Friday, September 28, 2007

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்

சென்ற பதிவில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேச சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தை உலகின் முன்னனியில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்.
பத்திரிக்கைகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா படைத்து வரும் சாதனைகளை எண்ணி பூரிப்படைகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்று கனவு காண்கிறோம். இத்தனை நல்ல செய்திகள் வரும் பத்திரிக்கையில் வரும் ஒரு சிறு செய்தியை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டும் அந்த செய்திதான் என்ன?
இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம் உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம். ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம் 181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நமது இறக்குமதியில் பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர குறைய போவதில்லை.
இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது? இதற்கு தீர்வு காண நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் எத்தனால். எத்தனாலை தாவரத்திருந்து பிரித்து எடுக்கலாம். இவ்வளவு நாட்களாக எத்தனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் கவனிப்பாரற்று இருந்தது. இன்று பெட்ரோல் விலை பேரலுக்கு $70 தாண்டி விட்டதால், உலகமே எத்தனாலின் மீது அதன் பார்வையை செலுத்த தொடங்கி உள்ளது.
எத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம். ஆனால் இறக்குமதி செய்யும் பெட்ரோலின் ஒரு பகுதியை எத்தனாலை கொண்டு சமாளிக்கலாம். ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோக படுத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர். எத்தனாலின் விலையை மட்டும் பெட்ரோலுடன் சம்மந்த படுத்தி பார்க்க கூடாது. எத்தனாலை உபயோக படுத்துவதனால் எற்படும் பிற நன்மைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு, மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள் வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள் மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார் தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நம் அரசாங்கம் ஒரு புறம் தனக்கு கிடைக்கும் டாலர் பணத்தையெல்லாம் பெட்ரோல் வாங்க செலவு செய்து வருகிறது, இதனால் மிகபெரிய டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.
அதற்கு பதில் அரசாங்கம் எத்தனாலுக்கு வரி விலக்கு அளித்து, மானியம் கொடுத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தினால் இறக்குமதிக்கு செலவு செய்யும் டாலரின் செலவை குறைக்கலாம். உலக வங்கியிடம் வாங்கும் டாலர் கடனையும் குறைக்கலாம்.வறுமை ஒழிப்பையும் எளிதில் அமல்படுத்தலாம். கிராம புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமுமே வளரும். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் எவருமே இல்லாததால் இந்த திட்டத்தை கனவு திட்டமாக எடுத்து முழுமையாக நிறைவேற்ற எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை.
அடுத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கம். இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகைதான் இன்றைய வளர்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்க தோன்றும். உலக அரங்கில் இரண்டாம் உலகபோரிலிருந்து கடந்த நூற்றாண்டின் முடிவு வரை அலசி பார்த்தோமானால் ஒரு உண்மை புரியும்.உலகில் எந்த தொழில் துறையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நூற்றுகணக்கான நிறுவனங்கள் வருடம் தோறும் தொடங்கபட்டு வளர்ச்சி அடைந்துள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து விட்டது. எனவே அந்த நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, இதன் விலைவாக தங்களுக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய தொடங்கினர் அல்லது தொழிலாளர்களை வெளி நாடுகளிருந்து தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து கொண்டனர். கல்வி மற்றும் தொழிற்துறையில் நன்கு கவனம் செலுத்தி முன்னேற துடித்த இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் இதை நன்கு பயன் படுத்தி கொண்டனர்.
அனால் இந்த நூற்றாண்டில் நிலமை அடியோடு மாற தொடங்குகிறது. Meger மற்றும் Acquisition மூலமாக பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளன. இந்தநிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்க தொடங்கி விட்டன. எனவே ஒவ்வொரு துறையிலும் oligopoly அல்லது monopoly என்ற நிலை வர தொடங்கியுள்ளது. WTO இந்த மாற்றத்தை துரித படுத்தியுள்ளது. இதன் விளைவு தொழிலாளர்களின் தேவை இந்த நிறுவனங்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், கணிணி மயமாக்கலாலும் மற்றும் இயந்திர மயமாக்களாலும் தொழிலாளர்களின் தேவை பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ந்தால் அவர்களுக்கு உள்நாட்டு வேலை கிடைப்பதும் அரிதாகிவிடும், வெளி நாட்டு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிடும். உதாரணமாக Retail துறையில் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளதுதான். இந்த நிறுவனங்களால் லட்சகணக்கானோர் வேலை இழக்க போவதை கண் கூடாக காண்கிறோம். இந்த நிலை நாளை அனைத்து துறைகளிலும் உலகளவில் வரத்தான் போகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள நாம் என்ன ஏற்பாடு செய்துள்லோம் என்பது கேள்விக்குறியே. எனவே அரசாங்கம் உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம், இந்த மக்கள் தொகை பெருக்கம்.

