்பெனியின் தேயிலையை எதிர்த்த அமெரிக்கர்கள் போஸ்டன் துறைமுகத்தில் நின்ற கப்பலில் இருந்த தேயிலையை தூக்கி வீசி கடலில் எரிந்தார்கள். இது அமெரிக்க சுதந்திர போருக்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.இதன் மூலம் கி.இ.கம்பெனி அமெரிக்கா சுதந்திர போருக்கு காரணியாகவும் இருந்தது.

போஸ்டன் தேனீர் விருந்து காந்தி அடிகள் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்க முன்னோடியாக இருந்தது.அன்று அமெரிக்கர்கள் தேயிலை மூலம் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்கள். காந்தி அதையே உப்பு மூலம் இந்தியாவில் தொடர்ந்தார். இன்று அதே பாஸ்டன் தேனீர் விருந்து ஒபாமாவின் அரசாங்க செலவு மற்றும் அரசாங்க அதிகார விரிவு படுத்தலை எதிர்த்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது


இந்தியாவில் தேயிலை




சீன தேயிலையை இங்கிலாந்தில் விற்க ஏக போக உரிமை இருந்த வரை கி.இ.கம்பனி தேயிலை வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டு வந்தது. அதாவது சீனாவிலிருந்து வாங்கி இங்கிலாந்தில் விற்றது. தன் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. கி.இ.கம்பெனியின் ஊழியரான புரூஸ் முதன் முதலில் 1831ம் ஆண்டு அசாமில் தேயிலை உற்பத்தி செய்யலாம் என்றும் அசாம் தேயிலை சுவையும் நன்றாக இருக்கும் என்று கண்டறிந்தார்.அதன் பிறகு சிறிது சிறிதாக இந்தியாவில் தேயிலை பயிரிடும் பகுதி அதிகமானது.1888ம் ஆண்டு இந்திய தேயிலை இறக்குமதியின் மதிப்பு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையின் மதிப்பை விட அதிகமானது

கி.இ.கம்பெனியின் தேயிலை அரசியலும் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும்

கி.இ.கம்பெனியின் மேற் கூறிய செயல்பாட்டுக்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்

1.எந்த ஒரு தொழிலிலும் ஒரு சில கம்பெனியின் கைக்கு மட்டும் முழு உரிமை வந்துவிட்டால் அது நுகர்வோர்களை பெருமளவில் பாதிக்க படுவதை பார்த்தோம். முன்பு கி.இ.கம்பெனி அரசின் கட்டுபாட்டின் மூலம் தனியுரிமை பெற்றது. தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு சில கம்பெனிகள் நிதி நிறுவனக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் மூலம் தனது துறையில் உள்ள சிறு கம்பெனிகளை வாங்கியும், பெரிய கம்பெனிகளுடன் Merger and Acqusition மூலம் ஒன்றினைந்தும் oligopoly ஆக மாறுவதை காண்கிறோம். இதன் விளைவு முக்கியமாக மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் துறையில் தற்போது காண ஆரம்பிக் கிறோம்

2.கி.இ.கம்பெனி தேயிலை இறக்குமதியில் ஏகபோக உரிமை பெற்றவுடன் அதற்கு போட்டி இல்லாததால் இந்தியா போன்ற தன் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தியை பெருக்கி , அதிக தேயிலையை உற்பத்தி செய்து தேயிலை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்து தன்னுடைய லாபத்தையும் அதிகரிக்க முயலாமை பற்றி பார்த்தோம்.

தற்போது பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை என்ற பெயரில் ஒரு சில கண்டுபிடிப்புகளுக்கு தனியுரிமை பெற்று அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அடைகின்றனர். உதாரணமாக பன்னாட்டு மருந்து கம்பெனிகள் (கண்டு பிடிப்பின் பெரும்பான்மையான பகுதி மேல் நாட்டு அரசு பணத்தில் பல்கலை கழகத்தில் நடைபற்றதாக இருந்தாலும்) ஒரு சில மருந்துகளுக்கு காப்புரிமை பெற்று அதை கொள்ளை லாபத்திற்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதில் வரும் லாபத்தை கூட புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடுவதில்லை. பழைய மருந்துகளிளேயே சிறிய மாறுதல் செய்து விளம்பரம் செய்து வருவாயை பெருக்குகின்றனர்.

3.கி.இ.கம்பெனி சீனாவில் போதை மருந்தை விற்று லாபம் அடைந்ததை பார்த்தோம்.

இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும் பங்கு சந்தையில் தன் மதிப்பை நிலை நிறுத்த எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் கலப்படம், பழுதுள்ள கார்களை தெரிந்தே விற்பனை செய்வது என பல அடுக்கி கொண்டே செல்லலாம்.

வரலாற்றில் காலமும், கம்பெனிகளின் பெயர்களும் தான் மாறி வருகிறது. நிகழ்வுகள் என்னவோ மீண்டும் மீண்டும் அதே தான் நடக்கிறது!

இந்தியாவிலிருந்து எவ்வாறு செல்வங்கள் சூறையாட பட்டது என்பது பற்றியும், இந்திய தொழில் துறையை எவ்வாறு கி.இ.கம்பெனி நசித்தது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்

--

Sunday, July 04, 2010

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1





முதல் பகுதியில் ஆசியாவுக்கான வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


--

Tuesday, June 22, 2010

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1






கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் செல்வத்தை சுரண்டியது என்று பள்ளியிலும் பத்திரிக்கைகளிளும் படித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வாறு பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக இந்தியாவை சுரண்டியது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெளிவாக தெரியாது.வரலாற்றை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது பிழைகளை திரும்பி செய்வதை தவிர்க்குமல்லாவா?

கடல் வழி வாணிபம் என்பது பல காலமாக பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.அரசாங்கங்களும் தங்கள் நாட்டு வணிபர்களின் தடையற்ற வியாபாரத்திற்காக பல வழிகளிலும் உதவி வந்தனர்.தற்போது இருப்பது போல் மின்னனு பொருட்கள், கார்கள் போன்றவை அந்த காலத்தில் இல்லை. எனவே அந்த கால வணிபம் என்பது வாசனை பொருட்கள் சார்ந்த உணவு பொருட்கள், துணிகள், ஆடம்பர பொருட்கள் சார்ந்ததாகவே இருந்து.பல நுற்றாண்டுகளாக ஜாவா, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாசனை பொருட்களுக்கும் சீனா மற்றும் இந்திய துணி வகைக்களுக்கும் உலக சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது.இந்த வாசனை பொருட்கள் வியாபாரத்தில் தங்களது நாட்டை சேர்ந்த வணிபர்களின் உதவிக்காக போரை நடத்துவது பல காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஜவா,சுமத்திரா போன்ற நாடுகளின் மேல் நடத்தபட்ட போர், உலக வரலாற்றில் வியாபாரத்திற்காக நடத்தபட்ட போர்களில் ஒன்று.

இந்தியா,சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை அய்ரோப்பாவிற்கு கொண்டு செல்ல இரு வழிகள் இருந்தது. ஒன்று பட்டு பாதை(Silk Route) எனப்படும் சீனா,மத்திய ஆசியா வழியாக செல்லும் நில வழி பாதை. மற்றொன்று அரேபியா வரை கடல் வழியும் அங்கிருந்து அய்ரோப்பாவிற்கு தொடர்ந்து செல்லும் நில வழி பாதை.இந்த இரு பாதைகளில் வியாபாரம் நடந்தாலும் எகிப்து மற்றும் அரேபியர்களை தாண்டி செல்ல வேண்டி இருந்ததால் அவர்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது.



எகிப்து மற்றும் அராபியர்களின் கட்டுபாட்டில் இருந்த வாசனை பொருட்கள் வாணிபம், இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின் அய்ரோப்பியர்களின் கட்டுபாட்டிற்கு வர தொடங்கியது.நிலம் மற்றும் கடல் மூலம் வாணிபம் நடந்த வரை, ஆசியாவில் இருந்த பல நாடுகளில் இருந்த வணிபர்கள் இடைதரகர்களாக இருந்து லாபத்தின் பெரும் பகுதியை அனுபவித்து வந்தனர். முழுமையான கடல் வழி வாணிபம் தொடங்க பட்ட பின் ஒட்டு மொத்த லாபமும் அய்ரோப்பிய வாணிபர்களின் கைக்கு போக தொடங்கியது.

கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின், ஆசியாவிற்கிடையேயான வாசனை பொருட்கள் வாணிபம் முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் வசம் இருந்தது. ஸ்பெயின் நாட்டினர் இங்கிலாந்திற்கு எதிராக கடல் வழி போரை தொடுத்து 1588ம் ஆண்டு தோல்வி அடைந்தனர். இந்த சமயத்தில் டச்சுகாரர்களால் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியும் ஆரம்பிக்க பட்டது. இவை இரண்டும் தான் முதன் முதலில் தொடங்க பட்ட பன்னாட்டு கம்பெனிகள் எனலாம்.1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்க பட்டது. அது ஆரம்பிக்க பட்ட போது அதன் பெயர் Governor and Company of Merchants of London Trading into the East Indies.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கப்பலின் கடல் பிரயாணமும் தனி தனி வியாபாரம் போல் எடுத்து கொள்ள பட்டு அதற்கென்று தனி முதலீட்டாளர்கள் இருந்தனர்.பின்னர் 1657ம் ஆண்டு தற்போதைய பெரிய கம்பெனிகள் போல் பங்குகளை தனியாருக்கு வினியோகித்து கூட்டு பங்கு வணிக முறையில் செயல்பட்டு வந்தது.

பல கம்பினிகள் ஆரம்பிக்க பட்டால் போட்டி ஏற்பட்டு விலை குறைந்து லாபம் கிடைக்காது என்பதால் டச்சு மற்றும் ஆங்கிலேய அரசுகள் அந்த இரு கம்பெனிகளுக்கும் வாசனை பொருள் வாணிபத்திற்கு தனியுரிமை கொடுத்தது.1615 ம் ஆண்டு முகலாய மன்னர் ஜகாங்கீருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலை மற்றும் தளத்தை அமைத்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.அதன் பிறகு பல நகரங்களில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலையை தொடங்கியது(சென்னையில் 1639 ம் வருடம்). 1647 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 23 நகரங்களில் தன் தொழிற்சாலைகளை தொடங்கி இருந்தது.வியாபரத்தில் ஈடுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடுகளின் மீது போர் தொடுக்கவும்,ஆட்சி அமைக்கவும், தனி படையை வைத்து கொள்ளவும் 1670ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாதாரன கம்பெனியாக இருந்தாலும், இந்த முடிவின் விளைவாக பிற்காலத்தில் 20% உலக மக்கள் தொகையை ஆளவும், இங்கிலாந்தை விட அதிக அளவு வருமானத்தை ஈட்டவும் , சுமார் 250000 பேர் கொண்ட படையை வைத்து நடத்தவும் வழி வகுத்தது.

இனி வரும் பதிவுகளில் கிழக்கிந்திய கம்பெனி வியாபார ரீதியாக எவ்வாறு இந்தியைவை சுரண்டியது என்றும் இந்திய தொழிற் வளர்ச்சியை எவ்வாறு சீரழித்தது என்றும் அதன் விளைவாக இங்கிலாந்து அடைந்த லாபங்களை பற்றியும் காண்போம்

--

Monday, June 21, 2010

தங்கத்தை வாங்கி குவிக்கும் சவுதி அரேபியா

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில்(Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவிதம் இருந்தது.யூரோ அறிமுகபடுத்த பின் அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தனர்.ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை(டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதமாக குறைந்தது.அரசாங்கங்களால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக( anti dollar) தங்கத்தை கருதலாம்.சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பண புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.அதனால் பண வீக்கத்திடமிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம்.அதன் விளைவாக தற்போது அய்ரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளனர்.

தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா 200 டன் தங்கத்தை சர்வ தேசிய நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது.ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கி விட்டது. சீனா மறைமுகமாக அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தியா சீனா மட்டுமின்றி ரஸ்யா,வெனிசூலா,மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்தியா சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் தங்களது சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 - 6 சதவிதம் மட்டுமே உள்ளது.ஆனால் அமெரிக்காவிடம் உலக சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவிதம் உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வரிசையில் வெளி வந்துள்ள சமீபத்திய செய்தி சவுதி அரேபியா பற்றியது. சவுதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட ( 143 டன்கள் ) இரு மடங்கிற்கும் அதிகமானது ஆகும்.சமீப காலமாக வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்தனர். இந்த வருடம் அந்த நாணயம் வந்து இருக்க வேண்டும். யூரோ பிரச்சனையினாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளி போய் உள்ளது. அந்த பொது நாணயம் தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தி உளவி வந்தது.அந்த வதந்திக்கும் இந்த செய்திக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால்,இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி பணம் வைத்துள்ள சீனா இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.மேலை நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டு படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!

--

Tuesday, June 15, 2010

சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்


இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.

அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .

“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”

இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"

ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.

"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "

அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.

தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "

அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.

மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html


--

Tuesday, April 27, 2010

இந்திய வைர ஏற்றுமதி தொழிலுக்கு ஆப்பு வைக்கும் சீனா?


பட்டை தீட்டிய வைர ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு $17 பில்லியன் டாலருக்கும் மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் மகாராஷ்ட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் லட்ச கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இத்தொழிலில் உலகலவில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. இப்போது இந்தியாவில் இத்தொழிலுக்கான ஆப்பு வைக்க சீனா தயாராகி விட்டது. எப்படி என்கிறீர்களா? வைரம் தாது பொருளாக பெரிய அளவில் அங்கோலா காங்கோ போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இந்த வைர தாது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்டு அது இந்தியாவில் பட்டை தீட்ட பட்டு, ஆபரணமாக செய்ய பட்டு பெல்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்ய பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்ய படுகிறது.

சீனா தற்பதோது காங்கோ அங்கோலா போன்ற நாடுகளுக்கு பெருமளவு நிதி உதவி செய்து அங்கு உற்பத்தியாகும் வைரத்தின் பெரும் பகுதியை சீனாவிற்கு ஏற்ருமதி செய்ய நிர்பந்திப்பதாக கூற படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மூல பொருள் இல்லாமல் வைரம் பட்டை தீட்டும் தொழில் இந்தியாவில் நலிவடைய தொடங்கும்.

ஆனால் ஒரு சில நிபுணர்களின் கருத்து படி டிபியர்ஸ் மற்றும் அல்ரோசா என்ற இரு கம்பெனிகள் தான் உலக வைர விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே இவ்விரு கம்பெனிகளும் முடிவு செய்து ஒத்துழைத்தால் தான் சீனாவால் வைர பட்டை தீட்டும் தொழிலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய் அரசு வழக்கம் போல் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள போவது இல்லை.

--

Sunday, April 18, 2010

நக்சலைட் இயக்கத்தை அழிக்க ஒர் நூதனமான அணுகுமுறை!

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2

தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாயம் சார்பாக செய்து வரும் பணிகளை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது செய்து வரும் சமூக பணிகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 300க்கும் அதிகமான சுய உதவி குழுக்களை அமைத்துள்ளனர். ஆனால் பெயரளவிற்கு குழுவாக மட்டும் விட்டு விடாமல், அவர்களுக்கு தேவையான தொழில் நுட்ப பயிர்ச்சிகளை அளித்து, கடனுதவி பெற உதவி செய்து,தொடர்ச்சியாக தொழில் நுட்ப ஆலோசனை செய்து அவர்களின் குழுக்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைபெற உதவி செய்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களின் உற்பத்தியை சந்தை படுத்தவும் உதவி செய்கிறது.

