Sunday, February 21, 2016

உலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி

மக்களின் எழுச்சியால் உருவான ஒரு புதிய தேசம், தேசிய மொழி என்ற பெயரால் மொழி, கலாச்சாரம் மற்றும்  பொருளாதார ரீதியான தாக்குதாலால் 34 ஆண்டுகளில் துண்டான வரலாறு தான் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடுவதற்கான அடிப்படை.

“தேசிய மொழி என்பதே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம்” - என்ற கோட்பாட்டுடன் மொழிவாரிச் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையும், அதற்கு எதிரான புரட்சியையும் சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். சோவியத் யூனியனில் Russification என்ற பெயரில் பல உக்ரேனியர்கள் கொல்லப்பட்டதும், இந்தியாவில் கட்டாய ஹிந்தி என்ற பெயரில் பல தமிழ் மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதும் உலக வரலாற்றில் அழியாத வடுக்கள்.

வரலாறு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும், ஒரே மாதிரியான அடக்குமுறைகள் உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தாய்மொழியென்பது ஒரு சமூகத்துடனும் அதன் பண்பாட்டுடனும் பின்னிப்பிணைந்தது. ஒரு மொழி அழிந்தால், அதைத் தாய்மொழியாகக் கொண்ட இனம் அழிந்துவிடும். தங்களது மொழி, பண்பாடு, தன்மானம், அடிப்படை உரிமைகள் , சமத்துவம் ஆகியவை காக்க எண்ணிலடங்காப் போராட்டங்களும் தியாகங்களும் உலகின்  பல பகுதிகளில் நடந்துள்ளது.

உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல  ஊக்குவிக்கவும் UNESCO நிறுவனம் பிப்ரவரி மாதம் 21ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது. அந்தத் தேதியை UNESCO தேர்ந்தெடுத்ததின் காரணம், அந்த நாள் ஒரு மொழியின் மீதான அடக்குமுறையினால் இரத்த ஆறு ஓடிய நாள். அதுவும் சுட்டுக் கொல்லப்பட்ட பல மாணவர்களின் இரத்தம்! அந்த நாடு, கிழக்குப் பாகிஸ்தான் என்று சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அழைக்கப்பட்ட இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்!
மொழித்திணிப்பிற்கான அரசின் அடக்குமுறையால் ஓடிய ரத்தம், பாகிஸ்தான் இரு நாடாக உடைந்ததற்கும் காரணமாக அமைந்தது. அரசின் அடக்குமுறையில் தன் நாட்டு மக்களின் மீதான மொழி அடிப்படையிலான பொருளாதாரத் தாக்குதலும் அடங்கும். அந்த வரலாற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
பாகிஸ்தான் உருவாக்கம்
வங்கமொழிப் பிரச்சனையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வரலாற்றில் சற்றே பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
மத அடிப்படையில் இந்தியா பிரிந்தபோது, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தியாவின்  கிழக்குப் பகுதியில் ஒரு துண்டும், மேற்குப் பகுதியில் ஒரு துண்டும் இணைந்து உருவானதுதான் பாகிஸ்தான் என்ற நாடு. மத அடிப்படையில் மக்கள் இணைந்திருந்தாலும், மொழி அடிப்படையில் வெவ்வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்போதைய பாக்கிஸ்தானியர்கள்.
மொழிச் சிக்கல்
பாகிஸ்தான் என்ற நாடு உருவானபோதே தேசியமொழி தேவை என்ற குரலும் வலுத்திருந்தது. அரசியலிலும் பொருளாதாரத்திலும் வலுவாக இருந்த மேற்குப் பாகிஸ்தானியர்கள் உருதுமொழி மட்டும்தான் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர். உண்மையான இஸ்லாமியர்களின் மொழி உருதுமொழியே என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.
உண்மையில் உருதுமொழிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு அடிப்படையான பிணைப்பும் இல்லை. இஸ்லாம் தோன்றி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், உருதுமொழியின் வயதோ எண்ணூறு ஆண்டுகளுக்குக் குறைவானதுதான். தில்லி சுல்தான்களின் காலத்தில் உருவான ஹிந்துஸ்தானி மொழி, கிபி 1600 வாக்கில் உருது என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கவிஞர்களாலும் இலக்கியவாதிகளாலும் உருதுமொழி செழித்து வளர்ந்தது. 19-ஆம் நூற்றாண்டுவரை அதனை ஹிந்துக்களும் பேசிவந்தனர். பின்னரே, ஹிந்தி உருவாக்கப்பட்டு உருது இஸ்லாமியர்களின் மொழியாகவும் ஹிந்தி ஹிந்துக்களின் மொழியாகவும் இனங்காணப்பட்டன.
கிழக்குப் பாகிஸ்தானில் பேசப்பட்ட வங்கமொழி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 விழுக்காடு மக்கள் பேசும் மொழியாக இருந்தது. இருப்பினும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மேற்குப் பாகிஸ்தான் வலுவாக இருந்ததால், உருதுமொழி தேசியமொழியாக வேண்டும் என்போரின் கையோங்கியிருந்தது. இதன் விளைவாக வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள், மதத்தின் அடிப்படையிலும் நாட்டின் அடிப்படையிலும் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக நேர்ந்தது.