பொருளின் மதிப்பும் உற்பத்தி செலவும்:
கடந்த நூற்றாண்டில் ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவை மற்றும் உற்பத்தி (Demand and supply) பொருத்தும், உற்பத்தி செலவு பொருத்தும் தான் இருந்தது. எந்த ஒரு புதிய பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனரோ அந்த பொருளையே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்து விற்க்கும். எனவே பொருளின் விலை பெரும்பாலும் உற்பத்தி செலவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையை முதலில் மாற்றியது Branding கலாச்சாரமே. அதாவது ஒரு பொருளை முதலில் தரமாக மார்க்கெட்டில் வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியவைத்து நுகர்வோர் மதிப்பை பெறுவதன் மூலம், அந்த பொருள் சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படும். அதிக அளவு விளம்பரம் மூலம் தங்களது கம்பெனியின் பெயரை நிலை நாட்டிய பின், அவர்கள் விற்பனைக்கு கொண்டுவரும் அத்தனை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பார்கள். இதன் மூலம் உயர் மற்றும் மேல் நடுத்தர வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வார்கள். WTO வந்தபின்பு நிலைமையே மாற தொடங்கின. WTO சட்டங்கள் முழுமையாக நடை முறை படுத்தப்பட்டால், எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் கம்பெனிக்கு மட்டுமே குறிப்பிட்ட காலம் வறை உற்பத்தி செய்யும் உரிமம் வழங்கப்படும். இதன் விளைவாக வேறு எந்த கம்பெனிகளும் இந்த பொருளை தயாரிக்க முடியாது. ஆகையால் அந்த பொருளின் விலை அந்த பொருளுக்கு மக்களிடையே உள்ள அவசியத்தையோ அல்லது விளம்பரம் மூலமாக அது மக்களிடம் எற்படும் தாக்கத்தையோ கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக IPhone 4GB ஒன்றின் விலை $500 என்றால் அதை உற்ப்த்தி செய்யும் ஆசிய கம்பெனிக்கு $230 விலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை Apple நிறுவனம் விளம்பரம் மற்றும் இதர செலவுகளை மட்டும் செய்து ஒரு IPhoneக்கு 270 டாலர்கள் லாபம் அடைகிறது. அந்நிறுவனம் அதனுடைய முதல் IPhone தயாரிப்புக்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கும். பிறகு அதற்கு உரிமம் வாங்கி அதில் சில மாறுதல்களை செய்து அடுத்தடுத்து version வெளியிட்டு பலமடங்கு லாபம் அடைகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு அடுத்த கண்டுபிடிப்பை தொடர்கிறது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால் மூல பொருட்களை வாங்கி அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவே லாபம் பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.
இன்று இந்தியாவின் உற்பத்திதுறை பெருமளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி மட்டும் செய்து கொடுத்து புதியன கண்டு பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சர்வதேச அளவில் Brand பெயர் உருவாக்கவும் பெரிதாக முயற்ச்சி செய்வது இல்லை. உலக சந்தையில் இந்திய கம்பெனிகள் நிலைபெற வேண்டுமானால் இதுபோல் கண்டுபிடிப்பு மற்றும் Brandingல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சில முயற்சிகள் இன்றும் நடந்து வருகின்றன. டாடா நிறுவனம் Tetley என்ற இங்கிலாந்து டீ Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. விஜய்மால்யாவின் நிறுவனம் Whyte & Mackay Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. இத்தகைய முயற்ச்சி ஒவ்வொரு துறையிலும் தொடர வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்து மக்கள் விரும்பும் புதிய பொருட்களை கண்டு பிடித்து உரிமம் பெற வேண்டும். அத்தகைய வளர்ச்சிதான் உண்மையாக அதிக நாட்கள் நிலை பெறும் வளர்ச்சியாக இருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இடம் எது என்று பார்த்தால் அது பல்கலை கழகங்களாக தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்கலைகழகங்கள் அந்த அளவிற்கு முதிர்ச்சி பெறவில்லை. பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பல மடங்கு உயர வேண்டும்.
இந்திய மருந்து கம்பெனிகள் தற்போது Generic Drug எனப்படும் உரிமம் பெறாத அல்லது உரிமம் (patent) காலாவதியான மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடைகிறனர். அந்த கம்பெனிகள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆகியவற்றை கொண்டு புதிய மருந்து பொருட்களை கண்டு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டும்
இந்திய IT கம்பெனிகள், இந்தியாவில் ஆங்கிலம் பேச தெரிந்த மற்றும் மலிவான தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பெரு வளர்ச்சி அடைகின்றன. நாளை இதே ஆங்கிலம் பேச தெரிந்த தொழில் நுட்ப வல்லுனர்களை, மிகவும் மலிவாக சீனா போன்ற நாடுகள் உருவாக்கினால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை நோக்கி சென்றுவிடுவர். அது மட்டுமன்றி இந்திய நிறுவனங்களும் பிற நாட்டு வல்லுனர்களை கொண்டு வளர்ச்சியடைய தொடங்கிவிடும். இதனால் இந்தியா ஒரு பெரும் சரிவை சந்திக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்கள் Services தொழிலில் மட்டும் கவனம் கொள்ளாமல் IT Product செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல தரமான Productகளை தயார் செய்வதன் மூலம் நிலையான சந்தையை பெற முடியும். இந்தியாவில் உலகதரத்துடன் Product செய்த ஒரே கம்பெனியான iFlex நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான Oracle நிறுவனம் முழுமையாக வாங்க அமெரிக்க அரசே இந்திய அரசை நிர்பந்தித்ததாக செய்திகள் வந்தது. இதிலிருந்து Product தொழிலின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகபெரும் IT நிறுவனங்கள் அனைத்தும் தரமான Product செய்ய முன்வர வேண்டும்.
அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி பெருக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில் தொடங்குவோருக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல சாலை, விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள், நவீன துறைமுகம், தகவல் தொடர்புதுறை, கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலே கண்ட நிகழ்வுகளுக்கான தொடக்கத்தை நாம் இன்று செய்தால்தான் இந்தியா கி.பி. 2020ல் வல்லரசாகும் என்ற கனவை நாம் காண தொடங்கலாம்