2. சுகாதாரம் பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் சிறந்த சுகாதார கிராமமாக அது கவனித்து கொள்ளும் கிராமத்திற்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

3.சமீப காலமாக சென்னையில் ஏற்றுமதிக்கென்று பல தொழில் நிறுவனங்கள் தொழிற் சாலையை தொடங்கி உள்ளது. அவற்றில் மனித வளத்தை மட்டும் அதிகம் சார்ந்துள்ள தைத்த துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும்(export garments) பல. அவற்றிற்கு வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு சம்பளமோ குறைவு. பெரும்பான்மையான தொழிலளர்கள் கிராமத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். சென்னையில் அவர்கள் தங்கி இருந்து வாழ்க்கை நடத்துவ்து மிகவும் கடினம்.மறுபுறம் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினம்.இந்த கம்பெனிகளையே கிராம சூழ்நிலையில் ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்?. வேலை செய்பவர்களும் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்கு எளிதாக செல்லலாம் . அவர்களுக்கு சேமிப்பும் அதிகமாக இருக்கும். தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சியால் இது போன்ற ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியை மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு என்ற கிராமத்தில் தொடங்கி வைத்துள்ளது.கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தையல் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

4.M.V. Diabetics நிறுவனத்தின் உதவியுடன் கிராம மக்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்று மொபைல் அராய்ச்சி கூடம் மூலம் கிராமங்களுக்கே சென்று பரிசோதனை செய்து சாட்டிலைட் மூலம் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுனர்களின் ஆலோசனையை கிராமத்திலிருந்தபடியே கிடைக்க செய்கிறது.

5.நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த மழலையர் பள்ளிகள் உள்ளது. கிராமத்தில் கூலி வேலை செய்யும் ஏழை தொழிளாலர்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தரம் வாய்ந்த மழலையர் பள்ளியை நடத்தி வருகிறது.




6.கிராம பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிர்ச்சியை கொடுக்கிறது.

7.IGNOUவுடன் இணைந்து விவசாயம் சார்ந்த பட்டய படிப்புகளை கற்று கொடுக்கிறது.இதன் மூலம் கிராமங்களில் இருக்கும், பள்ளி படிப்பை பாதியில் முடித்த இளைஞர்களுக்கு விவசாய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு விவசாயம் சார்ந்த கம்பெனிகளில் வேலை கிடைக்கவும் வழி செய்கிறது. பட்டய படிப்பை படித்து வேலைக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ஆலோசனை தருகிறது.


8.விவசாய பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க நபார்டு வங்கியிடம் கடன் வாங்க தேவையான(Agri Clinic வைக்க) பயிர்ச்சியையும் தருகிறது.

9.நகரில் வளரும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. என்வே சென்னை போன்ற மாநகரங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் கொடுக்க கிராமத்துக்கு ஒரு நாள் சுற்றுல்லா வர வழி வகை செய்து கிராம புற விளையாட்டுகளை காட்டுவதுடன் விவசாயத்தில் அறிமுக பாடமும் நடத்துகிறது.

10.கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு team outing யை கிராமபுறங்களில் ஏற்பாட்டு செய்து eco tourism வளர வழிவகை செய்கிறது. இந்த team outingல் கிராமபுற விளையாட்டு நடத்துவது, மாட்டு வண்டி சவாரி,நாட்டு புற கலைகள் என்று மிகவும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

இது போன்ற நிறுவனங்கள் நாடு முழுதும் தோன்றினால் கிராம- நகர ஏற்ற தாழ்வு குறைந்து நக்சலைட் போன்ற இயக்கங்கள் நாட்டில் வளர்வதற்கான சூழ்நிலையை அழிக்கும்.

--

Saturday, April 17, 2010

Goldman Sachன் தந்திரம்


அமெரிக்க நிதி நெருக்கடி காலங்களில் மிக பெரிய வங்கிகள் எவ்வாறு சம்பதித்தனர் என்று பல விதமாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது SEC(Security and Exchange Commission)0 கோல்ட்மேன் சாக்ஸ் மீது அறிவித்துள்ள குற்றச்சாட்டு இது போன்ற பெரும் நிதி நிறுவனக்களின் நம்பகத்தன்மையே சந்தேகத்தில் ஆழ்த்த தொடங்கி உள்ளது.
அப்படி என்னத்தான் SEC குற்றசாட்டு சொல்கிறது என்று பார்ப்போம். நிதி நெருக்கடிக்கு முன் அமெரிக்க ரியல் எஸ்டேட் கடன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது முதலீட்டார்கள் அனைவரும் நம்பியது அமெரிக்க ரியல் எஸ்டேட் வளர்ச்சி இப்போதைக்கு குறையாது என்பதே. அதனால் வங்கிகள் கொடுத்த கடனின் அபாயத்திலிருந்து(default) தங்களை காத்து கொள்ள, பல கடன்களை ஒரு கலவையாக்கி அவற்றை ஒரு பொருளாதார பொருளாக(financial product) விற்க தொடங்கின. ஒவ்வொரு CDOவிலும் இருக்கும் கடன் பத்திரங்களின் நம்பக தன்மையை தனி தனியே ஆராய்வது கடினம். அதற்கு தர நிர்ணய படுத்தும் அமைப்புகள் (Credit rating Agencies), அதன் தரத்தை ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பீடுகளை வழங்கும். (CDO வை உருவாக்கும் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்து தன்னுடைய CDOவின் தரத்தை பதிப்பீடு செய்ய சொல்லும். அப்படி என்றால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் மனபாங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!).2006ம் ஆண்டு ABX என்ற குறியீட்டு முறை அறிமுக படுத்தபட்டது. அதன் படி CDO போன்ற பொருளாதார பொருட்களின் மதிப்பு உயரும் அல்லது குறையும் என்று பெட் செய்ய முடியும். முதலீட்டளர்களின் நட்டத்தின் அளவை மோசமான கால்ங்களில் குறைக்கவே இம்முறை உதவும்.ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முறையை தந்திரமாக உபயோக படுத்தி முதலீட்டளர்களை நட்டத்திற்கு தள்ளி தான் பெரும் லாபம் அடைந்ததாக் குற்றசாட்டு எழுப்ப பட்டுள்ளது.
2006 ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்கெட் மிகவேகமாக வளரும் என்று நம்பிய போது அது கூடிய சீக்கிரம் விழ போகிறது என்ற உண்மை ஒரு சிலருக்கு தெரிய ஆரம்பித்தது.அதை உணர்ந்த ஒரு சில கோல்ட்மேன் நிறுவன விற்பனையாளர்கள்,மேற் சொன்ன CDO சிலவற்றை உருவாக்கினார்கள்.அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்று தர மோடி போன்ற தர நிர்ணய அமைப்புகளிடம் நெருக்குதல் கொடுத்தார்கள் என்று கூற படுகிறது. அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்றவுடன் நடந்தது தான் கோல்ட்மேன் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்வி குரியாக்கி உள்ளது. இந்த CDOகளை உருவாக்கும் போதே அது நிச்ச்யம் தேறாது என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் கோல்ட்மேன் நிறுவனம் அதை வெளியுட்டள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அது தரம் வாய்ந்தது என்று நம்பி அது சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டனர். ஆனால் மறுபுறம் கோல்ட்மேன் நிறுவனமோ அந்த CDOக்கள் நம்பக தன்மை குறைந்தது என்று மிக பெரிய அளவுக்கு பெட் செய்தது. அவர்களுக்கு தான் அதன் தரம் தெரியுமே. ஆனால் தன் வாடிக்கையளர்களிடம் அந்த CDOஅதிக மதிப்புடையதாகபொய்யாக காட்டியது.18 மாதங்களில் CDOல் உள்ள கடன்களை உண்மையில் வாங்கியவர்கள் கட்டாமல் மஞ்சள் நோட்டீசு விட்ட்தால் அதன் தர மதிப்பீடும், மதிப்பும் மிக வேகமாக வீழ்ந்தது. அதன் மதிப்பு வீழும் என்று பெட் கட்டிய கோல்ட்மேனுக்கு பில்லியன் டாலருக்கும் மேல் லாபம். அதை நம்பிய வாடிக்கையளர்களுக்கோ பட்டை நாமம்!