நாட்டின் ஒரு வட்டாரத்தில் பேசப்படும் மொழிக்குத் தேசியமொழி என்று முன்னுரிமை அளிக்கப்படும்போது, அந்தமொழியே கல்விக்கூடங்களிலும், அரசியல் கோப்புகளிலும், நீதிமன்றங்களிலும், செய்தித் தொடர்பு ஊடகங்களிலும் பயன்படுத்தப்படும். முப்பதாண்டுகளுக்கு ஒருதலைமுறை என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்று தலைமுறைக்குள், அதாவது ஒரு நூற்றாண்டுக்குள், தேசியமொழி பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கும். அதேநேரம், மற்றமொழிகள் தேசியமொழியின் தாக்கத்தால் திரிபடைந்து போய், அடுத்து வரும் தலைமுறையினர் அவற்றைக் கற்றுக்கொள்ள வலுவானப் பொருளாதாரக் காரணம் ஏதுமின்றிச் சிதையத் தொடங்கியிருக்கும். ஓராயிரம் ஆண்டுகளுக்குள் ஏட்டளவில் மட்டுமே வாழும் மொழிகளாகிவிடும்.
வங்கமொழியைக் கல்வி கற்பதிலிருந்தும், அரசு வேலைவாய்ப்பிலிருந்தும் முழுமையாக நீக்கி விட்டால் ஏற்படும் விளைவு கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வங்காள மொழி படித்தோர் எல்லாம் கல்வி கற்காதவர்கள் என்ற நிலை ஏற்பட்டு எந்த ஒரு அரசு வேலை வாய்ப்பும் பெற முடியாமல் போய்விடும்.  இந்த உண்மையை உணர்ந்த கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தேசியமொழிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
கிழக்குப் பாகிஸ்தானில் மொழிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, முகமது அலி ஜின்னா 1948ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்கா சென்றார். அங்கு அவர்  உரையாற்றிய  போது உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அடித்து கூறினார். வங்காள மொழிக்கு, தேசிய மொழிக்கு இணையான நிலை கேட்போரை பாகிஸ்தானின் எதிரிகள் என்று அறிவித்தார். அதை விட ஒரு படி மேலே போய், தன் தாய் மொழியை  தேசிய  மொழியாக ஆக்க வேண்டும் என்று போராடிய வங்காளர்களை உள் நாட்டில் இருந்து கொண்டு நாட்டின் அழிவிற்கு வேலை செய்யும் வஞ்சகர்கள் (Fifth Column)  என்று முத்திரை குத்தினார். தேசியவாதம் மூலம்  ஒரு குறிப்பிட்ட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கும் உலக வரலாறு அங்கும் நடந்தது.
மொழிப் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்
1952ம் ஆண்டு இந்த மொழிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்களும் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் இணைந்து அனைத்துக் கட்சி நடுவண் மொழி நடவடிக்கைக் குழு (All-Party Central Language Action Committee)) ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் நிசாமுதீன், வங்காள மொழியை இஸ்லாமிய மதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்புடையதாக ஆக்க, பழமையான வங்காள மொழி எழுத்துருவை அழித்து விட்டு அராபிய மொழி சார்ந்த புதிய
எழுத்துரு தொடங்க வேண்டும் என்றார்.  இது வங்காள மக்களை மேலும் காயப்படுத்தியது.
வங்காள மொழியைத் தேசிய மொழியாக்க 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டது. மாபெரும் கடையடைப்புக்கும் பொது கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது. அரசாங்கம் பேரணிக்குத் தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்தது. காலை 8 மணி முதல் பல்வேறு பகுதியிலிருந்து டாக்கா பல்கலைகழகத்தை நோக்கி மக்கள் பெருந்திரளாகக் கூடத் தொடங்கினர். டாக்கா பல்கலைக்கழகம், ஜகன்னாத் பல்கலைக்கழகம், டாக்கா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். சுமார் 25000 பேர் அங்கு கூடிவிட்டார்கள். போராட்டக் குழுவினர் அரசின் தடை உத்திரவை மதித்து அகிம்சை வழியில் போராட உறுதி பூண்டனர்.
Picture -mukto-mona.com