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசயம், சிறு தொழில் போன்றவற்றின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

Saturday, September 22, 2007

இராமாயணத்தை திரிக்கும் VHP, RSS, BJP.

சேது பாலத்தை ராமர் கட்டியதாக கூறி போராட துடிக்கும் சங் பரிவாருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து சேது பாலத்தை இராமர் கட்டினார் என்று தவறான கருத்தை பரப்பாதீர்கள். சேது பாலத்தை குரங்குகளும் அணில்கலும் சேர்ந்து தான் கட்டின என்பது இராமாயணம் படித்த அனைவரும் அறிந்ததே. சத்திரியரான இராமன் பாலம் எல்லாம் கட்ட Design செய்ய கூடாது என்பது வருணாசிரம விதி. மேலும் அவர் காட்டில் திரிந்த போது கட்டியதால் அவர் அந்த Projectக்கு financeம் செய்ய பணமும் இல்லை. எனவே குரங்குகளும் அணில்கலும் Design செய்து கட்டிய பாலத்தை மனிதன் கட்டினான் என்று ஏன் திரித்து கூறுகிரீர்கள்?
உலகிலேயே விலங்குகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை ஏன் பறிக்க முயல்கிறீர்கள்? த்யவு செய்து அணிலின் முதுகில் இருக்கும் கோட்டை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.