--

Wednesday, April 14, 2010

பள்ளி மேம்பாட்டிற்கு $10 ல் ஓர் புரட்சி


வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடி பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும்
தமிழ் நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும் பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும்.
தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில
சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.
.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.
10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்க பட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு
இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது.மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.
கி.பி 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்
TEAM(TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)
என்ற அமைப்பு..மிகப்பெரிய தொகையை தாயகக்கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை
,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில்
6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்க படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான
பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர்
தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை
காண இந்தச் சுட்டியை
(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள்.
.இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப்பள்ளிகள் முதலிடம் வகிக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.\\
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகளை இங்கு

(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All)காணலாம்.(இந்த சுட்டியில் 6 பக்கங்கள் உள்ளது.கவனம்).இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்
படுத்த பட்டு வரும் பணிகளை காண இங்கு
http://www.indiateam.org/projects/Pub_qCurrent_PrjList.php சுட்டுங்கள்

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடை பெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.
இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல் பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில்
தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும்
இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


--

Sunday, April 04, 2010

அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் வெளி நாட்டவரின் பங்கு

நியுயார்க் டைம்ஸ்ல் தாமஸ் பிரெட்மென் பகுதியில் அவர் இன்று எழுதிய கட்டுரை . அமெரிக்க வேலைவாய்ப்பு பெருக்கத்தில் சிறு நிறுவனங்கள் பங்கு பற்றியும் வெளிநாட்டினரின் பங்கு பற்றியும் உள்ளது. அதில் உள்ள செய்தி படி பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்பு பெரும் பாலும் கீழை நாடுகளில் தான் உள்ளது???. அக்கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கு அழுத்தவும்

http://www.nytimes.com/2010/04/04/opinion/04friedman.html?hp

கடந்த வாரம் அவர் எழுதிய இந்த பதிவையும் படித்து பாருங்கள்


-

Sunday, October 25, 2009

இப்படியும் ஒரு பொழைப்பு!

ஒவ்வொரு கம்பெனியும் திவாலாகும் போது அதை ஏற்று நடத்தும் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பு அளவிட முடியாததாக இருக்கும். இது தானே நாம் அனைவரும் நினைப்பது.ஆனால் உண்மை அது இல்லை. கேட்க ஆச்சிரியமாக இருக்கிறதா? திவாலாகும் நிறுவனத்தை ஏற்று நடத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இது நடப்பது அமெரிக்காவில்.

சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் போது ஒரு சில வலுவான கம்பெனிகளும் நட்டமடைந்து திவாலாகும் நிலைக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் அந்நிறுவனங்களுக்கு அதிக அளவு சொத்துக்களும், சந்தையில் நல்ல பிராண்டு பெயரும் இருக்கும். அதை வீணாக்காமல் புதிய தனியார் முதலீட்டு நிறுவனம் அது போன்ற திவாலாகும் நிறுவனங்களை திவாலுக்கு பின் புதிதாக எடுத்து நடத்தும். ஒரு முறை இது போல் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் வீழும் நிறுவனத்தை சூறையாடி விடுவார்கள். அதன் முதன்மை முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பர். வேலை செய்பவர்களும் பல இன்னலுக்கும் வேலை இழப்பிற்கும் உள்ளாவார்கள் ஆனால் அதை ஏற்று நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.

எப்படி என்கிறீர்களா?. உதாரணமாக ஒரு நிறுவனம் திவாலாக போகிறது என்று வைத்து கொள்வோம். அது திவாலான உடன் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதை புதிதாக எடுத்து நடத்தும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிமாட்டு விலையில் இருக்கும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தை வாங்குவார்கள். அதை வாங்குவதற்கு மற்றும் நடத்துவதற்கு என்று அந்நிறுவன பணத்தையே தட்சணையாக பெருவர். பல மில்லியன் டாலர்களையும் சிறப்பு டிவிடெண்டாக பெருவர். அமெரிக்க வங்கிகளும் இந்த நிர்வாக மாற்றம் மற்றும் பாண்டுகளை விற்க என பல மில்லியன் லாபம் அடைவர்.

இதற்கெல்லாம் பணம் எவ்வாறு வருகிறது என்று கேட்கிறீர்களா? இந்நிறுவனத்தை அளவுக்கு மீறி கடன் வாங்க வைப்பர்கள்.வாங்கிய கடனின் பெரும் பகுதியை மேற் கூறிய வகையில் சுருட்டி கொள்வார்கள். மீதி பணம் மட்டும் கம்பெனியின் வளர்ச்சிக்கு செலவிடபடும்.இவ்வாறாக ஏற்று நடத்தும் ஒரு சில வருடத்தில் முதலை எடுத்து கொண்டு நன்கு லாப பணத்தையும் எடுத்து கொல்வார்கள். பிறகு கம்பெனி நிலை மீண்டும் மோசமானவுடன் அதை மீண்டும் திவாலாக்க அறிவிப்பார்கள். தற்போது வேறொரு தனியார் முதலீட்டு நிறுவனம் அதை எடுத்து நடத்தும். ஆனால் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றாகாவே இருக்கும். கம்பெனியின் கடன் அதிகமாகும். அதை எடுத்து நடத்தும் நிறுவனம் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக லாபமடையும்.10 - 12 வருடங்களில் கரும்பு சக்கையை புழிவது போல் பணத்தை ஒவ்வொரு தனியார் நிதி நிறுவனங்களாக புழிந்து எடுத்து சக்கையாக்கி போட்டு விடுவார்கள்.

உதாரணமாக சிம்மன்ஸ் என்கின்ற படுக்கை தயாரிப்பு கம்பெனி 1991ம் ஆண்டு வெறும் $164 மில்லியன் கடன் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கூறியவாறு பல தனியார் முதலீட்டு கம்பெனிகளின் கைக்கு சென்று அதன் கடன் $1.3 பில்லியனாக மாறி விட்டது. தனியார் முதலீட்டு நிறுவனக்களோ திவாலாகி கொண்டிருந்த அந்த நிறுவனத்திலிருந்து சுமார் $750 மில்லியன் லாபம் எடுத்து விட்டனர். அந்த கம்பெனியின் கடன் பாண்டுகளை வாங்கியவர்களுக்கோ $575 மில்லியனுக்கும் மேலாக நட்டம். ஒவ்வொரு முறை அது கடன் வாங்கும் போதும் அதன் வட்டி அதிகமாகி கொண்டே செல்வதால் அது போன்ற நிறுவனக்களை பொருளாதார சரிவு நேரங்களில் வெற்றிகரமாக நடத்துவதும் கடினம்..

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் கம்பெனியை மீண்டும் லாபமாக நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தற்போது ஒட்டுண்ணியாக பணத்தை உறிஞ்சும் செயல் இவ்வகை நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது

2003 லிருந்து 2008ம் ஆண்டு வரை மட்டும் தனியார் நிதி நிறுவனங்களால் கட்டு பாட்டுக்கு எடுக்க பட்ட 188 கம்பெனிகளிலிருந்து மட்டும் சுமார் $75 பில்லியன் கடனாக பெறபட்ட பணம் தனியார் நிதி நிறுவனக்களுக்கு டிவிடென்டாக சென்று கம்பெனிகளை கடனில் மூழ்கடிக்க செய்துள்ளது.

திவாலாகும் நிறுவனத்திலிருந்தும் பணத்தை கறக்கும் அதிசயம் இன்றும் நடந்து கொண்டுள்ளது. இப்படியும் ஒரு பொழைப்பு!