அப்போது நகரின் பிற பகுதியில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை கொண்டு தாக்கிய செய்தி வந்தது. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் 144 தடையை மீறிப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினர்.  25000 பேர் தடையை மீறி வெளியே சென்றால் மிகப் பெரிய கலவரம் நடக்கலாம். எனவே, அதைத் தவிர்த்து தடையை மீறி அமைதியான முறையில் போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படி 10 பேர் கொண்ட ஒரு சிறு குழுவாக வெளியே ஊர்வலமாகச் சென்று காவல்துறையிடம் தங்களைக் கைது செய்ய ஒப்புவித்தார்கள். மூன்று 10 பேர் கொண்ட குழு சென்றபின், 10 பேர் கொண்ட பெண்கள் குழு சென்று கைதானது. அதைத் தொடர்ந்து பல குழுக்கள் கைதாகிக் கொண்டிருந்தன.
போராட்டக்காரர்களும் அமைதியாகவே தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தனர். தாய் மொழிக்காக அமைதியாகப் போராடிய மக்கள் மீது எந்த ஒரு காரணமும் இன்றிக் காவல் துறையினர் திடீரெனத் தடியடி நடத்தத் தொடங்கினர். மாணவர்கள் சிதறி ஓட முயன்ற போது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர்.
அதுவரை அமைதியாகப் போராடிய மாணவர்கள் கற்களையும், காலணிகளையும் வீசி காவல் துறையினரைத் தாக்கத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்தது. மாலை 3 மணி வாக்கில் துப்பாக்கியுடன் வந்த மிகப் பெரிய படைப்பிரிவு மாணவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது. ஆங்காங்கே மாணவர்கள் குண்டடி பட்டும், குண்டடியில் மடிந்தும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார்கள். எங்கும் ரத்த வெள்ளம்! மக்களைக் காக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் இளம் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கி வெறியாட்டம் ஆடிய களமாய் டாக்கா உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் காணப்பட்டன.
அடிபட்ட மாணவர்களையும், இறந்த மாணவர்களையும் மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர். அடக்குமுறையின் உச்சக் கட்டமாய்,  துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மருத்துவக் கல்லூரியில் புகுந்து இறந்த மாணவர்களின் உடல்களைப் பிணவறையிலிருந்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் எடுத்துச் சென்று ஒதுக்குப் புறமான சுடுகாட்டின் மறைவிடத்தில் தூக்கி எரிந்தனர். தீரத்துடன் அவர்களைத் தொடர்ந்து சென்ற ஒரு சில மாணவர்களால் அந்த உடல்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, அடுத்த நாள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஒரு பகுதி மாணவர்கள் நீதி கேட்டு சட்டசபை நோக்கிச் சென்றனர். மாணவர்களின் படுகொலைச் செய்தி நகரில் தீபோலப் பரவியது. ஒட்டு மொத்த டாக்காவினரும் கடை அடைப்பும் வேலையை விட்டு வெளிநடப்பும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இது முழுமையாக மாணவர்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட போராட்டம் என்பதுதான். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தவில்லை. அடுத்த நாள், சுமார் 30000 பேர், இறந்த ஈகியர்களுக்கும் மொழிப் போராட்டத்திற்கும் ஆதரவாக டாக்காவின் புகழ்பெற்ற கர்சன் கட்டிடம் முன்பு கூடினர். மீண்டும் காவல்துறையின் வெறிச்செயலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சொந்த நாட்டிலேயே எதிரிகள் போலச் சூறையாடப்பட்டதால், அரசுக்கு எதிராக மக்களின் கோபம் உச்ச நிலையை அடைந்தது.
1954ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் வந்தது. மக்களின்  கோபத்தைக் கண்டு அஞ்சிய முஸ்லிம் லீக் கட்சியினர் தேர்தலின் தோல்வியிலிருந்து தப்பிக்க வங்காள மொழியையும் தேசிய மொழியாக்கத் தீர்மானம் இயற்றினர். ஆனால், உருதுமொழி ஆதரவாளர்கள் கை ஓங்கி இருந்ததால், எதிர்ப்பும் வலுவாக இருந்தது. ஆளும் கட்சியும் அவர்களது எதிர்ப்புக்குப் பணிந்தது. வங்காள மொழியை தேசிய மொழியாக்க ஆதரிக்கும் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் விளைவாக ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. வங்காள மொழியைத் தேசிய மொழியாக்கப் பாடுபட்ட ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது.