Friday, September 21, 2007

கேரள பெருஞ்சுவர் - கேரள CPM அதிரடி

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை கேரள அரசு எதிர்த்து போராடி வருவது அனைவரும் அறிந்த்தே. முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகமாக்கும் பிரச்சனை மற்றும் சேலம் ரயில்வே கோட்ட பிரச்சனை போன்றவை இதில் அடங்கும்.
இதன் அடுத்த பரிமாணமாக கேரளா மாபெரும் புதிய திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வரும் காற்று கொண்டு காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் காற்றாலைகள் நிறைய உள்ளன. எனவே இவற்றுக்கு வரும் காற்றை தடுக்க சீன பெருஞ்சுவர் போல பல மடங்கு பெரிதாக, ஆனால் மிக உயரமாக கேரள பெருஞ்சுவரை மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதியில் கட்ட உள்ளது. இவ்வாறு பல மடங்கு உயரமான சுவர் எழுப்புவதன் மூலம் கேரளாவிலிருந்து வரும் காற்றை தடுக்க முடியும் என கேரள அரசு கணக்கிடுகிறது.
இது குறித்து கேரள பொதுபணிதுறை அமைச்சர் கூறும் போது இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசு நிதிமன்றம் சென்றால், தாங்கள் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் சீத்தாராம் எச்சூரி ஆகியோரை கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து தடுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதையும் மீறி நீதிமன்றம் சென்றால் கூட நிதி மன்ற முடிவுகளை காவிரி பிரச்சனையில் கர்நாடகம் உதாசீன படுத்தியது போல் தாமும் உதாசீன படுத்தி விடுவோம் என்றார். இந்த அளவு பிரச்சனை நடப்பது தெரிந்தாலும் தமிழக பொதுபணிதுறை அமைச்சர் துரை முருகன் கேரளாவில் அவ்வாறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே நாளை மறுநாள் நடக்க இருக்கும் கட்டை பஞ்சாயத்தில் கேரளா இந்த திட்டத்தை கைவிடவும் அதற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் முதலிய மாவட்டங்களை கேரளாவிற்கு கொடுத்து விடவும் ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்பந்திக்க படும் என்று தெரிகிறது. இதை திமுக,அதிமுக, காங்கிரஸ் எம.பிக்கள் சம்மதித்து கையெழுத்திட்டுவிட்ட பிறகு கண் துடைப்பிற்கு மறியல் நடத்துவார்கள் என்று தெரிகிறது.
கேரளாவின் இந்த திட்டத்தை திராவிட கட்சிகள் பெயரளவுக்கு எதிர்த்தாலும் CPM கட்சி மட்டும் தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. தமிழக CPM கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்துக்காக சம்பளமே வாங்காமல் உழைக்க போவதாக கூறியுள்ளது. இதனை இந்திய ஒருமைபாட்டிற்க்கு ஒரு உதாரணமாக பிற்கால சரித்திரம் சொல்லும் என CPM மாநில தலைவர் வரதராஜன் கூறினார். மேலும் அடுத்த தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பெருஞ்சுவரை உடைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டி தொட்டிகளிலும் தெருமுனைகளிலும் போராட்டமும், பொது கூட்டமும் நடத்த படும் என்று கூறினார். இதன் மூலம் தாங்கள் தமிழ் மக்களுக்காக பாடுபடுவது உறுதி படுத்த படும் என்றார். சீனாவின் நன்மைக்காக மத்திய பொலிட்பீரோ 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பது போல், கேரள கம்யுனிஸ்ட்களின் நன்மைக்காக இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
பின் குறிப்பு: இது ஒரு கற்பனை செய்தி(இன்று வரை).