--

Monday, October 19, 2009

சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இந்தியாவுக்கு எதிராக சீனா நகர்த்தி வரும் காய்களை பற்றி தெளிவாக விவரிக்கும் இந்திய பத்திரிக்கைகள், சீனா வளர்ச்சி அடைய செய்யும் முயற்சிகளை பற்றியும் இந்தியா எந்த அளவு பின் தங்கி உள்ளது என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை!. இது பற்றிய செய்தியும் விழிப்புணர்வும் சராசரி இந்தியருக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அது பற்றிய அக்கறை சிறிதும் இல்லை. அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கும் என் நண்பன் ஒருவன் பேசும் போது கூறிய செய்திகள் மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

சீனாவின் பல்கலைகழகங்கள் எவ்வாறு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் மனித வளத்தை பெருக்க முயற்சி செய்கிறது என்பது பற்றியது தான் அந்த செய்தி. சீனாவிலிருந்து ஒரு சில அறிவியல் வல்லுனர்கள் அமெரிக்காவுக்கு சில மாத காலத்திற்கு வந்து தங்கி இருந்து, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடு படும் சிறபபான சீன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பேசி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து சீன பல்கலைகழகங்களில் வேலை செய்ய அழைத்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் வேலையே இது போல் அறிவியல் வல்லுனர்களை அங்கு கூட்டமாக அழைத்து செல்வது தானாம். அது மட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து செல்லும் பேராசிரியர்களுக்கு ஐந்து வருடத்திற்கு இத்தனை அறிஞ்சர்களை அமெரிக்காவிலிருந்து அழைத்து வர வேண்டும் என்று ' Target ' வைத்து ஆட்களை இழுக்கிறார்களாம். இது மட்டுமன்றி பலவாறாக அறிவியல் வல்லுனர்களை சீனா நோக்கி தூண்டில் போட்டு கொண்டு செல்கின்றனராம். தற்போது சீனா வெளிநாட்டு விஞ்ஞானிகளையும் அழைத்து கொள்ள முடிவெடுத்துள்ளனராம்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள என் நண்பர் (மரபனு மாற்றம் மூலம் வெற்றிகரமாக புதிய பயிர் வகையை இந்தியவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தே உருவாக்கியவர்) ஒருவரிடமிருந்து கேட்ட செய்தி. இந்தியாவில் தமிழகத்தில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் எடுக்க போகிறார்கள். அதற்கு அடிப்படை தேவை 10 - 25 லட்சம் மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலை கழகங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. இந்த ஊழல் துனைவேந்தர் பதவி நியமனத்தில் இருந்து தொடங்குகிறது. எல்லா மட்டத்திலும் இது புகுந்து விளையாடுகிறது.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது பல்கலை கழகங்கள். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொழில் வளர்ச்சியின் முழு முதல் காரணம் பல்கலை கழகங்கள். பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முக்கியமாக அடிப்படை ஆராய்ச்சிகள் அனைத்தும் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முதலாளித்துவ நாடுகளில் பல்கலை கழகத்தில் நடக்கும் ஆராய்ச்சியின் பயனை இறுதில் தனியார் கம்பெனிகள் அறுவடை செய்யும்.

இந்திய அரசு துறையினரால் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதியும் அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல்கலை கழகங்களில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைகளுக்கும் தான் பெருமளவு செல்கிறதே அன்றி உண்மையான விஞ்ஞானிக்கு ஒரு பகுதியே செல்கிறது.
பன்னாட்டு கம்பெனியினர் தன் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் பெரு வளர்ச்சி அடைவதை பற்றி பேசுபவர்கள் கூட இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட படும் தொகை எந்த அளவுக்கு ஒழுங்காக ஆராய்ச்சிக்கு செல்கிறது, அதன் மூலம் கண்டு பிடிக்க பட்டவை என்ன? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
அதைவிட மிக கவலைக்குறிய செய்தி தற்போது ஆராய்ச்சி செய்ய வரும் இடுத்த தலை முறையினர் நிலை. தற்போது பேராசிரியர்களாக இருப்பவர்கள் 20 - 40 வருடத்திற்கு முந்தய தொழில்நுட்பம் மட்டும் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தலைப்பு ஒன்றுக்கும் உதவாத 20 வருட பழைய ஆராய்ச்சி தலைப்பாக இருக்கும். தற்போது இந்தியாவில் செய்யபடும் ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையானவற்றை தலைப்பு கொடுத்தவுடனேயே அறையில் அமர்ந்தே 4 மாதத்தில் எழுதி விட முடியும்.. ஒரு சில பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி கட்டுரையை பரிசீலிக்கும் பொறுப்பு அந்த துறையில் புகழ் வாய்ந்த வெளி நாட்டு அறிஞ்சர்களிம் அனுப்புவார்கள். முன்பெல்லாம் அது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆரய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளிடம் செல்லும். தற்போது அது வங்காளதேசம், சூடான், எத்தியோப்பியா போன்ற தேசங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர்களிடம் செல்கிறது.

இந்தியாவில் CCMB(Center for cellular and Molecular Biology)போன்ற ஒரு சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு மாற்றாக நல்ல ஆராய்ச்சியாளர்களை இருத்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி செய்தாலும் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் தரம் வாய்ந்த 10 பல்கலைகழகங்களாவது இருக்க வேண்டும்

பல்கலை கழகத்தையும் அங்கு நடக்கும் ஆராய்ச்சியையும் வலுபடுத்தாமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது. மிகவும் அதிர்ச்சியான செய்தி,இந்தியாவில் இது பற்றிய விவாதம் கூட பெரிய அளவில் தொடங்க வில்லை. இந்தியாவில் அரசயல்ப்வாதிகளுக்கும் இது பற்றி கவலை இல்லை. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கொண்டிருக்கும் சிந்தனை வாதிகளும் கனவில் இருந்து வெளி வந்து அதை செயல் படுத்த நேரம் இல்லை.

Sunday, October 11, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2



அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1


சென்ற பதிவில் தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாய வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகள் பற்றியும் பார்த்தோம். இப்பதிவில் அந்நிறுவனம் வேளாண் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பிற பணிகளை பார்ப்போம்.



5.சென்னை தரமணியில் உள்ள அண்ணா பல்கலை கழக வளாகத்தில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல் பட்டு வருகிறது.பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு முக்கிய பங்கை அளிப்பது மண்ணின் வளம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எந்த அளவு மண்ணில் உள்ளது என்பதை கண்டறிந்து மீதி தேவையான சத்துக்களை உரம் மூலம் அளிப்பதன் மூலம் மகசூலை பெருக்க முடியும். இந்த மண் பரிசோதனையை துள்ளியமாக செய்ய மண் பரிசோதனை மையத்தை இங்கு அமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உயர் பரிசோதனை கூடங்களில் பயன் படுத்தும் முறையை இந்தியாவிலும் கையாண்டு துள்ளிய மண் பரிசோதனை செய்கிறார்கள். தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற நுண்ணூட்ட சத்துக்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்த பரிசோதனையின் முடிவுகளை வேளாண் வல்லுநர்கள் ஆராய்ந்து பயிர்களுக்கு தேவையான சத்துக்களை சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி இட பரிந்துரை செய்கிறார்கள்.

6.மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்ய படும் உணவு பொருட்களின் தர கட்டு பாடு மற்றும் அவ்வுணவு பொருட்களில் இருக்கும் சத்துக்களின் அளவை பட்டியலிடுவது போன்றவை அப்பொருட்களை சந்தை படுத்துவதற்கு மிகவும் அவசியமானவை ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கான வசதியும் உள்ளது.

7.உயிர் தொழில்நுட்பம் மூலம் நோய் தாக்குதல் குறைந்த அதிக மகசூல் கொடுக்க கூடிய செடிகளை உற்பத்தி செய்யவும் இங்கு ஆராய்ச்சி நடைபெருகிறது.

8.தற்போது வேளாண் கூலி தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பை தேடி நகர் புறங்களுக்கு சென்று விட்டதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே விவசாயத்தை தொடர்ந்து நடத்த பண்ணை உபகரணங்களின் தேவை முக்கியமாக உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாட்டு நிலவரத்திற்கு ஏற்ற பண்ணை உபகரணங்களை கண்டறிந்து அவற்றை விவசாயிகளுக்கு விளக்கி அவர்கள் உபயோகபடுத்த ஊக்குவிக்கிறது.வெளிநாட்டிலிருந்து கூட நமக்கு தேவையான உபகரணங்களை தருவித்து இங்கு உபயோகபடுத்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்.







9.இந்திய விவசாயத்தில் தற்போது முக்கிய பிரச்சனையாயிருப்பது தண்ணீர் தான். அவ்வப்போது அதிகம் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் விவசாயத்திற்கு உபயோக படுத்துவது அவசியம். தேசிய வேளாண் நிறுவனம், நாபார்டு வங்கியுடன் இணைந்து கிராம அளவில் நீர் சேமிப்பு கலங்களை அமைத்து, வாய்க்கல்களை சுத்த படுத்தி அதை அந்த கிராம மக்களே நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் பயனை பல கிராம விவசாயிகள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.