தொடர்ந்த புறக்கணிப்பு
மொழித் திணிப்பு என்பது பிறமொழி மக்களின் பண்பாட்டின் மீதும், பொருளாதார வளர்ச்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே. மேற்குப் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பாதிகூட வங்காள மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. ராணுவத்தில் வங்காள மக்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்குக் கீழேயே இருந்தது. வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியர்கள் ராணுவத்தில் பணிபுரியத் தகுதியற்றவர்கள் என்று மொழி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டனர். அரசு உயர்பதவிகள் வங்காள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
ஆட்சிகள் மாறும்போது வங்கமொழிக்குக் கிடைத்த சமநிலை பறிக்கப்படுவதும், மீண்டும் கிடைப்பதாகவும் தொடர்ந்தது. வங்காளியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல வாழும் நிலையே தொடர்ந்தது.
தனிநாடாக வங்காள தேசம்
கிழக்குப் பாகிஸ்தானியர்கள் தற்போதைய அமெரிக்க குடியரசு போன்ற "நடுவண் அரசில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி" என்ற அடிப்படையில் ஆறு அம்சக் கோரிக்கையை வைத்தனர். அமெரிக்காவின் மாநில ஆட்சி உரிமையைக் காட்டிலும் அதிக அளவு உரிமையைக் கேட்பதாக அந்தக் கோரிக்கை இருந்தது.
1970ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த அவாமி லீக்கின் கட்சியினர் ஷேக் முஜ்புர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்றனர். கிழக்குப் பாகிஸ்தானுக்கு  ஒதுக்கப்பட்ட 169 தொகுதிகளில் 167 தொகுதிகளை வென்றனர். இதனால் ஷேக் முஜ்புர் ரஹ்மான் ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானது. ஆனால், மேற்குப் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதன் பின்பு நடந்த பல அரசியல் நிகழ்வுகள் பங்களாதேஷ் போருக்கு அடிகோலியது. இப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்த வன்முறை எண்ணிலடங்காது. போரில் இறந்த வங்காள தேசத்தினரின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
போர் நடந்த 1971ம் ஆண்டு  வங்காள அறிஞர்கள் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு ஆகும். வங்க மொழி அறிஞர்கள் முனீர் சவுத்ரி, ஹைதர் சவுத்ரி, அன்வர் பாஷா உட்பட சுமார்  1000க்கும் அதிகமான வங்கமொழி பேசும் அறிஞர்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர்  மாதம் 14ம் நாள் அறிஞர்கள் உயிர் ஈகிய நாளாக (Martyred Intellectuals Day) இன்றும் வங்க தேசத்தினர் கடைப்பிடிக்கின்றனர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி துணிகரமாகக் கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போரில் தலையிட்டதால் இறந்தவர் எண்ணிக்கை இந்த அளவோடு நின்றது.
மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் (ஷாகித் மினார்)
1952ல் மொழிப்போர் நடக்கும் போது ஒரு புறம் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் ஒன்று கூடி மாணவர்கள் இறந்து விழுந்த டாக்கா மருத்துவக் கல்லூரி வளாகத்தில்  மொழிப்போர் ஈகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் கூட நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாகக் கட்டி முடித்து விட்டனர். ஒரு சில நாட்களிலேயே காவல்துறையும் ராணுவமும் அதை இடித்து அழித்தனர்.
ஐக்கிய முன்னணியின் வெற்றிக்குப் பின்னர், மாநில ஆட்சியில் வங்காள மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் மீண்டும் எழுப்பப்பட்டது. அவர்களது  அயராத முயற்சியால் பிப்ரவரி மாதம் 29ம் நாள் 1956ம் ஆண்டு வங்காள மொழி நாட்டின் தேசிய மொழியாக அரசு ஒப்புதல் அளித்தது. உருது மொழிக்கு இணையான நிலையும் மதிப்பும் வங்காள மொழிக்கும் கிடைத்தது.
1971ம் ஆண்டு நடந்த வங்காள தேசப் போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தை உடைத்து நொறுக்கியது. வங்காள தேசம் தனிநாடாக உருவான பின் மீண்டும் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அது இன்று வரையில் உலக அளவில் தாய்மொழிக்காக உயிர் நீத்தவர்களின் நினைவுச் சின்னமாக வரலாற்றில் அழியா இடத்தை பெற்றுள்ளது.
உலகத் தாய்மொழி நாள்
தாய்மொழி காக்க வங்காள தேசத்தினர் நடத்திய போராட்டம் உலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. இந்தப் போராட்டம் பெரிய அளவில் தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலக மக்களால் மறக்கமுடியாத நாள். UNESCO நிறுவனம் உலகெங்கும் தாய்மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல மொழி பண்பாடு சார்ந்த சமுதாயத்தை உறுதி செய்யவும் இந்த நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளனர்.
தாய்மொழியே ஒரு இனத்தின் அடையாளம். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். மொழி உயர்ந்தால் இனம் உயரும். தாய்மொழி உணர்வைப் பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:
செந்தமிழே! உயிரே! நறுந் தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு,
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!