Friday, September 07, 2007

டாலர் அரசியல்

உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை,சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தேயிருக்கிறது.உலகிலேயே அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின்பொருளாதாரம் எப்படி,உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது? "கோட்டீஸ்வரன்" நிகழ்ச்சியிலோ அல்லது "kaun banega crorepathi " யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது!.அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன? விடை அளிக்கவே இக்கட்டுரை.
இந்த கதையின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தி திறன் வெகு அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அமெரிக்கா, தொழில் நுட்ப மற்றும் உற்பத்தி துறையில் வெகு முன்னேறிய நாடாக இருந்தது. முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரு இழப்பை போல் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் நன்கு முன்னேற்றம் அடைந்தது. ஹிட்ல்ரின் கொள்கையினால் நாடு பெயர்ந்த யூதர்களின் மூளையை கொண்டு அதன் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் மேற்கத்திய நாடுகளுக்கு உதவி செய்து கைமாறாக பெரும் தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது. டாலரின் மதிப்பு அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்பை கொண்டு மதிப்பிடபட்டது. டாலர் ஒரு வலுவான நாணயமாக இருந்தது. இரண்டாம் உலகபோரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80% மற்றும் உற்பத்தி துறையில் 40% அமெரிக்கா கையில் இருந்தது. வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பி கொடுக்கும் நிலையில் இருந்தது. உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை கையிருப்பாக கொண்டு தங்களது நாணயத்தை வெளியிட தொடங்கின. உலகின் பல நாடுகளின் வங்கிகள் டாலரை தனது முதலீட்டு கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன, 1960 வரை இந்த நடைமுறை நன்றாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
வியட்நாம் போர்-மாபெரும் மாற்றத்தை எற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த போருக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டி வந்தது. அதுவரை தங்க கையிருப்பிற்கு எற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதிக அளவு டாலரை வெளியிட தொடங்கியது. ஒருநிலையில் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை கொடுத்து அமெரிக்காவிடம் தங்கம் கேட்டால் அதனால் தரமுடியாது என்ற நிலை எற்படும் நிலை வந்தது. 1971ம் ஆண்டு நிக்ஸன் நிர்வாகம் உலக முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன் படி டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது அமெரிக்க அரசாங்கம். அதன் படி டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது. அதன் பின்னர் நடந்த மாற்றங்கள் தான் உலகை இன்றைய நிலைக்கு இட்டு சென்று உள்ளது.
1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விளைவு ஒரு புறம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தது. அந்த நாடுகளிடம் தேவைக்கு மிக அதிகமான பணம் இருந்ததால் அந்த டாலரை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தன. அதற்கு அமெரிக்கா அந்த நாடுகளிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய treasury bond வெளியிட்டு அதில் முதலீடு செய்ய வைத்தது. அவர்கள் பணத்தை மேன்மேலும் அமெரிக்காவின் bondல் முதலீடு செய்தனர். மற்றொரு பக்கம் பெட்ரோல் உபயோகப்படுத்தும் நாடுகள் பெட்ரோல் கிடைக்க டாலர் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா. எனவே அமெரிக்காவுக்கு தேவையான பொருள்கள் எவையோ, அவற்றை உற்ப்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருளை வாங்க வேண்டுமானால் விலை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அந்த நாடுகளில் உற்பத்தி செலவை குறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி, நாட்டின் நாணயத்தின் மதிப்பை குறைக்க ஆரம்பித்தன. அதாவது தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அமெரிக்க மார்க்கெட்டில் மலிவான விளைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்தன. அந்த நாடுகள் தங்கள் சுய தேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு எற்றபடி முன்னேற்ற திட்டங்கள் வகுப்பதை விட்டு விட்டு, டாலர் கிடைக்க எந்த பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின. தனது முழு உழைப்பையும் செலவிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபங்களை அரசாங்கங்கள், மீண்டும் அமெரிக்க வங்களிடம் Bond வாங்கி சேமித்து வைக்க தொடங்கின. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகள் தனது சக்தி(energy),மனிதவளம், மற்றும் பொருளாதார வளங்களை கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து டாலர் வாங்கி மீண்டும் அதனை அமெரிக்காவிடமே குறைந்த வட்டிக்கு பத்திரமாக முதலீடு செய்கிறது. இதன் விளைவாக டாலருக்கு சர்வதேச சந்தையில் அதிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஆசிய மற்றும் பிற நாடுகளின் கையிருப்பில் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு treasury bond உள்ளது. இதில் சைனா மட்டுமே 350 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளது.
அமெரிக்காவை பொருத்தவரை அது உற்பத்தி செய்யும் டாலருக்கு உலக மார்கெட்டில் என்றுமே தேவை இருக்கும். அந்த டாலரை எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பி கொடுத்து அதற்குரிய பொருளை கேட்க போவதில்லை. அதன் விளைவாக அமெரிக்கா உற்பத்தியை மீறி நிறைய டாலரை வெளியிட ஆரம்பித்தது. அதன் விளைவாக வருமானத்தை மீறி அமெரிக்கா செலவு செய்ய ஆரம்பித்தது. மாபெரும் தொகையை தன் இராணுவ ஆராய்ச்சி மற்றும் பிற நாடுகள் மீது படையெடுப்பு போன்றவற்றுக்கு செலவு செய்ய ஆரம்பித்தது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதி பொருள்கள் மூலம் பெரும் லாபம் சேர்க்க ஆரம்பித்தன. அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் எற்றுமதியை விட 811 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு லாபம் ஈட்ட தொடங்கின.
அதன் விளைவு, அதிக பணத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு செலவிட முடிந்தது. இனி WTO சட்டதிட்டங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், எந்த புதிய மருந்து/கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் கம்பெனிகளுக்கும் முழுமையாக உரிமை கிடைத்துவிடும். அந்த உரிமம் மூலம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் அவற்றை விற்று பெருத்த‌ லாபம் ஈட்டமுடியும். அவ்வாறு கிடைக்கும் லாபம் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். சிறு கம்பெனிகள் அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும். இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது இரண்டு கம்பெனிகள் ஏகபோக(monopoly) உரிமை தாரர்களாக ஆகி விடுவர். இன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மூலமாக, இந்த நிறுவனங்கள் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமையாளர்களாக மாறி, உலகின் அனைத்து செல்வங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வரும். இதற்கிடையில் அமெரிக்கா அதிக அளவு இராணுவ தொழில்நுட்பத்திற்கு செலவு செய்து உலக பொருளாதாரத்தையும் இராணுவ பலம் மூலமாக கட்டுப்படுத்த தொடங்கலாம். அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பாதகமாக செயல்படும் நாடுகளை இராணுவ பலம் கொண்டு அடக்கும். இதன் விளைவாக உலக நாடுகளுக்கு எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இதன் மூலம் நிறைய நன்மை கிடைக்கிறது. இந்தியாவிற்கு கிடைகும் குறுகிய கால நன்மை என்ன என்பது பற்றியும் அந்த நன்மைகளை நீண்ட கால ஆதாயமாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் அடுத்த பகுதியில் காண்போம்.

இந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4

--