10.மாடு வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு மற்ரொரு லாபம் தரும் தொழிலாக உள்ளது. மிகவும் தரம் வாய்ந்த வெளி நாட்டு மாடுகளின் விந்துக்களை உபயோகபடுத்தி உள் நாட்டு மாடுகளுடன் கலப்பு ஏற்படுத்தி அதிக பால் உற்பத்தி மற்றும் நோய் ஏதிர்த்து வளர கூடிய மாடுகளை விவசாயிகள் பெற உதவி செய்கிறது.

11.விவசாயிகளை தொழில் நிறுவனங்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்தி, உற்பத்தியின் லாபம் இடை தரகர்களுக்கு கிடைக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்க உதவி செய்கிறது. உதாரணமாக பால் உற்பத்தி, love birds பறவை வளர்ப்பு மற்றும் பலவற்றில் இது போல் உதவி செய்கிறது.

12.விவசாயிகளுக்கு வங்கியில் கடன் வாங்க தானே முன்னின்று உதவி செய்து அந்த கடனில் தொடங்கும் வேளாண் தொழிலுக்கும் இறுதி வரை தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

அடுத்த பதிவில் பிற பணிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்

--

Wednesday, October 07, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி


எதிர் மறையான செய்திகளை பார்த்து பார்த்து சமச்சீரான வளர்ச்சியே நடக்க வாய்ப்பில்லை என்று அலுத்து போனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுதான் இது.

தற்போது உண்மையான வளர்ச்சி என்பது நகர் புறங்களை நோக்கி கடத்த பட்டு விட்டது. உலகமயமாதல் விளைவாக லண்டனுக்கும் சென்னைக்கும் உள்ள இடைவெளியை விட சென்னைக்கும் அதன் அருகில் 100 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கும் இடைபட்ட இடைவேளி தான் அதிகம் ஆகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமும், நன்கு படிக்க வாய்ப்பு வசதி பெற்று, மூலதனம் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை தரமும் ஒரளவு ஒப்பீடு செய்ய கூடியதாக இருக்கிறது. ஆனால் அதே வாய்ப்பு வசதி பெற்ற நகரத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் , கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் இரு வேறு துருவங்களை நோக்கி நகர தொடங்கி உள்ளன. நகர் புறத்தில் வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் கிடைக்காவிட்டாலும் வருடத்தில் அதிக நாட்கள் வேலை கிடைக்கும் வசதியும் அங்கு உள்ளது. ஆனால் அதே சமயம் ஆட்கள் தட்டுபாடும் பெரு நகரங்களில் அதிகம் உள்ளது. இன்றைய விவசாயத்தின் போக்கும் கவலைகுறியதாக இருக்கிறது. இடு பொருட்களின் விலை ஏறி கொண்டே போகிறது. விவசாயிகளுக்கும் உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான அறிவுரை கிடைப்பது அரிதாகி, தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுரை கிடைக்காமல் தேவையான இடுபொருட்களை தேவையான நேரத்தில் இடாமல், தேவையற்ற இடுபொருட்களை இட்டு பணத்தை விரையமாக்கி கடன் சுமையில் வாழ்க்கையை தள்ள வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர்.

இந்த நிலையை மாற்ற யார் தான் முன் வர போகிறார்கள் என்று அனைவரும் நினைக்க தோன்றும். இந்த மாற்றத்தை கொண்டு வர ஆங்காங்கு ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் வெற்றிகரமாக குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவு செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று தான் தேசிய வேளாண் நிறுவனம். வெளி உலகுக்கு தெரியாமல் கிராம புறங்களில் ஒரு மறுமலர்ச்சியே செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பசுமை புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்திய சி.சுப்ரமணியம் அவர்களால் ஆரம்பிக்கபட்ட நிறுவன்ம் தான் தேசிய வேளாண் நிறுவனம். 60களில் தொடங்கிய பசுமை புரட்சியால் ஏற்பட்டு வந்த முன்னேற்றம் 90களில் முடிவடைய தொடங்கியதையும், பசுமை புரட்சியின் நன்மை பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அடைய முடியவில்லை என்பதையும் கண்டார். மேலும் தற்போது மண்வளம் பெருக்கத்திற்கான முக்கியத்துவம் மிகவும் குறைந்து வருவதையும் கண்டார். விவசாயிகளுக்கும் சந்தைக்கும் நேரடி தொடர்பு இல்லாததால், பெரும்பான்மையான லாபம் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பதையும் கண்ட அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆரம்பித்த தொண்டு நிறுவனம் தான் தேசிய வேளாண் நிறுவனம்.

இந்த நிறுவனம் விவசாய வளர்ச்சிக்கு மற்றும் கிராம புற வளர்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

விவசாய வளர்ச்சி
1.நவீன விஞ்ஞான ரீதியான யுக்திகளை கடை பிடித்து விவசாய உற்பத்தி திறனை பெருக்கும் முறைகளை விவசாயிகளின் நிலங்களிளே நேரடியாக செயல் படுத்தி காட்டி, நவீன விவசாயத்திற்கும் இதுவரை அவர்கள் செய்யும் விவசாயத்திற்கும் இடையே உள்ள வேறூபாட்டை எடுத்து காட்டி அறிவியல் ரீதியான விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை உணர்த்துகிறார்கள். காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பண்ணைகளில் இந்த முறையை கையாண்டு உள்ளனர்.




2.நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகளின் லாபமும் நன்கு உயர்ந்துள்ளது.ஒரு சில பயிர்வகைகளில் கிடைத்த உற்பத்தி பெருக்கம் கீழே தர பட்டுள்ளது.
மக்காசோளம் - 150%
தர்பூசனி - 116%
நிலகடலை - 113%
நெல் - 55%
கரும்பு - 40%


3.மதுராந்தகம் அருகில் உள்ள சூனாம்பேடு என்ற கிரமத்தில் ஊரக மேம்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அங்கு விவசாயிகளுக்கு தேவையான பயிற்ச்சிகளை கொடுக்க தரமான ஒலி-ஒளி சாதனங்களுடன் தரமான வகுப்பரை கட்டி உள்ளனர். அது மட்டுமின்றி விவசாயிகள் தங்குவதற்கு வசதியும் உள்ளது. இங்கு விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விரிவாக்க துறையினரும் பயிற்ச்சி எடுக்கின்றனர்


4.அங்கு ஒரு மாதிரி பண்ணையும் அமைக்க பட்டுள்ளது. புது வகை பயிர்களை அந்த பகுதியில் பயிரிட தேவையான தொழில் நுட்பங்கள் அங்கு இறுதி செய்ய படுகிறது.அது மட்டுமின்றி மதிரி பண்ணையாகவும் அது செயல் படுகிறது.



அந்த நிறுவனம் ஆற்றும் பிற பணிகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

--

Tuesday, September 22, 2009

உலக வங்கி பிடியில் மாட்ட போகும் இந்திய வங்கிகள்?



தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கிய காரணம் இந்திய வங்கி துறை வெளி நாடுகளின் தலையீடு இல்லாமல் தனி தன்மையாக இருப்பது என்பது பெரும்பான்மையானவர்களால் ஏற்று கொள்ள பட்ட உண்மை.அதற்கு ஆப்பு வைத்து விட்டது தற்போதைய மன்மோகன் அரசாங்கம். உலக வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு $2 பில்லியன் கடன் வாங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

இதன் விளைவாக இனி பன்னாட்டு வங்கிகள் மற்றும் வெளி நாடுகளின் தலையீடு வங்கி துறையில் அதிகம் இருக்க போகிறது. இந்தியாவின் வங்கி துறையும் மேல் நாட்டு வங்கி துறை போன்று நிச்சயமற்ற நிலையை நோக்கி போக போகிறது. பிற் காலத்தில் அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தால் அதன் விளைவு இந்தியாவில் அதிகம் உணர பட வாய்ப்புள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக வங்கிகளின் மூலதனத்தில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் அதை தீர்க்க பிற வழிகள் உள்ளது. அதை விடுத்து நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் வங்கி துறையை உலக வங்கியிடம் பணயம் வைப்பது மிகவும் அபாயகரமான செயல்.