இந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது
Reference:
http://www.sas.upenn.edu/~dludden/LuddenFrontlineHeroes.htm
https://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

Picture https://nonviolentmovements.wordpress.com/2013/07/16/so-far-the-1st-non-violent-movement-language-movement-of-1952/

Monday, October 19, 2015

தமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall

ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.

அமெரிக்காவில் Solar Power

அமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும்  போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும்.  பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.
 

ஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.

மோடியின் டெஸ்லா விஜயம்

பாரத பிரதமர் மோடி சமீபத்தில்  சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின்  பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும்,  அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .


Powerwall

டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக  மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த  மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.





இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.


கடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார  தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel  மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம்  கிடைக்கும் நிலை
வெகு தொலைவில் இல்லை.


Monday, September 28, 2015

BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை

இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. ப. செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு  மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்"  என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்

நாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 1:30 - 6:30
இடம்: Coconut Hill Party Hall,46129 Warm Springs Blvd, Fremont, CA 94539




.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

Sunday, January 25, 2015

தமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விருது

இந்த வருடம் அறிவிக்கபட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த வருடம் பெர்க்லி பல்கலைகழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு அவர்களுக்கு பத்மஷிரி விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிரதத்தில் முனைவர் பட்டம் பெற்றாலும் தமிழின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.

மேலை நாட்டு பல்கலைகழங்களில் தமிழ் படிப்பிற்கு என்று தனி துறை 1970க்கள் வரை இல்லமல் இருந்தது. தமிழின் பெருமையை நாம் என்ன தான் பேசினாலும் மேலை நாட்டினர் மற்றும் மேலை நாட்டு பல்கலை கழக ஆராய்ச்சிகள் மூலம் வெளி சென்றால் தான் அது உலக அளவில் அனைவரையும் சென்றடையும். எனவே மேலை நாட்டு பல்கலைகழகங்களில் தமிழ் படிப்பு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமானது. ஜெர்மானிய சமஸ்கிரத மொழிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு பல்கலைகழகங்களில் ஆய்வு மையம் உள்ளது. அதன் விளைவாக சமஸ்கிரதம் மொழி பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் நடைபெற்று  உலகளவில் அதன் பெருமை  மக்களிடம் சென்றடைந்தது. அது போன்ற பெரிய முயற்சி தமிழுக்காக பெரிய அளவில் எடுக்க படவில்லை. அந்த குறையை போக்கி பெர்க்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை உருவாக்க உதவியவர் திரு.George L. Hart அவர்கள் ஆவார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் உலகளவில் கிடைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது.பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ்  கலாச்சார அமைப்புகளோடு தொடர்ந்து இணைந்து தமிழ் வளர்ச்க்காகவும், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்லவும் பாடுபட்டு வருகிறார்.
.George L. Hart  அவர்களுக்கு பத்மஷிரி பட்டம் பட்டம் கிடைத்திருப்பது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை பட வேண்டிய செய்தியாகும்.

FeTNA 2015 விழாவிற்கு அவர் அனைவரையும் வரவேற்கும் காணொளி

இது நாள் வரை மத்தியில் அரசியல் அதிகாரம் கொண்டிருந்த திராவிட கட்சிகள் இதற்கான முயற்சி எடுக்காமல் இருந்தது வெட்க பட வேண்டியதே.