இதற்காக உலக வங்கியிடம் கடன் பெற போவது $2 பில்லியன் மட்டுமே. இதை எளிதாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து எடுத்து கொடுக்கலாம்.இந்தியாவிடம் இருக்கும் $250 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் இருந்து நாட்டின் ஜீவதாரமாக இருக்கும் வங்கிகளுக்கு $2 பில்லியன் கொடுப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் வந்து விட போவது இல்லை. அது மட்டுமின்றி ஒரு சில கணிப்புகளின் படி இந்திய அன்னிய செலாவணி தர்போது வட்டியாக சம்பாதித்து கொடுக்கும் பணம் 2 - 3%. ஆனால் உலக வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டி 10 - 12%(இது உறுதி படுத்த படாத தகவல்). ஆயுதம் வாங்கவும் அதற்கு லஞ்சம் கொடுக்கவும் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை இதற்கு உபயோகித்தால் இப்பிரச்சனையை தீர்த்து விடலாம்.

--

Monday, August 31, 2009

சீனாவின் தூண்டிலில் மத்திய அமைச்சர் கபில் சிபல்

இந்தி தெரியாத மக்கள் எல்லாம் இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தேச விரோதிகளாக உள்ளனர். இதை கூறுவது ஏதோ R.S.S தலைவர்களோ அல்லது முலயாம் கட்சியினரோ இல்லை. சோசியலிச கட்சியாக தன்னை காட்டி கொள்ளும் காங்கிரஸ் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது அ.தி.மு.க இல்லை. இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க.

கபில் சிபல் கூறியதை பாருங்கள்.
All children are not fluent in Hindi as they are in their mother tongues. Hindi is necessary for students to integrate with the rest of the country.

இந்தி தெரிந்தால் தான் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் "Integrate" ஆவதாக ஒத்து கொள்வீர்களா என்ன?. அது மட்டுமல்ல. இந்தியா "Knowledge Economy" ஆக வந்த பிறகு ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பார்களாம். மற்ற மொழி எல்லாம் வளர கூடாதாம். இந்தி தான் இந்தியா முழுதும் ஏற்று கொள்ள பட வேண்டிய மொழியாக இருக்க வேண்டுமாம்.

//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//
இது என்ன நம்முடைய(our) மொழி. உங்களுடைய மொழி என்று சொல்லி கொள்ள வேண்டியது தானே.இதை கடுமையாக எதிர்க்காமல் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை ஆகி உள்ள கட்சிகள் தயவு செய்து தங்களை திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்ல பட்ட போது அது வெளியுறவு கொள்கையை பாதிக்கும் என்ற பெயரில் அமைதியாக இருந்தீர்கள். இந்த அமைதிக்கு என்ன காரணம்?.

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி. கடிசியில் இந்து-இந்தி- இந்தியாவில் வந்து நிற்கின்றனர்.தமிழர்களும் தொலை நோக்கி பார்வையில் சிந்திக்க வேண்டிய தருணம் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சீனா இந்தியாவை 25 துண்டாக்க வேண்டும் என்று திட்டமிடுவதாக செய்திகள் வந்தன. நம்ப ஊர் அரசியல்வாதிகள் கபில் சிபல் போல் இருந்தால், சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும் .

--

Sunday, August 30, 2009

வளரும் வங்கிகள்! இடம் மாறும் அதிகாரங்கள்?



முந்தைய பதிவுகளில் சீனா எவ்வாறு உற்பத்தி துறையில் போட்டியில்லாத வளர்ச்சி அடைய எடுக்கும் செயல்பாடுகள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதித்துறை செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு சில கம்பெனிகளுக்கு போய் கொண்டிருக்கிறது மற்றும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் என்று பார்ப்போம்.

தற்போதைய நிதி நெருக்கடி வந்த போது அமெரிக்கா எங்கும் பேசபட்டது 'Too Big to Fall'. அதாவது மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தவறு செய்து வீழ்ந்தாலும் காப்பாற்ற பட்டே ஆக வேண்டும் என்பது தான். நிதி நெருக்கடியிலிருந்து எழும் முன்னே தற்போது அமெரிக்க நிதி நிறுவனங்கள் நிலையை பார்ப்போம்.

கடந்த சூன் மாதம் பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் ஜெ.பி. மார்கனிடம் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேலான அமெரிக்க டெப்பாசிட்டுகள் உள்ளன.இந்த மூன்று வங்கிகள் மற்றும் சிட்டி வங்கி ஆகியவையிடம் 50 சத மார்ட்கேஜ் பத்திரங்களும் மூன்றில் இரு கிரடிட் கார்டுகளும் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நிதி நெருக்கடியின் போது பிரச்சனையில் உள்ள வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது தான். கடந்த இரு வருடத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா 138%, ஜெ.பி.மார்கன் 51% மற்றும் வெல்ஸ் பார்கோ 43% வளர்ந்து உள்ளது. அமெரிக்க அரசு குறிபிட்ட இடத்தில் குறிபிட்ட சதவிதத்திற்கு மேல் டெபாசிட் வைக்க கூடாது என்று போட்டியை ஊக்க படுத்த வைத்துள்ள கட்டு பாட்டையும் மீறி இவ்வங்கிகள் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதனால் ஏற்பட கூடிய விளைவுகளை பார்ப்போம். பொருளாதார மந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி என்றால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் போது அதன் வளர்ச்சியை பற்றி நினைத்து பாருங்கள். அது மட்டுமன்றி இந்நிறுவனக்களின் வளர்ச்சி மிக பெரியதாகி விட்டதால், இனி எக்காலத்திலும் இவற்றிற்கு அழிவு ஏற்பட போவது இல்லை என்ற நிலை ஏற்படும். எதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் அரசு காப்பற்றி ஆக வேண்டுமே!. அதன் விளைவு, எந்த பயமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் நிறுவனங்களுக்கு தைரியமாக பணத்தை அள்ளி கொடுப்பார்கள். சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரை கொம்பாகும். எனவே பிற நிறுவனங்கள் அழிந்து விடும் அல்லது இப்பெரிய நிறுவனக்கள் அவற்றை வாங்கி விடும். இப்பெரும் நிறுவங்கள் மிகவும் அசாதாரமான வளர்ச்சி அடையும்.

மற்ற உற்பத்தி துறைகளில் ஒரு சிலரது ஆதிக்கம் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிதி துறையின் பங்கு உலகில் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரது கைக்கு சென்றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.அது மட்டுமன்றி உலகில் பெரும்பான்மையான கடன்கள் குடுக்கும் அதிகரம் ஒரு சில நிறுவனக்களுக்கு மட்டும் இருந்தால் உலக சந்தையில் எந்த துறையிலும் எந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதும் ஒரு சிலரால் நிர்ணயிக்க படும்.போட்டிகள் குறைந்தால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு சாதகமான வட்டி மற்றும் பிற காரணிகளில் கடன் கிடைப்பது கடினம். தற்போதைய சூழ்நிலையிலேயே பங்கு வர்த்தகத்தில் சர்வ சாதாரணமான ஏற்ற இறக்கத்தை இந்நிறுவனக்கள் ஏற்படுத்துகின்றன.இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிக அதிகமானால், இந்த நிலை மோசமாகும்.வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரதன்மை கேள்வி குறியாகும்

இது போல் ஒரு சில நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தின் பெரும் பங்கை ஆட்டி வைக்க தொடங்கினால் அதிகாரம் எந்த அளவுக்கு அரசுகள் கையில் இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனக்களுக்கு போய் விட்டால்?!

--

Tuesday, August 25, 2009

சீனாவின் பிரம்மாஸ்த்திரம்



சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சீனாவின் Shopping Mania

சீனாவின் அசுர வேக வளர்ச்சியின் பின்னனியை பற்றியும், அது டாலர் வலையில் சிக்கிய நிலை பற்றியும், சீனாவின் தற்போதைய முயற்சிகள் பற்றியும் முற்பதிவுகளில் பார்த்தோம். வருங்காலத்தில் சீனா எவ்வாறு பொருளாதார வல்லரசு நிலையை மேலை நாடுகலிடமிருந்து பறிக்க முயலுகிறது என்று இப்பதிவில் பார்ப்போம்.

உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டுமானால் அதற்கு தேவைபடும் முக்கிய தகுதி, அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன் மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும். வியாபார பரிவர்த்தனைக்கும், நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.

சீனாவின் அடுத்த குறி, உலக சந்தையில் யுவானை சேமிப்பு நாணயமாக ஆக்க முயற்சி செய்வதாக தான் இருக்கும். ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற மூடிய பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளின் கரண்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆய்த்த வேலையில் தற்போதே இறங்க தொடங்கி விட்டது.

உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டாலரின் பங்கு 65%. அதே போல் உலக டாலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது!.எனவே டாலரின் மதிப்பு உடனடியாக குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர், டாலருக்கு பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDRஐ(Special Drawing Right) சேமிப்பு கரண்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். SDR என்பது ஒரு நாட்டின் நாணயம் அல்ல. இது டாலர், யூரோ,பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாக கொண்ட ஒரு கணக்கீட்டு அளகு. தற்போது டாலரின் பங்கு தான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் யுவான் உள்பட பிற நாணயங்களையும் சேர்க்க வேண்டும் என்று போர் கொடி எழுப்பி உள்ளது. இதன் மூலம் யுவானையும் சிறிது சிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும். இதன் மூலம் நாடுகள் டாலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கி கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவும் தன்னிடம் உள்ள டாலர் சொத்துக்களை இழப்பின்றி விடுவிக்க முடியும். ஆனால் தற்போது SDR சார்ந்த பாண்டுகளை மத்திய வங்கிகள் தான் வாங்கி விற்க முடியும். தனியார் நிதி நிறுவனக்கள் இவ்வர்த்தகத்தில் ஈடு பட முடியாது.

அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டாலரின் தேவையை குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்க தேவையான யுக்திகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹாங்காங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளி நாடுகள் தங்களுக்கு தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.

ரஸ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வத்தகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் டாலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி அர்ஜென்டினா,பெலாரஸ்,இந்தோனேசியா,மலேசியா,தென் கொரியா போன்ற நாடுகளிடம், டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது.அதன் மூலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்.

ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு படி 2012ல் உலக வர்த்தகத்தில் $2 டிரில்லியன் மதிப்பு யுவான் அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளது.

ஆனால் யுவானை சேமிப்பு நாணயாமாக்க சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய்வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்து செல்லவும் அனுமதிக்க வேண்டும். அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான பாண்டு மார்க்கெட் அரசு கட்டுபாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். கம்யூனிச அரசால் இது போன்ற முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து விட கூடாது.

எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகு விரைவில் இல்லை என்றாலும் அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது.

--

Wednesday, August 05, 2009

சீனாவின் Shopping Mania




முதல் பதிவில் டாலர் வலையில் வீழ்ந்துள்ள சீனாவின் நிலையை பற்றியும்,அடுத்த பதிவில் சீனாவின் தற்போதைய பொருளாதார யுக்திகளையும் பற்றி பார்த்தோம்.

சீனா தன்னிடம் குவிந்திருக்கும் டாலர் கையிருப்பை வைத்து என்ன செய்ய போகிறது?. தன்னிடம் உள்ள அமெரிக்க அரசின் பாண்டுகளை பொது சந்தையில் விற்றால் டாலரின் மதிப்பு குறைந்து சீனாவின் சேமிப்பின் மதிப்பும் குறையும். இந்த பிரச்சனையை சீனா நூதனமாக கையாளும் முறைகளை பற்றி முன் பதிவில் பார்த்தோம். இப்பதிவில் உலகளவில் சீனா வாங்கி குவிக்கும் சொத்துக்களை பற்றி பார்ப்போம்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது.இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா?கடந்த வருடம் சீனா நிதி துறை சாராத பிற துறைகளில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $41 பில்லியன். 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே!. உலகிலேயே அதிக அளவு டாலரை சேமிப்பாக சீனா வைத்துள்ளது. இதன் மூலம்

1.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அன்னிய செலாவணி குறைவால் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் அது போன்ற பல நாடுகளிடம் தாது பொருட்கள் மற்ரும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தி துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிக அளவு தேவை படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன் படுத்தி பிற்கால எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் இறக்குமதியை உறுதி செய்து அதற்கிணையான கடனாக டாலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.

உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 69 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது.ரஸ்யாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டாலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.


2. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாது பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப, சீனா தன் பிற்கால தேவைக்கு தாது பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும்(தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையிலும்!),காப்பர் இறக்குமதி 148 சதம் அதிகமாகவும்,நிலக்கரி இறக்குமதி 300 சதம் அதிகமாகவும்,அலுமினியம் இறக்குமதி 400 சதம் அதிகமாகவும் ஆகி உள்ளது.

இந்த அளவு தாது பொருட்களை இறக்குமதி செய்து வைத்திருப்பதால், உலக பொருளாதாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போது தாது பொருட்களின் விலை உலக மார்கெட்டில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியை தவிர்த்து உற்பத்தி துறையில் உலக அளவில் மோனோபோலி ஆக முடியும்.


3.எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் அதிகம் கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில் நுட்பம் குறைவாக உள்ளது.இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மேல் நாட்டு கம்பெனிகளிடம் வேறு நிறைய விட்டு கொடுத்து உதவி பெரும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பெனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும் படி ஒப்பந்தங்கள் இட்டு, அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி, அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாது பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

உதாரணமாக வெனிசூலா எண்ணெய் நிறுவனங்களுக்கு $33.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டாலர் தற்போது கடனாக கொடுத்து விட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பேரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.அது மட்டுமன்றி கனிம பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.

4.அதுமட்டுமன்றி ஆப்ரிக்க,ஆசிய மற்றும் தென்னமரிக்க நடுகளிடம் பல்லாயிரகணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கி குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயல் படுகிறது.

சீனாவின் பிற்காலத்திற்கு தேவையான அளவு இந்தியாவிற்கும் மூல பொருட்கள் தேவையே.இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவை போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்த துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கை தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது

சீனா தற்போது செய்துவரும் செயல்முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் பல ஆண்டுகளாக அதை விட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாவக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனாவின் அடுத்த முக்கிய குறிகோள் உலக சேமிப்பு நாணயமாக டாலரை நீக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தான் அது பொருளாதார வல்லரசு ஆக முடியும். அந்த நோக்கத்தை அடைய சீனா எவ்வாறு காய் நகர்த்துகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

--

Sunday, August 02, 2009

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சென்ற பதிவில் டாலர் வலையில் சிக்கிய சீனாவின் நிலை பற்றி பார்த்தோம். இப்பகுதியில் சீனா தற்போதைய சூழ்நிலையை எதிர் கொள்ள எடுக்கும் உத்திகளை பற்றி பார்ப்போம்.
உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது.எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொருமையாக எடுக்க வேண்டியது போன்ற நிலையில் உள்ளது.

தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள்

1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தை பல படுத்தி உலக அளவில் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டும்

2. டாலரின் மதிப்பை உடனடியாக வீழாமல் பார்த்து கொள்ள வேண்டும்

3. சிறிது சிறிதாக டாலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும்(அதே சமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்).

4.ஆற்றல் வளம்(பெட்ரோல் போன்றவை), தாது பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டாலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டு கொள்வது.

5. தன்னிடம் உள்ள டாலர் கையிருப்பை கொண்டு உலகில் உள்ள தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனக்களை முடிந்த அளவு வாங்கி குவிப்பது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் சாதகமாக உள்ளது

6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டாலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்றவற்றின் பங்கையும் அதிகரிக்க வேண்டும்.

சீனா தன் குறிகோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்

சீனாவின் தங்க கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000டன்னை தாண்டி விட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்க கையிருப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கி குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.

இனி வரும் பதிவுகளில் சீனாவின் மற்ற குறிக்கோளை அடையும் வழி பற்றி பார்ப்போம்.

--